இலக்கியத்தின் அடிப்படைகள் குறித்து வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜெயமோகன் அளித்த பதில்களும், அவரது இலக்கியம் குறித்த சில கட்டுரைகளும் அடங்கிய நூல்.
யார் அறிவுஜீவி? என்ற முதல் கட்டுரையில், சிலந்தி தன் உடலில் இருந்து நூலை எடுத்து வெவ்வேறு முனைகளை இணைத்து இணைத்து வலைபின்னுவது போல வரலாறு, பண்பாடு, அரசியல், சமூகவியல், இலக்கியம் என அனைத்துத் தளங்களிலிருந்தும் தன் அடிப்படை சிந்தனைகளை தொட்டெடுத்து பின்னிக்கொண்டே செல்லும் செயல்பாடு ஒருவனுக்கு இருக்குமென்றால் மட்டுமே அவனை அறிவுஜீவி என்று சொல்ல முடியும்.
இந்தியாவின் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அறிவுஜீவிகள் பத்துபேரை எடுத்து கொண்டால் நான் இப்படிப் பட்டியலிடுவேன். விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், அவனீந்திரநாத் தாகூர், காந்தி, அம்பேத்கர், எம்.என்.ராய், டி.டி. கோசம்பி, ஜே.சி. குமரப்பா, தாராசங்கர் பானர்ஜி, சிவராம காரந்த் அவர்களை கற்றிராத ஒருவர் அறிவுஜீவி என்று இன்று சொல்லிக்கொள்ள முடியாது.
ஒரு தனித்துறையில் எவ்வளவு பெரிய அறிவுத்திறன் கொண்டிருந்தாலும், அவர் அறிவுஜீவி கிடையாது என்கிறார். உண்மையிலேயே இது ஒரு அடிப்படையான புரிதல் ஆனால் இலக்கியத்திற்குள் வந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு இந்த கட்டுரையின் வழியே தான் இதை புரிந்து கொண்டேன். இது போல நிறைய அடிப்படையான புரிதல்கள் ஏற்படுத்தி, பல பிழையான புரிதல்களிலிருந்து இலக்கியம் என்னும் அறிவியக்கத்துக்குள் பயணிப்பவரை விடுவிக்கும் கட்டுரைகளே இவை அனைத்தும்.
வாசிப்பின் நாட்டிய சாஸ்த்திரம் என்ற கட்டுரையில், டெல்லிக்கு உரையாற்ற வந்த ‘ழாக் தெரிதாவிடம்’ நம்மூர் பேராசிரிய விமர்சகர்கள், அவரது ‘Deconstruction’ தியரியை நேர் எரிராக புரிந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு அவர் திகைத்து நின்றதையும், இனிமேல் இலக்கியம் என்பதே கிடையாது, வாசிப்பு மட்டும் தான் உள்ளது என்ற அவரது கருத்தின் பிழையான புரிதல் தொண்ணூறுகளில் அனைத்து இந்திய மொழிகளிலும் இருந்தது, அந்த காலகட்டத்தில் தான் இலக்கிய வாசிப்பின் மீது மிகப்பெரிய அடி விழுந்தது. அந்த நோய் கூறிலிருந்து நம் வாசிப்பு இன்னும் மேலேறவில்லை என்று குறிப்பிடுகிறார். அதேபோல ரோலான் பர்த்தின் ‘The death of the author’ போல தலைகீழாக புரிந்து கொள்ளப்பட்ட கட்டுரையே இல்லை என்கிறார்.
நம்மூர் பேராசிரிய விமர்சகர்கள் வாசிப்பை ஒரு அறிவுச்செயல்பாடாகவே பாவிக்கிறார்கள் ஆனால் இலக்கியம் என்பது ஒரு அந்தரங்க செயல்பாடு. எழுத்தாளனும், வாசகனும் ஒரு நுட்பமான தளத்தில் சந்தித்து கொள்கிறார்கள். இருவருக்குள் ஒரு ரகசிய உரையாடல் நிகழ்கிறது. இலக்கியம் நாம் இங்கே வாழும் வாழ்வைவிட இன்னும் செறிவான வாழ்க்கையை நமக்கு அளிக்கிறது. இலக்கியம் இங்கே ஏற்கனவே இருப்பனவற்றை வரலாறு, பண்பாடு, அரசியல் என அனைத்தையும் மறுவரையறை செய்து இன்னும் செறிவாக மொழி வழியாக நமக்கு கடத்துகிறது. அதில் கற்பனையில் வாழும் வாசகன் தீவிரமான அனுபவங்களுக்கு ஆட்பட்டு அங்கிருந்து ஒருபடி முன் நகர்கிறான்.
இலக்கியத்தை அறிய வேறொன்றும் தேவை இல்லை. எளிமையான மொழியறிவு, அடிப்படையான கற்பனை சக்தி, வாழ்க்கையை அறிந்துகொள்ளும் தன்மை மூன்றும் போதும். சொந்த வாழ்க்கை, சொந்த மனத்தை, சொந்த கனவுகளை மட்டுமே இலக்கியத்தை புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் பயன்படுத்தினால் போதும் என்கிறார் ஜெ.
எழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது? என்ற இறுதி கட்டுரையில், சுய அனுபவங்களை நிராகரித்து கொண்டுதான் ஒருவர் ஒரு கொள்கைக்கு, ஓர் அமைப்புக்கு, ஒரு தரப்புக்கு முழு விசுவாசமாக இருக்க முடியும். அது கருத்துலக தற்கொலை.
நான் என் அனுபவத்தையே என் வாசிப்பின் மூலம் விளக்கிக்கொண்டு முன்வைக்கிறேன். எனக்கு தல்ஸ்தோயோ, காந்தியோ, சுந்தர ராமசாமியோ, நித்ய சைத்தன்ய யதியோ ஆதாரம் அல்ல. என் அனுபவங்களே என் அடிப்படை என் அனுபவங்களை விளக்காதபோது இவர்களை நிராகரிக்க எந்த தயக்கமும் இல்லை.
என் வாசகர்களுக்கும் இதையே சொல்வேன். என் கருத்துக்களை அவர்கள் நம்பவேண்டியதில்லை. ஏற்று ஒழுகவேண்டியதில்லை. அவர்களின் அனுபவங்களை விளக்கிக்கொள்ள இவை உதவுகின்றனவா என்று மட்டும் பார்த்தால் போதும். அவ்விளக்கத்தை தங்கள் தரப்பாக முன்வைத்தால் போதும் என்கிறார்.
அடிப்படையிலேயே இலக்கியம் என்பது குழு மனநிலைக்கு எதிரானது. ஒருவன் தனி மனிதனாக தான் அடையும் அனுபவங்களை இலக்கியத்தின் வழி புரிந்துகொண்டால், கண்டடைந்தால் அதுவே அவனுக்கான இலக்கியமாக இருக்க முடியும். அதை முன்வைப்பதே உன்மையான, பிறிதொன்றில்லாத கருத்தாக இருக்கும். அதனால் தான் தனது ஆசான் என்று ஒருவன் கருதுபவர்களையும் அவன் நிராகரிக்கலாம் என்று ஜெ கூறுகிறார்.
இலக்கியம் படிக்கும், படிக்க விரும்பும் அனைவரும் அறிமுக நூலாக இதை கற்பது பல பிழைபுரிதல்களிலிருந்து நம்மைக் காத்து, நமது இலக்கிய வாசிப்பின் தரத்தை பல மடங்கு உயர்த்தும். இப்படி இலக்கியம் குறித்த பல்வேறு ஆழமான புரிதல்களை ஏற்படுத்தும் கட்டுரைகள் அடங்கிய சிறுநூல் இது.