பூரணியை பார்த்த கணத்தில் அதிர்ச்சி தாளாமல் வெளியே வந்து விட்டேன், சதீஷ் “நில்லுடா” என்று பின்னாலேயே வந்தான் . வாசலில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். சதிஷ் வந்து அருகில் அமர்ந்தான். “என்னடா ஆச்சு” என்றேன். சதீஷ் “என்னால முடியலடா” என்றான். அவன் கைகளைப் பிடித்து கொண்டேன். “எல்லாம் சரி ஆகிடும், சரி பண்ணிடலாம் விடு” என்றேன்.
சதீஷ் எழுந்து உள்ளே சென்றான், எனக்கு சதீஷ் நிலமையை எடுத்து சொல்லி இருந்தாலும் அவன் துக்கம் பூரணியை பார்த்த போதுதான் உரைத்தது. கடைசியாக அவளை திருமணத்தில் மணப்பெண்ணாக தேவதை வடிவில் பார்த்தது. இன்று அதற்கு நேர் எதிரான கோலத்தில் பார்க்கிறேன்.
சதீஷ் அவன் தங்கையை கட்டி கொடுத்த இடத்தில் பிரச்சனை இருப்பதை தொடர்ந்து சொல்லி கொண்டு இருந்தான். கணவருக்கும் அவளுக்கும் ஒத்துப் போகவில்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பான், கடன் வாங்கி விமரிசையாக திருமணம் செய்து வைத்தான், இன்னும் பாதி கடனைக் கூட அடைத்திருக்க மாட்டான். எனக்கும் அவன் பணம் தர வேண்டும், நான் அதை தர வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இவ்வளவு கனவுகளுடன் தங்கை நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி கட்டி கொடுத்து இப்படி ஆகின்றதே என்ற வருத்தம் எப்போதும் அவனுக்கு இருந்தது, எப்போது பிரச்சினையை அறிய நேரிட்டதோ அன்றிலிருதே அவனிலிருந்த சந்தோசம் தொலைந்து போனது .
ஒருநாள் பூரணியின் கணவர், சதீஷை சந்திக்க வேலை செய்யும் இடத்திற்கே வந்தார் , சதீஷ் என்னையும் உடன் இருக்க வைத்தான் . இருவருமே முகம் நோக்கி பேசிக் கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் மவுனமாகவே போனது, நான்தான் ஆரம்பித்து வைத்தேன், பிறகு அவர் என்னிடம் பேசுவது போல அவனிடம் பேசினார் .
“என்னால இனி சேர்ந்து வாழ முடியாது , அவளை அழைச்சுட்டு போயிடுங்க , எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும், இந்த கோலத்தில் அவளை என்னால பாக்க முடியல, எனக்கு பைத்தியம் புடிச்சுடும் போல இருக்கு , அவளை கூட்டிட்டு போங்க, நல்லானதும் நானே வந்து கூட்டிட்டு போயிக்கறேன் ” என்றார்,
அவர் கண்கள் கலங்கி இருந்தன , சோகமும் நீண்ட நாட்கள் தூங்காத கண்களுமாக இருந்தார். சதீஷ் பதில் ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். அவனுக்கு பதிலாக நான்தான் “சரிங்க ,அம்மாட்ட பேசிட்டு சொல்றோம்” என்றேன் . அவர் சரி என்பதை போல முகம் காட்டி கிளம்பினார், போகும்போது சதீஷிடம் “வரேன் ப்பா” என்றார், அப்போதுதான் அவரை நிமிர்ந்து பார்த்து “சரிங்க” என்றான் . அவர் போன பிறகு என்னிடம் “நல்ல மனுஷன்டா அந்தாளு, ஏன் எங்களுக்கு மட்டும் இப்புடி சோதனை வருதுன்னுதான் தெரியல” .
