1.
உடனடியாய் வீழ்ந்து கிடக்கும்
மல்லிகைச் சரம்
திறந்த வெளியில் ஆடும்
பெண்டுலம்
செவிலிகள் செய்து திரியும்
புன்னகை
உணவு மேஜையில் வண்ணத்துப்பூச்சியும் பூவும்
கடவுளுக்காய் தொங்கும்
கை படாத காலண்டர்
தேங்கிய நீரில் நிறப்பிரிகை
விடுதலை போல்
வெளியேறி கைதிபோல்
உள் திரியும் பிச்சைகள்
சிரியாமல் பார்த்துப் போகும் அவள்
தட்டச்சு செய்து கணினியுள்
செலுத்தினால்
தருமா ஒரு கவி
2.
ஸ்கேல் ஒடிந்தபின்
திட்டிக்கொண்டேயிருந்தார் அப்பா
கலங்கிய கண்ணோடு
புத்திமதி சொன்னாள் அம்மா
என்ன செய்வதென
நிலையில் சாய்ந்தபடி அக்கா
நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து
புத்தகங்களை அடுக்கினான் தம்பி
சம்பந்ததே கொள்ளாமல்
மூன்றாம் கட்டில் தங்கை
வனாந்தரத்தில் ஓடும் நி னைவுடன்
துாணில் சாய்ந்து நான்
நல்லவேளை பிரியமான ஆச்சி
போனமாசம் செத்துப்போனாள்.
3.
எத்தனை நாள்
எவ்வளவு நேரம்
எப்படியெல்லாம்
ஆனாலும்
பார்க்க வருவாய்
நம்
முதல் சந்திப்பாகவே
4.
எனக்காக
இல்லை
அந்த மலர்களுக்காக
அவற்றை
சூடிக்கொள்
5.
ஒன்றை ஒன்று
துரத்தி வந்த
மீன்கள் இரண்டு
கரை கண்டதும்
வேகமாய்த் திரும்பின
தன்
ஆழங்களுக்கு
6.
இந்த வீடு
பெரியது
ஏனோ
அந்தக் குடிசை
மிகவும் பிடிக்கிறது
தினமும்
போக முயல்வேன்
எப்போதாவது
போவேன்.
7.
கோட்டைச் சுவரிலும்
துளிர்க்கிறதே
விடாது அரசு.
8.
நீரிலிருந்தா
நெருப்பிலிருந்தா
எனத் தெரியா தேன்
ஈக்களில் சேரும்
காற்றிலிருந்தா
மண்ணிலிருந்தா
எனத் தெரியாத பூ
ஈத்தடம் சேர்க்கும்
வானத்திலிருந்தா
வரத்திலிருந்தா
எனத் தெரியா தாவரம்
ஈமுகம் சாரும்
இஞ்சி பாதாம்
முந்திரி பேரீச்சை
ஊறும் தேனுண்ண
கியூமோகுளோபின்
தினமும் சொல்லும்
9.
புறப்பட்டு விட்ட ரயிலின்
படிக்கட்டுகளாய்
விரித்து
மடிக்கப்படுகின்றன
இரவு பகல்கள்
அடைமழையின்
சாதாரணத்தோடு
சல்லாபிக்கின்றன
நம்பிக்கைகளின்
ஊற்றுகள்
வார்த்தைகளின் நிழலில்
உறங்கும்
ஒரு மௌனத்தை
சாமரம் வீசியபடியே
தரிசிக்கக்
காத்திருக்கிறேன்.
10.
ஆள் அரவமற்ற வனாந்தரத்தில்
பரந்து விரிந்து
கிளை பரப்பி
நிழல் விரித்து நின்றது அம் மரம்
அதுவே தன் வீடென
கவசமின்றி
பேசித் தீர்த்தன
தாய் மொழியில்
11.
நானும் ஒரு
தலைமுறை
தலைமுறை என்பது
வாழ்க்கை
வாழ்க்கை என்பது
வரலாறு
12.
சொட்டச் சொட்டப்
போய்க்கொண்டிருந்தாள்
மழையைப்
பார்க்கவில்லை
நான்
அப்போது
நல்ல மழை
13.
நட்ட நடுக்காட்டில்
ஒத்தையடிப் பாதையென
ஒத்தையடிப் பாதையில்
வரைந்து கிடக்கிறது
புனிதம்
14.
தொலைந்து போன என் புத்தகமான உன்னை
நினைக்கும் தோறும்
நினைக்கும் தோறும்
தொலைத்துக்கொண்டிருக்கிறேன்
ரயில் சென்றதன்
பிந்தைய
நிலையம் போல.