பிறழ்வெளிப் பயணம்

மலையாளக் கவிஞர் களத்தர கோபனின் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த மூன்று கவிதைத்  தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளை ’காந்தி ஸ்கொயர்’ என்ற தலைப்பில் கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் மொழிபெயர்த்துள்ளார்.

களத்தர கோபனின் கவிதைகளில் பெரும்பாலானவற்றில் கதைக்கான கரு மையம் கொண்டிருக்கிறது. கொஞ்சம் விட்டால் பறந்துபோய் விடக்கூடிய சிட்டுக்குருவிகள். கதையும் கதாபாத்திரங்களும் முழுக்கக் கற்பனையே, மகள், நிலா வீழ்ந்த நீர்நிலை, பேக்கப், இலைகளிடையே உற்று நோக்கும் விழிகள் போன்ற கவிதைகளில் கதைக்கருவையும், ஒளிப்பட இயக்குநரின் பார்வையையும் காணலாம். பொதுவாக மலையாளக் கவிதைகளில் விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்களின் நீட்டி முழக்கல் இருந்து அயற்சியைக் கொடுக்கும். களத்தர கோபனின் பெரும்பாலான கவிதைகளில் அதைப் பார்க்க முடியவில்லை. ஓரளவு கட்டுக்கோப்புடனேயே கவிதைகள் மிடையப்பட்டுள்ளன.

வாசிக்கையில் வேற்றுமொழிக்கான தடயம் சற்றும் தெரியாதபடி கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது மொழிபெயர்ப்பாளரின் திறனைக் காட்டுகிறது. ஆனாலும் இந்தக் கவிதைகள் நமக்கு, நம்முடைய உலகுக்கு வெளியில் நிகழ்வதை உணர முடிகிறது. இது ஏதோவொரு விதத்தில் நாம் தளைப்பட்டு இருப்பதான மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அதற்காக மலையாளக் கவிதைகள் சர்வ சுதந்திரமாக இயங்குகின்றன என்று சொல்லவில்லை. நாம் இயங்காத தளத்தில் அவை புழங்குவதைக் காண முடிகிறது.

கதையும் கதாபாத்திரங்களும் முழுக்கக் கற்பனையே என்ற கவிதையில் `வெளிச்ச நிறம்` என்றொரு வரி வருகிறது. மூலத்தில் எப்படி இருக்கிறது தெரியவில்லை; ஆனால் இது ராஜன் ஆத்தியப்பனின் டிரேட் மார்க் வரி. இந்தக் கவிதை, சற்றுமுன் இறந்த அழகிய பெண்ணுடல் பிணவறைக்கு வருவதையும், காவலாளிக்கு ஏற்படும் காம இச்சையையும் பேசுகிறது. மகள் என்ற கவிதை கவிஞர் போகன் சங்கரின் கவிதையைப் போலவே உள்ளது. மகள் மடியிலிருக்கிறாள்; பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை வீடு திரும்பவில்லை; பயம் கவ்வுகிறது; சிறிது நேரத்தில் அது நடந்தே விட்டது; யாரோ வழியில் கூறிச் செல்கிறார், `வயதுக்கு வராதது ஒருவகையில் நல்லது`. இந்தக் கவிதையிலும் கதைக்கான கரு அழுத்தமாய் இருப்பதைக் காண்கிறோம். அதேசமயம் அது நல்லதொரு கவிதையாக இருப்பதற்கான அத்தனை நியாயங்களையும் கொண்டிருக்கிறது.

பேக்கப்

ஒருவன்

அதிகாலை நடைப்பயிற்சியின்போது

நெல்லிக்காயொன்றை

மிதித்து நிலை தடுமாறி

சாலையின் நடுவே

லாரியிலகப்பட்டான்

ஓரத்துச் செடிகளில்

உதிரம் தெறித்தது

ஒன்றாம் நபர்:

பக்கத்து மாடி ஜன்னலில் தெரிந்த

பெண்ணின் முகம்

கவனத்தைச் சிதறடித்திருக்கலாம்

இரண்டாம் நபர்:

மருத்துவரின் அறிவுரைப்படி

நடக்கத் துவங்கியதாலிருக்கலாம்

மூன்றாம் நபர்:

நெல்லிக்காய் வாங்கிச் சென்றவன்

கிழிந்த பை வைத்திருந்ததுதான் காரணம்

நான்காம் நபர்:

கிளம்பும்போது லாரிக்காரன்

பெண்டாட்டியோடு தகராறு

செய்திருப்பானாயிருக்கும்.

’கட்’

‘பேக்கப்’

என்றதும்

மல்லார்ந்து கிடந்த

நடிகன் துள்ளி எழுந்தான்

இயக்குநர் சத்தமாகச் சொன்னார்

‘தயவு செய்து யாரும்

சாலை நடுவே நிற்க வேண்டாம்’

அபத்த நகைச்சுவையோடு ஒரு நாடகக்காட்சிபோல மேற்கண்ட கவிதை அமைந்திருக்கிறது. களத்தரகோபன் கவிதைகளில் காணப்படும் சினிமா மொழிக்கு மேலேயுள்ள கவிதை இன்னொரு நல்ல உதாரணம். களத்தர கோபன் சில அரசியல் கவிதைகளை எழுதியிருந்தாலும் அது ரேசன் கார்டு கவிதையில் பன்முக வாசிப்புச் சாத்தியங்களோடு நன்றாக வந்துள்ளது.

ரேசன் கார்டு

எதை எடுத்தாலும்

எடுத்த இடத்தில்

ஏன் யாரும் வைப்பதில்லை?

இப்போது பாருங்கள்

இந்த ரேசன் கார்டு

எங்கு போனதென்று தெரியவில்லை

வியர்க்க வியர்க்கத் தேடுகிறேன்

தொலைந்தவை என

முடிவு கட்டியதெல்லாம் கிடைக்கின்றன

ஆனால்…

செல்லம் கொஞ்சி வந்த

மகளிடம் எரிந்து விழுந்தேன்

சாவகாசமாய் பேசிய

மனைவியை முறைத்தேன்

எதையும் எடுத்தால்

எடுத்த இடத்தில் வைக்கமாட்டீர்களா

தேடித்தேடித் தளர்ந்தபின்

வீடு மாறும்போது

தவறியிருக்கலாமென

பழைய வீடிருந்த பகுதிக்கு

வந்து சேர்ந்தேன்

அடக்கடவுளே!

வீடு அங்கு இல்லை.

பக்கத்தில் விரிந்திருந்த வயல்வெளி

சமவெளியாய் நிரம்பியிருந்தது

தூரத்தில் நிமிர்ந்திருந்த

குன்றின் இடத்தில் பெரும் பள்ளம்

யாரும்

எதையேனும் எடுத்தால்

எடுத்த இடத்தில்

ஏன் வைப்பதில்லை?

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை இக்கவிதை முரணகையோடு பேசுவதாக வாசிக்கலாம்; மனப்பிறழ்வினை, தொடர்ந்து சுற்றியிருப்பவை மனிதனால் மாறியபடி இருப்பதைச் சுட்டுவதாகவும் இக்கவிதையை வாசிக்கலாம்.

தனிமையிலாதல் கவிதை எல்லோருக்குமானதன்று. இது இருண்மைக்கு மிக நெருக்கமாய் நிற்கிறது. சமூகத்திடமிருந்து விலகி தனித்திருக்கவும், தனக்குள் ஆழவும் முயற்சிக்கும் ஒருவனின் அவத்தையைப் பேசும் கவிதை இது. ’தனித்திருப்பவன்/கண்ணீர் துளிர்க்கச் சிரிக்கிறான்/இறுதியாகச் செல்கிறான்/பின்வரிசையில் அமர்கிறான்/முதலாவதாக வெளியேறுகிறான்’. அவனை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அவன் மௌனமாய் நழுவியபடியே இருக்கிறான். பார்க்குமளவு உங்களை அவன் தனது தனிமைக்குள் வரவிடுவதில்லை. பார்க்குமளவு உங்களுக்குப் பொறுமையுமில்லை. இந்தக் கவிதைகூட இரசனாவாதிகளுக்கு சற்று அசுவாரசியப்படுத்தும். ஆனால் உணர்வுப்பூர்வமாக நெருங்குபவர்களுக்கு அணுக்கமான கவிதை இது.

நிலா வீழ்ந்த நீர்நிலை

நீரில் மூழ்கி மகனிறந்து நாட்களாகிவிட்டது

இதோ இந்நள்ளிரவில்

சிறுகுன்றின் உச்சியில்

ஒருவன் படுத்திருக்கிறான்

மெல்ல வீசிய காற்று

உறக்கத்திலாழ்த்தியது

அப்போது அவனொரு கனவு கண்டான்

மேகத்தின் சிறகிலேறி

கூடை நிறைய விண்மீன் பறித்து

நிலாவிற்குச் சென்றான்

அங்கிருந்து நிலா விழுந்த

குளத்தைக் கண்டறிந்து

நட்சத்திரங்களை வாரி வீசும்போது

படுத்திருந்த குன்றை இடிக்கும் பேரொலி செவியறைய

அவன் விழித்துவிட்டான்

அங்கிருந்து ஓடி

வயல் வெளியொன்றின் நடுவில்

சென்று படுத்தான்

மறுபடி காற்று வீசியது

மறுபடி உறங்கினான்

மறுபடி கனவு கண்டான்

திடீரென

குன்றைப் போலொரு வீடு முளைத்தது

அதன் ஒவ்வொரு அடுக்கிலும்

ஏறி உச்சிக்குச் சென்று

நிலா தெரியும் குளத்தைத்

தேடிக் கண்டான்

அதில் பறிகொடுத்த தனது பிள்ளை

நீரையடித்து தத்தளித்து

மூழிகி எழுகையில்

டிப்பர் லாரியிலிருந்து

வயலில் மண்கொட்டும்

கரகர சப்தம்

மீண்டும் கனவு கலைந்தது

இந்தக் கவிதையில் முதல் வரி இல்லாவிட்டால் இன்னும் கச்சிதமாக அமைந்திருக்கும். `பறிகொடுத்த தனது பிள்ளை` என்று கடைசி பத்தியில் வந்துவிடுவதால் அதுவரை சாதாரணமாகக் கடந்துவந்த வரிகள் அதீதக் கனம் கொண்டவையாக ஆகியிருக்கும். பாலில் ஒரு சொட்டு விசம் விட்டதும் மொத்த பாலும் விசமாகிப் போவதுபோல ஒரு மாய வித்தை நிகழ்ந்திருக்கும். இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதையாகவும் ஆகியிருக்கும்.

180 டிகிரி வரை பார்வைக் கோணம் இருந்தாலும் விழிகள் மையம் கொண்டிருப்பதென்னவோ ஒரு குறிப்பிட்ட புள்ளியில். அதைச் சுற்றிலும் மங்கலாய் அசைவுகளை உணரும் திறனுடன் தெரிகின்றன. காதில் கேட்கும் ஒலிகளும் வரம்புக்குட்பட்டவை. பக்கத்து அறைப் பேச்சு கேட்கவில்லை. காகங்கள் கரைவதும் வாகன இரைச்சலும் கேட்கின்றன. மின்விசிறி சுழலுவது கேட்கிறது. என்னைத் தாண்டி என்ன நடக்கிறது? என் முதுகுக்குப் பின்னே என்னதான் நடக்கிறது? என்னென்னவோ நடக்கின்றன. யாரோ தற்கொலை செய்கிறார். எங்கோ ஒரு குழந்தை பிறக்கிறது. யாரோ இருவர் புணர்ந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கியால் யாரோ சுடப்படுகிறார். யாரோ உயிரைக் கையில் பிடித்தபடி ஓடுகிறார். மயானத்தில் பிணம் எரிகிறது.

