செக்கோலக்கை நிலமதிர தெருவிற்குள் வந்தான். இரவிற்கான சுடுசோறும் மொச்சைப்புளிக்குளம்பும் ததும்பும் மண்கலயம் அவன் கையில். அன்றைய கணக்கு அநந்தம்மாள் வீடு. செவ்வந்தியின் வீட்டைக்கடக்கும் போது மட்டும் அவன் நடையில் ஒரு வேகம் இருந்தது. கருப்பசாமி கோவிலின் குளிர் உறைந்த சிமிண்ட் திண்ணையில் அமர்ந்தான். அதுவரை அங்கு கதையளந்து கொண்டிருந்தவர்கள் ஒருகணம் அமைதியாகி மீண்டும் பேசத் தொடங்கினர். இராமையா பிள்ளை ”அந்த மாணிக்கு ஒரு ஓட்டம், உள்ளாறைத் தாண்டினப்புறந்தான் நின்னேன்.“ என்றார். கொசுக்கள் மிகச்சரியாக காதுகளைச்சுற்றி ரீங்கரித்தன. நான் மோகினியை பனைமரங்களின் நிழலாட்டம் தெரிந்த திசையில் இருளுக்குள் தேடிக்கொண்டிருந்தேன். முருகேசன் காலிடுக்கில் கைகளைப் பதுக்கி ஆழ்ந்து துாங்கியிருந்தான்.
பத்துமணி இருள். தெருவிற்குள் ஒருசில வீட்டு வாசல்களில் மட்டுமே மஞ்சள் ஒளி நீண்டு கிடந்தது. தெருவிளக்கின் அடியில் அமாவாசையின் இறுக்கம். நட்சத்திரங்கள் இரவு மூடிக்கிடந்த நிலத்தை ஆசையோடு வெறித்தன. முனி அக்கா சிம்னி விளக்கொளியில் வீட்டு வாசலில் பீடி சுற்றிக்கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே ஐந்தாறு கைலிகட்டிய இளவட்டங்கள்.
செக்கோலக்கை சாப்பிட்டு முடித்து கிணற்றடியை நோக்கி நடந்தான். அசைந்து செல்லும் அவனுருவம் காட்டு யானையைப் போலிருந்தது. அழுக்கேறிய வெள்ளைவேட்டி, நைந்து கிழிந்துவிடும் பருவத்தில். சட்டையற்று மயிரடர்ந்த மார்பு கருணைக்கிழங்குகளின் மூட்டை போலிருந்தது. தோள்வரை விசிறிக்கிடந்த மயிற்கற்றையில் விழுதுகளைப்போன்ற சடைக்கிளைகள். இடைசிறுத்து அகன்ற மார்பு பராமரிப்பின்றி தொந்தி சரியத் துவங்கியிருந்தது.
செக்கோலக்கை இங்கு வந்து ஐந்து ஆண்டுகளாவது இருக்கும். நான் அப்போது ஐந்தாம் வகுப்பு போய்க்கொண்டிருந்தேன். ஒருநாள் அதிகாலையில் தெருமுழுதும் கருப்பசாமி கோவிலில் திரண்டிருந்தது. செக்கோலக்கையை அப்போதுதான் ஊர்க்காரர்களுடன் நானும் முதல்முதலாகப் பார்க்கிறேன். கோவில் திண்ணையில் யாரையும் பொருட்படுத்தாமல் அல்லது யாரும் எதுவும் செய்துவிடமுடியாது என்ற நிதானத்தில் செக்கோலக்கை அமர்ந்திருந்தான். சீனியாபிள்ளை கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து ”ஏப்பா.. நாங்களும் எவ்வளவு நேரந்தான் கேட்டுக்கிட்டு நிக்கிறது. யாருப்பா..நீ. எதுக்கு இங்க வந்திருக்க?” என்று கேட்டார்.
செக்கோலக்கை சீனியா பிள்ளையை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். யாருமற்ற சூனியத்தைப் வெறித்த உணர்வுதான் அவன் பார்வையில் இருந்தது. ராமையா பிள்ளை ”செவேரி போலிசுக்கு ஆளனுப்புங்கடே. இவன் சரியான கல்லுளி மங்கனா இருக்கான். நம்ம கேட்டா பதில் சொல்லமாட்டான்” என்றார். ஊர்த்தலைவர் என்ற முறையில் கருப்பையா ஆழ்ந்த யோசனைக்குப்பின் வேட்டிமடிப்பில் இருந்து சில்வர் மூக்குப்பொடி டப்பாவை எடுத்து உதறி உறிஞ்சி ”நம்ம கோவிலோட சிறப்பு இதுதானவோய். நம்ம கருப்பசாமியும் இப்படி நுாத்தம்பது வருசத்துக்கு முன்ன இங்கவந்து குத்தவச்சவருதான. எத்தன நாள் இவன் இங்க இருக்கானு பாப்பமே” என்றார்.
அந்நாட்களில் கருப்பசாமி கோவிலில் சாமியோ பரதேசியோ பைத்தியமோ யாராவது ஒருவர் வந்து தங்கியிருப்பது வழக்கமாக இருந்தது. ஊர் வணங்கும் கருப்பசாமி என்பவரே ஜீவசமாதி அடைந்த வழிப்போக்கர்தான். தங்கியிருப்பவர்களால் எல்லைகள் மீறப்படும்போது மட்டுமே ஊர்க்கூட்டம் கூடி ஆளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி இதுவரை ஒரேமுறைதான் நடந்துள்ளது.
. செக்கோலக்கை இரண்டு மாதங்களில் தெருவோடு ஒரு ஒழுங்கினை ஏற்படுத்திக்கொண்டான். இரவு ஒருநேரம் மட்டுமே உணவு. தினமும் எட்டுமணிக்கு ஒரு வீட்டின் வாசலில் வந்து நிற்பான். அவன் அங்கிருப்பது உள்ளிருப்பவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தரையைப் பாதங்களால் தேய்த்து ஒலியெலுப்புவான். யாரிடமும் அம்மா தாயே என்று யாசிப்பதில்லை என்பது மாறா நியதி. சாப்பாடு இல்லை என்று பதில் தரவேண்டும். இல்லையென்றால் இருப்பதை கொண்டுவந்து அவன் கையில் உள்ள பாத்திரத்தில் கொட்ட வேண்டும். இரண்டும் இல்லாது போனால் எத்தனை நேரமானாலும் அந்தவீட்டின் வாசலில் அவன் உருவம் தவமிருக்கும். செவிடியாச்சி வீட்டில் ஒருநாள் இரவுமுழுதும் அவன் நின்ற கதையும் உண்டு. விடிந்து வாசல்தெளிக்க கதவைத்திறந்த செவிடியாச்சி செக்கோலக்கை நின்றுகொண்டே உறங்கிய கோலத்தைக்கண்டு பதறியடித்து வீட்டிற்குள் சென்று பழையதைப் பிழிந்து எடுத்துவந்து கலயம் நிறைத்தாள். திருவோட்டில் பழைய சோறு விழுந்தபின்தான் அவன் செக்கோலக்கையாக மீண்டான். சாவு நிகழ்ந்த வீடும், திருமணம் நடக்கும் வீடும் செக்கோலக்கையை ஈர்ப்பதில்லை. மற்றபடி எங்கள் தெருவைவிட்டு மற்ற தெருக்களுக்கும் அவன் சென்றதில்லை.
செக்கோலக்கையை ஆரம்பத்தில் பெண்கள் ஒருவித பயத்தோடுதான் பார்த்து வந்தார்கள். அவன் கொண்டிருந்த கோலம் அப்படி. ஆள் பார்க்க காட்டானாகத் தெரிந்தான். குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும்போது அவர்களை மிரட்டிச் சோறுாட்ட, பயன்படக்கூடிய ஒருவனாக அவன் வந்துசேர்ந்தான். பெண்களை ஏறிட்டு பார்ப்பதில்லை. அப்படியும் யாராவது கிண்டினாலும் நின்று பதில் கொடுப்பதில்லை. உணவளிக்க வரும் பெண்களின் பாதங்களை மட்டுமே அவன் கண்கள் உற்றுநோக்கும். அவன் யார்? எங்கிருந்து வந்தான்? எந்த சாதியைச் சேர்ந்தவன்? என்று பல்வேறுவிதமான அனுமானங்கள் அவனைச்சுற்றி பறந்து கொண்டிருந்தன. அவன் யாருக்கும் எப்போதும் அவை பற்றி ஒருவார்த்தை பதில் சொன்னதில்லை.
கருப்பசாமி கோவில் பின்புறமிருந்த மண்மேட்டில் அவனுக்கென்று ஒரு கீற்றுக்குடிசை கட்டிக்கொண்டான். உள்ளே ஒரு மண்கலயம், ஈயத்தட்டு மற்றும் ஒரு டம்ளர். அவ்வளவுதான் அவன் ஈட்டிய சொத்து. உடுத்தியிருக்கும் வேட்டியைக்கொண்டே மேல்காலைத் துடைத்துக்கொள்வான். துலாக்கிணற்றில் யாரும் தண்ணீர் ஏந்த வருமுன் அதிகாலையில் எழுந்து குளியல். பகலில் ஊர் தங்குவதில்லை. முந்தல் மலைக்கோ உய்க்காட்டு மாரிகோவிலுக்கோ சென்று, காட்டிற்குள் இருந்து கொள்வான். சாயந்திரமானதும் தெருத்திரும்புவான். கோவில் திண்ணையில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டபடி அமர்ந்திருப்பான். யார் பேச்சும் அவனில் எந்தவித சலனத்தையம் ஏற்படுத்திவிட முடியாது. மந்தகாசம் நிறைந்த ஒரு பாவனை மட்டும் சதா அவன் முகத்தில் அமர்ந்திருக்கும். எப்போதாவது குழந்தைகளை அருகில் பார்க்கும் சமயம் உதடுகள் நெளிய புன்னகைப்பதுண்டு. பௌணர்மி நாட்களில் சில நடுநிசியில் அவன் இராகம்கூடி பாடக்கேட்கும்போது நெஞ்சமெல்லாம் ஒருவித சோகஉணர்வு கவியும். சுருதி குறையாத குரல்.
கடைசி ஆளாக ராமையா பிள்ளை கிளம்பிச்சென்றதும் கொஞ்சநேரம் சில்வண்டுகளின் இரைச்சலை கேட்டபடி அமர்ந்திருந்தேன். துாங்கிக் கொண்டிருந்த முருகேசனை எழுப்ப மனம் வரவில்லை. சித்தாள் வேலைக்கு சென்று, சாயந்திரம் வீடு திரும்பியதும் வெந்நீரில் குளித்த அசதி முருகேசனை அந்தக்கொசுக்கடியிலும் நிம்மதியாக உறங்கச் செய்திருந்தது. செக்கோலக்கை துலாக்கிணற்றில் நீர் இறைத்து சிமிண்ட் தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தான். காலையில் யாருக்காவது பயன்படும் என்கிற நம்பிக்கையில்.
இரண்டாம் ஆட்டம் தொடங்குவதன் அறிகுறியாக மருதமலை மாமலையே முருகையா என்று சினிமா கொட்டகையின் பாடல் ஒலித்தது. தென்னைமரங்களும் நந்தியாவட்டைச் செடிகளும் அணிவகுத்திருந்த பாதைவழியே சென்று கிணற்றை நெருங்கினேன். இருளுக்குள் இருளாக செக்கோலக்கையின் நிழலுருவம். துலா வாளியின் உலோகக்குலுக்களும் அச்சு இயங்கும் உராய்வுச் சத்தமுமே செக்கோலக்கையின் இருப்பை உணர்த்திற்று. நீரோடு நீர்மோதும் ஒலி பற்களை கூசச்செய்தது.
செக்கோலக்கையிடம் என்ன பேசுவதென்று ஒருகணம் தயக்கம். ”என்ன சாமி உறங்கப் போகலயா?” . இருளுக்கு கண்கள் பழகி உருவம் புலப்பட்டது. செக்கோலக்கையிடம் இருந்து எந்தப்பதிலும் வரவில்லை. கொஞ்சநேரம் காத்திருந்த பின்னர் கோவில் திண்ணைக்குத் திரும்பினேன். முருகேசன் வீட்டிற்கு கிளம்பியிருந்தான். தெருநாய் ஒன்று ஆள்நடமாட்டம் கண்டு விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது.
திடீரென தெருவிற்குள் இரண்டு மூன்றுபேர்கள் ஓடும் ஒலியரவம் ”அய்யோ அம்மா என்ன விட்டுப்போடுங்க.. இனிமே நான் இந்தத்தப்பச் செய்யமாட்டேன்” என்ற பெண்குரல்.
”கதவத் தெறடீ..தேவ்டியா.. நான் போதாதுனா..அவன வரச்சொன்ன..உன்ன வெட்டி கூறுபோட்டாத்தான் என் வெறி தீரும்” குமாரண்ணன் வாசல்கதவை மோதித்திறக்க முயன்று கொண்டிருந்தான். வீட்டின் உள்ளே குமாரண்ணன் மகள் செல்வி கதறி அழும் ஓசை.
பக்கத்து வீடுகள் விழித்துக்கொள்ள தெருவிற்குள் இருள் பதுங்கியது. கணபதியா பிள்ளை தலைவலி தைலம் மணக்க “மாப்ள..உம்மோட பெரிய தொல்லைதான். சாமத்துல எதுக்குவோய் தண்ணியப்போட்டுட்டு வந்து லந்து பண்றீரு? அந்தப்புள்ளய ஏம்யா இந்தப்பாடு படுத்துறீரு? கேட்க நாதியில்லனு நினச்சுப்போட்டீரா?” என்று வந்தவர் குமாரை நெஞ்சோடு அலாக்காக அணைத்து கதவிலிருந்து விலக்கினார்.
”உம்ம சோலியப் பாத்துட்டு போரும் ஓய், இது புருசன் பொண்டாட்டி சமாச்சாரம். தேவைியல்லாம தலையை நீட்டாதிரும். அப்புறம் நல்லாயிருக்காது பாத்துக்கிடும்” போதையில் நாக்குழற, குமாரண்ணன் அவரை எட்டித்தள்ளினான். கைலி அவிழ்ந்து பட்டாபட்டி ட்ராயரில் நின்றான். முதல் காட்சி சினிமாவிற்கு சென்று திரும்பியிருப்பான் போல. எல்லாரும் அவரவர் வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்க்க கருப்பையா உறக்கம் கலைந்த வெறுப்பில் அவனிடம் நெருங்கினார்.
”தம்பி காலையில பேசிக்கலாம். இப்ப போய் துாங்கு. குடும்ப மானத்தை நீயே சந்திக்கு கொண்டு வந்தா எப்படிப்பா?”
”இவ கூட நான் இனிமே வாழ மாட்டேன். எந்தலையில அம்மிக்குழவியைப்போட்டு கொன்னுட்டு அந்தப்பய பின்னாடி ஓடீருவா. எனக்கு எம்மக போதும். இவள இப்பவே சங்கரன்கோவிலுக்கு கிளம்பச்சொல்லுங்க..” வாசல் முற்றத்தில் கால்கள் இரண்டையும் அகல விரித்து குமாரண்ணன் உட்கார்ந்தான்.
”விடிஞ்ச உடனே முத பஸ்சுக்கு அவள, அப்பன் வீட்டுக்கு அனுப்பிருவோம். ஏய்..இவள.. கதவத் திற..”
செவ்வந்தி தயங்கியபடி மெதுவாக கதவைத்திறந்தாள். அவளைப்பார்த்ததும் வெறிகொண்டு எழுந்து கதவிடுக்கு வழியே கையை நுழைத்து தலைமுடியை கொத்தாகப் பற்றினான் குமாரண்ணன்.
”ஐயோ.. என்ன காப்பாத்துங்களேன்..இந்தப்பய என்ன கொன்னுபோடுவானே..” என்ற செவ்வந்தி ஒப்பாரி வைத்தாள். குழந்தையும் அவளுடன் சேர்ந்து கத்திக்கூப்பாடு போட்டது.
கருப்பையா குமாரை முடிந்தமட்டும் கதவிலிருந்து விலக்க முயல, சண்முகமும் அவருக்கு உதவப்போனான். தெருவே ஒரு கொதிநிலையில் கிளர்ந்திருந்தது. செக்கோலக்கையின் உதடுகளும் கன்னத்தசைகளும் புல்லரிப்பில் அசைந்தன. இமைகள் அவன் கட்டுப்பாட்டை மீறி துடித்தன.
சண்டை ஓய்ந்து செவ்வந்தியை கருப்பையா தன் வீட்டிற்கு கூட்டிச்சென்றார். குமாரண்ணன் வாசல் திண்டில் தலைகவிழ்ந்து அசையாமல் அமர்ந்திருந்தான். செக்கோலக்கை நிலமதிர குடிசையை அடைந்தான்.
மறுநாள் காலையில் பிய்த்து வீசப்பட்டு சிதறிக்கிடந்த குடிசைக்குள் மண் கலயத்தோடு கண்ணாடி வளையல்களும் துண்டுகளாக உடைந்து கிடந்தன. அதன்பின் வாழ்நாள் முழுதும் நான் செக்கோலக்கையை பார்க்கவே இல்லை. செவ்வந்தியையும்.