மரச்சாமான் அறை -ஸக்கி

ஜாக்பராவின் கடற்கரைக்கு குழந்தைகள் எல்லாரும் இன்று அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஒரு திடீர்ப் பரிசாக. அந்தக் குழுவில் நிக்கோலஸ் இல்லை. நிக்கோலஸ் இன்று காலை அவனுடைய ரொட்டியையும் பாலையும் சாப்பிட மறுத்துவிட்டான். பால் கிண்ணத்தில் தவளை இருக்கிறது என்பது அவன் சொன்ன அற்ப காரணம். அவனைவிட பெரியவர்கள், அறிவுள்ளவர்கள், சிறந்தவர்கள் எல்லாம் அவனது முறையீடு எவ்வளவு அபத்தமானது என்று சொன்னாலும் அவன் கேட்பதாயில்லை. அவன் இருப்பதாகக் கூறிய தவளையின் நிறத்தையும் அதன் உடலில் உள்ள கோடுகளையும் புள்ளிகளையும் பற்றி விலாவாரியாக வர்ணிக்க ஆரம்பித்தான். உண்மையிலேயே பாலுக்குள் தவளை இருந்துதான் கூத்து. தவளையைப் பிடித்துப் போட்டவன் என்கிறபடியால் அவனுக்கு தவளைவர்ணனைக்கும் உரிமை இருந்தது. தோட்டத்தில் இருந்த தவளையைப் பிடித்துப் பாலுக்குள் போட்டது பெரிய பாவம் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அவனது மனதில் மிகத் தெளிவாக இருந்தது எப்படி பெரியவர்களும் அறிவுள்ளவர்களும் சிறந்தவர்களும் வழக்கம்போல் எல்லாம் தெரிந்த நம்பிக்கையுடன் அவர்களுக்கு ஒன்றும் தெரியாததையும் மிகத் தவறானதையும் பேசுகிறார்கள் என்பது தான்.

“என்னோட பால் கிண்ணத்துல தவள இல்லன்னு நீங்க சொல்றீங்க. ஆனா தவள இருந்துச்சே” நிக்கோலஸ் சொன்னான். தனக்கு உவந்த களத்தில் இருந்து வெளியேற விரும்பாத தேர்ந்த தந்திரனைப் போல.

அங்காளிகளும் பங்காளிகளும் ஆன சிறுவர்கள் தத்தம் உடன்பிறந்தார்களுடன் நிக்கோலஸின் ஆர்வமே ஊட்டாத தம்பியையும் இழுத்துக்கொண்டு இன்று மதியம் ஜாக்பரோவின் கடற்கரைக்குக் கிளம்ப இருந்தார்கள். நிக்கோலஸ் மட்டும் வீட்டில் கிடக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவனுடைய அத்தை தன்னுடைய வளமான கற்பனை திறத்தால் நிக்கோலசிற்கும் அவள் அத்தைதான் என்று அறிவித்துக் கொண்டாள். இன்றைய திடீர் கடற்கரை உலாவைத் திட்டமிட்டதும் அவளே. உணவு மேஜையில் நிக்கோலஸின் வெட்கக்கேடான செயலினால் அவன் இழக்க நேர்ந்த மகிழ்ச்சியான தருணத்தை அவனுக்கு உணர்த்துவதும் ஒரு நோக்கம். அத்தையாருக்கு இது தான் வழக்கம். எந்தக் குழந்தையாவது மாண்பு குறைவானவற்றைச் செய்தால், தண்டிப்பதற்காக அவர்களை கொண்டாட்டத்தில் இருந்து இறக்கிவிட்டுவிடுவாள். எல்லாரும் கூட்டுத் தவறிழைத்தால், பக்கத்தூருக்கு வந்திருக்கும் சர்க்கஸின் புகழ் பாடப்படும். அந்த சர்க்கஸின் யானைகளின் எண்ணிக்கையை வியந்தபின், இன்று எல்லாரும் அங்கு போவதாக இருந்ததாகவும் வருத்தத்துடன் சொல்லப்படும்.

கிளம்பும் தருணம் வந்தபோது, நிக்கோலஸிடமிருந்து தாராளமான கண்ணீர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் அழுததோ அந்தக் கூட்டத்தில் ஒரு சிறுமி. அதுவும் கூட்டுவண்டியில் ஏறுகிறேன் பேர்வழி என கால்முட்டியை உராய்ந்து கொண்டதன் வலியினால்.

இயல்பாக பொங்கியிருக்க வேண்டிய மகிழ்ச்சி எதுவும் இல்லாமல், அந்தக் கூட்டம் கிளம்புவதைப் பார்த்த நிக்கோலஸ் “அவள் எப்படி அலறுறாள்” என்றான் உற்சாகத்துடன்.

“அவளுக்கு வேகமா சரியாயிடும்” அத்தையார் அறிவித்தார். “மணல்ல ஓடி விளையாடுறதுக்கு இது அற்புதமான பருவகாலம். எல்லாரும் ரெம்ப சந்தோசமா இருக்கப்போறங்க.”

“பாபி ஒன்னும் அவ்வளோ சந்தோசமா இருக்கப்போறதில்ல. ஓடியாடி விளையாடவும் மாட்டான்” கோணல் சிரிப்புடன் நிக்கோலஸ் தொடர்ந்தான் “அவனோட பூட்ஸ் ரெம்ப இறுக்கமா இருக்கு. கால் வலி வர்ற அளவுக்கு இறுக்கமா”

வாள் சுழற்றும் லாவகத்துடன் “அப்படின்னா அவன் எனக்கு சொல்லிருப்பானே” என்றார் அத்தையார்.

“அவன் சொன்னானே. அதுவும் ரெண்டு வாட்டி. நாங்க ரெம்ப முக்கியமான விஷயம் சொல்லும்போது நீங்க எப்பவுமே கவனிக்குறதுல்ல”

பேச்சு மாறியது. “நீ நெல்லிக்காய் தோட்டதுக்குள்ள போகக்கூடாது”

“ஏன்?”

பெருமையுடன் அத்தையார் சொன்னார், “ஏன்னா நீ செய்றது எதுவும் சரியில்ல. இது உனக்கு தண்டனைக்காலம்”

அத்தையார் சொன்னது அவனுக்குச் சரியாகப்படவில்லை. அவனால் ஒரே சமயத்தில் தண்டனைக் காலத்திலும் நெல்லிக்காய்த் தோட்டத்திலும் இருக்கமுடியும் என நினைத்தான். அவன் முகத்தில் ஓரளவுக்குப் பிடிவாதம் இருந்தது அத்தையாருக்கத் தெளிவாகத் தெரிந்தது. தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். “நான் சொன்னதால மட்டுமே இவன் நெல்லிக்காய்த் தோட்டத்துக்குப் போகப் போறான்”

நெல்லிக்காய்த் தோட்டத்திற்குள் நுழைய இரண்டு வழிகள். நிக்கோலஸைப் போன்ற சிறிய உருவம் எவ்வித சிரமமும் இல்லாமல் உள்ளே நழுவிவிட முடியும். பழப் புதர்களும் கொடிகளும் மண்டிய தோட்டதுக்குள் நுழைந்தவர்கள் பார்வையில் இருந்து மறைந்துவிடுவார்கள். செய்வதற்கு ஆயிரம் சோலிகள் இருந்தாலும் அத்தையார் இரண்டு மணி நேரத்தை பூச்செடிகளின் பராமரிப்புக்காக செலவிட்டார். அவ்விடத்திலிருந்து தோட்டத்தின் இரண்டு வாயில்களையும் நன்கு பார்க்க முடியும். அத்தையாரின் முன்யோசனைகளுக்கும் கவனக்குவிப்புக்கும் எல்லையே இல்லை.