இன்று காலையில் அழைத்து “பூரணிட்ட கொஞ்சம் பேசி பாக்கறயா, அவளுக்கு என்னாகுது, ஏன் இப்புடி இருக்கா ஒன்னும் புரியல, பேசுனா அழறா, பக்கத்துல போனாலே அதிர்ச்சி ஆகறா, நான் இல்லாதப்ப அண்ணா அண்ணானு சொல்லி அழறாலாம், அம்மாட்டயும் பேசறது இல்ல , என்ன செய்யறதுனே தெரிய மாட்டேங்குது ” என்றான் .
பூரணி என்று அழைத்தேன். நிமிர்ந்து பார்த்தாள், கண்களில் நாணம் கொண்டு மெல்ல புன்னகைத்தாள், எனக்கு உயிரே போய்விடும் போல இருந்தது, அவளில் இருந்த நாணம் இந்த கோலத்தில் அவளை நான் கண்டதால் உருவானது, எப்போதும் தேவதையாக மட்டுமே பார்த்திருக்கிறேன், முன்பு என்னிடம் பேசும் போதெல்லாம் அண்ணனை பற்றிய கிண்டல்கள்தான் . மிக மிக உற்சாகமான புத்திசாலியான பெண் , உடைகளிலோ, தோற்றங்களிலோ பெரிதாக அக்கறை செலுத்தாத பெண், அதுதான் அவளை மேலும் அழகாக காட்டுவதாகத் தோன்றும் . அவளுக்கு வாசிப்பு பழக்கம் உண்டு, நானும் வாசிப்பவன், சதீஷ் அடிக்கடி “இதுல என்னதான்டா இருக்கு, அவளுக்கு இதே கிறுக்கு தான்” என்பான், நான் ஜெயமோகனைப் படித்து வீணாய் போயிருந்தேன், ஆனால் அவள் சின்ன சின்ன வணிக நாவல்கள், வார, மாத இதழ்கள் என வாசித்து சந்தோசமாக இருந்தாள், இலக்கிய தரம் கொண்ட நாவல்கள் சிலவற்றை வாசிக்க கொடுத்திருந்தேன். புன்னகைத்தபடியே “புரியவில்லை“ என்று திருப்பி கொடுத்து விட்டாள் .
திருமணம் உறுதியானதும் சதீஷ் மிக மகிழ்ச்சியும் பரப்பரப்பும் கொண்டான், அவன் வாழ்நாள் கனவு, கடமை, எந்த வேலைகளுக்கும் என்னை கூட அழைத்துக் கொண்டு செல்வான், நான் எதையும் பேரம் பேசித்தான் வாங்குவேன், ஒருமுறை நான் 30ரூபாய் குறைத்து பேசிய பிறகு, அவன் கடைக்காரருக்கு அந்த 30 ரூபாயை சேர்த்து கொடுத்துவிட்டு வந்தான், ” பாவம்டா அந்தாளு, வெயில்ல நின்னு தொழில் பண்றான், அவன்கிட்ட போய் பேரம் பேசறையே” என்றான். சரி போய் சும்மா ஒரு 100 ரூபா கொடுத்துட்டு வா ,அப்படியே அவருக்கு பொண்ணு ஏதாவது இருக்கானு கேளு, வெயில்ல ரொம்ப கஷ்டப்படுரீங்க, நானே உங்க பொண்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு” என்றேன். சிரித்தபடியே என்னை இழுத்து கொண்டு அடுத்த கடைக்கு நகர்ந்தான்.
திருமண பரபரப்பு, அலைச்சல் என்பதால் தினமும் அவன் வீட்டிற்கு போக வேண்டியிருந்தது . அப்படி செல்லும் போதெல்லாம் பூரணியிடம் முன்பு போல பேச முடிந்ததில்லை, அவளும் சில சொற்கள், பார்க்கும் சமயங்களில் புன்னகை என கடந்து சென்றாள், ஒருமுறை என்னையும் மீறி “கல்யாணம் நிச்சியம் ஆகிடுச்சுனு இவ்வளவு பந்தா ஆகாதுமா” என்றேன் . அவள் அதற்கும் சிறிய புன்னகை மட்டுமே தந்தாள், திருமணம் நெருங்க நெருங்க அழகாகி கொண்டே செல்கிறாள் என்று தோன்றியது .
