நின்றுகொண்டிருப்பது தன் நிழலின் மீது என்று அறிந்தபோது அவன் ஆசுவாசம் கொண்டான். வெயிலில் கங்கு இருந்தது. மரங்கள் ஓவியத்தில் பார்ப்பதைப் போலிருந்தன. உருவத்திற்கும் காலடியில் சரிந்து கிடக்கும் நிழலின் அளவிற்குந்தான் எத்தனை வேறுபாடு? எனில் ஆகிருதியை நீட்டியும் சுருக்கியும் மாயம் செய்யும் விதி எது? அதன் பெயர்தான் என்ன?
அவனுக்கு முன் அருவிக்கரைக்குச் செல்லும் சாலை விரிந்து கிடந்தது. நன்கு சிரைத்த தாடைகளைப்போல அதற்கு திடீர் பளபளப்பு. நான்குமாத சட்டப்போராட்டத்திற்கு பிறகு நெடுஞ்சாலைத் துறையினரால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருந்தன. புல்டோசர், ஜே.சி.பி கொண்டு கட்டிடங்களை இடித்திருந்தார்கள். கடைகளை உடைத்திருந்தார்கள். ஆக்கிரமிப்பு என்பதை விட அகற்றம் என்பதே அதிக வன்முறையை குறிக்கும் சொல். அருகே நின்று காணும்போது மனதிற்குள் அளவு கடந்த ஆனந்தம். பருவுடல்கள் ஊனப்பட்டு வீழ்ந்தன. அதைக் காணக் காத்திருந்த அத்தனை பேரும் அவை அவ்விதம் நடக்க வேண்டும் என்கிற வேட்கை கொண்டிருந்தார்களா?
அந்தப் பகல், வேலை நாட்களுக்கு உரிய வேகத்தில் கரைந்து கொண்டிருந்தது. வாகனங்கள் காற்றைக் கிழித்தபடி பாய்ந்தோடின. வணிகர்கள் தங்கள் கைச்சரக்குகளின் அருகே காத்திருந்தார்கள். காத்திருப்பதன் நோக்கம் ஒன்றே. கல்லாப் பெட்டி நிறைய வேண்டும். மனிதன் உருவாக்கிய எல்லைக்கோட்டிற்குள் அவனே நிகழ்ந்து முடிகிறான். எல்லைகளை மீறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தனைப்பேருக்கும் எல்லைகள் குறித்த பிரக்ஞை ஏன் எழுவதில்லை. எல்லைகளை தளையென அறிந்தவர்கள் அல்லவா அதை மீறுவது குறித்து யோசிக்கக் கூடும்.
தனக்கு எதன்மீதும் ஆர்வம் இல்லை என்பதை அவன் உணர்ந்த போது பசி மட்டுமே அச்சுறுத்தலாக இருந்தது. தனது அறைக்குள் நான்கு நாட்கள் அடைந்து கிடந்தான். நான்கு சுவர்களும் எங்கோ இருக்கும் உடுமண்டலங்களும் அவன் முன் பொருள் அற்றுப் போயின. அவை அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் அவனாக மட்டுமே தனித்து இருந்தான். தனித்து இருப்பவன் பிரபஞ்ச வெளியின் சூல். பசியை மட்டும் அவனால் கடந்துவிட முடியவில்லை. உடலோடு ஒரு சூதாட்டம் என்றுதான் அந்நாட்களைச் சொல்ல வேண்டும். பசித்த போது உணவு உண்பதை முடிந்த மட்டும் ஒத்திப்போட்டான். முதலில் கைகள் நடுங்க ஆரம்பித்தன. பின்னர் கால்களும் விரல்களும். மொத்த உடலிலும் பசி தாண்டவம் எடுத்து ஆடியபோது வாங்கி வைத்து குளிர்ந்து போயிருந்த சோற்றுப் பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். அந்தச் சாப்பாடு ருசி மிகுந்ததாக இருந்தது. ஒரே வாயில் திணித்து பசியை உடனே போக்கிவிட முடியாதா என்ற ஏக்கம். சாப்பிட்ட பின்பு கூட பசியின் பின்விளைவு, துாக்கத்தில் ஆழ்ந்து முடங்கிக் கிடந்தவனை வயிற்றுவலிதான் குத்தி எழுப்பியது. உடலும் புறக்கணிப்பின் துக்கத்தை வலியாக உருமாற்றிக்கொள்கிறது போலும்.
மனிதர்களை உற்றுக் கவனிக்க ஆரம்பித்த நாட்களில் அவன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான். வணிகர்கள், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தினக்கூலிகள், கல்வி கற்ற மேதாவிகள், வாய்ச்சவடால் நிறைந்த சண்டியர்கள்., ஏமாளிகள், பச்சோந்திகள், வெள்ளந்திகள், திருடர்கள், கொலைகள் புரிவோர் என அனைவரும் சில வரையறைகளுக்குள் அடங்கிப்போய் விடக்கூடியவர்களாக இருந்தனர். ஒருவரின் சொற்கள் கட்டாயமில்லை, அவரின் நடை உடை பாவனைகள் போதும். அதிலும் குறிப்பாக கண்கள். கண்களின் அலைவு. அவை கொள்ளும் வெறித்தலும் தளும்பலும். மனிதர்களைப் பற்றி அறியச் சாத்தியமான தகவல்களை கண்களே வெளிப்படுத்தி விடுகின்றன. மிகச்சிறிய அளவே மனிதர்களை அவர்கள் வலிந்து வெளிக்காட்டும் பாவனைகள் நம்பச் செய்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் விசயத்தில் மட்டுமே சோடை போகிறார்கள். பிறரைப் பற்றி மிகச்சரியாகவே கணித்து விடுகிறார்கள்.
முடிவில் அவன் பெரும் சோர்வை அடைந்தான். அவனுக்கு முன்னர் நிற்பவர்களை அவன் ஐந்து வகைமாதிரிகளுக்குள் வகைப்படுத்தினான். அரிதினும் அரிதான மனிதனாக அவன் கருதக்கூடியவர்களை அவன் கடைசி வரைக் காணவே இல்லை. அந்த அதி ரூபன் உண்மையில் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறானா? இல்லையென்றால் அவன் வரலாற்றில் சுயமோகி ஒருவனால் உண்டாக்கப்பட்ட புனைவா?
கட்டற்று அலையும் எண்ணங்களைப் பின்தொடர்ந்தான். அவை மலைச்சிகரத்திற்கு கூட்டிச்சென்றன. காலடி மண்ணை அற்பமாக அறிந்தான். பாதாள உலகத்திற்குள் வீழ்ந்தான். வாழ்வின் பொருள் கலைந்து கொண்டே இருந்தது. ஒரு அலை வரைந்த தடத்தை அடுத்த தலை இல்லாமல் ஆக்கியது. இரவும் பகலும், இடைப்பட்ட அந்தியும் வைகலும் போல எளிமையாக புரிந்துகொள்ளக் கூடியதாக இல்லை ஆழிகூறும் உலகு. கரும்பாறையில் விட்டெறிந்த கண்ணாடிச் சில்லுகளைப் போல தன்னுடைய அகம் சிதறிக் கிடப்பதைக் கண்டான். ஒவ்வொரு சில்லும் அவனை தனித்த ஓர் ஆளுமையாகக் காட்டியது. உடைந்த சில்லுகளை உற்றுப்பார்க்கும் அவன் ஓராயிரம் பிரதிகளாக விரிந்து கிடந்தான். மேலும் பல்கிப் பெருகுவதற்கான சாத்தியத்தை அவன் கொண்டிருந்தான். தன்னைத் தொகுத்து ஓரு நிலைத்த ஆளுமையாக முன்னிறுத்துவது எத்தனைப் பெரிய பித்தலாட்டம். அவனுக்கு அச்சமாக இருந்தது. குதிரையின் லயம் தன் கட்டுப்பாட்டில் இல்லை. அது காட்டும் பாய்ச்சல் முன் பின் அறியாத பெருநிகழ்வு.
ஆதியிலே உலகம் ஒரு சொல்லாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லது உலகத்தின் ஊற்று சொல்லில் இருந்துதான் பிறந்திருக்கவேண்டும். சொல் என்பது ஒலியின் உறைவு. ஒலியின் உரு. ஒலியை உற்பத்தி செய்வது எவை? உராய்வா? மௌனத்தின் பிளவா? ஒலியை உண்டாக்கும் கரம் எவருடையது? இத்தனை ஆயிரம் உயிரினங்களை உண்டாக்கி அவற்றிற்கு ஒலியின் ஊடாக பரிமாறும் ஆற்றலையும் உண்டாக்கிய ஆதிவல்லமை இன்றும் இருக்கிறதா? துல்லியமும் கச்சிதமும் கொண்ட உடல்களை உருவாக்கிய அந்த சர்வ வல்லமைக்கு அதன்பின்னர் என்ன ஆனது? ஏன் இத்தனைக் குழப்பங்களுக்கு மத்தியில் வாழ நேரிடுகிறது? ஏன் இத்தனை பொருளற்ற காரியங்களுக்காக அசுரப் பாய்ச்சல்களை இடைவிடாமல் நிகழ்த்த வேண்டியுள்ளது. புறக்காரியங்களில் கழியும் பொழுதுகள் அர்த்தம் கொள்வதே இல்லை. இருண்டு அதள பாதாளத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன. வாழ்தல் சாவை நோக்கிய சாவகாசமான நடை.
நீர்வாகையின் நிழல் தன்னை அடையாளமற்றுப் போகச் செய்வதை அவன் அறிந்தான். தன் உடல் இருக்கிறது. உடலுக்கான நிழலும் சதா தன்னோடு. ஆனால் அது எல்லா நேரத்திலும் உடன் வருவதில்லை. சிலபோது தன் நிழல் மாயை.. அரூபத்தின் காட்சி. பதறி விலகி வெய்யில் காய்ந்த தார்ச்சாலையில் அமர்ந்தான். நின்றபோது விழுந்த நிழலின்மீதே விரைந்து குந்தினான். நிழல் அப்போது இல்லாமல் ஆனது. ஓடினால் நிழலும் ஓடுகிறது. நடந்தால் பின்னால் வருகிறது. அமர்ந்தால் காணாமல் ஆகிறது. எனில் நீந்தும் போதும் படுக்கும்போதும் நிழலுக்கு நிகழ்வது என்ன? தலையை ஆட்டிக்கொண்டான்.
தத்துவங்கள் அவனைக் கைவிட்டு வெகு காலமாயிற்று. தத்துவங்கள் இருமுனையிலும் கூர்கொண்ட கத்திகள். அவை ஏந்தியிருப்பவனையும் ஊன முறச் செய்கின்றன. ஒரு தத்துவம் எதிர் தத்துவத்தை இட்டு நிரப்பும் தன்மை கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றை வழிபடுகிறவனுக்கு நிராதரவை வழங்குகின்றன. தத்துவவாதிகளுக்கு முடிவிலே மிஞ்சுவது கையறுநிலையே. நீட்சேவுக்கும் அவனை ஒத்தவர்களுக்கும் நிகழ்ந்தது ஒன்றே. சம்சாரியைவிட தத்துவவாதி கூடுதலாக எதையும் அடைந்து விடுவதில்லை. இறுதிநாட்களில் சம்சாரிக்கு உடனிருப்பவர்களின் ஆறுதல் மிஞ்சலாம். தத்துவவாதியை அவனே கைவிட நேரிடுகிறது. பூத உடலை அவன் பாழடைய விடுகிறான். உடலை அழிப்பதன் மூலம் அவன் உற்பத்தியின் ஊற்றுமுகத்தை விரக்தியடையச் செய்கிறான். முகம் கோண வைக்கிறான்.
ஐந்தருவி செல்லும் திசையில் நடக்க ஆரம்பித்தான். தன் அகம் முழுக்க கண்கூச வைக்கும் ஒளிச்செறிவு. வெளியோ இருள் உறைந்த கசம். அவனை வழிநடத்திச்செல்லும் செஞ்சுடர் எதிரெ சென்றது.
மஞ்சள் ஒளிர்வினை உள்ளடக்கிய செந்நாவாக இருந்தது முன் சென்ற சுடர்.