இலைகளிடையே உற்று நோக்கும் விழிகள்

வீடு பூட்டி வெளியேறுகிறாள்

சாவி துவாரம் வழி

உள்ளிருந்து துளைக்கிறது ஒரு பார்வை

ஆளற்ற வீட்டில்

பாத்திரங்கள் புழங்குகின்றன

தொலைக்காட்சி சப்தமிடுகிறது

சுவர்க் கடிகாரத்தில் மணி பனிரெண்டாகியது

அடுப்பில் சோறு கொதிக்கிறது

குழம்பு வற்றிப்போகுமோ என்னும்

பதற்றம் மேலிட

கியாஸ் மூடிக்கொள்கிறது

பூட்டிச் சென்றவள்

ஏதோ நினைவுக்கு வர

சந்தேகத்தில் மீண்டும் வீடு திறந்து

உள்ளறைகளில் சுற்றிப் பார்க்கிறாள்

அடுப்பிலிருக்கும் சோறு

மேலெழும் குழம்பின் மணம்

கடிகாரத்தின் பனிரெண்டு மணி

எதுவுமே கவனத்திலேறவில்லை

கதவைப் பூட்டிவிட்டு

திரும்பிப் பார்த்தவாறே நடக்கிறாள்

உணவு மேசையில்

சோறு கூட்டு கறியெல்லாம்

வந்தமர்ந்தன

உண்பதற்கு வருபவர்கள்

ஜன்னல்களினூடே

பறந்து வந்து அமர்ந்தனர்

சிரித்து விளையாடி

கதைபேசி உண்டு முடித்து

வந்த வழியில் திரும்பினர்

வெளியில் சென்றவள்

நடை திறந்ததும்

உள்ளிருந்தவள்

நொடியில் ஜன்னல்வழி

பறந்து சென்றொரு மரத்தில் அமர்ந்தாள்

இலைகளிடையே

வீட்டினை உற்று நோக்குகின்றன

இரு விழிகள்.

சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி மனிதகுல வளர்ச்சியினால் பிற உயிர்களுக்கு நேரும் கொடூரங்கள் குறித்து விவரிக்கிறார். பண்ணைகளில் தன் உருவ அளவுக்கே இடமுள்ள பட்டிகளில் வாழ்நாள் முழுக்க அடைபட்டு அங்கேயே மலஜலம் கழித்து, குழந்தைப்பருவச் சேட்டைகள் எதையும் அனுபவிக்காமல், தாயின் அரவணைப்பைப் பெறாமல் வெறும் மாமிசங்களாக விலங்குகள் வளர்க்கப்படுவதைச் சொல்கிறார். கறிக்கடைகளில் முற்றிய கறி வரவேற்கப்படுவதில்லை. ஆடுகளில் இளம் ஆட்டுக்கறிதான் ருசியானது. நாவில் அப்படியே கரைந்துபோகும். ஓர் இளம் ஆடு என்பது அது இணைசேரும் பருவத்தை அடையும்போதோ அதற்கு முன்போ கறிக்கடைக்கு வருவது. கோழிகளும் அப்படியே. குஞ்சாக இருக்கும் பருவம் கடந்ததும் கறியாகிப் போகின்றன. தாயிடமிருந்து இவற்றைப் பிரித்து வைக்கும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது?

அலங்காரமன்று சில உவமைகள்

சிறுவனாயிருக்கையில்

எங்கள் வீட்டிலும்

ஆடு வளர்த்தார்கள்

பள்ளியிலிருந்து வரும்போது

ஆடு பெற்றுவிட்டதா என்பதறிய

இன்பத் துடிப்புடன்

புத்தகப்பை வீசியெறிந்து

தொழுவத்தில் சென்று பார்ப்பதுண்டு

குட்டிகள் நிமிரும்போது

தழை கொண்டு இடுவதும்

தடவுவதும் விளையாடுவதுமாய்

ருசியுள்ள பொழுதுகள் அவை

பாவம்

கிடாவை விற்பதென்று முடிவானது

வாங்கியவரும் தரகரும்

மரவள்ளி இலையைக் காட்டி

இழுப்பார்கள்

இலைக்குத் தலை நீண்டாலும்

முன்னங்கால்கள் அழுத்தியூன்றி

போக மறுக்கும்

தாயும்

சகோதரக் குட்டிகளும்

அதுவும்

அலறியரற்றும் துயரொலி

இப்போதும் கேட்கிறது

தனது நிலத்தில்

குடியுரிமை மறுக்கபடுவதன்

வன்கொடுமை

ஒரு

உவமையை அடைகிறது

இந்தக் கவிதை எனது பால்ய நினைவுகளை எழுப்புகிறது. கோவில்பட்டியில் சுற்றுவட்டாரத்தில் மரம்,செடி, கொடிகளற்ற நெருக்கடியான தெருவில் ஆடு ஒன்று வளர்த்தோம். தினசரி அதை மேய்க்க மேட்டாஸ்பத்திரி பின்பக்கம் நீதிமன்றத்துக்கு அருகில் கூட்டிச் செல்வேன். நாய் விரட்டினால் என் பின்னால் ஆட்டுக்குட்டி ஒளிந்துகொள்ளும். என்னைச் சுற்றிச்சுற்றி ஓடி அதன் கழுத்தைச் சுற்றியிருக்கும் கயிற்றால் என்னைப் பிணைத்துவிடும். அப்புறம் என் பெத்தம்மா வீட்டில் விட்டுவிட்டோம். அங்கே பல தலைமுறைகளை ஈனியது. ஒருமுறை சித்திரைத் திருவிழாவை ஒட்டி பால் கிடைக்கவில்லை என்று இந்த வெள்ளாட்டிலிருந்து பெத்தம்மா எனக்கு பால் கறந்து கொடுத்திருக்கிறாள்.

கழுதைகள் தலைப்பிலான கவிதை யூழேன் இயொனெஸ்கோ காண்டாமிருகம் நாவலை நினைவுபடுத்துகிறது. ஊரில் எல்லோருமே காண்டாமிருகமாக மாறிப்போவதை, காண்டாமிருகம் மனிதனைக் காட்டிலும் அழகாயிருக்கிறது என எல்லோரும் நம்பத்தொடங்குவதை இக்கதை விவரிக்கிறது. கழுதைகள் என்ற கவிதை நுகர்வுக் கலாச்சாரத்தையும் போலி மதிப்பீடுகளையும் சாடுகிறது.

’ரகசியக் காதலன்’ என்ற கவிதை வித்தியாசமான களத்தில் அமைந்தது. தாயின் கருவிலிருக்கும் குழந்தை தாயின் மீது சந்தேகம் கொள்வதாக விரிகிறது. இந்தக் கவிதையை வேறுவிதமாக முடித்திருந்தால் சிறப்பாக வந்திருக்கும். குழந்தை வயிற்றுக்குள்தான் இருக்கிறது எனும்போது அது எப்போதும் தாயுடன் தான் இருக்கிறது. தன்னை மீறி, தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை எனும்போது இந்தச் சந்தேகங்கள் எல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. வயிற்றிலிருக்கும் குழந்தை என்றில்லாமல் ஒரு சிறு பையனாகக்கூட மாற்றியிருந்திருக்கலாம்.

இக் கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கே சில ஒற்றுப்பிழைகள் உள்ளன. வெளியீட்டுக்கு முன் ஒருமுறை மெய்ப்புப் பார்த்திருக்க வேண்டும். மற்றபடி மிகச் சிறந்த மொழிபெயர்ப்பைத் தந்துள்ள கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் தொடர்ந்து தமிழுக்கு மலையாளக் கவிதைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

கவிஞர்களிடம் ஏதோவொரு பிறழ்வு உண்டு. கொஞ்சம் தவறினால் மனநிலை பிறழும் சாத்தியக்கூறு நிறைந்த இடமது. கவிதை நிகழும் சாத்தியங்களை, களங்களை இப்பிறழ்வு நிலையே அமைத்துக் கொடுக்கிறது. இத்தகு அம்சத்தை இக்கவிதைகள் பலவற்றில் பார்க்க முடிகிறது. கவிஞர் களத்தர கோபனுக்கு நல்வரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *