எல்லாச் சுவர்களிலும் உள்ளே பதிக்கப்பட்ட ஒரு செங்கலாக, செங்கல்களின் இடுக்குகளை நிரப்ப இடப்படும் சிமெண்ட்டின் சிறு துகளாகத்தான் அன்று காலை அவன் உணர்ந்தான். இத்தனை வருடங்கள் உயிரோடு இருந்ததே ஒரு சாதனையாகிவிடும் ஒரு சராசரி மனிதனை, – வேறு ஒரு மனிதனாக இருந்தால் அப்படித்தான் அவன் விமரிசித்து இருப்பான் – வேறு என்ன சொல்லியும் பெருமைப்படுத்த முடியாது. எழுபது வருடங்களில் ஒரு நாடகக் கலைஞனாகவோ, கவிஞனாகவோ, கதைஞனாகவோ கனவு காணாத நாள் இருந்ததில்லை. ஆனால் அந்த மாபெரும் கனவுத் தடத்தில் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது அவனது குற்றமல்ல என்றாலும், அவனுக்கு எந்தத் திறமையும் கிடையாது என்ற ஞானம் உதித்தது இந்த ஒரு மணி நேரத்தில் தான். எழுபது வருட வாழ்வில் சில மணித்துளிகள். அது ஒன்றும் எல்லா நாட்களையும் விடச் சிறந்த நாளொன்றும் இல்லை. அப்படி ஒரு நாள் அவனைப பொறுத்தவரை இருந்ததே இல்லை. எழுபத்தி ஓராவது பிறந்த நாளின் விடிகாலைப் பொழுதில், விழித்த அந்தக் கணத்திலிருந்து தான் அந்த ஞானம் அவனுக்குக் கை கூடியது.
’மனிதன் எந்தச் சிறப்பும் இல்லாத மிருகம்’ என்ற கசப்பான உண்மையை மனிதகுலம் ஒத்துக் கொள்வது எவ்வளவு கடினமானதோ அதைவிடக் கடினமானது ஒரு மனிதன் தனது வாழ்க்கை எந்தப் பொருளும் அற்ற பாலைவன மணல் மேடு என்று அறிவும் தருணம். ஆனால் அதை அன்று ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தான். கடந்த பத்தாண்டுகளாக கடுமையான முயற்சிக்குப் பிறகு எதையும் உருப்படியாக எழுதிவிடவில்லை. அதற்கு முன்னிருந்த அறுபது ஆண்டுகளிலும் எதுவும் உருப்படவில்லை. அது அன்று விடிகாலை இருளில் புதியதாக எழுந்த சூரியனின் ஒளி போல அவன் மனமெங்கும் பரவியது. தான் ஒன்றுமில்லாத வெற்றிடம். இதை உணர்வதற்கு அவனுக்கு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுவே போதுமானது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், கடவுளின் கருணையை வேண்டி அவன் அழுத நாட்கள் அவனுக்கு ஞாபகம் வந்தன. கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார் என்ற முடிவுக்கு வர முதல் இருபதாண்டுகள் ஆகிவிட்டன. அதற்குப் பிறகுதான் கருணையற்ற யாரிடமும் யாசிப்பதை நிறுத்திக் கொண்டான். எல்லோரும் தங்களது மனதின் ஈரம் ஊரும் மன ஊற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம், விதிகள், கல்வி, தரம் என்ற கான்கிரீட் பூசி முழுவதுமாக மறைத்து விடுகிறார்கள்.
இத்தனைக்கும் அவனைப் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை என்ற முடிவுக்குத்தான் அவன் வர வேண்டியிருந்தது. அதை வேறு வார்த்தைகளிலும் யோசித்தான். தன்னைப் புரிந்து கொண்டு யாருக்குத்தான் என்ன ஆகிவிடப் போகிறது? அவன் என்ன தேவ தூதனா? சிறு கருணையைக் கூட காட்டத் தயங்கும் சுயநல மிருகம். தன்னிடம் இழந்துவிட்ட பசுமையைத் தேடும் பசு.
சிறு வயதிலிருந்தே தான் ஒரு வெட்கக் கேடு என்ற ஒரு உணர்வு சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசுவின் உருவம் போல அவன் மனதில் அடிக்கப்பட்டுவிட்டது. யார் அந்தச் சிலுவையில் ஏற்றினார்கள் என்பது இன்றுவரை அவனுக்குப் புரிந்ததில்லை. பெரும்பாலும் அவன் ஆடையின்றி தெருக்களில் ஓடித் தவிக்கும் கனவுகளே வந்தன. அதை மூடி மறைப்பதற்கே விழித்திருக்கும் நேரங்களிலும் முயற்சி செய்து கொண்டிருந்தான். எதிலும் தன்னம்பிக்கை இல்லாமல் எல்லோரையும் போல இருக்க முயற்சி செய்து கொண்டெ தானோரு விதிவிலக்கு என்று பகல்கனவு மட்டும் கண்டு கொண்டிருந்தான். விதி விலக்குக்கும் விதிகளுக்கும் இடையில் அவனது எழுபதாண்டுகள் கடந்து விட்டன.
இரண்டு வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தான், மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்துவிட்டான், வங்கியிலிருந்து பென்ஷன் வருகிறது என்று மற்றவர்கள் அவனுடைய லௌகிக விஷயங்களைச் சொல்லும் போது அவனுக்கு எரிச்சலே வந்தது. ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகக் குறைந்த செயல்களே அவை. மகத்தான செயல்களைச் செய்வதற்கு எந்த வாய்ப்பும் அவனுக்குக் கிட்டவில்லை என்று நம்பினான். ஆனால் அவனுடைய நண்பர் ‘அப்படி ஒரு பேராசை அவனுக்கு இருந்ததே இல்லை’ என்று அறுதியிட்டுச் சொன்ன போது அதை ஏற்றுக் கொண்டான். எதிர்த்துப் பேசி எதுவும் ஆகப் போவதில்லை. ஆனால் அந்த ஆசை மட்டும் ஏன் தொலைந்து போகவில்லை? செடி வளராதது, விதையின் வீரியம் இன்மையா? நிலத்தில் வறட்சியா?
அவன் எழுதிய எந்த வரியையும் யாரும் படிக்கத் தயாராக இல்லை என்பது கசப்பான விஷமாக அவன் மனதில் இன்றுதான் இறங்கியது. அவனுடைய மனைவியோ மக்களோ அவன் எழுதியதை வாசிக்கும் பொறுமையற்றிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவன் எதையும் சிறப்பாக எழுதிவிடவில்லை என்ற கசப்பான உண்மை சுண்ணாம்புக் காளவாயிலிருந்து வரும் வெண்புகையாக மூச்சை உறுத்தியது. இனிமேல் அதைத் தொடர்ந்து செய்வதில் எந்தப் பயனும் இல்லை.
வாழ்வின் அடிப்படை வசதிகள் அவனுக்கு இருந்தது என்பதனாலேயே அவனால் மனநிறைவு அடைய முடியவில்லை. இலக்கியத்தைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட விழையும் அவனுக்கு ஒரு ஈ. காக்கா கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று இன்னும் அவனுக்குப் புரியவில்லை. தனிமையில் தனககுள்ளாகவே பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை அவனால் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. எல்லா இடத்திலும் அவன் தனிமைப்பட்டுவிட்டான். எதைப் பேசினாலும் யாரும் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. வயதானவர்களின் புலம்பலாக அது இருந்தது. ஆனால் தான் பேசுவது மிகவும் சரியானது, வாழ்வின் புதிர்களைத் தன்னால் அவிழ்க்க முடியும் என்ற அவனது நம்பிக்கையை வெட்டிக் கனவு என்று மற்றவர்கள் தூக்கி எறிந்து விடுவதை தினமும் கண்டு கொண்டுதானிருந்தான்.
நீ ஒரு புழு கூட அல்ல என்று அவனது மனைவி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவனுக்கு ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தாள். தான் ஒரு ராணி என்பதை முதல் நாளிலேயே நிலைநாட்டிவிட்டு பிறகு அதைப் பற்றிப் பேசாமலே இருந்தாள். இத்தனை ஆண்டுகளில் அவளுடன் அவள் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்பதோ அவள் நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தாள் என்பதையோ நினைத்து அவனுக்கு வருத்தம் இல்லை. ஏனெனில் அவளுடைய கனவுகள் அப்படி ஒன்றும் மகத்தான விஷயங்களைப் பற்றியதல்ல. அவனை வீழ்த்துவதே தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்று அவள் புரிந்து கொண்டிருக்கக் கூடும். தன்னால் நினைத்ததைச் செய்ய ஏன் முடியவில்லை என்பதுதான் அவனுக்குப் புரிந்ததே இல்லை. நீருக்குள் மூழ்குகிறவன் யாரையாவது துணைக்கு அழைப்பது போல வாழ்க்கை முழுவதும் மனமொத்த ஒரு துணையை, அது ஆணோ பெண்ணோ தேடிக் கொண்டிருந்தான். தனித்து விடப்பட்ட சிறுவன் தன் அம்மாவைத் தேடுவது போல யாரைத் தேடி கொண்டிருந்தான் என்பது அவனுக்கே புரியவில்லை. தெருவிலிருக்கும் ஒரு குப்பையைப் போல ஒதுங்கிக் கிடந்தான். எந்த உணர்வும் அற்ற கோழையாக ஒரு ஈரமான துணியைப் போல சுருங்கிக் கிடந்தான். அதை அவன் காதுபட பல வருடங்கள் முன்பு அவனுடைய பெற்றோர்கள் கூறியதும் ஞாபகம் இருந்தது. உயிர்வாழ்வதே ஒரு வதையாகிப் போவதன் கடைசி நிமிடங்களில் அவன் இருந்தான். அன்று முதல் அவன் எதையும் எழுதப் போவதில்லை என்று முடிவுக்கு வந்தான்.
அதற்குப் பிறகு அவன் இல்லாமலாகிவிட்டான்.