பீடிகையெல்லாம் போடாமல் நேரடியாகச் சொன்னால், விமானம் ஏறும் முன் ஒரு வேலை சொல்லப்பட்டு, சென்றிறங்கியவுடன் அரபுப் பாலைவனத்தில் ஆடு, ஒட்டகங்களை மேய்க்க அனுப்பப்பட்ட ஒரு மனிதனின் துயரக் கதைதான் ஆடு ஜீவிதம்.
சிறுவயதில் வெளிநாடு போய்வருவது என்றவுடன் என் மனதில் எழும் முதல் சித்திரம், அரபு நாடுகளில் வேலைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியிருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் மூலமாகவோ அவர்களது உறவினர்கள் மூலமாகவோ வெளிநாடு சென்றுவந்ததன் அடையாளமாகக் கொடுக்கப்படும் பரிசுகள்தான். உங்கள் நட்பின் நெருக்கத்துக்கும், வெளிநாடு சென்றுவந்தவர் சம்பாத்தியத்துக்கும் ஏற்ப கைக்கடிகாரம், கைலி, அயல்நாட்டு நறுமணத் திரவியம், பந்துமுனைப் பேனா உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பலவகையாகக் கிடைக்கும். இதில் அதிகமாக கிடைப்பது பால்பாய்ண்ட் பேனாதான்.
வெளிநாடு சென்றுவருவதன் சிரமங்களோ, அதற்கு பணம் திரட்ட சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் படும் கஷ்டங்களோ தெரியாத வயது அது. வயதும் பார்வையும் விரிய விரிய வெளிநாடு சென்றுவந்தவர்கள் எல்லாம் பின் வசதியான வாழ்க்கை வாழ்ந்துவிடுவதில்லை. வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவதில்லை என்பது புலப்பட்டது.
பதின்பருவத்தை எட்டும்போது, ஏன் இவர்கள் வெளிநாடு சென்றுவிட்டுவந்து திருமணம் செய்யாமல், திருமணம் செய்துவிட்டு வெளிநாடு போகிறார்கள்? ஆண்- பெண் இருவருக்குமே சிரமம் தரும் விஷயம்தானே என்றொரு கேள்வியெழுந்தது.
பலசமயங்களில் மணப்பெண் தரும் வரதட்சணை வெளிநாடு செல்வதற்கான பயண, விசா உள்ளிட்ட செலவுக்காக மடைமாற்றப்படுவதும், வெளிநாட்டுக்கு மணமகனை அனுப்பிவைப்பதற்கான உத்தரவாதத்தையே மணமகள் குடும்பத்தாரிடம் வரதட்சணையாக சிலர் கோருவதும் உண்டென அறிய வாய்த்தது.
சமயங்களில் தெருமுனையில் கூடும் நண்பர்களின் பேசுபொருளாக, தவறான முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், சொல்லப்பட்ட வேலை ஒன்றாகவும் அங்கே செய்ய நிர்பந்திக்கப்பட்ட வேலை ஒன்றாகவும் அமைந்தவர்கள், சம்பள வித்தியாசங்களால் விமான, விசா செலவுகளைத் தாண்டி பெரிதாய் சம்பாதிக்க இயலாதவர்கள், பாலைவனத்தில் ஆடு, ஒட்டகம் மேய்க்க நிர்பந்திக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாதவர்களாய் திரும்பிவந்தவர்கள் என்று பல்வேறு கதைகள் அமையும்.
இந்த வரிசையில் கடைசியாக வரும், பாலைவனத்தில் ஆடு மேய்க்க நேர்ந்த நஜீப்பின் கதையைத்தான் பென்யாமின் தனது ஆடுஜீவிதம் நாவலில் சொல்லியிருக்கிறார்.
எல்லோரையும் போல வெளிநாடு சென்றுவந்தால் சுபிட்சம் வாய்க்கும் என்று நம்பி, மிகுந்த சிரமத்துக்கிடையில் வெளிநாடு செல்கிறான் கதைநாயகன் நஜீப். திரைகடலோடியும் திரவியம் தேடு பழமொழி உலகில் எவருக்கும் பொருந்தும் என்றாலும், மலையாளிகளுக்கு மிகப் பொருத்தமான பழமொழி. தேவைகளும் நிர்பந்தமும் நெருக்கும்போது ஒருவன் கடலை கரைக்கு இறைத்தூற்றும் வேலைக்குக்கூட ஒப்புக்கொண்டுவிடுவான். அப்படியாக நஜீப் சென்றடைவது பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு ஆட்டு மந்தையை! அதற்கு உடைமையாளரான ஒரு கொடுமைக்கார அர்பாப்பை.
ஆடு மேய்ப்பதென்றால் நம் ஊரில் விவசாயம் நிறைவடைந்த நிலத்தில், பட்டி போடுவது போன்றல்ல. நம் ஊர் மே மாத வெயிலைவிடவும், அரபு நாடுகளின் வெயில் இன்னும் தீவிரமானது. பாலைவனத்தில் ஆடுகளை மேய்ப்பதென்பது எத்தனை சிரமமானது, ஒரு ஆட்டு மந்தையில் என்னென்ன வேலைகள் இருக்கும் என்பதை நஜீப்பின் மூன்றரையாண்டு வாழ்வு நெருக்கமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
நாவலின் தொடக்கத்தில் வரும் அரேபிய சிறைவாழ்வு, ஆகா! சிறைவாழ்வு இத்தனை எளிமையானதா… என்ற வியப்பை ஏற்படுத்தினாலும் வியப்பு மறைவதற்குள்ளே அதன்பின் மறைந்திருக்கும் அநீதியையும் ஆபத்தையும் அடுத்தடுத்த சம்பவங்களால் பென்யாமின் சுட்டிக்காட்டுகிறார்.
விலாசினியின் மொழிபெயர்ப்பு நாவலை தங்கு தடையின்றி அணுக வழிசெய்திருக்கிறது. சினிமாக்களில், நேர்பேச்சுக்களில் ஆடு, ஒட்டகம் மேய்ப்பது கேலிசெய்வதற்கான அம்சமாக இருந்தாலும், உண்மையில் அதில் மறைந்திருக்கும் சுரண்டல், குரூரம் ஆகியவற்றை பென்யாமின் விளக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியர்கள் பிழைப்புக்காக விமானமேறும் வெளிநாடுகளைப் பட்டியலிட்டால் குவைத், செளதி அரேபியா, துபாய் போன்ற மத்தியகிழக்கு நாடுகளே முதலிடம் பிடிக்கும். சுதந்திரத்துக்குப் பின் அந்த நாடுகளுக்கு எத்தனையோ லட்சம் பேர் வேலைநிமித்தம் சென்றுவந்தபோதும், இப்போதுதான் வலுவில் ஆடு மேய்க்க நிர்பந்திக்கப்படும் ஒரு நபரின் துயரம் பதிவாகியிருக்கிறது. உரிய நபரின் செவிகளைச் சென்றடையாததால் இதுபோல் பதிவாகாமல் போன துயரங்கள் எத்தனையோ!
இந்த நாவல் மலையாளத்தில் 2009-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுத் தந்திருப்பதுடன், இதுவரை கிட்டத்தட்ட 3 லட்சம் பிரதிகள் விற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். பிரதிக்கு ஒரு ரூபாய் ராயல்டியாகப் பெற்றிருந்தால்கூட பென்யாமின் 3 லட்ச ரூபாய் சம்பாதித்திருப்பார். தவிர, இப்படம் மலையாள இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில் திரைப்படமாகவும் உருவாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்ப் படைப்பாளிக்கு இத்தனை பெரிய விற்பனை எண்ணிக்கையோ, ராயல்டி வரவென்பதோ கற்பனையே செய்யமுடியாது சொகுசுதான்.
ஒரு விஷயம்தான் குழப்பமாயிருக்கிறது இந்த நூலுக்கான முகப்பட்டையை வலைத்தளத்தில் தேடும்போது, விலாசினியின் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடும் எஸ்.ராமன் மொழிபெயர்ப்பில் உயிர்மையும் இந்த நாவலைப் பதிப்பித்துள்ளது தெரியவந்தது. இரண்டு பேருக்குமே ஆசிரியர் உரிமத்தைக் கொடுத்துவிட்டாரா… என்பதுதான் தெளிவாகவில்லை.
புதிய களம்! எளிதில் யாரும் சொல்லிவிடமுடியாத அனுபவங்கள்! அதுவே நாவலின் வலு. நஜீப்பின் துயரங்களும் மாறா தன்னம்பிக்கையும் நம்மைத் தொட்டாலும், அரபு தேசத்தின் வெயிலைப் போல சுட்டெரித்து பதறவைக்கவில்லை. அப்படியொரு வலுவான நடையை ஆசிரியர் கண்டடைந்திருந்தால், நஜீப்பின் துயரம் வாசகனை இன்னும் வலுவாகத் தாக்கியிருக்கும்!
ஆடுஜீவிதம்- பென்யாமின்
தமிழில்: விலாசினி
எதிர் வெளியீடு