மறைக்கப்பட்ட நோக்கத்தை முகம் முழுவதும் சுமந்துகொண்டு நிக்கோலஸ் உலவினான். தோட்ட வாயில்களின் பக்கம் செல்ல முடிந்தாலும், அத்தையாரின் கண்களைத்தாண்டி தோட்டத்திற்குள் கால் வைக்க முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நிக்கோலஸிற்கு நெல்லிக்காய்த் தோட்டம் அவ்வளவு பிடித்த இடம் அன்று. இந்த மதியம் தோட்டத்திற்குள் போய் விளையாட அவனுக்கு விருப்பமும் இல்லை. ஆனால் அத்தையார் வீட்டிற்கு வெளியே இருப்பது அவனுக்கு மிகவும் வசதியாக இருந்தது. அத்தையாரை அங்கேயே நிறுத்துவதற்காக மட்டுமே அப்பக்கம் கொஞ்சம் உலவினான். அத்தையாரின் மனதில் சந்தேகத்தையும் காவல்காரத்தனத்தையும் நன்றாக நிலை நிறுத்திய பின்பு மெல்ல வீட்டிற்குள் நடந்த நிக்கோலஸ், நீண்ட காலமாக மனதுக்குள் நினைத்திருந்த செயல் ஒன்றை நிறைவேற்ற ஆரம்பித்தான்.

புத்தக அறையில் ஒரு நாற்காலியில் ஏறி நின்றால், அலமாரியின் மேல் தட்டில் உள்ள கனத்த சாவியை எடுக்க முடியும். அதன் தோற்றத்தின் முக்கியத்துவத்தைப் போலவே சாவியும் ஒரு முக்கிய இடத்திற்கானதுதான். மரச்சாமான் அறையின் மர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்த சாவியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அத்தையாருக்கும் அத்தையைப் போல சிறப்புரிமை கொண்டவர்களுக்குமே அந்தக் கதவு திறந்தது. சாவியை பூட்டில் நுழைத்துத் திருகுவதற்கு நிக்கோலஸிற்கு முன் அனுபவம் எதுவும் இருந்தது இல்லை. ஆனால் நிக்கோலஸ் பள்ளியில் இருந்த ஒரு பூட்டைத் திறந்தும் பூட்டியும் பழகியிருந்தான். என்றாவது கிடைக்கும் ஒரு வாய்ப்பை வைத்து அதிர்ஷ்டத்திடம் தாயம் விளையாட அவனுக்கு விருப்பமில்லை. பூட்டுக்குள் சாவி அவ்வளவு எளிதாகச் சுழலவில்லை. இருந்தாலும் ஒரு சுற்று முடிந்து கதவு திறந்தது. புதிய வெளி ஒன்று விரிந்தது. நெல்லிக்காய்த் தோட்டம் அலுப்பூட்டக் கூடியதாகவும் அற்ப பொருளின்பமாகவும் தோன்றியது.

குழந்தைகளின் கண்களில் இருந்து கவனமாக மறைக்கப்பட்டது அந்த அறை. அதைப்பற்றிய எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்ததில்லை. அந்த மரச்சாமான் அறைக்கு நிக்கோலஸின் கற்பனையில் ஓர் உருவமிருந்தது. அசல் அறை அந்தக் கற்பனைக்கு ஓரளவுக்கு அருகில் இருந்தது. வெளிச்சம் மங்கியிருந்த அந்த அறைக்கு விலக்கப்பட்ட நெல்லிக்காய்த் தோட்டத்தை நோக்கித் திறந்திருந்த ஒரு ஜன்னல் மட்டுமே இருந்தது. அறை எப்படி இருந்தாலும் முழுவதும் கற்பனைக்கும் எட்டாத அரும்பொருட்களால் நிரம்பியிருந்தது. ஒரு பொருளைப் பயன்படுத்தினால் அது சீரழியும் என்றும் தூசியும் ஈரமும் நிறைந்த அறையில் மட்டுமே அப்பொருள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் நம்பும் மக்களுள் அத்தையாரும் ஒருவர். வீட்டின் பிற இடங்களில் எல்லாம் வெறுமையும் உற்சாகமின்மையும் நிறைந்திருக்கையில் அந்த அறை மட்டும் கண்களுக்கு விருந்தாக இருந்தது.

கணப்பை மறைப்பதற்கான திரை பிற அனைத்தையும்விட கருத்தைக் கவருமாறு இருந்தது. தூசிப்படலம் ஒன்று மூடியிருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த சீலை நிக்கோலஸிற்கு உயிர்ப்பான கதை ஒன்றை சொல்லியது. அருகே அமர்ந்து நிக்கோலஸ் அதைக் கூர்ந்து பார்த்தான். பழங்காலத்தின் வேட்டைக்கான உடை அணிந்த வீரன் ஒருவன் எய்த அம்பு அப்போதுதான் மான் ஒன்றைத் துளைத்திருந்தது. அது ஒன்றும் அவ்வளவு கடினமான இலக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை. மான் மிக அருகே தான் இருந்தது. செழித்துக் கிடந்த மரங்களும் புதர்களும் அவன் எளிதாகப் பதுங்கி வரலாம் என்று காட்டியது. மானை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த இரண்டு புள்ளி நாய்களும் அம்பு மானைத் தைக்கும் வரை அமைதியோடு காத்திருக்கப் பழக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும். அந்தக் காட்சி எளிமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. ஆனால் அந்த வேட்டைக்காரன் நிக்கோலஸ் கண்ட காட்சியைப் பார்த்தானா? மரங்களுக்கு ஊடாக நான்கு ஓநாய்கள் வந்து கொண்டிருந்தன. இன்னும் அதிக ஓநாய்கள் மறைந்திருக்கவும் நிச்சயம் வாய்ப்புண்டு. ஓநாய்கள் ஒருவேளை தாக்க ஆரம்பித்தால்? வேட்டைக்காரனாலும் இரண்டு நாய்களாலும் இந்த நான்கு ஓநாய்களையாவது சமாளிக்க முடியுமா? அவனது அம்புக்கூடையில் இரண்டு அம்புகள் மட்டுமே இருக்கிறது வேறு. அவனுடைய வில்லின் ஆற்றல் பற்றித் தெரிவதெல்லாம், மிகக்குறைந்த தூரத்தில் இருந்த மானை அவன் அம்பு தாக்கியது என்பதே. ஒரு அம்போ இரண்டு அம்புகளுமோ தவறவும் வாய்ப்புள்ளது. பல்வேறு சாத்தியங்களை நிக்கோலஸ் யோசித்தவாறு அவனுக்குக் கிடைத்த அறிய நேரத்தைச் செலவிட்டான். மரங்களுக்குப் பின்னால் இன்னும் பல ஓநாய்கள் மறைந்திருக்கின்றன என்றும் அவனும் நாய்களும் தப்புவது சிரமம் என்றும் அவனுக்குப்பட்டது.

நிக்கோலஸிற்கு மகிழ்ச்சியூட்டி, அவனது கவனத்தைக் கவரும் இன்னும்பல பொருட்கள் அங்கிருந்தன: பாம்புகளைப் போல விசித்திரமாக வளைந்திருந்த மெழுகுவர்த்திகள், வாத்தைப் போலிருந்த தேநீர்க் குடுவை ― வாத்தின் வாய் வழியாக தேநீர் வரும். பள்ளியில் உள்ள குடுவை எப்படி அலுப்பூட்டுவதாக உள்ளது! சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட பெட்டிக்குள் நறுமணம் வீசும் பருத்திப்பஞ்சு நிறைந்திருந்தது. பருத்திப் பஞ்சிற்கு நடுவில் வெண்கலச் சிலைகள் ― திமில் உள்ள காளைகள், மயில்கள், குள்ளர்கள். பார்க்கவும் விளையாடவும் மகிழ்ச்சியூட்டுபவை. இருப்பதிலேயே மிகச் சாதாரணமாகத் தோன்றியது, வெறும் கருப்பு அட்டை கொண்ட பெரிய சதுரப் புத்தகம் ஒன்றுதான். நிக்கோலஸ் அதை சும்மா திறந்து பார்த்தான். அட! உள்ளே எல்லாம் பாவைகளின் வண்ணப்படங்கள். பறவைகள்! தோட்டத்திலும் தெருவில் நடக்கையிலும் நிக்கோலஸ் சில பறவைகளைப் பார்த்ததுண்டு. அவற்றில் மிகப்பெரியதே புறாவோ குண்டுக் கரிச்சானோ தான். இங்கோ கொக்குகள், கானமயில்கள், பருந்துகள், இருவாச்சிகள், புலிக்குருகுகள், வான்கோழிகள், பொற்போத்துகள்… கனவிலும் கண்டிராத பறவைகளின் புகைப்படங்கள். சீன வாத்து ஒன்றின் வண்ணத் தீற்றலை வியந்து அதற்கு ஒரு வாழ்க்கை வரலாற்றை அளித்துக் கொண்டிருக்கையில், நெல்லிக்காய்த் தோட்டத்திலிருந்து அத்தையார் காதைத் துளைக்கும் கூரிய சத்தத்தில் இவன் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டது. நிறைய நேரமாக நிக்கோலஸ் கண்ணில் படாமல் இருப்பதால், இளஞ்சிவப்பு மலர்கள் பூத்துக் குலுங்கிய புதரினூடாகத் தோட்டத்திற்குள் போயிருப்பான் என்பது அத்தையாரின் வலுவான சந்தேகம். பலமாகவும் அதே சமயம் நம்பிக்கை இல்லாமலும் கூனைப்பூவும், ராஸ்பெரியும் மண்டிய புதருக்குள் நிக்கோலஸைத் தேடிக் கொண்டிருந்தாள்.

“நிக்கோலஸ், நிக்கோலஸ்!” அத்தையாரின் கூப்பாடு கேட்டது. “நீ அங்க ஒளிஞ்சிருக்குறதுல பயன் இல்ல. உடனே வெளிய வா! உன்ன என்னால பார்க்க முடியுது”

கடந்த இருபது ஆண்டுகளில் மரச்சாமான் அறையில் ஒருவர் சிரிப்பது இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.

கோபத்துடன் கூவப்பட்டுக் கொண்டிருந்த நிக்கோலஸின் பெயர் நின்று, அலறலும் உதவிகோரலாகவும் மாறியது. நிக்கோலஸ் அந்த புத்தகத்தை மூடினான். தூசித்தடத்தின் இடைவெளியில் கவனமாக வைத்துவிட்டு, அருகில் செய்தித்தாள் கட்டிலிருந்த தூசியை புத்கத்தின்மீது ஊதி விட்டான். மெல்ல அரவமில்லாது அறையைவிட்டு வெளியே வந்து, கதவை சாற்றிப் பூட்டி, சாவியை எடுத்த இடத்திலேயே வைத்தான். தோட்ட முகப்புக்கு வந்தபோதும் அத்தையாரின் குரல் அவனை அழைத்தவாறு இருந்தது.

“யார் என்ன கூப்பிடுறா?”

“நாந்தான்!” சுவருக்கு அப்பாலிருந்து வந்த குரல் சொல்லியது. “நான் கூப்பிட்டது உன் காதுல விழலயா? நான் உன்ன நெல்லிக்காத் தோட்டத்துல தேடிட்டு இருக்கும்போது மழக்குட்டைல விழுந்துட்டேன். நல்லவேளைக்கு இதுல தண்ணி இல்ல. கரையெல்லாம் வழுக்குறதால என்னால எற முடியல. செர்ரி மரத்துக்கடில இருக்குற சின்ன ஏணிய எடுத்துட்டு”

“நான் நெல்லிக்காத் தோட்டத்துல நுழையக் கூடாது” என நிக்கோலஸ் இடைமறித்தான்.

“நாந்தானே அப்பிடி சொன்னேன். இப்போ நானே வரச்சொல்றேன்” மழைக்குட்டையிலிருந்து பொறுமையிலாத குரல் வந்தது.

“உன்னோட குரல் அத்தை மாதிரி இல்லையே!” என நிக்கோலஸ் மறுத்தான். “நீ ஒருவேள சாத்தானா இருக்கலாம். சாத்தானோட குரலை கேட்டு சபலப்பட்டு தப்பு செய்றேன்னு எப்பவுமே அத்தை சொல்லுவாங்க. இந்தவாட்டி சபலப்பட மாட்டேன்.”

மழைக்குட்டையின் கைதி சொன்னார் “அறிவில்லாம பேசாத! போய் ஏணிய எடுத்துட்டு வா”

“சாயந்திரம் டீக்கு ஸ்ட்ராபெர்ரி ஜாம் கிடைக்குமா?” அப்பாவியாகக் கேட்டான்.

மனதுக்குள் நிக்கோலஸிற்கு மட்டும் கொடுக்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டு அத்தையார் “கண்டிப்பா கிடைக்கும்” என்றார் சத்தமாக.

“எனக்கு இப்போ தெரிஞ்சுபோச்சு நீ அத்தையில்ல சாத்தான் தான்னு” நிக்கோலஸ் உற்சாகமாக சொன்னான். “நேத்து அத்தையிட்ட ஸ்ட்ராபெர்ரி ஜாம் வேணும்னு கேட்டப்போ அத்தை வீட்டுல ஸ்ட்ராபெர்ரி ஜாமே இல்லன்னு சொன்னாங்க. எனக்குத் தெரியும் சமயல்கட்டு அலமாரியில நாலு பாட்டில் ஜாம் இருக்குன்னு. ஏன்னா நான் அலமாரிய தொறந்து பாத்தேன். உனக்கும் அது இருக்குன்னு தெரியும். ஆனா அத்தைக்கு தெரியாதே! அத்தை வீட்டுல ஜாம் இல்லன்னு சொன்னாங்களே. ஓ சாத்தானே உன்ன நீயே காட்டிக் கொடுத்துட்டே”

சாத்தானிடம் பேசுவதுபோல அத்தையாரிடம் பேசுவதில் உள்ள சொகுசு நிக்கோலஸிற்குத் தெரியும். கவனித்தவரை அதை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிந்திருந்தது. எனவே அரவத்தோடு கிளம்பிச் சென்றான். கடைசியில் சமயல்காரி வந்து அத்தையாரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது.

அச்சமூட்டும் அமைதியுடன் அன்றைய தேநீர் நேரம் கழிந்தது. ஜாக்பராவில் அன்று ஏறு ஓதம். எனவே கரையில் விளையாட மணலே இல்லை. அவசரமாக ஏற்பாடு செய்யாவிட்டால் அத்தையாருக்கு ஒருவேளை ஞாபகத்தில் வந்திருந்திருக்கலாம். பாபியின் இறுக்கமான பூட்ஸ் அவனுடைய கோபத்தை தூண்டிக் கொண்டே இருந்தது. மொத்தத்தில் குழந்தைகள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. முப்பத்தைந்து நிமிடங்கள் தேவையில்லாமல் மழைக்குட்டையில் சிறைப்பட்டிருந்தவரின் அவமானகரமான அமைதியுடன் அத்தையார் உறைந்திருந்தார். நிக்கோலஸும் அமைதியாக இருந்தான். அவனுக்கு அமைதியில் சிந்திக்க நிறைய இருந்தது. ஒருவேளை, அம்புபட்ட மானை ஓநாய்கள் முதலில் சாப்பிட வேட்டைக்காரனும் நாய்களும் தப்பியிருப்பார்களா? அவன் நினைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *