மரணமின்மையை கனவு காணாத மனிதர் எவருமில்லை, விதி நம் முகத்திலறையும் வரை எல்லோரும் வாழ்வின் ஏதோவொரு கணத்திலாயினும் சாஸ்வத நிலையை எண்ணி ஏங்கியிருப்போம்.ஆயுளை கூட்டும் ஆராய்ச்சிகள் இன்றும் நடந்தபடியே தான் இருக்கிறது. யமனும் மனிதனைப் பார்த்து சிரித்தபடியேதான் இருக்கிறான், இருவரும் தமது இயல்பை விட்டுக் கொடுப்பதாயில்லை. மரணத்தின் நிழலான நோயை ஆயுர்வேதம் எவ்வாறு பார்க்கிறது என்பதை விளக்கும் நூலாகவோ, ஆயுர்வேதத்தின் துவக்கத்தையும் தற்போதைய நிலையினையும் விவரிக்கும் நூலாகவோ சுனில் கிருஷ்ணனின் இப்புத்தகத்தை சுருக்கிவிட இயலாது.
ஆனால் வரலாற்றில், பண்பாட்டில்,இந்திய பழக்க வழக்கங்களில் ஆயுர்வேதம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதன் ஒரு சுருக்கமான வரைபடத்தை இந்நூல் அளிக்கிறது எனலாம். ஆங்கில மருத்துவம் நடைமுறை சார்ந்த நுண்ணுணர்வைக் கொண்டு மனிதனுக்கு சிகிச்சையளிக்கிறது. இது மிகக் குறுகிய பார்வை என்பதை ஆயுர்வேதத்தை குறித்து வாசிக்கும் பொழுது அறிய முடிகிறது.
ஆயுர்வேதம் மனிதனின் முக்குற்றங்களின் (வாதம், பித்தம், கபம்) விகிதம் தவறும்பொழுது நோய் உண்டாவதாக விவரிக்கிறது. இந்த முக்குற்றங்களின் சமநிலை குலைவதற்கான காரணத்தையும் ஆயுர்வேதம் ஆராய்கிறது. மனிதனின் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், செய்யும் தொழிலின் இயல்பு என வினவிக் கொண்டே இக்கேள்வி அறப் பிறழ்வு வரை செல்கிறது.
அறப்பிறழ்வே நோய்களுக்கு காரணம், தீய முன்வினைகளே அறப்பிறழ்விற்கு காரணம், தீய முன் வினைகளுக்கு காரணம் விளைவுகளை அறிந்தும் அதை பிரக்ஞை பூர்வமாக மீறுதல் என ஒரு சங்கிலித் தொடரை சென்றடைகிறது.
அறம் என்பது இங்கு பேரொழுங்கைக் குறிக்கிறது. இபேரொழுங்கில் ஏற்படும் பிறழ்வுகளே மனித உடலை பாதிக்கிறது. சாதாரணமாக நாம் “பாவம் செய்தால் நோய் வரும்” என்று சொல்லும் வார்த்தைகளுக்கு பின் உள்ள பேருண்மை பிரமிக்கச் செய்கிறது. உடலுக்கு மூலிகைகளைக் கொண்டும் மனதிற்கு தவம், ஜெபம் மற்றும் நோன்புகளைக் கொண்டும் அறத்தை பேணலாம் என தொல்லிய ஆயுர்வேத நூலான சரகசம்ஹிதை விவரிக்கிறது. இன்றும் நவீன மருத்துவ முறைகளை உள்வாங்கிக்கொண்டு ஆயுர்வேதமானது நிலைத்து நீடிக்கிறது. இதற்கு காரணம் மக்கள் இன்றும் தங்கள் வியாதிகளுக்கு கஷாயத்தையும் சுக்கு மிளகுப்பாலையும் உபயோகித்து பயன் பாட்டுத் தளத்திலேயே ஆயுர்வேதத்தை வைத்திருப்பதுதான்.
கேரளத்தில் ஆயுர்வேதம் குறித்தான பரவலான அறிவுத்தொடர்ச்சி உள்ளதால் இன்றும் வெகுஜன ஆதரவு அங்கு இருக்கிறது. இன்றும் மரபான ஆயுர்வேதம் இந்தியர்களால் கைவிடப்படவில்லை. அவர்களே அந்தச் சரடின் இன்றைய கண்ணிகளாக விளங்குகிறார்கள். 2015ஆம் ஆண்டில் மரபு மருத்துவத்திற்கான நோபல் பரிசு சீனாவிற்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டும் சுனில் கிருஷ்ணன், நவீன மருத்துவத்தின் கூறுகளை உள்வாங்கி விரிவடைந்துள்ள ஆயுர்வேதத்தை நகல் மருத்துவம் என நகையாடப்படும் நிலையையும் விவரிக்கிறார்.
மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலில், முதல் பகுதி ஆயுர்வேதத்தை அறிமுகப்படுத்துகிறது; காலனிய காலத்தில் ஆயுர்வேதமானது எவ்வாறு படிப்படியாக அதன் வேர்களிலிருந்து பிடுங்கியெறியப்பட்டது என்றும் பின்னர் ஆயுர்வேதம் நவீன மருத்துவத்தின் கூறுகளை தன்னுள்ளிழுத்துக் கொண்டு எவ்வாறு மீண்டும் தன்னை மீட்டுக்கொண்டு நீடிக்கிறது என்பதையும் வேத காலத்தில் ஆயுர்வேதம் எவ்வாறு தோன்றியது என்று இந்திரன் முதல் சரகர் வரையிலான ஒரு தொடர்ச்சி ஏற்பட்டது எவ்வாறு என்பதையும் காந்தியின் ஆயுர்வேத சிந்தனைகளையும் தொகுத்து இந்திய மருத்துவத்தின் அடுக்குகளாக சுனில் கிருஷ்ணன் அளிக்கிறார்.
இரண்டாம் பகுதியில் ஆயுர்வேத உலகில் ”பிஷக் உத்தமன்” என்று அழைக்கப்படும் மருத்துவரான இல.மகாதேவன் (சுனில் கிருஷ்ணனின் குரு) பற்றியும் அவரது நூலான உணவே மருந்து மட்டும் திரிதோஷமெய்ஞானம் எனும் ஆயுர்வேத நூல் பற்றியும் விரிவான பார்வையை அளிக்கிறார். சரகரின் சரகசம்ஹிதையைக் குறித்த கட்டுரையை வாசிக்கும் பொழுது, ஆயுர்வேதத்தை குறித்த அடிப்படை புரிதல்கள் இல்லாததால் சில இடங்களை உள்வாங்குவதற்கு கடினமாகஉணர்ந்தேன். ஆனால் சரகரை குறித்த ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
மூன்றாம் பகுதி தாராசங்கரின் ஆரோக்கிய நிகேதனம் குறித்தும் முத்து நாகுவின் சுளுந்தீ எழுதப்பட்ட விரிவான விமர்சனக் கட்டுரைகளை கொண்டிருக்கிறது. பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியக்குறிப்புகள், போகரின் ரசவாதம், ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகைகள், “மூலம் பவுத்திரம்” டாக்டர் பிஸ்வாஸ் என ஆயுர்வேதத்தை பொய்யாகவும் அரைகுறை உண்மையாகவும் விளக்கம் உரைக்கப்பட்டுவரும் இக்காலத்தில் ஆயுர்வேதத்தை முறையாக மீளறிமுகம் செய்யும் முக்கியமான ஆக்கமாக ஆயுர்வேத மருத்துவர் மற்றும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் இந்நூல் விளங்குகிறது.