ஆசான் என்று அழைக்கப்படும் ஜெயமோகன் தமிழ் எழுத்தாளர்களுள் ஜாம்பவான். உலகப் பயணியான அவரது பாஸ்போர்டில் இருப்பதைவிட அன்னார்மீது அதிக முத்திரைகள் குத்தப்பட்டிருப்பதால், ஜெயமோகன் யார் என்னும் குழப்பம் அனைவருக்கும் ஏற்படுகிறது. அவ்வபோது அவருக்கும். ஆகவே எழுத்தாளரைத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஓர் அறிமுகம் அவசியம் என பலரும் விரும்புவதால் இந்தக் கட்டுரை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சொற்களில் ஓர் எளிய அடிப்படை அறிமுகம்.
எழுத்தாளர் ஒரு திரிபுவாதி. இது காசிரங்கத்தில் நடந்த ஞானசபை விவாதத்தையும் அதற்கு ஸ்ரீரங்கத்தில் நடந்த பாராட்டு விழாவையும் எழுத்தாளர் பாரடியாகத் திரித்து எழுதப்போக அதை பேரடியாக எடுத்துக்கொண்ட அசல் ஆரெஸெஸார்கள் சொல்லும் வசை. அக்காலங்களில் அவர்கள் சொல்லிய எதுவும் நடக்கவில்லை, நடக்கும் வாய்ப்பும் கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை. எழுத்தாளர் சிறுவயதில் சேர்ந்து வளர்த்த இயக்கம் அல்லவா? அந்தப்பாசம் இல்லாமல் இருக்குமா? இந்த ஒரு வசையையாவது உண்மையாக்குவோம் என எழுத்தாளரும் மஹாபாரதத்தைத் திரித்து நாவல் எழுத ஆரம்பித்தார். தன் செல்லமகனே தெருவில் இறங்கியபின் தேவி சரஸ்வதி வெறுமே பார்த்திருப்பாளோ? அவளும் தன் பங்கிற்கு ‘இந்தா பிடி’ ‘இந்தா பிடி’ என அவர்களது ஒவ்வொரு கோஷத்தையும் உண்மையாக்க ஆரம்பித்து விட்டாள். முப்பதாயிரம் பக்கங்களில் எழுத்தாளர் திரித்து முடித்து நாவலை ஓரங்கட்டிய பின்னும்கூட அவள் நிறுத்துவதுபோல் தெரியவில்லை.
எழுத்தாளருக்கு மாற்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம். குறிப்பாக ஏப்ரல் ஒன்றாம் தேதிகளில். வருடம் முழுவதும் உழலும் அஞ்ஞான இருளிலில் இருந்து தப்பி ஏப்ரல் ஒன்றாம் தேதியில் மட்டும் ஞான ஒளிக்கு வந்து குருமகான்களைப் பற்றிக் கட்டுரை எழுதுவது எழுத்தாளரின் வழக்கம். அவ்வாறுதான் குலோப்ஜாமூன் பாபாவும் சிவமூலி லாகிரியாரும் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகம் ஆனார்கள். அக்கட்டுரைகளுக்கு வந்த மாபெரும் ஆதரவைப் பார்த்து எங்கே தன்னையும் ஒரு மடத்தில் அடைத்து மாலையைச் சாத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் மாற்று ஆன்மீக ஆர்வத்தை தனக்குள் மட்டும் வைத்துக்கொள்ளப் பழகி விட்டார். பின்னே இளைய சன்னிதானம் பற்றி பயப்படாமல் இருக்க முடியுமா?
ரோட்டோரங்களில் குரு மகராஜ்களால் ஆட்கொள்ளப்படும் நேரம் தவிர்த்துப் பிற நேரங்களில் சாதாரண மலையாளத்து ஆசாமி ஒருவருக்கு சீடனாக இருப்பதுவும் உண்டு. அந்த மலையாளத்து ஆசாமி பற்றி தமிழகம் அறிந்தது எல்லாம் எழுத்தாளர் மூலமாகவே. எழுத்தாளருடன் பழக நேர்ந்த சிலர் மலையாளத்துக் குருவை பில்லி சூனியம் பேய் ஓட்டும் மலையாள மந்திரவாதியாக கருதியதும் தமிழ்ச்சூழலுக்கு இயல்பே எனினும் இன்னும் பெரிய பிரச்சனை கொஞ்ச காலம் கழித்துத்தான் வந்தது. ஒருமுறை வழக்கம்போல பேச்சுவாக்கில் எழுத்தாளர் குரு நித்யா என சொல்லப்போக உடனிருந்த நபர் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து “சாமி மொகத்துல என்ன ஒரு தேஜசு சார்” என்றார். எழுத்தாளரும் மகிழ்வுடன் அதை அமோதிக்க அந்த நபர் மேலும் “சாமி கண்ணு தீ மாதிரி சார்” என்றார். எழுத்தாளரும் உற்சாகமாக “அவர் கண்ணு சின்னப்பிள்ளை கண்ணு மாதிரி சார்” என்று சொல்ல, பதிலுக்கு அந்நபர் “போனவாரம் சாமியைப் பாத்தேன் சார். என்ன ஒளிங்குறீங்க! நாமளும் நாளைக்கு நூறு எறநூறு பையனுங்கள பாக்குறோம். எவனுக்காவது அப்படி ஒரு ஒளி உண்டுமா?” என்று கேட்ட போதுதான் எழுத்தாளருக்கு பொறி தட்டியது. எல்லாம் வெறும் பெயர்க்குழப்பம் என. ஏனென்றால் குருவை முதன்முதலில் பார்த்தபோதே குருவுக்கு தலை நரைத்து தாடி நரைத்த பருவம். மேலும் குருசேவையைப் பாராட்டி குருவை குழியிலிறக்கி கோயிலும் கட்டியே வருடங்கள் ஓடிவிட்டன. வழக்கம்போல ஒரு ‘அப்படியாவை’ போட்டு அன்று அன்று தப்பித்தது வேண்டுமானால் வெறும் கதையாக இருக்கலாம். ஆனால் அதற்கு கொஞ்ச காலம் கழித்து தமிழகமே துறவிகளின் யோகதண்ட மகிமைகளில் திளைத்துக் கொண்டிருந்தபோது “உங்க குருவோட புது சீடி வந்திருச்சா” என ஆவலுடன் கேட்ட நண்பருக்கு “இந்தாங்க ஏழு மணிநேர சீடி” என குரு வேதாந்தத்தை உப்பக்கம் கண்டு மெத்தப் படித்தவருக்கும் புரியாத குழூஉக் குறியில் பேசியதன் காணொளியைக் கொடுத்ததை வெறும் வதந்தி என என்னால் ஒதுக்க முடியாது. எழுத்தாளர் செய்யக்கூடிய ஆள்தான்.
விவாதிப்பதில் எழுத்தாளர் மன்னர். எல்லா விவாதங்களும் தர்க்கத்தின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கும். ஆனால் எந்தப்பாவியும் தர்க்கங்களைக் கேட்டு மனம் திரும்புவதில்லை. இரவு முழுவதும் சாத்தானின் தர்க்கங்களைக் கேட்டபின்பும் “அப்பாலே போலே” என்று சொன்ன யேசுகூட பிடித்துவந்து சிலுவையில் ஏற்றியபோதுதான் “ஏலே ஏலே இறக்கி விடுங்கலே” என விட்டுவிடச் சொன்னதாகப் பாடம். சிறுவயதிலேயே இதை உணர்ந்த எழுத்தாளரும் விவாத்தின் முடிவில் பொளேர் பொளேர் என எதிர்தரப்பு மேல் உணர்ச்சியால் அடிகள் போடுவது வழக்கம். இருந்தாலும் இதற்கெல்லாம் மசியும் சமூகமா நாம்? விவாதத்தில் மாற்றுத் தரப்பையும் கேட்டால் எல்லாவற்றையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட்டு அப்படியே அமர்ந்திருக்கும் நமது பெருமைக்கு என்ன ஆகும்? எனவே, “கேரளாவுக்குப் போ” என்றும் இரண்டே வார்த்தைகளில் அனைத்து விவாதங்களையும் கடக்கப் பழகிவிட்டோம். பூலோகத்தையும் புவர்லோகத்தையும் மயிலேறிச் சுற்றுவதைவிட குண்டுச் சட்டிக்குள் எலியோட்டுவதே வெல்லும் என ஏப்பிக்குடி நாகராயர் பாடிய கதையை அறிந்தவர் தானே நாம்.
எழுத்தாளர் அனைத்து உணவுகளையும் உண்பவர். கத்தரி, பேரி என சில காய்கனிகளை டெக்ஸ்டிங்கின்போது மட்டுமே தொடும் எம்மனோர் அன்ன இரண்டாயிரக் குளவிகளுக்கு [எங்கள் தமிழைப் பார்த்து தலையிலடித்து எழுதிய பதிவுக்குக் கீழேயே படையெடுத்து வந்து தமில்மாறி பொழிந்ததனால் கவிஞர் மாகுடேசுவரனார் இட்ட பெயரா இது?] இது மிகப்பெரிய ஆச்சரியம் ― வினைச்சொல்லுக்கு விகுதி உண்டு என்பதற்கு அடுத்து. எழுத்தாளரின் தந்தையார் தென்னம்மட்டைக்குப் பதிலாக புளிய விறகை வைத்து அடுப்பெரித்தார்கள் என்பதற்காக எல்லாம் உணவைத் தொடாமல் விலக்கி வைத்திடுவார் என்பதை அறிந்த பொழுது அந்த ஆச்சரியம் நீங்கியது. இ்திலிருந்துதான் எழுத்தாளரின் ஆசிரியரான சுந்தர ராமசாமி மரபின் பின்பாரம் [மஜா எழுத்தாளர்கள் சூக்கொழுப்பு என்பதன் நவீனத்துவ ஆசார வடிவமா?] என்று சொன்னதனால் மட்டுமே பழந்தமிழ்மீது எழுத்தாளருக்கு ஆர்வம் வந்ததையும் புரிந்துகொள்ள முடியும்.
எழுத்தாளர் தமிழில் எழுதப்படும் அனைத்தையும் வாசிப்பவர். சில நூல்கள் விட்டுப்போனாலும் போகுமே தவிர முகநூல் வம்புகள் ஒன்றும் விட்டுப்போகாது. நாளுக்கு ஏழுமணி நேரம் முகநூலில் கிடப்பவன் காணாத வம்புகூட சுடச்சுட எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு வந்துவிடும். அவருக்கு கடிதம் எழுதுபவர்களின் எண்ணிக்கை அப்படி. கல்நெஞ்ச எழுத்தாளரும் அவற்றை முழுக்கப் படித்து தமிழ் அறிவுச்சூழலை எண்ணி எண்ணி வயிறு வலிக்க சிரித்துவிட்டு பிறரை முகநூலுக்குப் போகவேண்டாம் என்கிறார். நாம் சிரிக்க எங்கே போவது என்று கேட்டதற்கு “அதான் எழுத்தாளரே நகைச்சுவைக் கட்டுரை எழுதறாரே! அப்பப்ப நகைச்சுவைன்னு லேபிள் போடாமலே உபபாண்டவத்தை எல்லாம் புகழ்ந்து வேற எழுதறார்” என்பது நண்பரின் பதில். நிற்க, எழுத்தாளருக்கு அவருக்கு வரும் வாசகர் கடிதங்களைப் பற்றியும் வாசகர்கள் பற்றியும் பெருமிதம் உண்டு. எனவே சின்னப்பிள்ளைத்தனமாக வரும் கேள்விகளுக்குப் பொதுவாக பதிலளிப்பதைத் தவிர்ப்பது எழுத்தாளரின் வழக்கம். ஆனால் அதே கேள்வி ஒரு புதிய மின்னஞ்சலில் இருந்து வந்தால் பதிலளித்து விடுவார். எனவே ஆத்திர அவசரக் கேள்விக்கு ஒரு புதிய மின்னஞ்சலை உருவாக்கினால் போச்சு என்பது ஓர் அனுபவப்பாடம். ஒரு நாளுக்குள் பதில் உறுதி. நண்பர்களுக்கும் இந்தப் பழக்கம் உண்டு என்பதனால் எழுத்தாளர் நம்புவதைவிட அவருக்கு கடிதம் எழுதுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கம்மிதான்.
எழுத்தாளரின் எழுத்து வேகம் நாம் எல்லாரும் அறிந்தது ― நாளுக்கு இரண்டு நூல்கள். அதன் உள்ளடக்கம் இருக்கட்டும், அது அவர் தேடித்திரிந்து அடைந்தது. இந்த தட்டச்சு வேகம் எப்படி அடையப்பட்டது? எழுத்தாளரே சொன்ன நிகழ்வு இது. ஒரு பள்ளிப் பரீட்சையின் போது தேர்வு நேரம் முடிவதற்கு கால் மணிநேரம் இருக்கையிலேயே எழுதி முடித்த எழுத்தாளர் மீதி நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மை எவ்வளவு தீர்ந்திருக்கிறது என்று பார்க்கலாம் என பேனாவைக் கழற்றப் போக மொத்த விடைத்தாளும் நீல நிறமாகியது. பத்து நிமிடத்தில் முப்பத்தைந்து மதிப்பெண்களுக்கு எழுதவேண்டும் என்று எடுத்த வேகம்தான் இன்றுவரை குறையவேயில்லை. அன்றே எழுத்தாளர் ஒற்றைப் புரிந்துகொண்டார். எந்தப் பருப்பொருளும் அவர் நினைப்பது போல இருக்கப்போவதில்லை. எனவே, அனைத்தையும் புரிந்துகொள்ள பயிற்சி அவசியம். அன்றிலிருந்து பாட்டுக் கேட்பது முதல் பாத்திரம் கழுவது வரைக்கும் அனைத்திற்கும் மாங்கு மாங்கென பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். ஆனால் இந்த பிலிஸ்டைன் தமிழ்ச்சமூகத்தில் ஏட்டியெம் கதவை எப்படித் திறப்பது என எவரும் பயிற்சி கொடுக்கவில்லை. ‘புல்’ ‘புஷ்’களுக்கு முன்னால் லௌகீக விஞ்ஞானிகளே ஒரு கணம் திகைத்து நிற்கையில் பாவம் எழுத்தாளர் என்ன செய்வார்?
எழுத்தாளருக்கு மறுபிறப்பில் எல்லாம் நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால் வெண்முரசு எழுதியபின் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டார். ‘எவன் இதைப்பற்றிக் கேட்டு நான்குவரி கடிதம் எழுதுவான் நாமும் நாற்பது பக்கத்தில் பதில் எழுதலாம்’ என காத்திருக்கும் எழுத்தாளர், பலர் இது பற்றிக்கேட்டும் பதில் சொல்ல மறுத்துவிட்டார். அது பற்றி உலவும் கதை இது ― துவிட்டர் எனும் கீச்சுலக தமிழ் அறிஞரான கரசனார் ஒருமுறை தம் ஆய்வு முடிபு ஒன்றை கீச்சாகப் பதிந்திருந்தார். அதன்படி, சூரியன் ஒரு தமிழ்ச்சொல். [சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்றுதானே பார்ப்பன பாரதி பாடியிருக்கிறான். பின்னே, அவ்வளவு உயரத்தில் இருப்பது தமிழ்ச்சொல்லன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?] ஐயர்வால்களைப் பொருட்படுத்தக்கூடாது என்பதாலோ என்னவோ கரசனார் இவ்வரியைப் பொருட்படுத்தியதுபோல் தெரியவில்லை. அதனால் என்ன? கரசனார் சொல்லும் காரணமும் நாம் எல்லோரும் சிந்தித்து மகிழத்தக்கது. சூரியன் என்பதன் வேர்ச்சொல் ‘சுள்’ என்பது. சுள்ளுவதால் அது சூரியன். இதைப்படித்தவுடன் “பாவம், இது தெரியாமல் எத்தனைத் தனித்தமிழியர் பெயர்களை மாற்றிக் கொண்டனர்” என தனித்தமிழ் ஆர்வம் கொண்ட எழுத்தாளர் வருத்தப்பட்டார். உடனடியாக எழுத்தாளருக்கு அந்தச் சிக்கல் தோன்றியது. இது சரி. ஆனால் எதை அள்ளியதால் வடவர்களுக்கு ஆரியன் எனப்பெயரிட்டனர் தொல்தமிழர்? ஆரியர்களை வைத்துதானே அவ்வளவு பெரிய நாவல் எழுதுகிறோம், இந்த ஒரு விளக்கம் இல்லை என்றாலும் அது ஒரு குறையல்லவா என்று நினைத்து பல நாட்கள் சிந்தித்தார். எழுத்தாளரின் தலையில் சுடரும் ஞான ஒளிக்கு [பரிதிக்கடியிலும் பல்புக்கடியிலும் இருக்கும்போது மட்டும் தான்] மரபணுவிற்கு அடுத்து இந்தக் கேள்விக்கே முக்கிய இடம் உண்டு என்பதுவும் கதை. வெண்முரசு முடியும் தருவாயில் எழுத்தாளருக்கு இக்கேள்விக்கான பதில் அருளப்பட்டது. ஆரியர்கள் அள்ளியள்ளிக் கொட்டியது பிணங்களை அல்லவா என்றும் பிணங்களை அள்ளியதையும் அள்ளுவதற்கு பிணங்களை உற்பத்தி செய்தமை பற்றியும் நான்கைந்து நூல்களில் நாலாயிரம் பக்கங்களுக்கு எழுதியிருக்கிறோம் அல்லவா என்றும். உடனே எழுத்தாளர் அடைந்த மகிழ்ச்சியை நான் சொல்லவும் வேண்டுமா? கரசனாரின் ஒரு ஆய்வு முடிபு பலநூறு ஆய்வு முடிபுகளுக்கு ஆதாரமாக இருப்பதை உணர்ந்த எழுத்தாளர், இதுபோன்ற அறிஞர் பெருமகன் தமிழில் என்றாவது தோன்றியதுண்டா என வியந்தார். மொட்டைப் பாறையில் மின்னல் போல அதற்கான பதில் விழுந்தது. சாட்சாத் தேவநேயப் பாவாணர். மின்னல் பட்ட பாறை பிளந்தது போல உடனே உதித்தது, பாவாணரின் மறுபிறப்பே கரசனார் என்று. இதற்குப் பிறகும் மறுபிறப்பை நம்பாமல் இருக்க முடியுமா?
எழுத்தாளர் அலைபேசியை எடுக்கும்போதே “வணக்கம் நான் ஜெயமோகன் பேசுறேன்” என்று ஆரம்பிப்பது வழக்கம். அலோ சொல்லி ஆரம்பிப்பதுவே முன்னர் அவருக்கும் வழக்கமாக இருந்தது. வருடம் ஒருமுறை சர்ச்சைகளில் சிக்கி “இந்தா இவனுக்கு ஒரு போன் போட்டுத் திட்டுங்கடே” என பல குழுக்களில் பகிரப்படும் அலைபேசி எண்ணுக்கு உரியவர் ஆகையால், “லே ” என்று ஆரம்பிக்கும் முன்னரே ஒரு வணக்கத்தைப் போட்டுவிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்பது புரிதல். சிலமுறை “சொல்றதையும் சொல்லிப்புட்டு ஒனக்கு வணக்கம் ஒரு கேடா” என அடுத்தகட்ட வசைக்கு இட்டுச் சென்றாலும் பொதுவாக உபயோகமானது.
எழுத்தாளரின் வாசகர்களில் நகைச்சுவையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் அதிகம். தமிழ்நாட்டு வழக்கப்படி. இந்தக் கட்டுரைக்குக்கூட யஸோ ஆனவன் எழுத்தாளர்மீது அவதூறு எழுதுகிறான் என எழுத்தாளருக்கே கடிதம் எழுதப்படவே வாய்ப்பு மிகுதி. ஆனால் எழுத்தாளரின் நண்பர்கள் நிறைந்த அவைக்கு எந்த அச்சமும் இல்லாமல் போகலாம். அவர்களுக்கு நகைச்சுவையைப் புரிந்துகொள்ளும் திறன் அதிகம். பாஜகவிலும் திமுகவிலும் இருக்கும் அவர்கள் முறையே ஸ்டாலின் அரசையும் மோடி அரசையும் புகழ்ந்து எழுத்தாளர் எழுதும் பதிவுகளுக்கு, “பாவம் ஆசான் இன்னிக்கு நகைச்சுவைன்னு லேபல் போட மறந்துட்டார் போல” எனச் சிரித்துக் கடந்துவிடுவதால் அல்லவா இன்னும் அவர்களது நட்பு நீடிக்கிறது. சாருவின் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் இந்த சிக்கலே இருப்பதில்லை. அவர்கள் சாரு எழுதியவற்றையே படிக்க எடுத்து மட்டுமே வைத்திருப்பவர்கள். இதையா தேடி வந்து படிக்கப் போகிறார்கள்? கையோடு எஸ்ராவின் வாசகர்களைப் பற்றியும் எழுதவே கை பரபரக்கிறது. ஆனால் எஸ்ராவுக்கே நகைச்சுவை புரியாது என்னும்போது….
எழுத்தாளரைப் பகடி செய்ய எழுத்தாளரின் நடைச்சாயலிலேயே எழுதுகிறானே, பயல் நுட்பமானவன் எனத் தவறாக யாரும் நினைக்க வேண்டாம். பயலுக்கு நடை இன்னும் உருவாகவில்லை. முட்டை பொரிந்தவுடன் ஆமைக்குஞ்சு அம்மாவை மாதிரி நீந்துவது போல பயல் எழுத ஆரம்பித்தாலே இந்த நடைதான் வருகிறது. அம்மாவோ ஆயிரம் காதங்களுக்கு அப்பால் முட்டைகளைப் பற்றிய நினைவே இல்லாமல் நீந்துகிறது. நான்குமுறை நகைச்சுவை என கொட்டை எழுத்தில் போட்டாலும் சிரிப்பு வராத அன்பர்கள் அவர் ஆயிரம் ஆயிரம் பக்கம் எழுதியிருக்கிறார் உனக்கு கிண்டலடிக்க அவரின் வழுக்கைத்தலைதான் கிடைத்ததா எனப்பொங்க வேண்டாம். அவரின் பல கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடிந்தால் ஏனைய்யா நகைச்சுவை எழுதபோகிறார்கள்? கட்டிப்புரண்டு உருள மாட்டோமா? அறுபது என்பது ஒரு மறு தொடக்கம். [ஆழ்ந்த சொந்தச்சரக்காக இருக்கிறதே என வியக்க வேண்டாம். இதுமணிவிழா மலர்களில் வழக்கமாக எழுத்தாளர் எழுதுவதுதான்] அந்த மறுதொடக்கத்திலும் இலக்கியம், வரலாறு முதலியவற்றுடன் நகைச்சுவையையும் எழுத்தாளர் வாரி வழங்கட்டும் என வாழ்த்துகிறேன். அதற்கு எழுத்தாளர் நிறைய மெனக்கெடத் தேவையில்லை. அன்றாடம் நடந்ததை எழுதினாலே அதில் பாதி நகைச்சுவைதான்.