குமரேசனுக்கு என்னைவிட இரண்டு வயது அதிகம். ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை அவன். ஆறாம் வகுப்பிற்காக ஆவுடையாபுரம் செல்ல வேண்டியிருந்தது. ஆனந்தாயி தனக்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என்று வேப்பங்குளத்திற்கு ஊர்த்துணி வெளுக்க அவனை கூப்பிட்டுப்போக ஆரம்பித்தார். அழுக்குத் துணி மூட்டைகளோடு குமரேசனும் கழுதைகளின் பின்னே தலை குனிந்தவாறு ஓடுவான்.
எங்கள் வீட்டிற்கு தெற்கே குப்பைக்கிடங்கு. தொழு உரம். கோபால நாயக்கரின் மாடுகள் போடும் சாணி மேடு. தொழுக் கழிவோடு தெருவில் பீடிசுற்றும் அத்தனை வீடுகளின் குப்பையும் கொட்டப்படும். மாட்டுச்சாணி நாற்றம் எப்போதும் மண்டிக்கிடக்கும். செல்லாங்குச்சியைத் தேடி உள்ளே கையால் கிளைக்கும்போது குப்பென்று வெக்கை எழுந்து முகத்தில் மோதும். குப்பைமேட்டை ஒட்டிய உடைமுள் மரத்தில் அரிதாகப் பச்சைப் பாம்பை பார்க்கலாம். உற்று நோக்கினால் மட்டுமே புலப்படும் அரிய ஜீவன். நகரும்போது கூட கண்னைக் கட்டிவிடும். பாய்ந்து வந்து கண்களைக் கொத்தும் என்பார்கள். நான் பார்த்ததில் மிகுந்த கூச்சம் கொண்ட பாம்பினம் அது.. பச்சைப்பாம்பு ஓடி ஒளிந்து கொள்வதில் காட்டும் நிதானம் மற்ற பாம்பினங்களில் இருப்பதில்லை. குப்பை மேட்டைத் தாண்டியதும் குமரேசனின் வீடு.
குமரேசன் கொத்த வேலைக்குச் சென்று திரும்பிய அந்திகளில் நடந்து கொண்டே குளிப்பான். வெந்நீரை வீணாக்காமல் முற்றத்தையும் நனைப்பான். பகல் சூடு தணியும். குமரேசனின் உடம்பில் சிமிண்டின் தேமல்கள். கைகளில் பொன்னிற முடிகள். அடிவயிறு உள்ளொடுங்கி மார்புபகுதி விம்மித் தெரியும். முற்றத்தில் தேங்கிக்கிடக்கும் நிலா வெளிச்சத்தில் வட்டமாக அமர்ந்து இராச்சாப்பாடு. பெரும்பாலும் சாயங்காலத்தில்தான் சமைப்பது. கண்ணா வீட்டில் இருந்து சிலோன் ரேடியோவின் இன்னிசை. குமரேசனின் வீடு தென்னை ஓலைகள் வேய்ந்த குடிசை. ஒரே பத்தி. கதவிற்கு வெளியே சாணிப்பால் மணக்கும் திண்டு. அதுதான் திண்ணையும் கூட. எதிரே அடுப்படி. என் வீட்டைப்போல அவன் வீட்டிலும் மின்சார விளக்குகள் கிடையாது. அரிக்கேன் விளக்கின் சோர்ந்த வெளிச்சம் இருளை ஒதுக்கும். நிழல்கள் மட்டும் பூதாகாரம் காட்டி சுவர்களை நிறைக்கும். வீடுமுழுக்க துணி மூட்டைகள். வெளுத்தது வெளுக்க வேண்டியது என. தனித்து அடையாளமிட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குமரேசன் அந்த மூட்டைகளின் மீது ஆனந்த சயன நிலையில் படுத்திருப்பான். சாப்பிடும்போது கூட அவற்றில் ஒன்றின் மீது ஏறி அமர்ந்த நிலையில் தட்டை கையில் ஏந்தியிருப்பான். ஊர்ச்சோறு வாங்க அவன் என்னை அழைத்துச் செல்வதில்லை. ஆனாலும் அவன் பின்னால் சென்று திரும்புவேன். ஒவ்வொரு வீட்டு வாசல் முன் நின்று “குமாரு வந்திருக்கேம்மா..தாயி” என்று குரல் கொடுக்கும்போது மட்டும் விலகி நின்று கொள்வேன். கக்கத்தில் இடுக்கியிருக்கும் சில்வர் குத்துப்போனிக்குள் குளம்பிற்கும் ரசத்திற்கும் என்று தனித்தனியாக இரண்டு கிண்ணங்கள் வைத்திருப்பான். என்னைக்கண்டு முகம் துாக்கும் நாய்கள் அவனிடம் வாலாட்டும்.
சாத்தியப்பட்ட அத்தனை வேலைகளும் குமரேசனுக்குத் தெரியும். ஐந்தாம் வகுப்பிற்கு மேல் அவன் பள்ளிக் கூடத்தின் பக்கமே திரும்பி பார்த்ததில்லை. நான் பத்தாம் வகுப்பு வரை அவனைப் பார்த்து ஏங்கிக் கொண்டே படித்து முடித்தேன். பள்ளி செல்ல மங்களாபுரத்திற்கும் இராயகிரிக்கும் இடையே மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருக்கும். பதினோரு வயதிலேயே தனியனாக பயணங்களை கற்க ஆரம்பித்தேன். கடையநல்லுாரில் இறங்கி அட்டைக்குளத்தின் கரைவழியாக நடந்து வருவேன். மங்களாபுரத்தில் டவுன் பஸ்கள் மட்டுந்தான் நின்று செல்லும். பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று ஜவுளிக்கடை வேலைக்குச் சென்றபோது பன்னிரெண்டு ஆண்டுகள் படித்தது குறித்து தீரா மனக்குறை. குமரேசன் அப்போதே நிறைய சம்பாதித்தான். கொத்தனாராக மாறியிருந்தான். சொந்தமாக வீடு கட்டிக்கொண்டான்..
விடுமுறை தினங்களில் குமரேசனோடு பகல் பொழுதுகள். அவன் அன்று எந்த வேலைக்குப் போகிறானோ அங்கே உடன் செல்வேன். நெல்வயலில் நாத்து நட, அறுவடை நடந்து முடிந்த பின்னர் விறகுக்காக கரும்புத்தட்டை பொறுக்க, வேப்பங்குளத்தில் துணி வெளுக்க, கருவேல மரங்களில் இருந்து சுள்ளி தரிக்க, சதை மாடுகள் பின்னே சுற்றி புணையல் பார்க்க, வேலை ஏதும் அமையாத நாட்களில் மரங்களில் ஏறி கொக்கு முட்டை களவாட, உள்ளாற்று நீரில் துாண்டில் போட்டு மீன் பிடிக்க. கரட்டாண்டியை தென்னக்கீற்று நாரினால் சுருக்கு அமைத்து துாக்கில் தொங்கவிட.
“சங்கரைய்யா” என்றுதான் கூப்பிடுவான். வீட்டு வாசலைத்தாண்டி உள்ளே வரத் தயங்குவான். அம்மாவும் அதை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனந்தாயி கூட என்னை ஐயா போட்டுத்தான் அழைப்பது. அப்போது அது இயல்பாக இருந்தது. நானும் ஊர்க்காரர்களைப் போல குமரேசன் என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவேன். அவன் அதற்காக வருந்தியதாக நினைவில்லை.
வருடத்திற்கு ஒருமுறை இத்தனை மூட்டை என்று ஒரு கணக்கு வைத்து நெல் தருவார்கள். மற்றபடி தினமும் இரவில் உணவு வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவுதான் அவர்களுக்கான கூலி. நாள்தோறும் விதவிதமான உணவு வகைகளோடு அவன் வீடு திரும்புவதைப் பார்த்து நாவூறி பின் தொடர்ந்திருக்கிறேன். அந்நாட்களில் குழம்புகளுக்கு இருந்த அலாதியான வாசனைகளை பாக்கெட் மசாலாக்கள் வந்து இல்லாமல் ஆக்கிவிட்டன. கொத்தமல்லியும் மிளகாய் வத்தலும் வறுத்து, அம்மியில் வைத்து அரைத்த புளிக்குளம்பிற்கு இரண்டு தட்டுச் சோறு காணாது. மொச்சை, தட்டைப்பயிறு, வெண்டைக்காய், கத்தரிக்காய், சுண்டல் என்று புளிக்குளம்பிற்குத்தான் எத்தனை முகங்கள் இருந்தன.
மழைக்காலங்களில் மட்டுமே ஆற்றில் வெள்ளம் வரும். மூன்று மாதங்களுக்கு இடைவிடாத நீரோட்டம். சில இடங்களில் மண் மேடு அமைத்து தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். ஓட்டம் உள்ள பகுதியில் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீர் தேங்கிய பகுதியில் கூடுதல் தணுமை கொண்டு கனத்துக்கிடக்கும். ஆற்றங்கரைகளில் தாவரங்களின் அடர்வு. அரளிச்செடிகளும் ஊடே மஞ்சள்நிற பூக்களில் கிளர்ந்து நிற்கும்.
முழங்கால் அளவு நீரில் குமரேசன் தக்கையினை மிதக்கவிட்டு நின்றிருந்தான். உள்ளங்கால் வெடிப்புகளில் அவ்வப்போது மீன்கள் வந்து கடித்தன. காலிடுக்குகளில் இருந்த சிரங்குகள் ஆற்றுமீன்களுக்கு அறுசுவை விருந்து. பூக்குழி இறங்குபவனைப்போல கால்களை மாற்றி நின்று, நீரலைகளை வளையங்களாக மாற்றி அவனிடம் அனுப்பிக் கொண்டிருந்தேன். கையில் இருந்த சருகைத்தாள் நீர்க் கவருக்குள் ஐந்தாறு கெண்டைகள் பரிதவித்து அலைந்தன. மற்றொரு கையில் ஏந்திய சிரட்டை ஈரமணலில் கிளைத்து நெளியும் மண்புழுக்கள்.
தக்கை குதித்தது. வெட்டி இழுபட்டது. முங்கி எழுந்தது. துாண்டில் கம்பை பிடித்து நின்றவனிடம் அசைவில்லை. நீரையே வெறித்திருந்தான்.
“குமரேசா..மீன் சிக்கிருச்சு..” என்று கிசுகிசுத்தேன். அது மதிய நேரம். இரண்டு மணி இருக்கும். நீத்தண்ணி ஊற்றிக் கேப்பைக் கூழ் குடித்த உடன் மீன் வேட்டைக்கு கிளம்பியிருந்தோம். வெள்ளைக் கொக்குகள் சிறகடித்து ஒலியெழுப்பின. வண்டல்நெய்யில் கால்த்தடங்களை பதித்து நின்றன.
குமரேசன் அசையாமல் நின்றிருந்தான். அவன் ஒரு இரும்புச் சிலையைப்போல ஆகியிருந்தான். தோளைத்தொட்டு உலுக்கப் போனேன். கண்களில் நீர்த்தாரை. அவன் அழுது அதுவரை நான் பார்த்ததில்லை. நான் அருகில் இருப்பதையே அவன் மறந்து விட்டிருந்தான். நிழல் அடர்ந்த ஆற்றின் மறுதிசை இருண்டு நீண்டது. அதற்குமேல் நிற்கப் பயந்து அவனை விட்டு ஓடி வந்தேன். மாடசாமி கோவிலைத் தாண்டும் வரை நடையில் வேகம். ராமசாமி நாயக்கரின் தென்னந்தோப்பிற்குள் எதிரே குளிக்க வந்த ஆட்களைப் பார்த்ததும் நிதானம்.
சொசைட்டி வாசல் மஞ்சனத்தி மர நிழலில் அவனுக்காக காத்திருந்தேன். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்தான். என்னைப் பார்த்தும் ஏதும் பேசவில்லை. துாண்டிலை என்னிடம் கொடுத்துவிட்டு தலை கவிழ்ந்தபடி முன்னே சென்றான். அவன் முகம் அத்தனை தீவிரம் கொண்டிருந்தது. மந்தை இசக்கியம்மன் கோவிலுக்கு பேயோட்ட அழைத்து வரப்படுபவர்களிடம் இருக்கும் முகக்களை. பித்தேறி வெறிக்கும் கண்கள். முன்னே நிற்பவர்களைப் பொருட்படுத்தாத விட்டேத்தியான பார்வை. அவனுக்குப் பேய் பிடித்திருக்கலாம் என்று பயந்தேன். வெளியே யாரிடமும் சொல்லவில்லை.
இருபத்தி நான்கு ஆண்டுகள் கழித்து குமரேசன் என்னைப் பார்க்க வீடு தேடி வந்தான். அவன் நின்ற கோலமும் முழித்த விதமும் வேறு ஒருவனை அழைத்து வந்திருந்தது. அவனை வீட்டிற்குள் அழைக்க விரும்பாமல் தெருவில் நிற்க வைத்து பேசி அனுப்பினேன். என்னைப் பார்த்ததும் “என்ன சங்கரு..ஆளே அடையாளம் தெரியாம ஆயிட்ட” என்று சிரித்தான். ஒருமையில் அவன் என்னை அழைத்ததில் ஒருகணம் தடுமாறினேன். தெருவில் யாராவது கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டுக் கொண்டேன். குடித்திருந்தான். அருகில் அதன் பழவாசனை. அப்பவும் அதே குச்சிக் கால்கள், குச்சிக் கைகள். சிமிட்டி படிந்த பொன்னிற முடிகள். முகம்தான் நிரந்தரக் குடியால் ஊத்தம் கண்டிருந்தது.
வாரிசு சான்று வாங்குவது குறித்து அவனுக்கு விளக்கிச்சொல்லி அனுப்பி வைத்தேன். புளியங்குடிக்கு குடிமாறிய பிறகு குமரேசனையும் ஆனந்தாயியையும் சந்திப்பதை எப்போதோ கைவிட்டு இருந்தோம். அம்மா தன் உயிர் தோழியான ஆனந்தாயியைத் தவிர்த்தாள். வீட்டிற்குள் இருந்தபடியே “பீடிக்கடைக்கு போயிருக்கா” என்று என்னைச் சொல்லச் சொல்லி வீடு தேடி வந்த ஆனந்தாயியை வாசலோடு ஏமாற்றி அனுப்பினாள். அந்த நிகழ்வுக்குப் பிறகு ஆனந்தாயி எங்கள் வீட்டிற்கு வரவே இல்லை.
என் தங்கைதான் சொன்னாள். குமரேசனின் ஒரே வாரிசான இருபத்திரண்டு வயது மகனை சாதி மீறி காதல் திருமணம் செய்துகொண்டான் என்பதற்காக காவு வாங்கி விட்டார்கள் என்று. அவளே தான் கூடுதலாக ஒன்றையும் சொன்னாள். குமரேசனைக் காதலித்த பெண்ணிற்கு கர்ப்பம் உறுதியாகி, கலைக்க முடியாத சிசுவென திரண்டிருந்ததால், பெண்ணின் பெற்றோர் நடு வீட்டிற்குள் அப்பெண்ணை குழி தோண்டி புதைத்து விட்டார்கள் என்றும்.