உடலின் ஏதாவதொரு பகுதி தன் இருப்பைத் தெரிவித்தபடி இருந்தால் அங்கே பிரச்சினை என்று அர்த்தம். எப்படி மக்கள் நோவு, துயரம் என்று வரும்போது கடவுளை நினைத்துக் கொள்கிறார்களோ அதேபோல நோவு வரும்போதுதான் உடல் நினைவுக்கு வருகிறது.
சாதாரணமான நேரத்தில் வானளாவ ஓடும் எண்ணங்கள், அறிவு முதிர்ச்சி உடலில் வலி என்றால் கண்காணாது மறைந்துபோகும். மரணம் அல்லது மரண வேதனை என்னும் பயங்கள் மனிதகுலத்தின் முன் உள்ள மாபெரும் சுவர். அத்தகைய தருணங்களில் தெள்ளிய அறிவு கைகூடுமா? வெறும் உடலாக, வலியை உணரவும், வேதனையை அனுபவிக்கும் உடலாக மட்டுமாக இருக்கையில் ஓடும் எண்ணங்களுக்கும் இயல்பான தருணங்களில் ஓடும் எண்ணங்களுக்கும் தான் எத்தனை தூரம். இதனால்தான் தஸ்தயேவ்ஸ்கியும் காஃப்காவும் மிகச்சிறந்த எழுத்தாளர்களாக எனக்குத் தெரிகிறார்கள். மன அவத்தைகளை, இருத்தலுக்கான நியாயங்களை அசலான கேள்விகளைக் கேட்டபடியே உள்ளனர். இதைத் தவிர்த்த எதுவும் இரண்டாம் பட்சமானவையே.
இரசனை, அழகியல் இவை எல்லாம் வெறும் உடலாகி, உடல் வாதையில் துடிக்கையில் அர்த்தமற்றுப் போகின்றன. இந்த வாதையிலிருந்து பேசக்கூடிய, மீட்சியளிக்கக்கூடிய எழுத்து எதுவே அதுவே சிறந்த ஒன்று.
நாடிநாடி யும்முளே நயந்துகாண வல்லிரேல்
ஓடியோடி மீளுவா ரும்முளே யடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே
புறச் சூழல்கள், உண்ணும் உணவு காரணமாகவும், மனதின் இயல்பு காரணமாகவும் ஒரு தருணத்தில் வாய்க்கும் மன ஓர்மை நீடிப்பதில்லை. ஆனால் அதில் நாட்டம் கொண்டு மீண்டும் மீண்டும் தொடர, மனம் குவியாதபோது ஓடி ஒளிந்துகொண்ட பரஞ்சோதியை உள்ளுள் காணலாம். மனமற்ற நிலை என்பது காலமற்ற நிலை. எனவே காலன் அங்கில்லை. உடல் தாண்டிய நிலை அது.
ஆன்மீகம் என்பது ஒருவித பேசாநிலை. அதனால்தான் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்கிறார்கள். சில நாட்கள் மூச்சுப் பயிற்சியும், புருவ மத்தியில் பார்வையைக் குவித்து தியானமும் செய்தாலே நமக்குள் ஒரு மாற்றத்தை உணர முடியும். மிக உயர்ந்த பரந்த மண்டபத்தில் சத்தம் ஓய்ந்து சுத்தமாய் வைத்திருப்பது போல, நமக்குள் ஒருவித சுய அவதானிப்பை உணர முடியும். இந்த உணர்வை தீபத்தைத் தீண்டி விடுவதுபோல தொடர்ந்து உருப்பெருக்க உள்ளுக்குள் ஆனந்தம் ஒன்று பரவி நிற்கும். ஒவ்வொரு பேச்சுக்கும் பின்னால் உள்ள அர்த்தமின்மையும் மனோபாவமும் புரியத் தொடங்கும். தேவையற்ற வெட்டிப் பேச்சுக்கள் குறையும். காரியார்த்தமானவை தவிர மற்ற பேச்சுக்கள் வீண் என்பது உணர்வாய் நிற்கும்.
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்ஙனே
செய்யதெங்க ளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே.
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே
தமிழில் ஐ என்ற எழுத்துக்கு உள்ள பல அர்த்தங்களில் கடவுள், அழகு, தந்தை ஆகிய அர்த்தங்களும் உண்டு. ஐயன் மெய்யகத்துக்குள் அதாவது மெய்யாகிய உடலின் அகத்துக்குள் அல்லது உண்மையான அகத்துக்குள் புகுந்தது எவ்வாறென்றால், தென்னை மரம் வளர்ந்து உயர்ந்து காய்க்கும் காய்க்குள் எப்படி நீர் புகுந்ததோ அதுபோலவாம். அப்படி எனக்குள் அவன் கோவில் கொண்டபின் வையகத்தில் உள்ளோரோடு நான் வாய்திறப்பதில்லை.
பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலாச் சிவமதாம்
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையு மிகந்துநீர்
பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே
பார்வை புறம் நோக்கி இருக்கிறது. பார்வைக்குப் பின்னால் இருப்பது, பார்க்கத் தூண்டுவது, பார்க்கும்போது என்ன நிகழ்கிறது, அப்படிப் பார்ப்பது எது என்று பார்த்து வந்தால் பார்ப்பவர் மறைந்து பார்க்கப்படுவது மட்டுமாக அங்கே நிற்கும். இந்தப் பாடலின் முதல் வரி மட்டுமல்ல, பல வரிகள் ஆச்சரியமளிக்கின்றன. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உட்பட நவீனகாலத்து ஞானியர் கூறுவதும் இதைத்தான். பார்ப்பவர் பார்க்கப்படுவது என்ற இருநிலை மறைந்து ஒன்றாகிவிடும் நிலையை ஜிட்டு பல இடங்களில் குறிப்பிடுகிறார். இப்படி தொடர்ந்து பார்வையைச் செலுத்திவர உள்ளே சிவம் தோன்றும். இப்படி கவனிக்க முடியாமல் தொடர்ந்து மனம் விலகி விலகிச் சென்றால் திரும்பவும் பிறப்பிறப்புச் சுழலுக்குள் உழல வேண்டிவரும். அதை பூத்தபூவுங் காயுமாய் என்று குறிப்பிடுகிறார். பிறப்பெடுத்து இனப்பெருக்கம் செய்து உயிரியற்கைச் சுழற்சிக்குள் சிக்கிக் கொள்வதை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
ஒரே விசயம் தான். புரிந்துகொள்வதற்கு எளிதானதும் கூட. ஆனால் அறிந்து உணர்ந்துகொள்வது என்பது தான் மிகக் கடினமானது. இதை எத்தனை ஞானியர் எத்தனை விதமாகப் பேசியிருக்கிறார்கள்! உதாரணமாக மேலேயுள்ள பாடலைப் பாருங்கள். பார்வை புறம் சார்ந்தது. இதனால் மனம் புறம் நோக்கிப் பாய்ந்தபடி, உழன்றபடி இருக்கிறது. ’பார்வையை’ மூடும்போது பார்க்கும் செயல் இல்லை. ஆனால் பார்ப்பவர் இருக்கிறார். மூடிய விழிகளுக்குள் சிறிது வெளிச்சமும் எஞ்சுகிறது. பார்க்கப்படுவதும், பார்ப்பதும் இல்லாதபோது பார்ப்பவர் பார்ப்பது எதை? அது என்ன வெளிச்சம்? தன்னைத்தானே அவதானிப்பதன் இன்னொரு எளிய வழி இது. என்னென்னவெல்லாம் தியானிக்கும் வழியிருக்கிறதோ, ஆன்மீக அனுபவத்தை நெருங்கக் கிடைக்கும் எந்தவொரு சிறிய வாய்ப்பையும் தவறவிடாமல் ஞானியர் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்பதை எண்ணுகையில் உள்ளம் நெகிழ்கிறது.
தியானிப்பதற்கு ஞானியர் பல வழிகளைச் சொல்லிச் செல்கிறார்கள். சிலர் மூச்சைக் கவனிக்கச் சொல்கிறார்கள். கோபமாய் இருக்கும்போது, பயத்தில் இருக்கும்போது, மூச்சு சீரற்றுப் பாய்வதை உணரலாம். முழுமையாக மூச்சு உள்ளே இழுக்கப்படுவதோ, வெளியிடப்படுவதோ இருக்காது. சோகத்தில் மூச்சு ஒடுங்கி சிறுத்து ஓடும். சிலர் ஏதாவது ஒரு பொருளை ரூபமாகவோ அரூபமாகவோ தியானிக்கச் சொல்வர். சிலர் எண்ணங்களை வெறுமனே கவனிக்கச் சொல்வர். பிறருக்கு உதவுதல் மூலம் தான் என்ற அகந்தையை அழிப்பது வள்ளலார் கண்ட எளிய வழி. இதற்குப் பெரிய படிப்பறிவோ, தியானம், பயிற்சி எதுவுமோ தேவையில்லை. அன்பு இருந்தால் போதும். ஒருவிதத்தில் மனிதர்களுக்குத் தேவையான எல்லாமே இங்கு தேவைக்கு அதிகமாகவே பேசப்பட்டு விட்டது என்றே தோன்றுகிறது.
சில ஞானியர் தங்கள் அடையாளத்தை மறைத்து சாமானியராக அல்லது ஒரு பைத்தியம் போலவோ வாழ்ந்து மறைந்துவிடுகிறார்கள். அவர்கள் எதுவும் பேசுவதில்லை. சாது அப்பாத்துரை என்ற ஞானியுடனான உரையாடலைத் தொகுத்து தியானதாரா என்ற பெயரில் பிரமிள் வெளியிட்டிராவிட்டால் அவர் வாக்கு என்று எதுவும் நினைவுகூரப்படாமலேயே போயிருந்திருக்கும். ஆனால் அப்படி எதையும் நிலை நிறுத்தும் துளி ஆர்வமும் அவர்களுக்கு இருந்ததில்லை. தனக்குள் நிறைந்தவருக்கு பிறத்தியாரின் அதுவும் இந்தக் கேவலமான லோகாயத பலாபலன்கள் எத்தனை அர்த்தமற்றது.
இரவென்பது குறைவான வெளிச்சம் என்கிறார் பாரதி. காரிருளில் கூட சிறிது நேரம் பழகிவிட்டால் அருகிலிருப்பது துலங்கத் தொடங்கும். கண்கள் மூடியிருக்க உள்ளுக்குள் இருளா நிறைந்திருக்கிறது? உள்ளே நிலவொளி போல பாந்தமான வெளிச்சம் படர்ந்திருக்கும். கண்மூடி இவ்வொளியை மனம் ஒன்றி நோக்கியிருக்க, நீலவொளி படரும்.
நெற்றிபத்தி யுழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்த தென்பலன்
உற்றிருந்து பாரடா வுள்ளொளிக்கு மேலொளி
அத்தனா யமர்ந்திட மறிந்தவ னனாதியே
நெற்றியைப் பற்றி உழலுகிறது ஒரு நீல மாவிளக்கு. அதை விடாது அவதானித்துவர உலகப் பற்று ஒழியும். அவ்வுள்ளொளிக்கும் மேலாய் பரஞ்சோதி தோன்றும்.
நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்
ஒரு காரியத்தை நினைத்து தண்ணீரை அள்ளி திரும்பவும் தண்ணீரிலேயே விடுகிறாய்; யாரை எண்ணி இப்படி தண்ணீரை ஆற்றிலே இறைக்கிறாய்? எதற்கு இந்த வெட்டிச் சடங்குகள்? உண்மையாகவே உனக்கு இறைவனை அடைவதுதான் எண்ணமெனில், உன் வேரையும் அதன் வித்தையும் அந்த வித்தில் முளைத்தெழுந்த சிவத்தை தியானிக்க முடிந்தால் சிவபதம் அடையலாம் என்கிறார். சடங்குகள் எப்போதும் புறவயமானவை. இலோகாயத பலன்களுக்காக இறைவனைக் கைக்கொள்ள முயற்சிப்பவை அப்படியான கற்பிதங்களைக் கொண்டவை. இதற்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை.
பதினொன்றாம் வகுப்போ பனிரெண்டாவதோ படிக்கும்போது விளாத்திகுளத்தில் ஒரு பண்டிதர் கோவிலில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். எனக்கு அப்போதே ஆன்ம விசாரம் இருந்தது. நான் என்று படைத்து விரித்துப் பார்க்கும் இந்த வாழ்வில் உள்ள நான், இறந்தபின் என்னவாகிறது என்பதுதான் எனக்கிருந்த கேள்வி. அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர் மனம் சூட்சுமமாக வெளியில் நிறைந்திருக்கும் என்பதுபோல ஒரு பதிலைச் சொன்னார். ஆனால் அப்போது அது திருப்தியானதாகத் தோன்றவில்லை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் அவரது இறப்புக்குப் பின் அவரது பிரக்ஞை என்னவாகும் என்று கேட்டதற்கு ”அது அப்படியே போய்விடும். ஆனால் நீங்கள் நான் சொன்னவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தால், ஒருவேளை நீங்கள் அந்தப் பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.” என்று பதிலளித்துள்ளார். பௌதீகமான உடல் கண்ணுக்குத் தெரிகிறது. சூட்சுமமான உயிரும் மனமும் தெரிவதில்லை. அது உடலில் எங்கு இருக்கிறது என்றும் தெரியாது. ஆனால் இருக்கிறது என்பது நாத்திகரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. இறந்தபின் அதுவரை இருந்த உயிர் எங்குதான் போகிறது?
கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற தப்புவில்
அருட்டரிக்கு முன்னெலா மாசைநின்ற வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர்
கருத்தரிப்பதற்கு முன்பு உடல் தாய் தந்தையரின் உடலில் நெருப்பாக இருந்தது. உருவொன்று உருவாகும் முன் உயிரானது ஆகாசத்தில் இருந்தது. உயிர் ஆகாசத்திலிருந்து மண்ணுக்கு இழுத்து வரும் ஆசை அதாவது மனம் காற்றில் இருந்தது என்கிறார். இதில் மூன்றாவது வரி இரு அர்த்தங்களைக் கொண்டது. அருள்+தரிக்கும் முன்பாக அதாவது இறைவன் அருள் கிட்டும் முன்பாக ஆசையானது காற்றைப் போல அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றும் பொருள் கொள்ளலாம். இதுவரை வாழ்ந்தோரும் இனி வருவோரும் ஆகாசத்தில் நட்சத்திரங்களைப் போல பரந்துவிரிந்து வியாபித்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொள்வதுதான் எத்தனை நிம்மதியாய் இருக்கிறது.
பார்ப்பவர் à பார்த்தல் à பார்க்கப்படும் பொருள் என்ற மூன்றில் பார்ப்பவர் மட்டும் இருப்பது மனவெறிப்பு எனலாம். சிலநேரம் ஏதோ யோசனையில் இருக்கையில் கண்கள் திறந்தபடி இருக்கும். ஆனால் பார்வை பார்க்குமிடத்தை உள்வாங்காது. அப்போது பார்ப்பவர் மட்டும் இருக்கிறார். பார்ப்பவர் மறைந்துபோய் பார்க்கப்படும் செயல் மட்டும் இருப்பது வினையை நீக்குகிறது. அதன் பாதிப்போ தாக்கமோ பார்க்கப்படுபவரிடம் ஏற்படுவதில்லை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உடலுறவு கொண்டதுண்டா, யேசு பிரம்மச்சாரியா இல்லை மணமுடித்தவரா என்ற வீணான அற்ப வாதங்களில் எல்லோரது கவனமும் செல்லக் காரணம் மிகப்பெரிய வெண் திரையில் ஒரேயொரு சிறு கரும்புள்ளி பட்டாலும் அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கிடைக்கும் வாய்ப்பை யாரும் விடத் தயாராக இருப்பதில்லை. அந்த நிராகரிக்க முடியாத இருப்பு எல்லோரையும் தொந்தரவுக்குட்படுத்துகிறது. ஞானியர் வினையறுத்தவர்கள். பௌதீகமான அவர்கள் செயல்களின் பின்னே செய்பவன் என்று ஒருவனை வைத்துக் கொண்டிருப்பதில்லை. இந்த உலகியல் நியாயங்களை வைத்து அவர்களை அளக்க நினைப்பது அறிவீனம். யேசு விரைவில் வருகிறார் என்று நம்மால் வசனம் தான் எழுதி வைக்க முடியும். உண்மையில் அப்படியொருவர் வந்தால் திரும்பவும் இந்த உலகம் சிலுவையில் ஏற்றத்தான் செய்யும்.
மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே
என்ன ஒரு அழகான பாடல். நான் ஏற்கெனவே சொன்னதுபோல பாடல் வரிகள் ஆற்றுக்குள் புரளும் கூழாங்கல்லாய் உருண்டுருண்டு ஓடுகிறது. மனதில் அழுக்கை நீக்காமல் வனத்தில் மவுன விரதமிருந்தாலும் அதனால் ஒரு பலனும் இல்லை. மனதில் அழுக்கில்லாத ஞானியர் பெண்ணோடு கூடினாலும் அவர்கள் பிறப்புச் சங்கிலியை அறுத்தவராவார்.