அம்மாவின் நினைவு வந்தது. அவள்தான் நான் தனியனாக ஆகிவிட கூடாது என நான் பிறந்தது முதல் வேண்டிக் கொண்டிருந்தவள். என் திருமணத்திற்கு பிறகே சற்று நிதானமாகி இயல்பானாள். நல்லவேளை நான் நிராதரவற்றவானாக ஆவதற்கு முன்பே மரித்து விட்டாள். இதை இப்போது சொல்லும் போது மேலுலகில் நின்று என்னை பரிதவித்து பார்த்துக் கொண்டிருப்பாளோ என்று பயமாக இருக்கிறது. அம்மா கவலைப் படாதே நான் தனியனாக இருந்தாலும் ஏதோ ஜீவித்து கொண்டுதான் இருக்கிறேன் !

அம்மாவிற்கு நான் பிறந்ததும் தெரிந்து விட்டது நான் சவலைப் பிள்ளை என்று. பொத்திப்பொத்தி வளர்த்தாள். என்னால் தனியாக இந்த உலகில் வாழ முடியாது என்று நம்பினாள். எப்போதும் அவள் என்னுடனேயே இருந்து கொண்டிருப்பாள் என்று தோன்றும். உண்மையில் இருந்து கொண்டிருந்தாள். பள்ளியில் வாட்ச்மேனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து என்னைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்வாள். பள்ளி முடிந்தவுடனே வாசலில் வந்து பார்த்தால் நின்று கொண்டிருப்பாள். 6ம் வகுப்பிற்கு  பிறகுதான் வராமலானாள். அதும் நான் வரக்கூடாது என்று அழுது புரண்ட பிறகுதான் . படிப்பு முடித்ததும் சின்ன வேலை கிடைத்ததுமே எனக்கு பெண் பார்க்கத் தொடங்கி விட்டாள். மாதம் நான்கு வீடுகளுக்காவது போய் பார்த்து விடுவோம். என் உடல் தோற்றம் காரணமாக எதுவும் அமையாமல் இருந்தது.  பார்க்க நோஞ்சானாக பயந்த சுபாவம் கொண்ட எலி போல இருப்பேன். என்னை பார்த்தவுடனே எளிதில் எல்லோரும் கண்டு கொள்வார்கள். மேலும் என் பயந்து பணிந்து போகும் சுபாவம் மேலும் என்னை காட்டிக் கொடுத்தது. கடைசியாக எனக்கு மாங்காட்டில் ஒரு பெண் கிடைத்தது. மாநிறம் ,என்னைவிட அரை அடி உயரம் அதிகம் , என்னை விட இரு மடங்கு உடல் கொண்டிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் பூதம் போல என்று நினைத்தேன். சவட்டி கொள்வாள் என்று எண்ணினேன். மாறாக அவள் என்னை முதலில் பார்த்த போது மெல்ல அதிர்ந்தாள். பிறகு அவளில் லேசான புன்னகை தோன்றியது. இப்போது யோசிக்க அவள் என் உடல் பார்த்து என்னை கருணை கொண்டு நோக்கினாள் என்று தோன்றுகிறது. அம்மா அப்போதே சம்மதம் தெரிவித்து விட்டாள். எனக்கு அதிர்ச்சி, வெளியே வந்த பிறகுஉனக்கு என்ன பைத்தியமாஎன்று சண்டை போட்டேன்.  அம்மாஅவ உன்னை பார்த்துக்குவாஎன்று பதில் சொல்லி வேறு எதும் சொல்லாமல் நடந்தாள் .

திருமணம் எளிமையாக நடந்தது. அப்பாவின் சொந்தங்களை முதன்முறையாக என் திருமணத்தில்தான் பார்த்தேன். அப்பா நான் பிறந்த சில மாதங்களிலேயே இறந்து விட்டார். காதல் திருமணம் என்பதால் பிறகு அப்பாவின் உறவினர்கள் எங்களை முழுதாக கைவிட்டு விட்டனர். அம்மாதான் எனக்கு எல்லாமுமாக இருந்தாள். அம்மாவின் வழி உறவுகள் என்று பெரிதாக எதுவும் இல்லை. என் பள்ளி காலம் வரை அம்மா வழி தாத்தா பாட்டி கூடத்தான் வசித்தோம் என்றாலும் அவர்கள் என்னிடமோ அம்மாவிடமோ அன்பாக நடந்து கொண்ட ஒரு ஞாபகம் கூட எனக்கு இல்லை. திருமணத்திற்கு மொத்தமும் சேர்ந்தால் 50 பேர் வந்திருப்பார்கள். பெண் வீட்டுக்கு அடுத்து இருந்த பகவதி கோவில் முன்பு திருமணம் நடந்தது. அவள் என்னை விட உயரம் . பருமன் என்பது என்னால் அப்போது தாள முடியாமல் இருந்தது.  சற்றுத் தள்ளியே நின்று கொண்டிருந்தேன்.  எப்போது இந்த நிகழ்வு முடியும் என்ற மனநிலை மட்டுமே இருந்தது. அவள் தலை கவிழ்ந்த படியே நின்று கொண்டிருந்தாள். அதை சற்று நேரம் போன பிறகே கவனித்தேன்.  பிறகு அங்கு வந்தவர்களை கவனித்த போது அவர்கள் எங்கள் சொந்தம் என்றாலும் அதைத் தாண்டி ஒரு கேலிப் பார்வை அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். அதை முன்புணர்ந்து தலை கவிழ்ந்திருக்கிறாள். எனக்கு கோபம் வந்தது. என்ன செய்வது என்று தெரிய வில்லை. அவள் அருகில் தொடும் அளவில் இணைந்து நின்றேன். பொதுவாக பேசுவது போல பேச்சுக் கொடுத்தேன். அவள் இதை எதிர்பார்க்க வில்லை. ஆனால் மகிழ்ந்தாள் என்பது அவள் முகத்தில் தெரிந்தது . உற்சாகமாக என்னிடம் மெல்ல பதில் பேச்சு கொடுத்தாள்.  சற்று நேரத்தில் வந்தவர்களை மறந்து, எல்லோரின் முன்பு நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து வேடிக்கை சொல்லி பேசிக் கொண்டிருந்தோம்.  இடை இடையே அம்மாவை பார்த்தேன்.  அவள் மகிழ்ச்சியில் பொங்கி கொண்டிருப்பதை கண்டேன். 

மனைவி பெயர் உஷா, அவளை திருமணம் செய்ததில் இருந்து அம்மாவை விளிக்கும் விளிகளில் பாதி உஷா என்று மாறியது . அம்மா மறைந்த பிறகு உஷா என்று மட்டுமாக ஆனது.  அம்மா அப்படியாக அவளை என்னிடம் தந்து மறைந்து போனாள்.

பத்து ஆண்டு காலம் அவளோடு வாழ்ந்து இருக்கிறேன். துர் அதிர்ஷ்டவசமாக என் போலவே எனக்கு ஒரு மகன் வாய்த்தான், அதே நோஞ்சான் உடல் ,அதே பயந்த மனம் கொண்டு வந்தமைந்தான், அவன் பிறந்த நாளில் இருந்து உஷா என் அம்மா எனக்கு ஆனதை போல அவள் அவனுக்காக ஆனாள். அவளில் அவனுக்கான ஒவ்வொரு செய்கையிலும் அம்மாவை பார்த்து கொண்டிருந்தேன் . 

எனக்கு இருந்த வேலையில் குறைவான ஊதியம் என்றாலும் அது ஓரளவுக்கு போதுமானதாக இருந்தது . வீடு என்று ஒன்று இருந்ததால் வாடகை பிரச்சனை இல்லை ,உஷா பணம் பற்றாக்குறை பற்றி ஒரு வார்த்தை சொன்னது இல்லை. அவனுக்கு எப்போதும் தின்ன ஏதாவது செய்து கொடுத்து கொண்டே இருப்பாள், வெளியே வாங்கினால் செலவாகும் என்பதால் அவளே இருக்கும் பொருட்கள் கொண்டு ஏதாவது தின்பண்டம் உருவாக்குவாள், அந்த பத்து ஆண்டுகள் மிக இனிமையான காலங்கள் , வேலை முடிந்ததும் நேராக வீடு வந்து விடுவேன் , எனக்கு நண்பர்கள் என்பதே இல்லை , மனைவி மகன் மட்டுமே எல்லாமுமாக இருந்தது . 

கனவில் இருந்து  விழித்தெழுவதை போல ஒரு நாள் காலை அவள் இறந்து விட்டிருந்தாள், அன்றைய காலையை இப்போது எண்ணி கொண்டாலும் அடிவயிற்றில் பயம் தொற்றி கொள்ளும் , ஒருபுறம் அவள் இறந்தது நம்ப முடியாமல் இருந்தது , எல்லாம் போய் விட்டது போன்ற உணர்வு , இன்னொரு புறம் என் மகனை எப்படி வளர்ப்பேனோ என்ற பயம் . மகன் என்னை விட பயந்து இருந்தான் . அவள் எப்போதும் உறங்குவது போல உறங்கி கொண்டிருந்தாள் , எரிப்பது வரை . அவளால் எப்படி அப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது, எப்படி இறக்க முடிகிறது என்று வெறியும் ஆங்காரமுமாக இருந்தேன் . உண்மையில் மகன் இல்லை என்றால் நான் பயித்தியமாகி இருப்பேன் , அவனை காக்க வேண்டும் என்றே பொறுப்பே என்னை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டது .

அவனும் என் போலவேதான். வினித் என்று பெயர். அவள் அம்மா வைத்தது. வயிற்றில் இருக்கும் போதே இந்த பெயரை சொல்லி விட்டாள் . நன்றாகவே படித்தான். என்னை விட அவனுக்கு உஷா மீது பிரியம். அவன் அவள் இறந்த பிறகு முற்றிலும் மாறி இருந்தான். எவ்வளவு பெரிய மகிழ்ச்சி என்றாலும் சிறிய புன்னகை மட்டும்தான் . பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்ததை ஏதோ சாதாரண செய்தியை சொல்வது போல போகிற போக்கில் சொல்லி சென்றான். ஓரளவு வளர்ந்த பிறகு அவனேதான் சமைக்கும் வேலைகளை செய்தான். வீட்டு வேலைகள் எல்லாமே அவனே செய்து விடுவான். நான் வர தாமதம் ஆனால் வெளியே அமர்ந்து என் வருகையை நோக்கி கொண்டிருப்பான். என்னை தூரத்தில் பார்த்தான் என்றால் உள்ளே சென்று விடுவான் . பதினொன்றாம் வகுப்பு பின்பு கல்லூரி பாடங்கள் எல்லாமே அவனே விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்து பிறகு வந்து சொல்வான். கட்டணம் குறைவான கல்லூரி. பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்து இருப்பான். எனக்கு முடிந்த வரை பாரம் கொடுக்க கூடாது என்று அவனுக்கு தெரிந்திருந்தது. அவனுள் நான் மட்டுமல்ல உஷாவும்தானே இருக்கிறாள் .

கல்லூரி முடித்தவுடனே எல்லாம் அவனுக்கு வேலை கிடைத்து விட வில்லை , ஒருவருடம் மேல் அலைந்தான். கிடைக்கும் போது கிடைக்கட்டும் அதை பற்றி எல்லாம் வருந்தாதே என்று சொல்வேன். ஆனால் அவன் இரவு நெடுநேரம் உறங்காமல் இருப்பான். காலையில் எழுந்து பார்த்தால் வாசலில் அமர்ந்து இருப்பான், கேட்டால் தூக்கம் வர வில்லை என்பான். ஒருவழியாக அவனுக்கு நல்ல வேலை அமைந்தது . அதன் பிறகுதான் அவனில் சற்று மலர்ந்த முகம் வந்தது . 

