சித்திர சபை
……………………
சுவரில் பட்டுத்திரும்பும்
பந்தினைப் போன்று
பெயர்ந்து விழுந்து
கொண்டிருந்தன
தாளாது ஓடிச்சென்று
பிரகாரச் சுவர் நிழலில்
பல்லி போல்
ஒட்டிக்கொண்டேன்
ஒற்றைக்கால்
நடனமாக
ஒரு சில நிமிடங்கள்
தாக்குப்பிடித்தேன்
பிய்த்து
வெளியிலெறிந்தது
வெயில்
வெளியேறி
எதிர் தெப்பக்குளத்தினுள்
மூழ்கிப்போனேன்
துரத்திய சித்திரங்கள்
கரையக் கரைய
தெளிவானது
எனை
தெப்பத்திலேற்றி
நீராழி மண்டபத்தை
வலம் வந்து கொண்டிருந்தது
நினைவாகிப்போன
அரசு மாமாவே தான்
அக்கலங்கிய நீரில்
ஆயிரம்
பிறை சூடிய
ஆடல் வல்லானென
ஆனேன் நான்.
–
கொடிமரத்தின்
இரு கயிறேறி
திகம்பரமாய்
பறக்கிறது காற்று
எண்ணெய்க்குள்
வழுவி விடாது
தன்னிருப்பில்
எரிகிறது அக்னி
கரையாது மூழ்கும்
திருமேனிக்கு
தீர்த்தவாரி மண்டபப்
படியேறும் நதிப்புனல்
ஒப்பனையின் எழில்
நிறைந்த இறையின்
சொல்லில் நெற்றி
அணிந்தது திருமண்
மறைந்திலாது
தெரியும் ஒன்றுதான்
இக்கோவில் தூணிலிருந்து
பிளந்து வரும் வெளி
—
குறுக்கும் நெடுக்குமாக
ஒரு பெரும் வலை
பின்னி முடிக்கையில்
அறுத்தபடி பாய்கிறது
வற்றாத ஜீவநதி
கடினம்
தூண்டிலில்
சிக்கிக்கொள்ளாது
வாழ்வதென்பது..
—-
தேவி
………….
உச்சியில் ருசித்த
கோவில் திருவிழா
இனிப்பு கடையை
மூடி வைத்ததைப் போன்று
இரவு நிகழும் நிலத்தினில்
அர்த்தமிழந்த நிழலை
ஒற்றை மரமாய்
ரசித்துகொண்டிருந்தேன்
என் போலவே
வேண்டுதலில்லா
நாட்களையெண்ணி
உறைந்திருந்தாள்
தேவி.