”ஒருவன் ஏழையாக இருக்கலாம், புகழ் இல்லாமல் இருக்கலாம், உற்றார் உறவினர் இல்லாமல் இருக்கலாம், படிப்பில்லாமல் இருக்கலாம், ஆனால் நாடு இல்லாமல் இருப்பது கொடுமையானது. அது ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய ஆக மோசமான தண்டனை” நாவலில் அம்பிகாபதி மாஸ்ரர் கூறும் இவ்வரிகள் இந்நூலுக்கு முகவரியாக இருக்கிறது.
ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது ஷோபா சக்தியின் இரண்டு சிறுகதைகளை மட்டுமே. ஆனால் அந்த இரண்டுமே வலுவாக என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது என்று மேற்கொண்டு அவரை வாசிக்காமலேயே நிறுத்திக்கொண்டிருந்தேன். அ.முத்துலிங்கத்தின் ஒட்டகம் கதையை வாசித்தபின்பே மேலும் அவரை வாசித்தறியத் தூண்டியது எனலாம்.
நாவலின் கட்டமைப்பில் என்னை மிகவும் கவர்ந்தது அதன் மொழிதான், கச்சிதமான லகுவான உரையாடல்களை ஆசிரியர் உருவாக்கியிருப்பதே இதன் பலம் . பஷீருடைய கதைகளில் இருக்கும் பகடி அவரது மிக முக்கியமான அடையாளமாக இருப்பது போல, அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்தின் அடையாளம் அது புதிதாக இலக்கியம் வாசிக்கவரும் இளம் வாசகனையும் முதிர்ந்த தீவிர வாசகனையும் ஒருசேர உள்ளிழுக்கும் தன்மையே எனலாம். மேலும் பல நாடுகளில் வேலைபார்த்த அனுபவம் அவருடைய எழுத்திற்கு மிக முக்கியமான பலம். ஏனெனில் தமிழ் வாசகனுக்கு உலகத்தைக் காட்டும் மிக முக்கியமான ஜன்னலாக அமைந்திருப்பதுதான்.
நிஷாந்த் எனும் “பிரதான” கதாபாத்திரத்தின் மூலமாக ஈழ அகதிகளின் புலம்பெயரும் பயணத்தை விவரிக்கிறது இந்நாவல். ”1992ல் கொழும்பில் தொடங்கிய பயணம் ஒரு வெள்ளிக்கிழமை 19ஒக்டோபர் 1997ல் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸின் பயணம் 71 நாள் எடுத்தது. சீனாவுக்கு போக மார்க்கோ போலோவிற்கு 3 வருடம் ஆறுமாதம் பிடித்தது. நிஷாந்த் 5 வருடம் 2 மாதம் 8 நாட்கள் எடுத்துக்கொண்டான்” இந்த இடைப்பட்ட நாட்களில் அகதிகளாக உக்ரெயினிலும் ஜெர்மனியிலும் ஸ்லோவேக்கியாவிலும் அலைந்து கனடாவில் இறுதியாக அடைக்கலம் அடைவது வரையிலான பயணத்தை இந்நாவல் சித்தரிக்கிறது.
நாடு நாடாக அலைவதை விட சரியான பாதையை கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களை ஒரே அறைக்குள் காத்திருக்கும் அனுபவம் மிகக்கொடுமையானது. அதுவும் ஐந்துவயது சிறுமியை பலாத்காரம் செய்தவனுடன் கொள்ளைக்கூட்டத்தை சேர்ந்தவனுடன் கொலைகாரனுடன் இணைந்து காத்திருக்கவேண்டியிருக்கும். மேலும் அம்பிகாபதி மாஸ்ரரைப் போல சந்திரா மாமியைப்போல சில நபர்களுக்கும் இந்த வகையான காத்திருப்பை வாழ்க்கை பரிசாக அளிக்கையில் ஏற்றுக்கொள்வதைத்தவிர நிஷாந்த் மாதிரியான சிறுவனுக்கு வேறு வழியில்லை. ஏஜெண்டுகளின் சரியான திட்டத்திற்காக காலப்பெருவெளியின் முன் நேரம் காலமின்றி தங்களது அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்தபடி காத்திருக்க வேண்டியிருக்கும். அகதிகளாக வருபவர்களைவிட அவர்களுக்கு சரியான பாதையைக் கண்டு பிடித்து நாடு கடத்தும் ஏஜெண்டுகளின் வாழ்க்கை மிகச்சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது. இன்றும் நாடுகளுக்கிடையே இரகசியமாக அகதிகளின் இடம்பெயரல் இவர்கள் மூலமாக சட்டவிரோதமாக, ஆனால் பலசமயங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதைப் பற்றி பல்வேறு புத்தகங்களும் ஆவணப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. விசா இல்லாமல் தங்கியிருக்கும் அகதிகளை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையையே பல நாடுகள் உருவாக்கி வைத்திருப்பதைப் பார்க்கையிலேதான் இதன் விஸ்வரூபம் பிடிபடுகிறது.
நிஷாந்தின் காத்திருப்பில் அவன் சந்திக்கும் சக அகதிகளின் கதைகளே நாவலை நகர்த்திச் செல்கின்றன . ஓவ்வொரு அகதியும் ஒவ்வொரு உலகத்திலிருந்து வருகிறார்கள், சந்திரா மாமி, மாஜிஸ்ட்ரேட் அண்ணை, சபா, புஷ்பனாதன், அம்பிகாபதி மாஸ்ர்ர், லாவண்யா என ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையினால் அகதிகளின் உலகத்தை வரைகிறார்கள். ஒரு வீட்டில் அகதிகள் பலர் தங்கியிருக்கையில் டி.வி.யில் சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது, சமையல் கட்டில் இருவர் சண்டையிட்டு ஒருவரை கொன்றுவிடுகிறார், போலீஸ் வந்து அனைவரையும் கைதுசெய்து விசாரணை முடிந்து கொலைசெய்தவரை விடுத்து பிறரை திருப்பியனுப்புகிறார்கள், வீட்டிற்கு சென்றவுடன் பழையபடி சினிமாவை தொடர்கிறார்கள். மிகச்சாதாரணமாக இச்சம்பவத்திலிருந்து அகதிகளின் வாழ்வை காட்டிவிடுகிறார் எழுத்தாளர்.
நிஷாந்த் அகல்யாவுடனான காதல் கதை, ஜெயகரனின் சாகசங்கள் நிறைந்த பயணக்கதை, சபாவுடைய கோப்பைகள் சூழ்ந்த உலகம், பேயறைந்த முகம் கொண்ட சகுந்தலாவின் கதை என ஒவ்வொரு கதையும் மிகச்சுவாரசியமாக வாசிக்கும்படி உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறுகதையைப்போல உருவாக்கப்பட்டிருப்பதால் வாசகன் எங்கிருந்தும் துவங்கலாம், சிறு சிறு முன்னூட்டங்களும் அதனூடே வந்துவிடுவதால் ஒவ்வொரு பகுதியும் ஒரு தனிக்கதைக்கான அமைப்பை பெற்றிருக்கிறது. அ. முத்துலிங்கத்தின் பிற அபுனைவுகளும் இதே வகையான சிறுகதைத்தோற்றத்தைக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. இதுவே அவருடைய எழுத்தில் சுவாரசியமுண்டாக்குகிறது. கடவுள் தொடங்கிய இடம் புலம்பெயர் மக்களின் அவல வாழ்க்கையை, அவலத்திலும் நன்மையை இன்பத்தை சுவாரசியத்தைக் கண்டுகொள்ளவியலும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.