சமூகத்தின் முன் நாம் நிர்வாணமாக இருக்க முடிவதில்லை, அவசர அவசரமாக ஏதேதோ ஆடைகளையும் சில முகமூடிகளை அணிந்து கொள்கிறோம். சமூகத்தின் பார்வையில் அந்த ஆடை பொறுத்தமற்றோ அல்லது வித்தியாசமாகவோ தெரியும் போது கேலிப் பொருளாக மாறிவிடுகிறோம். அப்படி வித்தியாசமான ஆடைகளையும் பொருந்தாத முகமூடிகளையும் அணிந்து வாழும் மனிதர்களின் கதைதான் சிகண்டி. அத்தனை அவமானங்கள், சமூக புறக்கணிப்புகளைத் தாண்டிய ஒரு திருநங்கை ஏன் திருநங்கையாகவே இருக்க ஆசைப்படுகிறாள் என்பதின் அலசல் தான் இந்த நாவல்
நாவல் முழுவதும் ‘தீபன்’ எனும் கதாபத்திரம் வழியே நகர்கிறது. 18 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவன், திருட்டு பொருட்களின் விற்பனை, போதை வஸ்துக்கள், பிராத்தல், அடிதடி என இயங்கும் கோலாலம்பூரின் ‘சௌவாட’ அவனுக்கு அச்சமூட்டினாலும் பொருட்களின் மீதும் காமத்தின் மீதும் அவனுக்கு இருக்கும் வேட்கை அந்த இருள் நகரத்தில் விளையாடிப் பார்க்கத் தூண்டுகிறது. அதற்கென தன்னை ஒரு கோபக்காரனாக, தந்திரக்காரனாக புனைந்துக் கொண்டாலும், அடியாழத்தில் அவன் மிக தனிமையானவன். இந்த இருள் நகரத்தை விட்டு தப்பித்து அம்மாவின் மடியில் விழுந்து அழத் துடிக்கும் சிறுவன். (நான் படித்த நாவல்களில் சிறந்த கதாபாத்திரங்களில் ஒருவன் தீபன் ).
தீபன் காதலிக்கும் பெண்ணாக வரும் ‘சரா’ சௌவாட்டின் சிறந்த அழகி. அவளை நெருங்கி இதழோடு இதழ் முத்தமிட்டு காதலிக்கும் தீபனே கூட ஒரு மாதம் கழித்து தான் அவள் திருநங்கை என்பதை கண்டு கொள்கிறான். அந்த அளவிற்கு ஆண் உடலில் பெண்மை கொண்டு வந்த அழகி. மற்ற திருநங்கைகள் போல் எந்த விரும்பாத தொழிலிலும் ஈடுபடாமல், , நாட்டியத்தில் இறைவனுக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைப்பவளாக அங்கோவாட் கோவிலில் உள்ள சிலைகளைப் பார்த்தே அப்சரஸ் நடனத்தை கற்று, தன்னை ஒரு அப்சரஸ் (ரம்பை, ஊர்வசி போல் இறைவன் முன் மட்டுமே ஆடுபவர்கள்) ஆகவே உணருகிறாள்.
‘ஈபு’ மொத்த சௌவாட்டையே ஆளும், அங்கிருக்கும் எல்லா திருநங்கைகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் பெரும் தாய்.
இந்த மூன்று மையக் கதாபாத்திரங்களின் வழியே நகரும் கதை மொத்த சௌவாட்டையும், அதன் வாழ்வியலையும் அழகாக சித்தரிக்கிறது. திருநங்கைகள் எவ்வளவு முயன்று தங்களை பெண்னென முன்வைத்தாலும் (சரா உட்பட) சமூகத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் அவலம், பாலியல் தொழில் செய்வதில் அவர்களுக்கு இருக்கும் ஒவ்வாமை, பாதுகாப்பின்மையை கூறுகிறது. செயற்கையான கரிசனமோ, போலி முற்போக்கோ இல்லாமல் முழுக்க முழுக்க தீபன் பார்வையிலே எழுதியது எழுத்தாளரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
Non linear வகையில் தீபனின் முற்பிறவியின் நடந்த நிகழ்வு ஒன்று கனவுகளாக அவனை துரத்துவது போலவும், நாவலின் இறுதியில் அதை சமகாலத்தினுடன் இணைத்த விதம் நாவலை வாசிக்க கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
இறுதியில் அத்தனை அவமானங்கள், சமூக புறக்கணகப்புகளைத் தாண்டி, ஒரு திருநங்கை ஏன் திருநங்கையாகவே இருக்க ஆசைப்படுகிறாள். அது ஆண் உடலுக்குள் ஊற்றெடுக்கும் பெண்மையின் கனிவு, தாய்மை. அதை ஈபு, சரா, குவான்யின், பகுசரா வழியே நாவல் முழுக்க உணரமுடிகிறது பெண்மையின் கனிவை தாய்மையை.