இன்று அந்த சுவடுகள் ஏதும் சற்றும் இல்லாது வாழ்நாள் முழுதும் துன்பங்களிலேயே உழன்று சருகாகி போனவள் போல அமர்ந்திருக்கிறாள் , இந்த பெண் யார், இவளுக்கும் பூரணிக்கும் என்ன சம்பந்தம், பூரணிக்குள் இவள் வந்தது எப்படி என்பது மட்டும்தான் என் மனதில் இருந்தது, அவள் என்னிடம் வெளிப்படுத்திய அந்த சிறுபுன்னகைதான் இவளுள் பூரணியும் இருக்கிறாள் என்பதை எனக்கு உணர்த்தியது .
“எப்படி இருக்க” என்றேன். அவள் மௌனமாக இருந்தாள், அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டேன், அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது உடல் அசைவுகளில் உணர்ந்தேன். திரும்பி அவளைப் பார்த்தேன், அவள் கால்களை கைகளால் அனைத்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள், நீண்ட நாள் குளிக்காததால் வரும் சொறிகள் கழுத்தில் படர்ந்திருந்தன, கழுத்தில் இருந்த கவரிங் செயின் நிறம் மங்கி இருந்தது. முடிகள் எண்ணெய் காணாமல் அங்கங்கு செம்மை நிறம் கொண்டிருந்தது . மெதுவாக “பூரணி” என்றேன்.
” பூரணி, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்றேன்.
” உன் அண்ணன் சிரிச்சு பல நாள் ஆகிடுச்சு , பைத்தியம் போல ஆகிட்டான், இப்படியே போச்சுன்னா அவனை சீக்கிரம் வேலையை விட்டு தூக்கிடுவாங்க, அவன் கொஞ்சமாவது நார்மல் ஆகணும்னா அது உன் கைலதான் இருக்கு” என்றேன்.
“உனக்கு என்ன பண்ணுதுனு என்கிட்ட சொல்லு, சொல்ல விருப்பம் இல்லைனா அம்மாகிட்ட சொல்லு, எதுனாலும் பார்த்துக்கலாம், இல்லை வீட்டுகாரர் பிடிக்கலைனா கூட சொல்லு, வேணாம்னு விட்டிடலாம், உன்னை பழைய பூரணியா பார்க்கத்தான் எல்லோருக்கும் ஆசை, எனக்கும், உன்னை இப்படி பார்க்க முடியல, எப்படி தேவதை போல இருந்த… எல்லாம் சரி பண்ணிடலாம், உனக்கு என்ன விருப்பமோ அது மட்டும்தான் இங்க நடக்கும், நீ நல்லா சந்தோசமா இருக்கணும், அப்பதான் அம்மா, அண்ணன் எல்லாம் சந்தோசமா இருப்பாங்க ” என்றேன் .
அவள் பதிலே சொல்லவில்லை, இடையில் அம்மா வந்து எனக்கு டீ கொடுத்து விட்டு போனாள்.
“பூரணி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், அதை நான் காமிச்சுகிட்டதில்லை, நீ இப்படி இருக்கறது எனக்கும் வருத்தமா இருக்கு, நீ நல்லா இருக்கணும்னு ஆசைபடுறேன்” என்றேன்.
அவளைப் பிடிக்கும் என்று நான் சொன்ன சமயத்தில் அவள் முகம் தூக்கி என்னைப் பார்த்தாள், நான் காலியான முகபாவனையை வெளிப்படுத்தினேன். “சரி வரேன்மா, யோசி , எதையும் சரி பண்ணிக்கலாம், இங்கேயே ஏதாவது வேலைக்கு போகனும்னு பிரியப்பட்டா கூட ஏற்பாடு பண்ணிக்கலாம், இப்படி அடைஞ்சு கிடக்காதே, எல்லார்கிட்டயும் பேசு, இப்படி மணிக்கணக்கா ஒரே இடத்தில் இருக்காத, எனக்கு இப்ப கூட உனக்கு என்ன பிரச்சினை ஏன் இப்படி இருக்க, உனக்கு என்ன வேணும்னு ஒன்னும் புரியமாட்டேங்கிது , நீயா ஏதாவது சொன்னாதான் எங்களுக்கு உனக்கு என்ன தேவை,என்ன செய்யனும்னு புரியும், தயவு செய்து இப்படி இருந்து உன்னையும் பாழாக்கி மத்தவங்களையும் வருத்த பட வைக்காத” என்றேன். அவளில் இருந்து எந்த சொல்லும் வெளிப்பட வில்லை .
அவள் மன வாசலை உடைத்து உள்ளே போக என்னால் முடியவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் நான் அருகில் அமர்ந்திருப்பதை விரும்புகிறாள் என்பதையும் தெரிந்துகொண்டேன், சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவள் எதேச்சையாக நிமிர்ந்து அமர்வது போல உடல் அசைத்து என்னைப் பார்த்தாள், புன்னகைத்தாள் ஆனால் கண்கள் கலங்கி அழும் நிலையில் இருந்தன, நான் அவள் தலையை வருடி “இப்படி இருக்காத, எதுனாலும் பார்த்துக்கலாம், உன் அண்ணன், நான் எல்லாம் உன் கூடயே இருக்கோம்” என்றேன் .
வெளியே வந்த போதுதான் அவளை முதல் முதலாக தொடுகிறேன் என்பதை உணர்ந்தேன் . வெளியே சதீஷ் அமர்ந்திருந்தான், ஆர்வமாக “என்ன சொன்னா” என்று கேட்டான். நான் பேசாமல் இருப்பதை உணர்ந்து கொண்டு “சரி வா கிளம்பலாம்” என்றான். நான் “ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் பார்க்கலாம், ஏதாவது பயந்துட்டாலா, இல்ல என்னனு பார்க்கலாம்“ என்றேன். அவன் சரி என்பது போல தலையசைத்தான் .
சில நாட்கள் கழிந்தது. ஒரு நாள் “ஆஸ்பத்திரி போணோம். ஏகபட்ட மாத்திரைகள் கொடுத்திருக்காங்க“ என்றான் .
நாட்கள் செல்ல செல்ல சதீஷ் வீட்டிற்கு செல்வது குறைந்தது, பசங்க ரூமில் தங்கி கொள்வதாக சொன்னார்கள், சட்டென குடிக்குள் போய் விட்டான், நான் திட்டுகிறேன் என்பதால் என்னைத் தவிர்க்க ஆரம்பித்தான் .
சில மாதங்கள் கழிந்தது.
ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு போனில் அழைத்தான், எழுந்து போனைப் பார்த்த போது 40 தவறிய கால்கள் அவனிடம் இருந்து வந்திருந்தது, பதறிய குரலில் “பூரணி தூக்கு மாட்டிகிட்டாடா” என்றான் . ” ஹாஸ்பிடல்ல இருக்கேன், வா “என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.
இரவே அவள் தூக்கு மாட்டி இருக்கிறாள், அம்மா விடியற் காலையில்தான் பார்த்திருக்கிறாள், இத்தனைக்கும் ஒரே அறையில்தான் இருவரும் இருந்திருக்கிறார்கள், அம்மா உறங்கிய பிறகு பூரணி தூக்கிட்டு கொண்டிருக்கிறாள் .
சதீஷ் அருகில் வந்து நின்று கொண்டான், வீட்டு அருகில் இருப்பவர்கள் மட்டுமே இருந்தார்கள், நண்பர்கள் யாரையும் காண வில்லை, என்னை மட்டுமே அழைத்திருக்கிறான். நான் ஒவ்வொருவராக அழைத்து சொல்லிக் கொண்டிருந்தேன் , கம்பனி மேனஜர் வந்து என்னை தனியாக அழைத்து 20,000 ரூபாய் கொடுத்து செலவை பார்த்துக்கொள் இன்னும் வேண்டுமெனில் கூப்பிடு என்றார்.
பூரணியை வீட்டிற்கு கொண்டு போனோம், போலீஸ் விசாரிப்புகளை சாரதி அண்ணன் வழியாக சரி செய்தேன். வீட்டிற்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் . மாப்பிளை வீட்டில் இருந்தும் வந்தார்கள் , யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, மாப்பிள்ளை பூரனியை காண மறுத்து வாசலில் அமர்ந்து கொண்டார், நான் சென்று “பாருங்கள்“ என்றேன், “என்னால முடியாது , எனக்கு சக்தியில்ல” என்றார் ,அவர் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. நண்பர்கள் வழியாக மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்தேன். தகன மேடையில் பூரணியை வைக்கும் போது கூட கணவர் அருகில் வரவில்லை, வாசலில் நின்று கொண்டார்.
எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக கிளம்பி கடைசியில் நானும் சதீஷீம் கிளம்பினோம், மாப்பிள்ளை தகன மேடை வாசலை பார்த்தபடியே வந்தபோது நின்ற இடத்திலேயே இப்போதும் நின்று கொண்டிருந்தார், நான் அருகில் சென்று “வாங்க போவோம்” என்றேன். அவர் “நான் அப்பறம் வரேன்” என்றார். பிறகு நானும் சதீஷும் கிளம்பினோம் .
சதீஷ் ஒரு வாரத்திற்குள் திரும்ப வேலைக்கு வந்து விட்டான், பேசுவது குறைந்து எப்போதும் வேலையிலேயே மூழ்கி இருந்தான் . பிறகு ஒருநாள் வந்து “நான் தொழில் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான். நான்தான் எப்போதும் அப்படி சொல்பவன், அவனுக்கு அந்த எண்ணமே இருந்தது இல்லை, ஆச்சர்யமாக இருந்தது. என்ன தொழில் என்று கேட்டபோதுதான், அவன் தொழிலுக்கான எல்லா வேலைகளையும் முடித்த பின்னர், வேலையை விட்டு செல்லும் நாளில் என்னிடம் வந்து சொல்கிறான் என்று தெரிந்தது, மன ரீதியாக இவ்வளவு அகன்று செல்வான் என்று யோசிக்கவே இல்லை, வாழ்த்தினேன். அதன் பிறகு அவனை சந்தித்தது இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு ஒரு யதேட்சையான தருணத்தில்.
அன்னபூர்ணா ஹோட்டலில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அருகில் அவன் குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். அவன் வேறு ஒருவருடன் உணவருந்த அமந்திருந்தான். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து வேகமாக அருகில் அமர்ந்து கொண்டான். “எப்படி இருக்க” என்றேன். “நல்லா இருக்கேன்“ என்று பழைய நட்புடன் பேசினான். அன்னபூர்ணாவை விட்டு இறங்கி வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம், பழைய உற்சாகமான சதீஷை காண மகிழ்ச்சியாக இருந்தது . தொழில் பற்றி, அதில் உள்ள போட்டிகள் பற்றி, அதன் எதிர்காலம் பற்றி எல்லாம் பேசினான். தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதையும் சொன்னான், என்னை வந்து பார்த்து பேச தவித்து கொண்டிருந்ததாகவும், எப்படி வந்து பேசுவது என்ற தயக்கம் கொண்டிருந்ததாகவும் சொன்னான் .
பிறகு அவன் தன் புதிய அலைபேசி என்னைக் கொடுத்தான், தனது புதிய காரைக் காட்டினான். எங்காவது ட்ரிப் போகலாம் என்றான். பேசிப்பேசி அவன் விடை பெற்று கிளம்ப நெடு நேரமாகி விட்டது .
அவன் சென்ற பிறகும் ,அவனோடு இருந்த போதும் என் மனம் ஒன்றில்தான் இருந்தது , அவன் பூரணியை பற்றி ஏதாவது பேச மாட்டானா என்று . ஆனால் அவன் அவள் பற்றிய ஞாபகமே இல்லாமல் இருந்தான்!