செல்வேந்திரனை சில முறை பார்த்துள்ளேன். எதுவும் பேசியதில்லை. அவர் குறித்து என் மனப்பதிவு என்பது தீவிரமான உலகியலாளர் என்பது தான். ஆனால் அவர் சியமந்தகத்தில் ஜெ குறித்து எழுதிய கட்டுரை அவர் மேல் ப்ரியத்தை உண்டாக்கியது. ஜெ-வை இலக்கியவாதியாக மதிப்பிடாமல் ஒரு சகமனிதனாக அவரைப் பற்றிய மதிப்பை உணச்சிகரமாக வெளிப்படுத்தியது செல்வேந்திரனின் கட்டுரை.
வாசிப்பது எப்படி? புத்தகத்தின வடிவமைப்பு நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கிறது. அதன் அட்டை படம் மற்றும் அதிலிருக்கும் நிறங்கள் போலவே புத்துணர்ச்சி அளிக்ககூடிய வாசிப்பனுபவத்தை தந்தது. ஒரு சமூகத்தில் உள்ள மக்களின் அறிவை, சிந்தனையை, அழகியலை வளப்படுத்தி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எத்தனிப்பு தெரிகிறது. அதை அவரே ஒப்புக்கொள்கிறார், என் குழந்தைகளுக்கு ஒரு மேலான சமூகத்தை அளிக்கவே இதை செய்கிறேன் என்கிறார்.
முன்னுரையில் வரும் முதல் வரி “இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல” என்று ஆரம்பிக்கும் போதே எந்த மாதிரியான மனநிலை உள்ள மனிதர்களும் இதற்குள் இயல்பாக உள்ளே சென்றுவிடுவார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் இங்கு 90% இளைஞர்கள் பாட புத்தகம் வாசித்து முதல் மதிப்பெண் எடுப்பதனாலேயே தாங்கள் பெரிய அறிவாளி என்ற ஆணவ சிடுக்குடன் தான் அலைகிறார்கள். அந்த சிடுக்கை சீண்டாமல், லகுவாக அவர்களையும் உள்ளே கொண்டு செல்லும் வார்த்தைகள் இவை. அதே போல இந்த புத்தகம் பாட புத்தகத்தை தாண்டிய பல தரப்பட்ட வாசிப்பை ஒருவனுக்கு தூண்ட வேண்டும் என்னும் நோக்கில் கவணமாக எழுதப்பட்டுள்ளது என்பதையும் உணர முடிகிறது. தனித்தனி தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதனடியில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சுருக்கமாகவும், நேரடியாகவும், இளைஞர்களுக்குண்டான மொழியில் கட்டுரைகளை அமைத்துள்ள விதம் இதுவரை எதுவுமே வாசிக்காதவர்கள் கூட எளிமையாக இந்த நூலை வாசித்துவிட முடியும்.
வாசிக்காத சமூகத்தின் தர வீழ்ச்சி அவர்களை சுற்றியுள்ள அனைத்திலும் எப்படி பிரதிபலித்து தனிமனிதன், குடும்பம், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், நாட்டின் வளர்ச்சி என அனைத்திலும் எப்படி சரிவை, ஒழுங்கின்மையை உண்டாக்கி ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வையே சுவாரஸ்யமற்றதாக ஆக்கிவிடும் என்பதை தெளிவாக விளக்குகிறது இப்புத்தகம். நாம் அரசியல், ஊடகம், விளம்பரம், டிவைசஸ் மூலம் கட்டப்படும் தழைகளிலிருந்து வாசிப்பின் மூலமே சுயமாக சிந்தித்து வெளிவர முடியும் என்பதையும் தெளிவாக நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
“இலக்கியம் என்பது ஒரு லட்சியவாத செயல்பாடு என்பார்கள்” இந்த புத்தகத்தில் முழுக்க இலக்கிய வாசிப்பை பற்றி மட்டும் சொல்லவில்லை மாறாக அன்றாடத்தில் சாதாரணமாக நியூஸ் போப்பர் வாசிப்பதால் ஏற்படும் பல்வேறு அணுகூலங்களை பற்றியும் எடுத்துகாட்டுகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது. நமது அன்றாட வாழ்வில் நம்மை சூழ்ந்து நடந்து கொண்டிருக்கும் விசயங்களை செய்தித்தாள்கள் வழியே தான் தெரிந்து கொள்ள முடியும் அதனை தெரிந்து கொள்வதன் மூலம் நம் அன்றாட வாழ்வில், உலகியலில், பொருளாதாரத்தில் நாம் ஈட்டிக் கொள்ளகூடிய வெற்றிகளை பட்டியலிட்டிருக்கும் விதம் சிறப்பாக இருந்தது.
இதனடிப்படையில் வாசிப்பு என்பதை வெறும் தீவிர இலக்கியம் என்பதற்குள் மட்டும் சுறுக்காமல் ஒட்டுமொத்தமாகவே அனைத்து தர வாசிப்பின் பயன்பாடுகளை கூறியிருப்பதால் இந்த புத்தகத்தை ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் (குறிப்பாக இளைஞர்கள்) வாசித்து பயன்பெற முடியும். அதனால் ஏற்படும் பயன்கள் ஒரு தனிமனிதனுக்கானது மட்டுமல்ல ஒரு வளமான, ஆரோக்யமான சமூகத்திற்கானதும் தான். அந்த வகையில் இந்த புத்தகத்தை ஒரு சிறந்த பரிசுப் பொருளாக அனைவருக்கும் வாங்கி அளிக்கலாம்.