நான் என் அம்மாவை போல அவனுக்கு மணமகள் பார்க்கும் வேலையை ஆரம்பித்தேன் . புரோக்கர்கள் என் பணத்தை தின்று தீர்த்தார்கள் , நூறு பெண்களுக்கு மேல் பார்த்து விட்டோம். ஏதும் அமைய வில்லை. மகன் ஒருகட்டதிற்கு மேல் தன்னால் இனி வர முடியாது என்று சொல்லி விட்டான் . ஒரு கட்டத்தில் பெண் பார்ப்பதை விட்டு விட்டேன். ஏதாவது தேடி வந்தால் பேசி ஓரளவு உறுதியானால் மட்டும் போய் பார்த்து வருவது என்று இருந்தேன் . 

ஒருநாள் காலையில் வெளியே வந்தபோது மகன்அப்பா உங்களிடம் பேச வேண்டும்என்றான். அப்போதே சின்ன யூகம் வந்து விட்டது . அதை போலவே அவனும் தான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொன்னான். அவர்கள் வீட்டில் சம்மதம் என்றும் போய் பேசி வருமாறும் சொன்னான். நல்ல முறையில் திருமணம் நடத்தினேன். இருவரும் அவ்வளவு பொருத்தமான ஜோடிகள் ஆக இருந்தார்கள். கிட்டத்தட்ட இருவரும் ஒரே நிறம். அவள் அவனை விட சற்று உயரம் குறைவாக பொருத்தமாக இருந்தாள். மண்டபத்தில் வந்த எல்லோரும் அதை சொன்னார்கள். லேட் ஆனாலும் சரியான பெண்ணை பிடித்து விட்டதாக என்னிடம் கூறினார்கள் ! அன்று மிக மகிழ்ச்சியான நாள். உணவு நன்றாக இருந்தது என்று எல்லோரும் சொன்னார்கள். மகனில் நான் இதுவரை கண்டிராத புன்னகையை அன்று அவன் நாள் முழுதும் கொண்டிருப்பதை கண்டேன் .

சில நாட்களிலேயே தெரிந்து விட்டது எனக்கு இனி வீட்டில் இருக்க முடியாது என்று . எனக்கு என்னால் மகன் துன்ப படுவதை காண முடியாது . மருமகளுக்கு என்னை பிடிக்க வில்லை. ஒவ்வொன்றிலும் குறை சொன்னாள். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு உறங்க மட்டுமே வந்தேன். பிறகு வேறு எங்காவது வேலை கிடைத்தால் ஓடி விடலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன் .

மாலையில் வாசலில் அமர்ந்து இருந்த போது மகன் வந்தான் ,வினி உங்கட்ட கொஞ்சம் பேசணும்என்றேன் . “எனக்கு வர வர ரொம்ப போர் அடிக்குது , எங்கயாவது வெளியூர் வேலைக்கு போகலாம்னு பார்க்கிறேன்என்றேன் . அவன் அதிர்ந்துஅதெல்லாம் வேணாம்என்றான் .இல்லைடா ,நான் பேசிட்டேன் ,நம்ம சொந்தகாரங்கதான் திருப்பூர்ல பேக்கரி வச்சுருக்காங்க, அங்க ரூம் எடுத்து தங்கி இருக்காங்க , அங்க போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்னு இருக்கேன்என்றேன் .அதெல்லாம் ஒன்னும் வேணாம்என்று சொல்லி உள்ளே போய் விட்டான் .

பிறகு இரண்டு நாட்கள் தொடர்ந்து வற்புறுத்தி வாரம் ஒருமுறை வந்து விடுவேன் என்று சொல்லி அவனை சம்மதிக்க வைத்து கிளம்பினேன். நான் கிளம்புகிறேன் என்று தெரிந்த பிறகு மருமகள் என்னிடம் அன்பாக நடந்து கொண்டாள். உண்மையான அன்புடன்தான்!  என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . அவள் என் மகனுடன் இருக்கிறாள் என்பதாலேயே அவளை என் மகள் போல நேசித்தேன் . 

மெல்ல போவது மாதம் ஒருமுறை என்பது மாறி வருடம் ஒரு முறை என்று ஆனது . மகனுக்கு இரு பிள்ளைகள் , ஒரு பெண்பிள்ளை ,ஒரு ஆண்பிள்ளை என . ஆண்பிள்ளை வலுவானவனாக இருந்தான் ! 

தீபாவளிக்கு ஒருவாரம் இருந்து வருவேன். மருமகள் நன்றாக கவனித்து கொள்வாள். பேரனும், பேத்தியும் கூடயே இருப்பார்கள். பேரன் போகாதே தாத்தா என்பான். அவனை தூக்கும் போது எடை அழுத்தும், என் கண்கள் நிறையும், அது என் அம்மாவின் ,உஷாவின் கண்ணீர்கள்!

கிளம்பும் போது மகன் பஸ் ஸ்டாண்டு கொண்டு வந்து விடுவான். அவனிடம் பேக்கரியில் காசு வாங்கி போடும் கணக்கு வேலை என்று சொல்லி இருக்கிறேன், உண்மையில் இங்கு எனக்கு டம்ளர் எடுக்கும் வேலை, பெருசு என்றுதான் அழைப்பார்கள், யார் தவறு செய்தாலும் திட்டு எனக்குத்தான் விழும், ஆனாலும் அதையும் தாண்டி அன்பாக இருப்பார்கள் , கடையில் ஒருமுறை குடித்து ரகளை செய்த ஒருவன் என்னை அறைந்து விட்டான் . அவனை ஓனர் அடித்து வெளுத்து விட்டார் . 

இங்கு உடன் பணி புரிபவர்கள், வாடிக்கையாளர்கள் என்று நண்பர்கள் அமைந்தாலும் அதையெல்லாம் தாண்டி இரவு வந்தால் என் தனிமை என்னை வந்து சூழ்ந்து விடும் . எங்கள் அறை மாடியில் என்பதால் நான் வெளியே வந்து படுத்து கொள்வேன் . வானத்தில் மேகங்களில் , நட்சத்திரங்களில் , நிலவில் அம்மாவையும் ,உஷாவையும் தேடுவேன். உஷா எனக்கு ஆறுதல் சொல்வாள். ஆனால் அம்மா எப்போதும் கண்ணீருடன்தான் இருப்பாள் . நான் தனியாக ஆவேன் என்பதை உணர்ந்தவள் .அதை இல்லாமல் ஆக்க எவ்வளவோ முயன்றவள், முடிவில் தோற்றுவிட்டவள்.  

நான் அம்மாவுக்கு சொல்லும் பதில் ஒன்றுதான்.நான் மட்டுமல்ல என்னைப் போல பலர் இங்கு இருக்கிறார்கள் . 

6 Comments

  1. மிக எளிமையாகச் சொல்லப்பட்ட கதை. ஆனால் ஆழமான பாதிப்பைக் கடத்தும் கதை. அம்மா என்பவள் நித்தியமானவள். நிபந்தனையற்ற பாசத்தை அள்ளி வழங்கும் அம்மாக்களுக்கு இக்கதையை சமர்ப்பணம் செய்யலாம். அம்மா இறந்தும் மகனைப்பற்றிய நினைவில் இருப்பாள் என்று மகன் நினைத்து அவளுக்கு ஆறுதல் சொல்லும் இடம் அபாரம்.

  2. கண்ணீருடன் படித்து முடித்தேன், வாழ்த்துக்கள் Sir.

  3. நல்ல கதை. வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்.

  4. அழகாக சொல்லப் பட்ட பல மனிதர்களின் மன வலி. அலுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *