எனக்கு நாற்பது வயதாகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இந்த ஊரில்தான் நாற்பது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இடையில் ஐந்தாண்டுகள் மட்டுமே சென்னையில் இருந்தேன். என் சிறப்பம்சமே என் நினைவாற்றல்தான்.
குத்துமதிப்பாக ஐந்து வயதில் இருந்து எல்லாச் சம்பவங்களும் நினைவில் இருக்கின்றன. பத்தாம் வகுப்பில் என் உடன்படித்த தோழி ஒருவர் மிகத் தாமதமாக பள்ளியிலேயே ருதுவானார். அவரை இருபது வருடங்கள் கழித்து யதேச்சையாக தினசரி சந்தையில் பார்த்த ஒருநாள் ”நீங்கள் தமிழினிதானே..செப்டம்பர் பதினெட்டில் ருதுவானீர்கள்.சரிதானே” என்று கேட்டேன். தமிழினி அடைந்தது ஆனந்தமா, அதிர்ச்சியா, அருவருப்பா எதென்று தெரியவில்லை. ஆனால் அதிவேகமாக என்னைக் கடந்து சென்றுவிட்டாள்.
காலைப் பத்துமணிக்குத்தான் படுக்கையைவிட்டு எழுவேன். அம்மா அதற்குள் முணங்கிக்கொண்டே காலை உணவைத் தயார் செய்து வைத்துவிட்டு என்னருகே வேறொரு பாயில் படுத்திருப்பாள். கடந்த பதினைந்து வருடங்களாக அவள் இப்படித்தான் இருக்கிறாள். காலை உணவு ரேசன் அரிசியில் வைத்த கஞ்சியாகவும், தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாயாகவோ, நிலக்கடலைத் துவையலாகவோ இருக்கும். அரிதாக சிலசமயம் இட்லியும் முருங்கைக்காய் சாம்பாரும் வைத்திருப்பாள். அப்புறம் இரவுணவிற்காக மட்டுமே வீடு திரும்புவேன். பகலெல்லாம் என்னை வீட்டில் பார்க்கமுடியாது.
ஒரு கிலோமீட்டர் தொலைவில் என்றுமே வற்றிப்போகாத தாமிரபரணி குளிர்ந்து இரையெடுத்த மலைப்பாம்பைப்போல ஊர்ந்து கிடக்கும். என் படித்துறையில் அந்நேரம் ஆளிருக்காது. நதியோரம் செடிகளுக்கு மத்தியில் சென்றிருந்துவிட்டு ஆசை தீர ஒரு மணிநேரம் ங்கிக் குளிப்பேன். குளிர்ந்த நதியில் மீனைப்போன்று நீந்திக்கிடப்பது பேரானந்தம். செவ்வரி படர்ந்து கண்கள் கலங்கிய நிலையில் வீடு திரும்புவேன். பன்னிரெண்டு மணிக்குமேல் என் நகர்வலம் தொடங்கும். புளியமரப் பேருந்து நிறுத்தத்தில் எனக்கென்றே அரசு கட்டித்திறந்து வைத்திருக்கும் பயணிகள் நிழற்குடையின் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்வேன். சிலசமயம் மனநிலை திரிந்தவர்கள் பஸ் நிறுத்தத்தையே மலக்காடாக மாற்றி நாறடித்திருப்பார்கள். அல்லது அழுகிய உணவுப்பொருட்களை மூட்டையாக கட்டிவைத்திருப்பார்கள் அல்லது கெட்டுதுர்நாற்றம் எடுக்கும் உடல் உறுப்புகளைச் சொறிந்துகொண்டு படுத்திருப்பார்கள். அப்போது மட்டுமே எனக்குக் கோபம் வரும். இருப்பதில் சுத்தமான இடத்தில் சென்று அமர்ந்துகொள்வேன். பஸ்கள் வரும் நி்ற்கும் கிளம்பிப்போகும். ஆட்கள் வருவார்கள் அவர்களுக்குத் தெரிந்ததை பேசிக் கொண்டிருந்துவிட்டு பஸ் வந்ததும் ஏறிச் செல்வார்கள்.
ஆண்களின் பேச்சை மூன்று இனங்களுக்குள் வகைப்படுத்தி வைத்திருப்பேன். பெரும்பாலான ஆண்கள் அரசியல் பேசுவார்கள். அதில் தன்சாதி சார்ந்த அக்கறை அதிகம் தொனிக்கும். அதன்பின் அன்றாடத்தின் சிக்கல்களைப்பற்றி. ரேசனில் மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டது. சிலிண்டருக்கு போன் பண்ணி ஒரு மாதம் ஆகியும் இன்னும் வரவில்லை. காய்கறிகள் விலை தாறுமாறாக ஏறிக்கிடக்கிறது இப்படிப் போகும். சிலர் மட்டும் அதிபுத்திசாலிகளாக தங்களைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா பற்றியும் அணுஉலை பற்றியும் எல்லாம் தெரியும் என்ற பாவனையில் டம்டம் அடிப்பார்கள் . அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பேன். அவர்கள் அத்தனைபேரும் ஏதாவது ஒரு பணியிலிருந்து ஓய்வுபெற்று செய்வதற்கு ஏதுமற்றவர்களாக என்னைப்போன்று நேரத்தை தள்ளிக்கொண்டிருப்பவர்கள்.
எனக்கு யாரையும் கண்களைப் பார்க்கப் பிடிக்காது. கண்கள் என்னை என்னவோ செய்யும். வெகுதொலைவில் வரும்போதே அவர்களை நன்றாக உற்றுப் பார்த்துக்கொள்வேன். அருகில் வந்து நின்று என்னை துஸ்டப்பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொள்வார்கள். அவர்கள் பார்க்கும்போது அக்கறையாக எதிர் புரமுள்ள புளியமரத்தின் கிளைகளில் பழங்கள் இருக்கிறதா என்று தேடுவேன். திரும்பியபி்ன் அவர்களை உச்சிமுதல் உள்ளங்கால்வரை வேடிக்கைப் பார்ப்பேன். பெண்களென்றால் பஸ் ஏறி மறையும் வரை என் பார்வை விட்டுவிட்டு அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்கும். பெண்களைப் பார்ப்பதே எனக்கு என்றும் சலிக்காத ஒன்றாக உள்ளது.
கால்களை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன். அது ஒரு வசதி. ஈக்கள் அண்டாது. மேலும் கால்களை ஆட்டுவதன்மூலம் என்னை நான் இயக்கிக் கொள்வேன். இதோபாருங்கள் நான் சந்தோஷமாக இருக்கிறேன். எந்தக்கவலையும் எனக்கில்லை என்று பிறருக்கு சொல்லும் மொழி அது. மாறாக தேங்கிய நீர்தானே கெட்டுப்போகும். ஆண்களை பெண்களை குழந்தைகளை எனக்குப் பார்த்துத் தீராது. ஒரு ஆளைப்போல இன்னொருவர் இருப்பதில்லை என்பதால் அத்தனைபேரும் புதிதாகத் தெரிவார்கள். குழந்தைகளைப் பார்க்கும்போது மட்டும் எனக்கு மிகுந்த துக்கமாக இருக்கும். இதுநாள் வரைப் பெண்களைப்போல குழந்தைகளையும் நான் அதிகம் அறிந்தவன் இல்லை.
வெயில்தாள சோம்பேறி மடத்திற்குக் கிளம்புவேன். பகலெல்லாம் வெயில்ஏறிக்கிடந்த கல்மண்டபத்தின் உள்ளே இதமான குளுமை இருளாகி நிற்கும் கூடவே. நதியோடும் சங்கீதம். என்னைப்போல சிலர் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருப்பார்கள். இன்னாருக்கு இவ்விடம் என்று நாள்போக்கில் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டாகியிருந்தது. அதனால் நான் செல்லும்போது என்னிடம் காலியாகவே இருக்கும். வெள்ளை நாயொன்று சிலசமயம் என்னைக் கண்டு நெட்டிமுறித்து எழுந்து வேறிடம் சென்று படுத்துக்கொள்ளும். பயணிகளிடம் இருந்தோ பண்டாரங்களிடமிருந்தோ எனக்கு ஏதாவது தின்னக் கிடைக்கும். ஒருமுறை ஒரு பணக்காரர் ஆயிரம் ரூபாய் தானம் வழங்கினார். கைவிடப்பட்டவர்களின் உலகத்தில் உள்ள அத்தனை கதைகளையும் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
மலையில் இருந்து மாலையிறங்கி வரும் அழகை கல்திண்ணையில் படுத்தபடி கண்டு களிப்பேன். கொசுக்கள் காதுக்குள் செல்லம் கொஞ்சத் தொடங்கியதும் எழுந்து வீடு திரும்புவேன். நடுநிசி மூன்றுமணி அல்லது நான்குமணிவரை என் எழுத்துப்பணி நிகழ்ந்தேறும். அவ்வாறு நான் எழுதிக் குவித்திருக்கும் பல்லாயிரம் பக்கங்கள் என்றாவது ஒருநாள் இவ்வுலகத்தின் முன் என்னை அறிஞனாக, படைப்பாளியாக, தீவிர சினிமா விமர்சகனாக உணர்த்தக்கூடும். அந்த நம்பிக்கை ஒன்றே என்னை வாழச்செய்கிறது.
ஒரு காலத்தில் என்னை எல்லாமே தேடிவந்தன. இருபது வயதில் சென்னைக்கு வெறும் ஒருஜோடி ஆடையோடு பஸ் ஏறினேன். அப்போது ஏதாவது செய்து பெரியாளாக வந்துவிடவேண்டும் என்ற கனவிருந்தது. பிரபலங்கள் அவ்வாறு ஒருமஞ்சள் பையோடு பஸ் ஏறி கடின உழைப்பினால் உயர்நிலை அடைந்ததாக தவறாமல் பேட்டிகளில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மெய்ப்பு பார்க்கும் பணி சுலபமாகக் கிடைத்தது. அது மிகப்பிரபலமான பத்திரிகை. என் கதைகள் இரண்டு அந்த வார இதழில் பிரசுரம் ஆகியிருந்தன. இரயிலைவிட்டு இறங்கி முகம்கூட கழுவிக்கொள்ளாமல் நேராக அண்ணாசாலையில் உள்ள அந்தப்பத்திரி்கை அலுவலகம் சென்றேன். காவலாளி ”பத்துமணிக்கு மேல வா” என்று விரட்டினார். நகரமறுத்து மூடியிருந்த பெரிய இரும்புக்கேட்டின் முன் காவலிருந்தேன். பத்துமணிக்கு முதல் ஆளாக உள்ளே சென்று எடிட்டரைப் பார்த்தேன்.
ஏழை எழுத்தாளன் என்பதையும் எழுத்தை நம்பி பிழைக்க வந்திருப்பதையும் அவர்முன் திறமையாக எடுத்து வைத்திருந்தேன் அல்லது பசித்துக் களைத்த என் அழுக்கடைந்த தோற்றம் எனக்கு அங்கு பணிவாய்ப்பை வாங்கித் தந்திருக்கலாம். ஆயிரத்து ஐநுாறு ரூபாய் மாதச்சம்பளம். பத்திரிகை அலுவலகத்தின் வளாகத்தில் ஸ்டோர் ரூமில் தங்க அனுமதித்தார்கள்.
சென்னையை அறிய ஆரம்பித்தது அங்கிருந்துதான். ஐந்தாண்டுகளாக பல்வேறு வேலைகளில் சீரழிந்து ஊர் திரும்பினேன். ஒருமுறை டிவி சீரியலுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அமைந்தது. அழகான பெண்கள் மடத்தனமாக பேசும் வசனங்களை எழுதவேண்டிய பழிபாவத்துக்கஞ்சி அதையும் விட்டுத்தொலைத்தேன். அன்று என்னுடன் சக வசனகர்த்தாவாக இருந்தவன் இன்று பலகோடிகளுக்கு அதிபராக இருக்கிறான். இரண்டு நெடுந்தொடர்கள் தினந்தோறும் உலகச் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவனே நடிக்கவும் செய்தான். அவனின் கொழுத்த கன்னங்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடலில் தீப்பற்றி எரியும்.
சினிமாவில் உதவி இயக்குனராக சேரவும் சந்தர்ப்பம் கிடைத்தது. தக்காளியை வைத்து உலகப்புகழடைந்த இயக்குனர் அவர். நான் அவரிடம் கொண்டு செல்லப்பட்டபோது கைவசம் இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். என்னை அறையில் அமரச்செய்து ”கோணங்கி வாசித்திருக்கிறாயா?” என்றுதான் முதலில் கேட்டார். நல்லவேளையாக நான் மதினிமார்கள் கதையை ஞாபகம் வைத்திருந்தேன். அப்பாவின் குகையில் வாழ்கிறேன் கதையில் வந்துசெல்லும் ஒவ்வொரு பேருந்திலும் சுப்பிரமணி வந்துகொண்டே இருக்கிறான் என்ற வரியைக்கூடச் சொன்னேன். அவர் ஆச்சரியம் தாங்காமல் என் கைகளைப்பிடித்தபடி “ உன்னைத்தான்யா தேடிக்கொண்டிருந்தேன்” என்றார். அதனால் மறுநாள் அவர் வரச்சொன்ன நேரத்திற்கு அவரின் அலுவலகத்திற்குச் செல்லவில்லை.
எந்த வேலையிலும் ஆறுமாதத்திற்குமேல் நிலைகொள்ள வாய்க்காத இருப்பு. காலையில் வேலைக்குக்கிளம்ப வேண்டிய நேரம் வரும்போது கடுமையான வெறுப்பு வரும். பலநாட்கள் எந்தத்தகவலும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டில் படுத்து உறங்கி இருக்கிறேன். அப்படி பறிபோன வேலைகள்தான் மிக அதிகம். பசிபொறுக்க முடியாமல் சொந்த ஊர் திரும்பினேன். அப்போது அம்மா திடமாக இருந்தாள். பேய் பிடித்தவள்போல பீடிசுற்றுவாள். அவள் உழைப்பில் திங்கத்தொடங்கினே்.
சிலநாட்களில் அம்மாவிற்கும் எனக்கும் தீவிரமாக சண்டை நடக்கும். மகன் என்றும் பாராமல் புழுத்த வார்த்தைகள் கொண்டு கொத்த வருவாள். நான் ஒன்றிற்கும் எதிர்த்துப்பேச மாட்டேன். எனக்கும் தெரியும். நான் என்னசெய்து கொண்டிருக்கிறேன். என்நிலைமை என்ன என்பது. அம்மாவின் எந்த ஒரு நம்பிக்கையையும் நான் நிறைவேற்றியிருக்கவில்லை. பெற்றெடுத்த நாளில் இருந்து அவள்தான் என்னைப் பேணி வளர்த்து வருகிறாள். அவள் மறைவிற்குப்பின் என்னை பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள். எல்லாம் சரிதான். அதனால் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். பேச்சு ரொம்ப அதிகமாகும்போது நான் சொல்வேன்.
”எனக்கு நாற்பது வயதாகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை”