எல்லாம் கிழக்கிந்தியாவுக்காக!

நன்றி  – பாஷா இந்தோனேசியாவில் எம். இக்சகா பானு, ஆங்கிலத்தில் ட்ஜந்திரா கேர்ட்டன்.

*

ஓம் ஸ்வஸ்தியஸ்து.

அன்புள்ள மிஸ்டர் டெ விட், நீங்கள் எனக்கு எழுதிய மூன்று கடிதங்களும் கிடைத்தன. உடனடியாக பதில் அனுப்பாமைக்கு ஆயிரம்முறை மன்னிப்பு கோருகிறேன். அரண்மனையை விட்டு யாரும் வெளியே செல்வதே மிகவும் கடினமாக ஆகிவிட்டது ― என்னைப்போன்ற இளம்பெண்களுக்கு அது இன்னும் கடினம். எப்பொழுதும் என் கடிதங்களை அஞ்சல் அலுவலகத்தில் சேர்க்கும் பையன் இங்கு வருவதை நிறுத்தி விட்டான். டச்சுக் கிழக்கிந்திய ராணுவத்தில் சேர பதிவு செய்துள்ளான். எப்படியும் உங்கள் கைகளில் இந்தக் கடிதம் சேர்வதற்கு நான் ஏற்பாடு செய்துவிடுவேன் ― கொஞ்சம் தாமதமானாலும்.

மிஸ்டர் டெ விட், டச்சுக் கப்பல்கள் எங்கள் கரைகளில் வந்து நின்றதிலிருந்து நாட்கள் கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றன. நெருப்பின்மீது நடப்பதைப்போல நான் தினமும் உணர்கிறேன். நாங்கள் யாரும் இப்போது அன்புடன் பேசிக்கொள்வதில்லை. எல்லா பேச்சுக்களும் கடைசியில் போரில் வந்தே முடிகின்றன. ஏதோ போர் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதைப்போல.

நேற்று அரசர் பெண்களையும் குழந்தைகளையும் இந்த வாரத்தின் கடைசியில் அரண்மனையைவிட்டு வெளியேறுமாறு ஆணையிட்டார். நம்மைப் பொருத்தவரை இதுவே பாலியின் அரசரும் டச்சுக்காரர்களும் முற்றிலும் பிரிந்துவிட்டதன் அடையாளம். ஆனால் மீண்டும் துப்பாக்கிகளின்வழி பேசிக்கொள்ளத்தான் வேண்டுமா?

அன்புள்ள மிஸ்டர் டெ விட், நான் இறப்பதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. வாழ்வதும் இறப்பதும் கடவுளின் கருணையால் நடப்பது. என்னால் போருக்குப்பின் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியவில்லை ― என்ன செய்தாலும் நாங்கள் தோற்பது நிச்சயம் என்று தெரிந்தபின். ஒருவேளை, எங்களின் அரசு பறிக்கப்பட்டபின் நாங்கள் இருந்தாலும் அதற்கும் ‘வாழ்க்கை’ என்ற பெயரேதானா?

போன கடிதத்தில் நீங்கள் சொல்லியபடி, மறுபடியும் எங்கள் அரண்மனைக்கு வந்து தேவதைகளைப்  பற்றியும் என் அம்மா சொல்லும் ஹனுமனின் கதைகளையும் கேட்க வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தால், தயவு செய்து கடவுளிடம் போர் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி ஓம்.

நம்பிக்கையுடன்

உங்கள் தங்கை

அனக் மஹாஸ்த்ரீ சுவாந்தினி

மூங்கிலைச் சீவி எடுத்த மெல்லிய ஓலையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை மீண்டும் உறைக்குள் போட்டேன். கடந்த மாதம் என்னிடம் வந்து சேர்ந்த இக்கடிதம் கடந்து வந்திருக்கக்கூடிய பாதையினை எண்ணிப்பார்த்தேன். எங்கிருந்து வந்தது எனக்கேட்டபோது, இதைக் கொண்டுவந்த பையனுக்கு அது தெரியவில்லை. அடுத்து ஒரு சொல்லும் பேசாமல் வாயை மூடிக்கொண்டான். நான் கொடுத்த ஐந்து பைசாவையும் வாங்க மறுத்து விட்டான்.

அனக் மஹாஸ்த்ரீ சுவாந்தினி, என் தங்கையே, அந்த கடிதத்தில் எந்த ரகசியமும் இல்லை. ஆம் தானே? நீ மட்டுமே எழுத்தின் வடிவில் தோன்றினாய். அலையலையாக பழைய நினைவுகள் அதன் ஒவ்வொரு சொல்லோடும் எழுந்தது. ஒருவேளை பாலிக்காரர்களிடமோ டச்சுக்களிடமோ இது கிடைத்திருந்தால் இரண்டு தரப்புமே துரோகப் பட்டங்களை நமக்குத் தரும். பின்னே, கேசிமான் அரண்மனையின் இளவரசிகளுள் ஒருத்தி இந்த டச்சுக்காரனுக்கு சுத்த டச்சு மொழியில் கடிதம் அனுப்பினால்?

தங்கையே, உன்னை முதலில் பார்க்கும்பொழுது உனக்கு பதினைந்து வயது. அன்று உன் அன்னையும் அக்காவும் உடன் இருந்தனர். சனூர் கடற்கரையில் கோமாலா கப்பல் வந்து இந்த பதட்டத்தின் காலம் துவங்குவதற்குமுன் வாழ்வு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது? உங்கள் மக்களின் கலாச்சாரத்தை அறிவதற்கு உங்கள் குடும்பம் நல்ல வாய்ப்பாக இருந்தது. – முக்கியமாக மேசதியச் சடங்கையும் புப்புட்டான் சடங்கையும். கணவனின் இறப்புக்குப் பின்னும் தன் காதலை வெளிப்படுத்தும் வகையில் அவனது சிதையில் ஏறும் மனைவி. போரில் தோல்வி உறுதி என அறிந்தால், சாவுச்சடங்கிற்கான வெள்ளை உடையில் ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் வந்து எதிரிப்படையை எதிர்கொண்டு இறத்தல் – அப்பொழுதும்கூட அவர்களை அவமதிக்கும் வகையில் நாணயங்களையும் தங்க நகைகளையும் அவர்களின் முகத்தில் வீசுதல்.

இந்த பழைய மரபு வழக்கம் போலவே நடக்கிறது. கோமாலா கப்பலை கொள்ளையடித்தவர்களை பதூங்கின் அரசர் பாதுகாப்பதோடு, கொள்ளைக்கு அபராதமும் தர மறுக்கிறார் என்பது டச்சுக் கிழக்கிந்திய அரசுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஊதிப் பெருக்கவைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு படையெடுப்பு அவசியமாம். உலகம் இதற்கு என்ன சொல்லப்போகிறது எனத் தெரியவில்லை. இதில் உள்ள அடிப்படைத் தவறை அறிவாளிகளாவது புரிந்து கொள்வார்கள் என நம்புவது மட்டுமே இப்போதிருக்கும் ஒரே வழி.

“இவ்வளவு நல்ல டச்சுமொழியை எங்கே கற்றாய்?” ஒருநாள் நான் உன்னைக் கேட்டேன்.

“மிஸ்டர் லாங்கிடம் இருந்தும் உங்கள் தினசரியில் இருந்தும்” புன்னகையுடன் நீ டச்சிலேயே சொன்னாய் “டெ லொக்கோமோட்டீவ் எனக்கு மிகவும் பிடித்த தினசரி”

நான் புன்னகைத்தேன். லாங்க் பாலியில் சரளமாகப் பேசக்கூடியவர் என நான் கேள்வி மட்டும் பட்டிருந்தேன். இதுவரையில் அவரைப் பார்த்ததில்லை. ஆனால் உங்கள் பேச்சில் தெரியும் அவர் எனக்கு மிகவும் பிடித்தவர். என்னைப்போலவே உங்களுக்கு மரியாதையையும் உங்களுடைய செல்வத்தையும் திருப்பித் தர வேண்டும் என நினைப்பவர். முன்னூறு வருடங்களாக எங்கள் நாடு உங்களைச் சுரண்டுவதில் அவமானம் கொள்பவர்.

தங்கையே, உங்களுடைய அரண்மனையில் இரண்டு மாதங்கள் தங்கி இருக்கும்போது நீ சமைத்த அனைத்து உணவுகளும் எனக்குப் பிடித்திருந்தன. அந்த உணவுகளும் உன்னுடைய நடனத்தின் போக்கில் இயற்கையுடன் நீ கொள்ளும் ஒத்திசைவும் ஒருவகையில் எனக்குக் கிடைத்த ஆசிர்வாதங்கள். அதற்கு என்றும் நான் நன்றியுடன் இருப்பேன். எப்போதும் எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வியே மீண்டும் எழுகிறது: உங்களுக்கு நாகரீகத்தைத் தருகிறோம் என்ற வேடத்தில் நாங்கள் இங்கிருப்பது மெய்யாகவே அவசியமா?

இரவுக்காவலுக்கு ஆள்மாற்றுவதற்கு ஊதப்பட்ட சங்கினால் என் எண்ணவோட்டம் கலைந்தது. கேசிமான் அரண்மனையைச் சுற்றிக் கூடாரங்கள் முளைத்துக் கொண்டிருந்தன. இன்று மதியம் சில மணி நேரம் நடந்த சண்டைக்குப்பின் கேசிமான் அரண்மனை கைப்பற்றப்பட்டது. இப்போதைக்கு துப்பாக்கிகளின் வெடியோசை கேட்காமலிருப்பதே கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

தங்கையே, உனது தந்தை, பெதண்ட வயன்,  பொறுமையாக பாலி அரசைப் பற்றி விளக்கிய அந்தநாள் நினைவுக்கு வருகிறது. அன்று அவர் சொன்னார் பாலியைப்போல மூன்று அரசர்களால் ஆளப்படும் தேசம் வேறு இல்லை என. மூன்று அரசர்களும் மூன்று அரண்மனையில் இருக்கிறார்கள் ― பாமேகுட்டன்புரி, தென்பாசர் புரி, மற்றும் நீ இருந்த கேசிமான் புரி. கேசிமான் புரியில் நான் உணர்ந்ததெல்லாம் முழு நட்பை மட்டும்தான். அதனால் கேசிமானின் அரசர் ‘கஸ்தி எங்குறா கேசிமான்’ அவர்களை அவரின் அமைச்சரே குத்திக் கொன்றார் என்னும் செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. அதுவும் அரசர் டச்சுக்களை எதிர்க்கிறார் என்னும் ஒரே காரணத்திற்காக. ஒருவகையில் நீ சொன்னது சரிதான். போரினால் நல்லது எதுவும் வரப்போவதில்லை. போர் எல்லாவற்றையும் அழித்துவிடும் ― அன்பையும் விசுவாசத்தையும் கூட.

நீ என்னிடம் போர் விலக வேண்டும் என கடவுளிடம் வேண்டவா சொன்னாய்? ஓ! என் தங்கையே, நூறு நூறு ஆண்டுகளாக எங்கள் மேல் ஒரு நோய் படர்ந்துள்ளது. அதனாலேயே எல்லாப் பெருமைகளும்யும் எங்களுக்கே என்று நாங்கள் அலைந்து கொண்டுள்ளோம். கடவுளுக்கு எங்கள் வேண்டுதல்களைக் கேட்க நேரமில்லாது ஆகி அதிக காலம் ஆகிவிட்டது. அடுத்தவனுக்கும் அவன் நிலத்தை ஆட்சிசெய்யும் உரிமை உண்டு என்றெல்லாம் நாங்கள் நினைப்பதே இல்லை. இன்று மதியம் கேசிமான் அரண்மனைக்குள் எங்களின்படை புகுந்தது. படையின் கையில் ஒவ்வொரு பொருளும் – குடைகள், பாத்திரங்கள், நாம் அமர்ந்துபேசிய நாற்காலிகள் – சிக்கிய போதும் நான் தரையில் விழுந்து விடுவதைப்போல உணர்ந்தேன். “வேண்டாம்! வேண்டாம்” என நான் கத்தியிருந்தாலும் ஒரு பயனும் இருந்திருக்க வாய்ப்பில்லை. படையில் இருந்த உள்ளூர் ஆட்கள் மட்டுமல்ல ஐரோப்பியர்களும் அல்லவா கொள்ளையில் ஈடுபட்டனர்.

ஆம். இன்று நடந்த அரண்மனைக் கொள்ளையின்போது நானும் இருந்தேன். உங்கள் அரசு மீதான டச்சுக் கிழக்கிந்திய அரசின் வெற்றியைக் கொண்டாட அல்ல. உனக்காக. உன் பிணம் மீது படைக்காரர்களின் ஒரு விரலும் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதற்காக. ஆனால் அரண்மனை ஓர் ஆள்கூட இல்லாமல் ஒழிந்து கிடைந்ததைக் கண்டபோது என்ன உணர்ந்தேன்? உன்னைப் பார்க்க முடியாததால் வருத்தமா? அல்லது நீ உன் குடும்பத்துடன் எங்காவது உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதால் மகிழ்ச்சியா?

நீ ஏன் எப்போதும் படையை அறமில்லாதவர்கள் என பழிக்கிறாய்? டச்சுக்காரர்களான நாங்கள் வைத்திருப்பதிலேயே சிறந்தது எங்கள் படை மட்டும்தான். பலர் இப்போதுதான் வேறுவேறு போர்க்களங்களில் இருந்து இங்கே வந்தவர்கள். பலர் அவர்களின் குடும்பத்தைப் பார்த்தே பல வருடங்கள் இருக்கும். நீ என் அவர்களின் விசுவாசத்தால் அவர்களை அற்பர்கள் என்கிறாய்? அவர்களுக்கு ஆணையிடும் முட்டாள்களை அல்லவா நாம் கேள்வி கேட்க வேண்டும்?

மேஜர் ஜெனரல் ரோஸ்ட் வன் டோன்னிங்கன் அவர்கள் எனக்கு கொடுத்த பேட்டியின் குறிப்புகளை புரட்டினேன். பாலித் தீவுக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னர் என் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி அது. அவரது ஆணைக்குக் கீழ் இருப்பனவற்றின் பட்டியல் கண்ணில் பட்டது: 92 அதிகாரிகள்; உள்ளூர்காரர்களும் ஐரோப்பியருமாக 2312 படை வீரர்கள்; 741 ஏவலர்கள்; டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் பெரிய போர்க்கப்பல்கள் ஆறு; சரக்குக் கப்பல்கள் ஆறு; தளவாடக் கப்பல் ஒன்று; போர்ப்படகுகளின் ஒரு தொகுதி; நான்கு பெரிய பீரங்கிகள்; நான்கு சிறிய பீரங்கிகள்; அதிகாரிகளுக்கு அரபு குதிரைகள்; பல மருத்துவ பணியாளர்கள்; ரேடியோக்கள் மற்றும் சில ராணுவ நீதிபதிகள்.

“எதற்காக இவ்வளவு பெரிய படை என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா?” பின்னாலிருந்து ஒரு முரட்டுக்குரல் வந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். பழைய கோடாக் கேமிராவைத் தொங்க விட்டுக் கொண்டு ஒரு தாடிக்காரன் வந்தான். அவனின் முகத்தில் அமைதி மட்டுமே இருந்தது ― ஏதோ தலைமுறை தலைமுறையாக இந்த நிலத்தில் பிறந்து வளர்ந்தவனைப்போல. அவன் சட்டையில் குத்தியிருந்த அட்டை அவனும் ஒரு பத்திரிகைக்காரன் என்பதை உணர்த்தியது. அவன் முதுகுப்பையில் புகைப்படம் எடுப்பதற்கான கூழ்மத் தகடுகள் நிறைய இருந்தன. இரண்டு கைகளிலும் கேமிரா வைப்பதற்கான முக்காலி இருந்தது. இருந்தும் சிரமப்பட்டு வலது கையை எனக்கு நீட்டினான்.

“பார்ட் ரோம்மெல்ட்ஜ். அரசு பதிவுத்துறை.” இங்கிருக்கும் அனைவரை விடவும் தனித்து இருக்க விரும்புபவன் போல முகத்தில் எதையும் காட்டாமல் அப்படியே வைத்துக் கொண்டான். துரோகிக்க எப்போதும் தயாராய் இருக்கும் அரசுப் பணியாளன் என்று நினைத்துக் கொண்டேன்.

“உங்களுக்குத் தனி கொட்டகை இருக்கிறது போல?” அவன் பதிலை எதிர்பாராமல் பேசிக்கொண்டே போனான்.

“நீங்கள் அனுமதித்தால் நான் இங்கேயே தூங்கலாமா? எனது கொட்டகைக்கு அருகில் படைவீரர்கள் சீட்டாடுகிறார்கள். ரெம்பவும் சத்தம். எனக்கே அங்கு பெரிய கொட்டகை இருக்கையில் இங்கு தங்குவது வெட்கக்கேடுதான்.”

“சும்மா இங்கேயே தூங்குங்கள். நான் பாஸ்டியன் டெ விட். டெ லொக்கோமோடிவ்.” நான் சொல்லிக்கொண்டே அவன் கழுத்தில் தொங்கிய கேமிராவை கையால் தூக்கிப் பார்த்தேன். “மாடல் எண் நான்கா? நீங்கள் ஏன் இன்னும் இந்த தொல்பொருளைத் தூக்கிச் சுமக்கிறீர்கள்?”

“ஓ! அமெச்சூர் ஆட்களைப் போல நானும் ஒரு பிரௌனி கேமிராவின் பின்னால் அலைய வேண்டும் என்று சொல்கிறீர்களா? நான் நிச்சயமாகவே சொல்கிறேன், போன வருடம் தேசிய விருதுகள் வாங்கியவர்களின் பெயர் பட்டியலைக்கூட நீங்கள் வாசித்துப் பார்க்கவில்லை” சொல்லிவிட்டு உதட்டை மட்டும் இளித்துக் கொண்டான்.  கூழ்மத் தகடுகளே படச்சுருள்களைவிட நல்ல புகைப்படங்களைத் தருகின்றன. இதற்கு ஏதாவது நேர்ந்து விட்டால் மாற்றாக பயன்படுத்த எனக்கு இதைப்போல இன்னமும் ஒன்று வேண்டும். இன்னொரு காமிரா வாங்க அரசிடம் பணம் இல்லை. மொத்த கருவூலமும் போரினால் மட்டுமே காலியாகி விடுகிறது. அச்சே, தபானுலி, போன், இப்பொழுது பாலி ”

“எல்லா கிழக்கிந்திய கவர்னர்களுக்கும் போர் மிகவும் இஷ்டம்” அவனின் முதுகுப்பையை இறக்கிவைக்க உதவிக்கொண்டே நான் சொன்னேன். “முக்கியமாக வான் ஹியூட்ஸ்க்கு. அச்சேயில் கிடைத்த வெற்றி அவரை ஒரு பாசிஸ்ட் ஆகவே மாற்றிவிட்டது.”

அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், “நீங்கள் பீட்டர் ப்ரூஷூப்ட்டைப் போல பேசுகிறீர்கள். தென்பாசரின் அரசர் இன்று இரவு தாக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவர் ஒரு வீரர் அல்லர்.”

“நீங்கள் சொல்வது சரிதான்” நான் தலையாட்டினேன். “அவர் கௌரவத்தைப் பெரிதாக நினைக்கும் ஒரு ஆட்சியாளர் மட்டும்தான். மேசதியா கூடாது என்றாலோ இந்த கப்பலுக்கு இழப்பீடு கேட்டாலோ கௌரவம் பாதிக்கப்பட்டு சினக்கக்கூடியவரே.”

“ஹே! இப்போது நாமும் பற்றியெரியும் பரபரப்புச் செய்திகளுக்கு வந்துவிட்டோம்” அவன் செருமிக் கொண்டபின் கேட்டான் “நீங்களும் இந்தக் கப்பல் கொள்ளையடிக்கப் பட்டது என்பதை நம்பவில்லையா?”

“அது போரை நியாயப்படுத்த அரசு செய்யும் சிறிய சூழ்ச்சி” ஒரு கோப்பைக் காபியை நீட்டிக்கொண்டே நான் சொன்னேன்.

அவன் தலையாட்டிக்கொண்டே முணுமுணுப்பாகக் கேட்டான் “இதில் புதிதாக என்ன உள்ளது? எல்லா தாராளவாதிகளும் இதையே சொல்வீர்கள். அரசை ஆதரிப்பவர்கள் இதற்கு நேர்மாறாக சொல்வார்கள்.”

ஒரு பெருமூச்சுக்குப் பின் நான் சொன்னேன். “இங்கே பாருங்கள் மிஸ்டர் பார்ட், ரெஸிடெண்ட்டிடம் அந்த கப்பலின் உரிமையாளரான க்வீ டெக் டிஜாங் என்ன சொன்னார்? 7500 பணம் மதிப்பிலான நாணயங்கள் இருந்த பெட்டியை உள்ளூர் ஆட்கள் திருடிக்கொண்டு விட்டார்கள் என்றுதானே? மண்ணெண்ணையையும் மீன்களையும் இவர்கள் கரையில் போராடி மீட்டு விட்டார்களாம்! ” நான் இரண்டாவது சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். “நீங்கள் சொல்லுங்கள். உங்கள் கப்பலில் அவ்வளவு பணம் இருந்தால் நீங்கள் எதை முதலில் காப்பாற்றுவீர்கள்? பணத்தையா? மீன்களையா? நான் நிச்சயமாகச் சொல்கிறேன். அந்த கப்பலின் உரிமையாளருக்கு ஒரே நோக்கம் தான்: அரசரிடம் இருந்து பணம் கறப்பது.”

“டச்சுக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” அவன் கேட்டான்.

“பாக்ஸ் நீர்லேண்டிக்கா” நான் சீறினேன். “எல்லாம் கிழக்கிந்தியாவுக்காக! அதுதானே கவர்னர் வான் ஹியூட்ஸ்க்கு காதல் கனவு. அப்பன் பெயர் தெரியாத அவன் எப்படி பாலித்தீவில் மட்டும் முடியாட்சியுள்ள மன்னர் இருப்பதை ஒப்புக்கொள்வான்? அவன் கவர்னர் ஆவதற்கு வெகுமுன்னரே டச்சுக் கிழக்கிந்திய அரசுக்கு கீழ்படியாத மன்னரை விட்டுவைக்கும் 1849ன் ஒப்பந்தத்தை சீரழிக்க முடிவு செய்திருப்பான் என்று நினைக்கிறேன். எனவே இந்த கப்பல் விஷயத்தைக் கொண்டு பாலி அரசருக்கு சினமூட்டி அவனது அரசியல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறான். ஏற்கனவே அவன் மேசதியா சடங்கைத் தடை செய்ததும் இதற்காகத்தான்.”

பார்ட் ஒப்புக்கொண்டுச் சொன்னான் “பக்க சார்புடைய செய்திகளால் உலகமே இந்த படையெடுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. பாலி அரசர் இழப்பீடு கொடுக்காதது சட்டப்படி நடக்க முயலும் கவர்னருக்கு கீழ்படியாமல் இருப்பது என்றுதானே நம்பப்படுகிறது.”

“ஒரு மிகச்சிறந்த நாகரீகம் அழிந்துவிடும்” என்றேன். பாலி பற்றிய கவலைகளை நான் பாரட்டிடம் பகிர்ந்து கொண்டேன். என் இளைய நண்பருக்காக எவ்வளவு கவலைப்படுகிறேன் என்றும். தூக்கத்தால் மதி மயங்கும்வரை பேசிக்கொண்டிருந்தோம். கொட்டகைக்குள் சென்றவுடன் பார்ட் தூங்கிவிட்டான். எனது மனதில் அனக் மகாஸ்த்ரீ சுவாந்தினியின் அழகிய முகம் புன்னகையுடன் தோன்றியது. அழகிய வெள்ளை பற்கள், தொட்டுப் பாயும் அந்த கண்கள், எப்போதும் அவள் சொல்லும் புத்தியுள்ள சொற்கள்…

அவள் ஒருமுறை எனக்காக மட்டும் நடனமாடினாள். அந்த நாட்டியத்தை பெயர் என் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவளது மொத்த உடலும் ஒரே உணர்வைக் காட்டியது. அமர்தல் நிற்றல் தலை திரும்பல் என நடனம். ஜடை அவிழ்ந்தது. விரிந்த கூந்தல் அவளைச் சுற்றி சுழன்றது. இருண்ட பிலம் போல. வேண்டாம்! அதற்குள் போகாதே! அந்த பிலம் பிரபஞ்சத்தையே முழுங்கியது. கையை நீட்டிக்கொண்டு ஓடினேன். மிகவும் தாமதம் ஆகிவிட்டது. அவளது அலறலை மட்டுமே கேட்க முடிந்தது ― “மிஸ்டர் டெ விட், என்னை காப்பாற்றுங்கள்”

நான் படுக்கையைவிட்டுத் துள்ளி எழுந்தேன். கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஐந்து. திறந்து கிடந்த கொட்டகையின் கதவு வழியாக வெளியே வந்தேன். தீமூட்டி காபி போட்டுக் கொண்டிருந்த பார்ட் என்னை நோக்கி கைகாட்டினான். வயிறு பசித்தது.

“நீங்கள் போட்ட சத்தத்திலிருந்து உங்களுக்கு இனிய கனவு ஒன்றும் வரவில்லை என்று நினைக்கிறேன்!” ஒரு கோப்பை காபியை நீட்டியபடி பார்ட் சொன்னான். “தயாராகுங்கள் படை ஏழு மணிக்கு கிளம்புகிறது”

“நீங்கள் உளவாளிகளுக்கு நெருக்கமாக இருக்கும் அரசாங்க எடுபிடி அல்லவா? சொல்லுங்கள், எந்த படைப்பிரிவு இன்று அரசருடன் போர் புரியும்?” சிகரெட் ஒன்றை எடுத்தபடி நான் கேட்டேன்.

பார்ட் சிரித்தபடி கேட்டான் “அரசாங்க எடுபிடி? என்ன ஒரு முட்டாள்தனம்! இந்த தகவல்கள் எல்லாம் படைப்பிரிவுகளின் கமாண்டர்களிடம் கேட்டாலே தெரியுமே! சரி, உங்களுக்காகச் சொல்கிறேன். பிரிவு 11 வலப்புறம் பிரிவு 18 இடப்புறம் துப்பாக்கிகளுடன் பிரிவு 20 நடுவில். அரசர் இன்று போருக்கு வரமாட்டார். டங்குண்டிட்டி கிராமத்துக்கு அருகில் அரசரின் படையும் நம் படையும் சந்திக்கும் என்று கணித்திருக்கிறார்கள். உனது தங்கையை பார்க்க வேண்டுமானால் கயுமாஸ் கிராமத்தின் வழியாகச் செல்லும் பிரிவு 18 உடன் போ. அங்கு கொஞ்சம் பாலி மக்கள் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று ஓர் உளவுச்செய்தி.”

ஏழுமணிக்கு படையுடன் சேர்ந்து கிளம்பினேன். கிராமத்தின் பாதைகளில் செல்லும்போது தலைக்குமேல், என் கணிப்பில், ஐம்பது முறைகளுக்கும்மேல் ஊதல் சத்தம் கேட்டது. போர்க்கப்பல்களில் இருந்த பீரங்கிகள் மீண்டும் தென்பாசரின் அரண்மனையையும் பாமேகுட்டனின் அரண்மனையையும் நோக்கி சுட ஆரம்பித்து விட்டன. மூன்றில் ஒரு குண்டாவது எப்படியும் இலக்கடையும். அரசரின் உத்தரவுப்படி அரசகுடும்பம் வெளியேறி இந்த நரகத்தில் இருந்து எவ்வளவு விலக வேண்டுமோ அவ்வளவு விலகியிருக்க வேண்டும் என நம்ப விரும்பினேன்.

நாங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருந்தோம். சுமர்த்தா கிராமத்தின் அருகே பதூங் வீரர்கள் சிறுகுழுவாக வீரத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு எங்களை எதிர்த்தார்கள். நல்லவேளையாக, அதிகப்பேரை கொல்வதற்கு முன்னால் அவர்களைத் துரத்த முடிந்தது. எட்டுமணிக்கு பார்ட் சொன்னதுபோல படை மூன்றாகப் பிரிந்தது. நான் பிரிவு 18 உடன் சென்றேன். பார்ட் பதினொன்றாம் பிரிவுடன் கிழக்குநோக்கி தென்பாசரின் பக்கம் சென்றான். பிரிவு எண் இருபது அங்கேயே காத்திருக்க வேண்டும் என்று ஆணை.

இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். நாங்கள் கொஞ்சம் உயரமான நிலத்தில் சென்றுகொண்டிருந்தோம். வலப்பக்கம் தூரத்தில் பதினொன்றாம் பிரிவு செல்வது மெலிதாகத் தெரிந்தது.

திடீரென அவர்களுக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்து ஒரு பெரிய படை வந்தது. பார்த்தால் போர்வீரர்களைப்போல் தெரியவில்லை ― ஏதோ ஓர் ஊர்வலம் போன்று இருந்தது. எல்லாரும் வெள்ளை ஆடை அணிந்திருந்தனர். பலவித நகைகள் மின்னிக்கொண்டு இருந்தன. பதினொன்றாம் படையைப் பார்த்த பின்பும் அவர்கள் வேகத்தைக் குறைக்கவில்லை. படைப்பிரிவை நெருங்கவும் படைவீரர்களை அன்புடன் அணைக்க விரும்புபவர்களைப்போல் ஓடிச் சென்றனர். சில துப்பாக்கிகள் சுடும் ஒலிகளைக் கேட்டேன். உடன் ஆணைகளும் வலியின் அலறல்களும் சேர்ந்து ஒலித்தன.

“பொறுங்கள்! சைகை வரட்டும்” என்று எங்கள் படைப்பிரிவின் கமாண்டர் தொலைநோக்கியில் பார்த்தபடி கத்தினார். நான் பதறிக்கொண்டிருந்தேன். உளவாளியிடம் இருந்து வந்த தகவல் எங்களிடம் பரவ ஆரம்பித்தது: தென்பாசர் அரண்மனையில் இருக்கும் எல்லாரும்தான் எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாரும். அரசர், அரசி, புரோகிதர், உயர்குடியினர், அவர்தம் மனைவியர், குழந்தைகள், பணியாளர்கள், பல்லக்குத்தூக்கிகள்….

மொத்த அரண்மனையுமா வருகிறது? புதிதாக கயுமாஸிற்கு வந்ததாகச் சொல்லப்பட்ட மக்கள் எங்கிருக்கிறார்கள்? நான் உளவாளியைத் தேடினேன். நாங்கள் செல்லும் வழியில் எந்த கிராமத்திலும் யாரும் புதிதாக வரவில்லை என அவன் சொன்னான். என் வயிற்றுத்தசைகள் இறுகின. அனக் மகாஸ்த்ரீ சுவாந்தினி, என் அன்புத்தங்கை, அவளும் அந்த ஊர்வலத்தில்தான் இருக்க வேண்டும்!

ஒரு வீரனிடம் குதிரையை வாங்கிக்கொண்டு நான் அவர்களை நோக்கிப் பாய்ந்தேன். என்னை நோக்கியும் ஓரிரு குண்டுகள் வந்தன. அதற்குள் பதினொன்றாம் பிரிவால் நான் அடையாளம் காணப்பட்டேன். எனக்குப்பின் மொத்த பதினெட்டாம் பிரிவும் கிளம்பி வருவதன் சத்தம் கேட்டது.

படைபிரிவு பதினொன்றை அடைந்தேன். அங்கு நிகழ்வதைப் பார்த்து நிலைகுலைந்து போனேன். பல ஆண்களும் பெண்களும் பெண்களின் கையிலிருக்கும் குழந்தைகளும் மிக அழகிய வெள்ளை ஆடையுடன் வந்து குண்டடி பட்டனர். கமாண்டரின் ஆணைப்படி வீரர்கள் எதையும் பார்க்காமல் சுட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த அழகிய ஊர்வலம் விருப்பத்துடன் இறப்புக்குள் போவதைப்போல இருந்தது. குண்டு பட்டு ஒருவர் விழுகையில் இன்னொருவர் அந்த இடத்தை எடுத்துக்கொண்டார். ஒரு முதியவர், ஒருவேளை புரோகிதராக இருக்கலாம், மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே விழுந்து கிடந்தவர்களுக்கு மரணத்தை உறுதிப்படுத்த குறுவாளால் குத்திக்கொண்டிருந்தார். மற்ற மரணங்களைவிட வாளால் இறப்பது கொஞ்சம் மோசம் என்று நினைத்துக்கொண்டேன்.

அரைமணி நேரத்திற்குள் மொத்த இடமும் அமைதியானது. துப்பாக்கிகள் ஓய்ந்தன. சாத்தான் பிடித்துக்கொள்வதுபோல அந்தப்பெயர் என்னுள் எழுந்து என்னை ஆக்கிரமித்தது. பிணக்கூட்டத்திற்குள் புகுந்து ஓடினேன். நினைவில் எழும் முகத்தை அந்த சதைக்குவியல்களுக்குள் தேடினேன். கண்டே பிடிக்க முடியவில்லை. எல்லாம் சிதைந்தது.

என் நிராசைக்கு நடுவில் ஒரு இளம்பெண் எழுந்ததைப் பார்த்தேன். உள்ளம் திடுக்கிட்டது. அவள் உடல் முழுவதும் பச்சை ரத்தம். உடையைவிட்டு பிதுங்கிய முலையிலும் காயம். அவள் ஒரு நொடி என்னை உற்றுப்பார்த்தாள். பின்னர் என்னை நோக்கி எதையோ வீசினாள். நான் அதைப் பிடிக்கவும் அந்த சத்தம் கேட்டது. நெற்றியில் இருந்து ரத்தம் ஊற அவள் விழுந்தாள். எனக்குப் பின்னால் உள்ளூர் சிப்பாய் ஒருவன் துப்பாக்கியை தூக்கியபடி இருப்பதைப் பார்த்தேன். நான் என் கையைத் திறந்து பார்க்கவும் மொத்த கட்டுப்பாடையும் இழந்தேன். அந்த சிப்பாயை கீழே தள்ளி முழங்காலால் அவன் நெஞ்சை அழுத்தினேன். முஷ்டியை இறுக்கி அவன் முகத்தில் குத்தினேன். மீண்டும் குத்தினேன். மீண்டும் மீண்டும்…

“காசு! அவள் என் முகத்தின்மீது காசை எறிகிறாள். நீ அவள் நெற்றியில் சுடுகிறாய்! பாவி கொலைகாரா!”

“போதும்.”

என் கழுத்தில் ஏதோ அடி விழுந்தது. நான் தடுமாறி விழுந்தேன்.

“பத்திரிகைக்காரன் எல்லாம் போருக்கு வந்தால் இதுதான் நடக்கும்”

ஜெனரல் ரோஸ்ட் வான் டோன்னிங்கன் அவருடைய கைத்துப்பாக்கியை மீண்டும் உறைக்குள் வைப்பது மங்கலாகத் தெரிந்தது. சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு என்னைப்பர்த்துச் சொன்னார்: “படையை பற்றி தப்பும் தவறுமாக எழுதுவதை நிறுத்து. எனக்கும் படைக்கும் நாங்கள் என்ன செய்கிறோம் என தெரியும். எல்லாம் கிழக்கிந்தியாவுக்காக. கிழக்கிந்தியாவுக்காக மட்டும். நீ என்ன நினைக்கிறாய்? நீ கிழக்கிந்தியாவுக்காக என்ன செய்யப் போகிறாய்?”

நான் பதில் எதுவும் பேசவில்லை. பேசவும் முடியவில்லை.

*

[எம். இக்சகா பானு: இந்தோனேசியாவின் யோக்யகர்த்தாவில் 1964ல் பிறந்தார். 2000ம் ஆண்டு முதல் தீவிரமாக எழுதி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பாஷா இந்தோனேசியாவின் சிறந்த இருபது கதைகளுக்கு வழங்கப்படும் Pena Kencana விருது 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் இவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.]

[மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: செப்டம்பர் 20, 1906ல் பாலித்தீவில் நடந்த புப்புட்டானைத் தழுவி எழுதப்பட்ட கதை. புப்புட்டான் என்ற சொல்லுக்கு இறுதி என்று பொருள். டச்சு மேலாதிக்கத்தை எதிர்த்து பாலித்தீவில் பலமுறை புப்புட்டான்கள் நடந்தன. கதாநாயகன் டீ லொக்கோமோடிவ் பத்திரிக்கையின் ஆசிரியர் பீட்டர் ப்ரூஷூப்ட்டின் சாயல் உள்ளவன்.]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *