என்னுடைய முதல் நினைவு, நான் ஆறுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோது தொடங்குகிறது. இதை நவீன உளவியலாளர் அன்றி பிறர் நம்பமாட்டார்கள் என்று நான் அறிவேன். பலரிடம் சொல்லி நகைப்புக்கு இடமாகியிருக்கிறேன். நானே அதை ஒரு கனவு, எப்படியோ நனவாக மூளையால் தவறாக எண்ணப்பட்டுவிட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த காலமும் உண்டு. 1994-ல் நித்யா குருகுலத்தில் பஞ்சாபைச் சேர்ந்த மூத்த உளவியலாளர் ஒருவரிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அது அபூர்வமானதுதான் ஆனால் மிக அபூர்வமானது ஒன்றும் அல்ல என்று சொன்னார்.
நான் ஒரு தவழும் குழந்தை. துல்லியமான தன்னுணர்வு எனக்கு இருக்கிறது. கைகளையும் முழங்கால் முட்டுகளையும் ஊன்றி வேகமாக நகர்கிறேன். என் கழுத்தில் இருந்து ஒரு சங்கிலி முன்னால் தொங்கி ஆடுவதை அவ்வப்போது உட்கார்ந்து எடுத்து இழுத்துப்பார்க்கிறேன். அந்த இடம் ஒரு சாணிமெழுகிய தாழ்வான அடுக்களை. நான் எழுந்து அதைப்பிடித்துக்கொண்டு நிற்கிறேன். உரலின் மழமழப்பான குழிக்குள் கைகளைவிட முயல்கிறேன்.
யாரோ எனக்கு சுற்றும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். என் அம்மாவை மட்டும் குரலால் மட்டுமல்ல மணமோ அல்லது அதுபோல வேறு ஏதோ ஓர் உணர்வால் என்னால் அறியமுடிகிறது. ஒரு பெண் உள் அறையில் இருந்து அடுக்களைக்குள் இறங்கும் படிகளில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய புடவையின் மஞ்சள் நிறமான வெளிச்சமும் அலைபாயும் கீழ்நுனியும் எனக்குத் தெரிகிறது. நான் அதை நோக்கிச் செல்கிறேன். அப்போது அந்த பூனைக்குட்டி குறுக்காக வருகிறது. வெண்ணிறத்தில் சில தவிட்டுக்கோடுகள் கொண்ட, பின்கால்கள் நடுங்க மெல்லமெல்ல தள்ளாடிச் செல்லும் பூனைக்கு்ட்டி அதன் வெறித்த கண்களையும் மியாவ் என்று சொன்னபோது வாயின் சிவப்புக்குள் பற்களையும் கண்டேன். அதைநோக்கி வேகமாகச் சென்று அதனருகே கிடந்த ஒரு அரிப்புப்பெட்டியை (பனைநாரால் செய்யப்பட்ட பெட்டி. சாதம் வடிக்க அதைப் பயன்படுத்துவார்கள்) எடுத்து அந்தப் பூனைமீது கவிழ்க்க முயல்கிறேன். பூனை நகர்ந்து நகர்ந்து செல்கிறது. அரிப்புப்பெட்டியை என்னிடமிருந்து யாரோ பிடுங்கி அதேவேகத்தில் என் வயிற்றை வலிக்கும்படி பிடித்து எ்ன்னைத் துாக்க, பூனைக்குட்டி கீழே தாழ்ந்து செல்கிறது. நான் கால்களை உதைக்கிறேன். அது என் அம்மா அல்ல என்று அந்த தொடுகையினாலேயே அறிகிறேன். சொல்லும்போது பெரிதாக இருக்கிறது, உண்மையில் சில நிமிஷங்கள் நீளும் ஞாபகப்படங்களின் ஒரு துணுக்கு மட்டும்தான் இது.
அடுத்த நினைவு நெடுநாள் எனக்குக் கனவுபோல வந்துகொண்டிருந்தது. ஒரு சொரசொரப்பான குளத்து சிமிண்ட் மதில்மீது நான் அமரச் செய்யப்பட்டிருக்கிறேன். அருகே பிழிந்த துணிகளின் குவியல். கீழே எனக்குப் பின்பக்கம் படிகள். அதற்கும் கீழே நீலமான அலைகள் தளும்பும் நீர். நீர்ப்பாசியும் சோப்பும் கலந்த வாசனை. துணி துவைக்கும் சத்தம். பெண்களின் ஓசைகள். எதிரே ஒரு பெரிய காளைமாடு – அல்லது பசுமாடு- வருகிறது. அதன் கட்டுக்கயிறு காலில் சிக்குவதனால் தலை இழுபட்டு கொம்புகளை ஆட்டி குனிந்து குனிந்து வருகிறது. எனக்கு பயமே இல்லை. நான் அதன் கொம்புகளையே பார்க்கிறேன்.
கொம்புகளின் இடைவெளி என்னைவிட பெரியது. காளை உஸ்ஸ் என்று மூச்சுவிட்டு தலையைக் குனியும்போது எனக்கு கடுமையான அச்சம் வந்து உடலே உறைந்துவிடுகிறது. அழமுடியாமல் மொத்த ஓசையும் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது. அப்போது கீழே பெண்களின் ஒலிகள். யாரோ ஓடிவந்து என்னைத் துாக்கிக்கொண்டார்கள். நான் தூக்கிய பெண்ணைக் கட்டிக்கொண்டேன். காளையை யாரோ அதட்டி துரத்தினார்கள்.
ஒருமுறை காய்ச்சலில் இந்நினைவை மீண்டும் துல்லியமாகக் கண்ட பின் நான் அதை என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா அரண்டுபோனாள். உண்மையில் நடந்த நிகழ்ச்சி அது என்றாள். இவ்விரு நிகழ்ச்சிகளும் அருமனை ஊரில் நிகழ்ந்தவை. அப்போது எனக்கு ஆறுமாதம். அம்மா என்னை துாக்கிக்கொண்டு கோயில் குளத்துக்குக் குளிக்கச் சென்றிருக்கிறாள். என்னை மதில்மேல் வைத்து விட்டு நீந்தச் சென்றபோது அந்தக் காளை என்னை முட்டவந்ததாம். சந்திரி என்ற மாமி என்னைக் காப்பாற்றினாள் என்றாள். அந்த நிகழ்ச்சியில் அம்மாவின் தவறு அதிகம் என்பதனால் எவரிடமும் சொன்னதே இல்லை.
எனக்கு ஏதோ உளவியல் சிக்கல் என்று அம்மா எண்ணி என்னைப் பற்றி கவலை கொள்ள ஆரம்பித்தாள். உளச்சிக்கல் என்பதற்கான சில சான்றுகள் அன்று என் நடத்தையில் உண்டு. நான் எனக்குள் கற்பனையில் மூழ்கி புற உலகமே இல்லாமல் நாளெல்லாம் இருந்துகொண்டிருப்பேன். அலைவேன். நானே சில விஷயங்களைக் கற்பனை செய்து அவற்றை வளர்த்தெடுத்து ஒரு கட்டத்தில் அவை எனக்கு உண்மையே ஆகிவிடும். இரவெல்லாம் வெறிபிடித்தவனைப்போல வாசித்துக்கொண்டிருப்பேன். பதற்றமும் தனிமையும் கொண்டவனாக இருந்தேன்.
அந்த நிகழ்ச்சியில் இன்னும் ஒரு சிக்கலான இடம் உண்டு. அதை நான் அம்மாவிடம் சொல்லமுடியாது. நான் என்னை துாக்கி அணைத்த அந்தப் பெண்ணின் ஈரமான வெற்றுத் தோளையும் கழுத்தையும் சருமத்தின் மென்மையையும் வெம்மையையும் துல்லியமாக நினைவு வைத்திருந்தேன். நான் என்றால் என்னில் இருந்த ஆண். அந்த விஷயத்தில் என்னை நானே ஏதோ அசிங்கமான கீழ்த்தரமான பிறவி என்று எண்ணி எனக்குள் கூசிக்கொண்டிருந்தேன். அந்நினைவை என்னிலிருந்து அகற்ற முயன்று அதைப் பெருக்கிக்கொண்டிருந்தேன். நான் ஆன்மீக ஈடுபாடு கொண்டமைக்குக் காரணங்களில் ஒன்று நான் ஒரு சராசரிக்கும் கீழான ஆத்மா என்று அக்காலத்தில் நான் எண்ணியதே. அன்று என்னில் கிறித்தவப் பாதிப்பு மிக அதிகம்.
என்னுள் உள்ள பெண் சார்ந்த பிரக்ஞை ஒரு வயது முதல் துல்லியமாக நினைவிலிருக்கிறது என்று சொன்னால் மீண்டும் உளவியல் நிபுணர்கள் மட்டுமே நம்புவார்கள். முதல் நினைவாக ஏதோ ஒரு பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி என்னை என் அம்மாவிடமிருந்து வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள். அவளுடைய புடவையில் அமர முடியாமல் நான் வழுக்கிக்கொண்டே இருந்தேன். அவளுடைய கன்னத்து மென்மயிர், கழுத்தில் அணிந்திருந்த மாலை, அவள் போட்டிருந்த பவுடரின் நறுமணம் ஆகியவை என் நினைவில் அழுத்தமாக உள்ளன.
அது முஞ்சிறையாக இருக்கலாம். அங்குதான் அப்போது நாங்கள் குடியிருந்தோம். அந்த வீட்டை என்னால் நன்றாக நினைவுகூர முடிகிறது. பெரிய வீடு. நடு போர்ஷனில் ஒரு கால்நடை மருத்துவரும் அவரது மனைவியும் சிறிய பெண் குழந்தையும். வலப்பக்க போர்ஷனில் ஒரு வெள்ளைநிறமான தடித்த பெண். அவளுக்கு அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது. இடப்பக்க போர்ஷனில் நாங்கள். என் தங்கை அப்போது கைக்குழந்தை. அந்த வீட்டுக்கு வெளித்திண்ணை மூவருக்கும் பொதுவானது.
உதிரியாக எழும் நினைவுகளை இப்போது எழுதும்தோறும் எழுத தொட்டுத்தொட்டு எடுக்கமுடிகிறது. அந்த தடித்த வெள்ளை நிறமான பெண் என்னிடம் அத்தனை அன்பாக இருக்கமாட்டார்கள். மலையாளி. அவர்களின் வீட்டுக்குள் நான் செல்வது குறைவு. கொடிகளில் நிறைய அழுக்குத்துணிகள் தொங்கும் நினைவு இருக்கிறது. ஒருமுறை நான் அவர்கள் வீட்டுக்குள் ஓடிச்சென்ற போது குழந்தைக்கு ஒரு முலையில் பால்கொடுத்து இன்னொரு முலைக்கு மாற்றியபோது நான் அவர்கள் வெண்முலைகளைப் பார்த்தேன். பீங்கான் ஜாடியின் மூடி என்ற எண்ணம் வந்தது.
கால்நடை மருத்துவரின் மனைவிக்கு நான் செல்லம். அவர்கள் வீட்டில் நிறைய வார இதழ்கள் வாங்குவார்கள். நான் அவற்றை படம்பார்ப்பேன். அவர்கள் வீட்டின் கதவின் அடியில் உள்ள இடைவெளி வழியாக இதழ்களை உள்ளே தள்ளி அனுப்பமுடியும். காலையில் அவர்கள் வாங்கும் நாளிதழை பேப்பர்காரன் அப்படி தள்ளி உள்ளே விட்டுவிடுவான். அதைப்போல நானும் எந்த தாள் கிடைத்தாலும் உள்ளே தள்ளிவிடுவேன். அவர்கள் வீட்டுப் பெண் குழந்தை குண்டாக பாயில் படுத்திருக்கும். குழந்தைக்கு அத்தனை பௌடர் போடுவதை நான் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பேன். குழந்தை முகமே நினைவில் இல்லை. தொடை மடிப்புகளில் பவுடர் நிறைந்திருப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது.
அந்த கால்நடை மருத்துவர் முகம் நினைவில் இல்லை.ஆனால் அவர்கள் வீட்டில் இருந்த ஏசுவின் பெரிய காலண்டரும் அது சுவரில் சுழன்று சுழன்று உருவான தடமும் நினைவில் இருக்கின்றன. அந்த கால்நடை மருத்துவரின் மனைவியின் முகம் நினைத்தால் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் சிலசமயம் துல்லியமாக மனதில் எழுந்து வந்துவிடும். கருமையை நெருங்கும் மாநிறம், நெற்றியில் முடிச்சுருள்கள். பெரிய கண்கள். எப்போதும் உரக்கச் சிரித்துக்கொண்டே பேசுவார்கள். எங்களுரில் பெண்கள் சிரிப்பது மிகக் குறைவு. எப்போதும் என்னிடம் பேசிக்கொண்டேஇருப்பார்கள்.
உட்கார்வதற்கான ஒரு மனைப்பலகையை கையில் எடுத்துக்கொண்டு அதை ரேடியோ என்று பாவனை செய்தபடி நான் அலைந்த ஒரு நாள் நினைவில் வருகிறது. வீட்டுக்கு முன்னால் உள்ள தென்னந்தோப்பில் வேறு யாரோ ஒரு பெண் வந்து பேசிக்கொண்டிருக்கையில் வாழைத்தண்டு சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கல்லெல்லாம் போகும் என்று சென்னதைக் கேட்ட நினைவு. அந்த டாக்டர் மாமி என்னிடம் நான் வெட்னரி டாக்டர் ஆகக்கூடாது மனித டாக்டர் ஆகவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. அதைச்சொன்ன அந்த நேரத்து முகம் நினைவில் இல்லை. அந்தக் குரல் மட்டும்தான்.
அவர்கள் மீது எனக்கு இருந்த ஈர்ப்பை என்னால் இப்போது பலவாறாக பகுப்பாய்வு செய்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவருக்கும் பாலியல் சார்ந்த தனி ரசனை ஒன்று இருக்கும். குறிப்பிட்ட வகையான நிறம், முக அமைப்பு, பேச்சுமுறை, ஆளுமை என ஒரு தெரிவு இருக்கும். பெண்ணின் உடலில் ஆணுக்குக் கிளர்ச்சியை உருவாக்கக்கூடிய உறுப்புகளே ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடும். இந்த ரசனை எப்போது, எப்படி உருவாகிறது என்று சொல்லமுடியாது. ஆண் என்னும் தன்னிலை ஆணுக்கு மிகமிக இளம் வயதிலேயே உருவாகி விடுகிறது. சொல்லப்போனால் தன்னிலை உருவாகும்போதே அது ஆண் என்பதாகத்தான் உருவாகிறது. அப்போதே இதுவும் உருவாகி விடுமென நான் நினைக்கிறேன்.
என்னுடைய ரசனையை தீர்மானித்ததில் இந்த மாமிக்கு பெரும் பங்குண்டு என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. எனக்கு எப்போதுமே மலையாளப் பெண்கள் ஆர்வமூட்டியதில்லை. என் சுற்றத்தில் பல சமயம் பேரழகிகள் சாதாரணமாக புழங்கியிருக்கிறார்கள். பேரழகிகள் நெருங்கிய தோழிகளாக இருந்திருக்கிறார்கள். திருமண ஆலோசனைகளும் வந்திருக்கின்றன. மாநிறம்தான் என் ரசனைக்குரியதாக இருந்துகொண்டிருக்கிறது. இதெல்லாம் ஊகம்தான். ஆனால் அந்த மாமியின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் சிரிப்பையும் நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.
இக்கால இளமை நினைவுகளில் ஒன்று, ஏதோ ஒரு விழாவுக்கு நான் கொண்டுசெல்லப்பட்டது. எங்கள் வீட்டில் வேலைசெய்த சிறுமி என்னை துாக்கிச் சென்றாள். மின்விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் ஒலித்தன. அவளுடைய தம்பி ஒருவன் வந்ததும் அவன் முட்டில் இருந்த காயத்தில் பேப்பரை ஒட்டியதும் நினைவில் இருக்கிறது. அந்த சிறுமியின் வாயில் சில பற்கள் விழுந்து இடைவெளி இருக்கும்.
அதன்பின் ஒரு மேஜையில் இருந்து நழுவி நான் கீழே விழும் காட்சி. இத்தகைய விபத்துக்களின் கணநேர அனுபவங்களிலேயே நமக்கு நிகழ்வதை நாமே வேடிக்கை பார்க்கிறோம். மேஜையின் முனை என் நாடியில் குத்திவிட்டது. என்னைத் துாக்கியபடி அந்தச் சிறுமி ஒரு வீட்டுக்குள் ஓடிச் சென்றதும் அங்கிருந்த ஒரு பெண்மணி காப்பித்துாளை காயத்தில் வைத்ததும் நினைவிருக்கிறது. விரைவிலேயே அம்மா வந்துவிட்டாள். அப்படியானால் அது மிக அருகே உள்ள ஏதோ ஒரு இடம்.
முஞ்சிறை வீட்டைச் சுற்றி இருந்த தென்னந்தோப்பு ஏராளமான சித்திரங்களாக நெஞ்சில் உறைந்திருக்கிறது. மதிய நேர அமைதியில் தென்னை ஓலைகள் வான்வெளியில் மெல்ல அளைவதை எப்போது கண்டாலும் அந்த மனநிலை உருவாகிவிடுகிறது. அந்த தென்னந்தோப்புக்குள் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிறமான ஒரு கன்றுக்குட்டியை நான் மாமியின் இடுப்பில் இருந்துகொண்டு நெற்றியில் தொட்டுப் பார்த்தேன். ஒரு துாக்கணாங்குருவிக்கூட்டை யாரோ கொண்டுவந்து தந்தார்கள். அதை நான் ஒரு ஒட்டுத்திண்ணையில் அமர்ந்து நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னல்களுக்குள் இருந்த வெம்மையான குழிகளில் கைகளை வைத்து ஒரு சிறு குழந்தை போல ஆகி அந்த தொட்டிலில் துாங்குவதாக நினைத்துக்கொண்டேன்.
பல வருடங்கள் கழித்து அந்த கால்நடை மருத்துவரின் மனைவி தன் இரு குழந்தைகளுடன் என்னைப் பார்க்க நாங்கள் அப்போது தங்கியிருந்த முழுக்கோடு ஊருக்கு வந்தாள். நான் அப்போது அவளை மிக அன்னியமாக உணர்ந்தேன். என்னை அவள் தழுவியபோது சங்கடமாக இருந்தது. அவளது குழந்தைகளுக்கு நானும் மிக அன்னியமாக இருந்தேன். அவர்கள் நாகர்கோயில் குழந்தைகள். நாங்கள் நாகர்கோயிலைக் கண்டிராத கிராமத்துக் குழந்தைகள். அதன்பின் அவர்களைப் பார்க்கவேயில்லை.
முஞ்சிறையில் குடியிருந்த நாட்களில் என் அம்மாவுக்கு ஏதோ உடம்புக்கு வந்தது. முஞ்சிறையில் இருந்து என்னைத் துாக்கியடி நடந்தே தக்கலை பெரிய ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். கூட வேறு பெண்களும் பேசிக்கொண்டு வருவார்கள். சாலையெல்லாம் நிழல்கள் ஆடும். அம்மாவுக்கு நரம்பில் ஊசி போடுவதற்காக கையை நர்ஸ் கெட்டியாகப் பிடிப்பதை நான் கவனித்திருக்கிறேன். அம்மாவின் கையில் நரம்புகள் புடைத்திருக்கும். உதடுகளைக் கடித்து வேறு பக்கம் திரும்பியிருப்பாள்.
ஒரு நாள் ஒரு நர்ஸ் நடுவகிடு எடுத்து தலைசீவி வந்திருந்தாள். அப்போதெல்லாம் கோணல் வகிடுதான் வழக்கம். அதை இன்னொரு நர்ஸ் ”நல்லா இருக்குடீ நல்லா இருக்குடீ” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். இரு நர்ஸ்களின் முகங்களும் தெரிகின்றன. அப்படிப் பார்க்கும்போது இன்று ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு வயதுக்குக் குறைவான அந்தப் பிராயத்தில் நான் பெண்களை மட்டுமே கவனித்திருக்கிறேன். பெண்களுடன் இருக்கவே விரும்பியிருக்கிறேன். ஒரு ஆண் முகம்கூட நினைவில் இல்லை. இப்படித்தான் எல்லா ஆண்களுக்கும் இருக்குமா என்று தெரியவில்லை.
முஞ்சிறையில் இருக்கும்போதுள்ள ஒரு நிகழ்ச்சி மிகத்துல்லியமாக நினைவில் நின்று அடிக்கடி மீள்வது. எங்களை அப்பா தேங்காய்ப்பட்டினம் கடல் பார்க்க கூட்டிக்கொண்டு சென்றார். நான் பார்த்த முதல் கடல் அது. தென்னைமரங்களுக்கு அப்பால் கடல் ஒளியுடன் திளைப்பதைக் கண்டேன். கடற்கரையை அடைந்ததும் நான் பீதியுடன் அலறி பின்னால் ஓடி மணலில் அமர்ந்துவிட்டேன். பெரிய போர்வை ஒன்றுக்குள் ராட்சதர்கள் உருண்டு புரண்டு சண்டை போடுவதைப்போல எனக்கு தோன்றியது. அந்த காட்சியை சற்றும் மாற்றுக் குறையாமல் இதை எழுதும்போதே காணமுடிகிறது.
அம்மாவும் அப்பாவும் அண்ணணும் முன்னால் சென்றார்கள். அம்மா இடுப்பில் விஜி இருந்தாள். ”அம்மா போகாதே…விஜியைக்கொண்டு போகாதே” என்று நான் மணலில் கால்களை உதைத்தபடி கதறி அழுதேன். என்னை குண்டுக்கட்டாக துாக்க அப்பா முயன்றார். நான் கதறி அழுது கீழே விழுந்தேன். ஏறத்தாழ முப்பத்தைந்து வருடம் கழித்து தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் நிற்கும்போது தென்னைமரங்கள் நடுவே கடல் உள்வாங்கித் தெரிந்த அந்தக் காட்சி என் இளமைப்பருவத்தின் காட்சியேதான் என்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.
அதன்பின் நாங்கள் பத்மநாபபுரத்தில் குடியிருந்தோம். அந்த வீடு கொஞ்சமும் நினைவில் இல்லை. ஆனால் அதன் கொட்டியம்பலம்- வீட்டு மதிலில் உள்ள கேரள பாணி நுழைவாயில், கூரைபோட்டிருக்கும் – நினைவிருக்கிறது. குழந்தைகள் வெளியே செல்லாமல் இருக்க அதில் குறுக்காக ஒரு கட்டை போடப்பட்டிருக்கும். நான் அதில் ஏறி மறுபக்கம் குதிப்பேன். விஜி அந்தப் பக்கம் நிற்பாள்.
அப்போது நாங்கள் வளர்த்த ஒரு நாயின் முகம் மறையவில்லை. உண்மையில் அது நாங்கள் வளர்த்தது அல்ல, அது வீட்டு உரிமையாளரின் நாய். விஜியின் பின்னாலேயே சென்று அவளைக் காவல் காக்கும். அவளை அன்னியர் தொடுவதை அனுமதிக்காது. அவளிடம் ஒரு கூடைக்காரி ஏதோ பேசிவிட்டு கன்னத்தைத் தொடுவதற்கு வந்தபோது நாய் உறுமியபடி முன்னால் சென்றது. அவள் அலறி ஓடினாள்.
நான் அப்பாவின் கையைப்பற்றியபடி நடக்கும்போது உயரமான வீட்டுக்கூரையின் முக்கோணக் கூம்பு அருகே ஒரு புறா பறந்ததைப் பார்த்தேன். பக்கவாட்டில் கரிய நிறத்தில் பத்மநாபபுரம் கோட்டை மதில் வந்துகொண்டே இருந்தது. யாரோ பெரிய முறுக்கு ஒன்று கொண்டு என் அம்மாவிடம் கொடுத்திருந்தார்கள். அதை உடைத்து அம்மா எனக்கு தந்ததும் அருகே விஜி நின்றதும் நினைவில் இருக்கிறது. நான் கதவுக்கு வெளியே வாலாட்டிய நாய்க்கு கொஞ்சம் முறுக்கை பிய்த்து வீச அது வீட்டுக்குள்ளேயே விழுந்தது. நாய் உள்ளே வந்து எடுத்துக்கொண்டது.
பத்மநாபபுரத்தில் இருக்கும்போது வேறு நினைவுகள் ஏதும் இல்லை. அங்கிருந்து நாங்கள் கொட்டாரம் என்ற ஊருக்கு சென்றுவிட்டோம். அங்கேதான் நான் பள்ளியில் சேர்ந்தேன். ஒன்றாம் வகுப்பு. இரண்டாம் வகுப்பு முதல் முழுக்கோடு ஊருக்கு வந்துவிட்டோம். பள்ளிநாட்கள் பெரும்பாலும் எனக்கு தெளிவாகவே நினைவில் நிற்கின்றன. தேவையென்றால் நினைவுக்குக் கொண்டுவர முடியாத இடமென ஏதுமில்லை.
ஆனால் நினைவுகள் அப்படிச் சாதாரணமாக நம்மில் மீள்வதில்லை. நல்ல காய்ச்சலில் பிரக்ஞையழிந்து கிடக்கும்போது அவை நம்முள் நிகழ்கின்றன. அல்லது தியானத்தில் எதிர்பாராதபடி அலையலையாக எழுந்து வருகின்றன. அதேபோல மொழி சரியாக சுருதிகூடி வெறிபிடித்ததுபோல எழுதிச்செல்லும்போதும் சற்றும் நம்பமுடியாதபடி மிக அபூர்வமான நினைவுகள் எழுந்து வந்துவிடுகின்றன. சிலசமயம் நாம் எழுதிய ஒரு இடம் உண்மையில் முன்பு எப்போதோ நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் என்று ஆச்சரியத்துடன் நாம் உணர்கிறோம். சிலசமயம் அவ்வனுபவம் உருமாறி படைப்பில் வெளிவந்திருக்கும்.
ஓர் உதாரணம், காடு நாவலில் அம்பிகா அக்கா உடைமாற்ற கிரிதரன் கண்ணாடியைக் காட்டும் இடம். சுற்றிச் சுற்றி வந்து குட்டிக் கிரிதரன் கண்ணாடியைக் காட்ட அக்கா தன் உடையை அதில் பார்த்து மகிழ்கிறாள். அந்த நிகழ்ச்சி கால்நடை மருத்துவர் மனைவி மாமிக்கு நான் கண்ணாடி காட்டியதுதான். ஏதோ ஒரு மன எழுச்சியே அவர்கள் கதவுகளை மூடிக்கொண்டபின் தன் பெட்டியைத் திறந்த தன் பட்டுப்புடவை ஒன்றை எடுத்துகட்டிக் கொண்டு கண்ணாடி காட்டச்சொல்லி பார்த்து ரசித்தார்கள்.
ஆனால் காடு நாவலில் அந்த அக்கா வேறு. அவளுடைய சூழல், மனநிலை எல்லாமே வேறு. அந்த சம்பவம் மட்டும் எப்படியோ அங்கே வந்து அமைந்துவிட்டது. அம்பிகா அக்காவில் ஏதோ ஒரு இடத்தில் அந்த மாமி இருக்கிறாளா? கண்டுபிடிக்கவே முடியவில்லை. இலக்கியத்தில் நிகழ்ச்சிகள் மட்டும் வருவதில்லை. நிகழ்ச்சிகள் மீது ஏறும் விருப்பங்களும் கனவுகளும் எல்லாம் கலந்துதான் வருகின்றன.
படைப்பூக்கம் என்பது வெறும் நினைவாற்றல்தான் என்று எர்னெஸ்ட் ஹெமிங்வே சொல்லியிருக்கிறார். அது முழு உண்மை அல்ல. ஆனால் மறுக்கக்கூடியதும் அல்ல.
12.08 இரவு
டிசம்பர் 7, 2008
(மீள் பிரசுரம்)