நிலைக்கண்ணாடி 

வாசலிலேயே கூட்டத்தை காண முடிந்தது , பெரும்பாலும் சொந்தக்காரர்கள் , சற்று தள்ளி சண்முகத்தின் நண்பர்கள் குழுமி இருந்ததை காண முடிந்தது ,அவர்கள் எல்லோரும் ஏற்கனவே பரிச்சியம்தான், சன்முகத்திற்கும் எனக்கும் ஒரே வயதுதான் . சண்முகம் வாசலில் நின்று கொண்டிருந்தான். அருகில் சென்று அவன் கையை பிடித்து கொண்டேன். “திருப்பூரில் இருந்து வரேன் அதுதான் லேட் ஆகிடுச்சு” என்றேன் . அவர் சரி என்று சொல்வது போல உள்ளே செல்ல சொன்னான் .

உள்ளே மாமா ஐஸ் பெட்டியில் படுக்க வைக்க பட்டிருந்தார் . சுற்றி பெண்கள் சோக முகம் கொண்டு இருந்தனர் , அம்மாவை தேடினேன் ,அவள் அடுக்களையில் இருந்தாள்.  அத்தை மாமாவின் அருகில் ஒரு பிளாஸ்டிக் இருக்கை வைக்க பட்டு அதில் அமர்ந்திருந்தார் . என்னை பார்த்ததும் கண்களில் நீர் வர ” மாமா இப்படி எங்கேயோ சாகனும்னு இருந்திருக்கு ” என்றாள். நான் அருகில் சென்று சமாதானம் செய்வது போல தலையில் கைவைத்து கொண்டேன்.

மாமாவையே பார்த்தேன் , இறுக்கமான முகம் என்றாலும் அதில் திமிர் இருப்பதை போல எனக்கு தோன்றியது . பிறகு அவரது மீசை அப்படி எண்ண வைத்ததோ என்று தோன்றியது . மிக அளவாகதான் பேசுவார் , சிறுவயதில் அவரது “டே “என்ற அழைப்பு குரல் கேட்டாலே எனக்கு உதரும். படிப்பு பற்றி என்னிடம் கேட்டது அவர் ஒரே முறைதான் , நான் காலேஜ் போகும் போது அந்த படிப்பு பற்றி கொஞ்சம் விசாரித்தார் ,அவ்வளவுதான் . எனக்கு சிறுவயதில் செலவுக்கு காசு கொடுப்பார் ,அதனால் எனக்கு அவரை பிடிக்கும் . அவருக்கும் என்னை பிடித்திருந்தது ,அல்லது சண்முகத்திடம் காட்ட வேண்டிய பிரியத்தை என்னிடம் காட்டினாரா என்று தெரியாது ,ஏனெனில் அவர் சண்முகத்திடம் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை . எப்போதாவது பொதுவாக சொல்வது போல அவனிடம் சொல்லவேண்டிய விசயத்தை சொல்லுவார் ,அவ்வளவுதான் . சண்முகம் பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் கிடப்பான் ,என் அப்பாவிடம் எப்போதும் உரிமையாக விளையாடி கொண்டிருப்பான்  . சண்முகம் இப்போது இளம்வயது பெரியப்பா போலவே ஆகி விட்டான் ,நான் அம்மா போல என்பதால் தப்பித்தேன் !

கொஞ்ச நேரத்திலேயே அந்த இடம் அசவ்கர்யம் கொடுத்து , அம்மாவை பார்க்க அடுக்களை சென்றேன் ,அவள் வந்தவர்கள் எல்லோருக்கும் டீ வைத்து கொண்டிருந்தாள்.என்னை பார்த்ததும் என்னிடம் டீ தட்டை கொடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னாள். ஒவ்வொருவராக கொடுத்தேன் , ஆச்சிர்யமாக சண்முகம், அத்தை தவிர எல்லோரும் ஆர்வமாக வாங்கி குடித்தார்கள் , யாரிலும் சோகம் மனதிற்குள் இல்லை என்று எண்ணிக்கொண்டேன் . சண்முகம் ஏதும் பேசாது ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது வருத்தம் அளித்தது , அருகில் போய் அவன் தோளில் கைபோட்டு நின்று கொண்டேன் .அவன் ஏதும் பேசவே இல்லை .

அத்தை எழுந்து அவளது அறை பக்கம் போனாள், கதவு முழுதாக மூடாததால் அவள் அங்கு இருப்பதை சற்று தள்ளி அந்த கோணத்திற்க்கு நேராக இருந்த என்னால் காண முடிந்தது . அவள் அறையில் இருந்து வெளிவரும் முன்பு அங்கு இருந்த நிலை கண்ணாடியில் தன்னை பார்த்து சற்று முடிதிருத்தம் செய்து கொண்டிருந்ததை பார்த்தேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *