இரவு முழுவதும் பெய்த மழையில் மரங்களும் இலைகளும் மனதில் கொஞ்சம் ஈரம் சேர்த்து வைத்துக் கொண்டது. நிலம் தன் ஆடையை கழட்டி மாட்டிக்கொண்டு இருந்தது. நகரத்திற்கு வெளியே சென்றால் ஓலை வீடுகள் குழந்தைகள் கலைத்து போட்டது போல் கிடந்தது. வரிசையில் இல்லை. தெருவும் நிமிர முடியாமல் அதனுடன் வளைந்து கொண்டு இருந்தது. ஊரே விழித்துக் கொண்டு ஓட்டப் பந்தயத்தில் ஓட ஆயத்தமாகியது.
முருகனை அவன் அம்மா உருட்டிய பாத்திரம் ஒன்று எழுப்பியது. விழித்துக் கொண்டு மீண்டும் பகல் கனவில் மல்லியுடன் மிதந்து கொண்டு இருந்தான்.
எப்போதும் பாதி கனவுடன் எழுந்து விடுவான். எதையும் சிந்திக்கக் கூடாது என்பதற்காக தெருவில் இறங்கி அது முடியும் இடத்தில் டீ கடைக்கு சென்றான்.
அவன் வந்தாலே டீ கடையில் கணக்கு தொடங்கிவிடும். டீ மாஸ்டர் எரிச்சல் தரும் வரிகளை நகைச்சுவை என்று எண்ணிக் கொண்டு டீயுடன் சேர்த்து கொடுப்பான்.
இந்த பேச்சுகளை பிற ஒலிகளுடன் சேர்த்து காதுகளுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுவான்.மல்லி எண்ணம் வரக் கூடாது என்று கவனமாக இருந்தாலும் இன்று புதிய புடவை இல்லை பழைய நிறங்களுடன் வருவாளா என்று எண்ணம் வந்து விடும்.
தினமும் பேப்பர் படிப்பது வழக்கம். முக்கியமாக என்ன படம் வெளியாகப் போகிறது என்று தெரிந்து கொள்வான். விபத்து பற்றிய செய்திகள் படிப்பது அவனின் வழக்கம். அவன் அப்பா ஒரு விபத்தில் மூச்சுத் திணறி இறந்து போனார். அந்த மாதிரியான செய்திகளை தினமும் தேடுவது அவன் வாடிக்கை
நல்ல வேலை நேற்று யாரையும் காற்றுக்கு பலி கொடுக்கவில்லை.
அவன் அம்மா மாரி நெத்திப் பொட்டை மறைப்பதற்காக மூன்று குறுக்குப் பட்டை போட்டுயிருப்பாள். கோயில் வாசலில் பூக்கடை வைத்திருக்கிறாள். காலை சென்றால் இரவில் நிலவு ஒளியில் தான் வீடு திரும்புவாள்.அவள் வாழ்வு இரண்டு இடங்களில் அடங்கி இருக்கிறது வீடு மற்றும் கடை.
படித்தது போதும் சாப்பாடு ஒன்றும் வீட்டில் இல்லை கடையில் பார்த்துக் கொள் என்று கூறிய படியே அவனை கடந்து சென்றாள்.
அவனை யாராவது மீண்டும் எழுப்ப வேண்டும் செய்தித்தாளில் இருந்து, தினமும் எவராவது அந்த வேலையை பார்ப்பார்கள்.
செய்தித்தாள் அவனை மல்லி செல்லும் பஸ்சில் போக விடாமல் தடுத்து விடும். சில நாள் மல்லியின் நினைப்பு அவளுடன் பயணம் போக விடும்.
இன்று பார்க்க வேண்டும் அதனால் அவசரம் அவனை ஒட்டிக் கொண்டது.
அவன் கால்கள் ஓடிக் கொண்டே இருந்தது. பஸ் இரயிலை வென்று விடுவது போல் வந்தது. கூட்டம் இறங்கி ஏறும் நேரத்தில் புகுந்து நகர்ந்து நடுவில் சென்று நின்று கொண்டான் எப்போதும் போல்
மல்லியை கூடத்தில் தேடிக் கொண்டே இருந்தான். அவள் இன்று வர வில்லை என்று தெரிந்து கொண்டான். பார்ப்பதை நிறுத்தி விட்டு சிந்திக்க தொடங்கினான். அவளுடைய நிழல் அவனை சுற்றிக் கொண்டே இருந்தது நினைவுகளின் வழியாக.
ஏன் வரவில்லை என்று காரணங்களை தேடிக் கொண்டே இருந்தான்.
கூட்டம் அவனை இறக்கி விட்டது.
எப்போதும் ஒரு கூட்டமாக புறநகர் பகுதியில் வேலைக்கு நீண்ட அகலமான தெருவில் நடக்க தொடங்கினார்கள். ஒரு அரை மணி நேரம் உள்ளே நடக்க வேண்டும் வேலை நடக்கும் இடத்தை அடைய
நேற்று மல்லி வந்தாள். அவள் தோழி சுந்தரியுடன் சென்றாள். ஒரு பத்தடி தூர இடைவெளியில் இவனும் நடந்தபடி யாரும் பார்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
இந்த நாடகம் எப்போதும் நடக்கும்.
படத்தில் நடிகையையே சுற்றி வரும் கேமரா போல் அவன் கண்கள் இவளை மட்டுமே சுற்றி கொண்டு இருந்தது முன்னே செல்ல முடியாமல்.
—–
இரண்டு வீடுகள் சேர்த்தே ஒன்று போல கட்டுகிறார்கள் வாடகைக்கு விடுவதற்காக. மூன்று மாதமாக இங்கு தான் வேலை அது முடியும் தருவாயில் உள்ளது. முருகனுக்கு அடுத்த கவலை வேறு வந்து விட்டது. மீண்டும் வேறு ஒரு இடத்தில் வேலை செய்ய வேண்டும். அவ்விடம் பழக வேண்டும். அது வரையில் ஒன்றும் சொல்ல முடியாது ஓடும் பயணம் இருக்கும். யாராவது எதையாவது சொல்வார்களோ என்று.
எப்போதும் செய்யும் வேலை ஒன்று இருக்கும் அது மாறாது. மற்றொன்று தினமும் மாற்றம் கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும் வீடு எழும் மாற்றம் போன்று வேலையிலும் ஏற்படும். இன்று சுவர்ப் பூச்சு வேலை நடை பெற இருக்கிறது.
நேற்று மல்லி ஆவாரம் பூவை எடுத்து நெய்தது போன்ற சேலையில் மஞ்சள் ஒளியுடன் வந்தாள். அவளை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க என்ன வேலை செய்வது, செங்கல் ஜல்லி உடைப்பது என்று முடிவு எடுத்தான். அவளை பார்த்துக் கொண்டு மலைப் போல் ஜல்லியை குவித்தான்.
முருகன் எந்த வேலை செய்தாலும் சிறப்பாக செய்வது வழக்கம். எனவே மேஸ்திரி எதுவும் சொல்லமாட்டார்.
இன்று மல்லி வராதது அவனை மேலும் வேலையில் இன்னும் வேகம் எடுக்கச் செய்தது. கொத்தனார் சுவர்ப் பூச்சை அவ்வபோது அளந்து பார்த்து கொண்டே பூசினார். இவன் கண்களை கொண்டு சரிபார்த்துக் கொண்டான்.
சரியில்லை என்றால் குறிப்பால் உணர்த்துவான். கொத்தனார் புரிந்து கொண்டு சரி செய்வார்.
ஒரு முறை பெரிய சண்டையே வந்து விட்டது. அதற்கு பிறகு அவன் எப்போதும் வாய் திறப்பதில்லை. கொத்தனார் தான் சரியில்லை என்று சொன்னவுடன் அவனை கடிந்து கொண்டார்.
பிறகு மேஸ்திரி வந்து பார்த்த போது இது சரியில்லை என்று தட்டி விட்டுட்டு சரி செய்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு மேஸ்திரி முருகனை எதுவும் கூற மாட்டார்.
மல்லி வந்து விட்டாள். சுந்தரியுடன் தாமதமாகவே வந்தாள். முருகன் அவளை எட்டி பார்த்துக் கொண்டான். அரளி மலரின் நிறத்தில் சேலையில் சிவந்து இருந்தாள். புதிது என்று கண்டு கொண்டான். இன்று அவள் ஆண்கள் அணியும் சட்டை அணியாமல் சேலையுடன் இருந்தாள். கடவுளை வேண்டிக் கொண்டாள். நன்றியும் சேர்த்து கொண்டான்.
செங்கல் எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருந்தாள். இவனுக்கு இன்று இரண்டு மகிழ்ச்சி ஒன்று அவள் வந்தது பிறகு ஆண் போல் இல்லாமல் பதுமை போல் இருந்தாள்.
மல்லி யாரையும் பார்க்க மாட்டாள் பேசுவும் மாட்டாள். அவள் சுந்தரியுடன் மட்டும் தான் பேசுவாள். முருகன் அவளிடம் பேசிய வார்த்தைகளை எண்ணி விடலாம்.
டீ குடிக்கும் நேரம் மட்டுமே அவளை அவன் முழுமையாக பார்க்கலாம்.
அவனுக்கு அவளை காண வேண்டும் பேசுவது சிரிப்பது எல்லாம் அவன் கனவில் வரவழைத்துக்கொண்டு விடுவான்.
என்ஜினியர் வந்து பார்த்து விட்டு சில திருத்தங்கள் கூறினார். மேஸ்திரி அதை குறித்து கொண்டார். முருகன் அவைகளை மனப்பாடம் செய்து கொண்டான். முருகனை அவன் செய்யும் வேலையின் பொருட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும்.
அவனுக்கு மட்டும் வேலை இல்லை என்று எப்போதும் சொன்னதே இல்லை.
அவனை பார்த்தவுடன் தனக்கு அவர் நண்பர் கொடுத்த திரைப்பட டிக்கட் ஞாபகம் வந்தது. உடனே எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அவர் கொடுத்ததால் ஆர்வம் காட்டி வாங்கி கொண்டான். மேஸ்திரியிடம் சொல்லி அவனை கொஞ்சம் முன்னதாக அனுப்பும் படி சொன்னார்.
அங்கு உள்ளவர்கள் அனைவரும் அவனையே பார்த்து கொண்டு இருந்தனர். சுந்தரி மல்லியின் காதில் ஏதோ கிசு கிசுத்தாள்.
மல்லி உடனே அந்த படத்தை நான் நேற்றே எங்க அக்கா தொல்லை தாங்க முடியாமல் சென்றேன்.
காசு கொடுத்து டிக்கட் மட்டும் வாங்காமல் தலைவலியையும் சேர்த்து வாங்கி கொண்டேன். தூக்கமும் போனது என்று கோபமாக சொன்னாள்.
சுந்தரி ஏமாற்றம் அடைந்தாள். அடுத்து வர போகும் படத்தை பற்றிய எண்ணங்களில் மூழ்கினாள்.
அந்த நாள் வேலைகள் முடியும் நேரத்தை நெருங்கி கொண்டு இருந்தது. முருகன் ஒரு புறம் பயம் மற்றும் கூச்சம். மறுபுறம் இன்று மல்லியுடன் வீடு செல்ல முடியாது என்ற கவலை. அவனுக்கு மல்லி தான் முக்கியம். என்ன செய்வது தன்னுடைய விளையாட்டை விளையாடி வெற்றியோ தோல்வியோ பெற்று கொள்ள வேண்டும்.
நாளை பார்த்துக் கொள்ளலாம் மல்லியை என்று எண்ணி தேற்றிக் கொண்டான்.
ஏற்கனவே ஒரு முறை படத்திற்கு சென்று அங்கு வரும் மக்களை பார்த்து ஒரு பதட்டம் அவனுக்கு ஏற்பட்டது. அவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகளை கண்டு அவனுக்கு தாழ்வு நிலையும் உண்டு.
அவன் எப்போதுமே வெளுத்த கைலி சட்டை முகம் தாடியுடன் மூடியிருக்கும் கண்களில் மட்டுமே ஒளி உண்டு காலில் தேய்ந்து போன ரப்பர் செருப்பு.
எப்போதும் துவைத்த ஆடை தான் ஆனாலும் வெளுத்தது போன்றே இருக்கும்.
மாலை காட்சிக்கு சென்றான் பல வருடங்களுக்கு பிறகு நீண்ட வரிசை நின்று கொண்டு இருந்தது. இவனை ஒரு மாதிரி பார்த்தார்கள். அந்த பாதுகாவலன் ஒரு யோசனையுடன். இவனை உள்ளே அனுப்பினார்கள்
டிக்கட் இருந்தா போகலாம் என்று கூறிக் கொண்டே இருந்தான்.
படம் ஆரம்பித்து விட்டது அதனால் கடுமையான கூச்சல் அதிகமாக வெளியே கேட்டது.
கதவுகள் தன் கைகளை கொண்டு திறந்து மூடி விளையாடியது குளிர்ந்த காற்றும் சேர்ந்து கொண்டது.
கதவிற்கு வெளியே நின்ற அடுத்த பாதுகாவலன்
உன்ன பார்த்தா படம் பார்க்க வந்தது போல் தெரிய வில்லை
எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எதற்கு வம்பு
இங்கிருந்து விரட்டுவதற்கு முன்னே சத்தம் போடாமல் சென்று விடு
என்று யாருக்கும் கேட்காத ஒளியில் கூறினான்.
அமைதியாக.
உடனே முருகனுக்கு வேர்த்து விட்டது ஒரு திருடனை போல் தன்னை உணர்ந்தான். அவன் கால்கள் நடுங்கியது கோபத்தால் எதுவும் பேச முடியவில்லை.
அவனையே எல்லாரும் பார்த்தார்கள்.
அவன் திரும்பியவுடன்
சூப்பர்வைஸ்சர் கூறினார் உங்களிடம் டிக்கட் இருக்கு
படம் பார்க்கலாம்
உள்ள போங்க
கதவை திற
அவர் உள்ளே போற வரைக்கும்
மூடாதே என்று அழுத்தமாக கூறினார்.
இல்லங்க சார் எங்க தெரு பையன் வெளியே நிக்கிறான் டிக்கட்டை நான் கொடுக்காமல் எடுத்துட்டு வந்துட்டேன். அவனிடம் கொடுக்கணும் என்று கூறியபடியே வெளியே வந்தான்.
மீண்டும் அவனையே எல்லோரும் பார்த்து கொண்டு இருந்தனர்.
அவனை அறியாமல் அவன் கால்கள் கண்களை குருடாக்கி விடும் இருட்டை நோக்கி நடந்தான்.
*
நல்ல களம். அதில் ஒரு காதல். மேலும் எதிர்பார்க்கிறோம்.