தாய்லாந்து

 

                  நாங்கள் தாய்லாந்தை ,the land between two thighs’ என்று விளிப்பதுண்டு. அப்படிச் சொல்லும்போதே கிளர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. வெற்றுச் சொல்லிலேயே தூண்டல் உண்டாகிறதென்றால் அந்த நாட்டுக்கே போய் துய்த்தலின் நேரடி அனுபவம் எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம்.

                    என் நடைப் பயிற்சி நண்பர் ராம், “நான் நாளை தாய்லாந்துக்கு போகிறேன் வருகிறீர்களா?” என்றார். 

            ஆண்டுக்கு மூன்று முறையாவது போய்வருபவர். அவருடைய மனைவி எப்போதோ டிக்கெட் போட்டு போய்ச் சேர்ந்தாயிற்று. எனவே அவர் பக்கம் பிக்கல் பிடுங்கல் இல்லை. ராம் பணி ஓய்வெடுத்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. என்னைப் போலல்லாமல் அவருக்குச் சக்கரக் கால்கள் வாய்த்திருக்கிறது. நினைத்த நேரத்தில் பறந்துவிடுவார். எந்த நாடு என்று போய்த் திரும்பிய பின்னர்தான் தெரிந்துகொள்வேன். ராம் போய்வந்த நாடுகளின்  தாய்லாந்துக்கும் போனதே  அதிக முறை இருக்கும். அவர் அவ்வாறு கேட்கும்போது நான் ஒரு முடிவைச் சொல்ல முடியாமல் எச்சிலை விழுங்கும் தொண்டை குழி அசைவைப் பார்த்து, “ஏன்யா பொண்டாட்டி விடமாட்டாளா? அவங்ககிட்ட சொல்லிட்டு வர மனசுல தில்லு இல்லையா?” என்று நக்கல் அடிப்பார். 

 “போற எடம் சரியில்லையே அவங்கள் எப்படி கேக்குறது? என்பேன்.

“உம்மேலேயே உனக்கு நம்பிக்க இல்ல ல? பொண்டாட்டிக்கி பயந்தவன் யா நீ.” நட்பின் அந்நியோன்னியம் கருதி அவ்வாறான ஆளுமைக் கொலை சொற்களை மன்னித்துவிடுகிறது மனம். ஆனால் எனக்குள்ளிருக்கும் என்னை அச்சொற்கள் துருவிக்கொண்டுதான் இறங்கியது.

“என்னாய்யா வரீயா இந்த தடவையாவது?” என்றார் மீண்டும். அவர் என் மீது கொண்டிருந்த அபாண்டமான அபிப்பிராயம் பொய்க்க “வரன்யா” என்று சொல்லிவிட்டேன் ஒரு வேகத்தில்.

      ஆனால் மனைவியிடம் சொல்லிவிட்டுக் அவரோடு கிளம்புவது பெரும்பாடாய்ப் போனது. நம்பும்படி சொல்கின்ற பொய்கள்கூட கலைதான். அதாவது இந்த ஆளு வாயிலிருந்து மருந்துக்குகூட உண்மையே வந்ததில்ல என்று நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்ட இனையாளிடம், சரியான தருணத்துக்குக் காத்திருந்து , சரியான பாவனையால், சரியான சொற்களால் துளியும் சந்தேகம் எழாமல் நம்பும்படியான ஒன்றைச்சொல்லி அனுமதி பெறும்போது அது அபாரமான கலையாகிவிடுகிறது.   அவளோடு வாழ்ந்த அனுபவத் திரட்சியில்  கைவந்த கலை அது என்றும்கூட சொல்லிக்கொள்ளலாம்.! .

       மலேசியாவின் கெடா மாநிலத்திலிருந்து தாய்லாந்துக்குள் நுழைய எனக்குத் தெரிந்து மூன்று வெவ்வேறு இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றுள் புக்கிட் காயு ஹீத்தாமில் ஒன்று, இரண்டாவது வாயில் பேராக் மாநிலத்தின் புந்தோங் வழியாகக் கடப்பது. அவர் தேர்ந்தெடுத்த்து கெடா மாநிலத்தின் அண்டை மாநிலமான பெர்லிசுக்குச் சென்று பாடாங் பெசார் சுங்கச்சாவடியைக் கடந்து தாய்லாந்தை  அடையும் வழி. எளிமையான பயணப் பாதையும்கூட! அதற்குச் சுங்கப்பட்டாணியிலிருந்து ரயில் ஏறி பாடாங் பெசாரை ஒரு மணி நேரத்தில் அடைந்துவிட்டோம். 

    ரயில் பாடங் பெசாரில் நின்றது. அங்கிருந்து தாய்லாந்துக்குப் பிறிதொரு ரயிலேறி தாய் மண்ணின் முதல் சொர்க்க வாசலான ஹட்யாயில் இறங்கிவிட்டோம். 

  அம்மண்ணில் கால் பதிந்ததும் உள்மனம் அதீதமாய் உசுப்பப்பட்டு தேவலோகத்துக்குள் நுழைந்துவிட்டதுபோன்றதொரு உணர்வுநிலைக்குத் தள்ளியது. 

      நிலச்சூழலில் மலேசியாவுக்கும் தாய்லாந்து ஹாட்யாயிக்கும் பெரிய வேறுபாடு இல்லையென்றாலும் கண்ணில் படும் பெண்களெல்லாம் ஆடவர்களின் உள்ளாசையைக் கிளர்த்தும் கண்ணுடையவர்கள் போலவே தென்படுவது மட்டுமே ஒரு விஷேச வேற்றுமை!. அப்படி உன்னிக்கின்ற கண்கள் எனக்கு வாய்த்தது அந்த நிலத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது தோன்றும் பொதுவான அபிப்பிராய பாதிப்பே. அது போன்ற உணர்வை நான் வேறு நாடுகளுக்குப் போகும்போது எதிர்கொண்டதில்லை. மனம் தன்னிச்சையாய் அழுக்கேறி துப்புறவின்மையில் விசைகொண்டு இயங்குவதைத் தவிர்க்க முடியவில்லை!  இது  வெறும் பிரம்மைதான்! அந்த பிரம்மைக்குள்தான் எத்தனை இன்ப உள்ளுரசல்கள்!

        ஹட்யாயில் அவர் என்னை அழைத்துப் போன முதல் ஸ்தலம் ‘திவ்விய’ தரிசனம் கிடைக்கும் இடம். ஆம் தாய்லாந்திலன் ‘திவ்விய ஸ்தலங்கள்’ இவைதான் என்று அந்நியப் பயணிகளின் திரண்ட வருகையே ஒரு சாட்சி! தாய்லாந்தின் முதன்மை வருமானம் வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து வருவது, அதிலும் பிரத்தியேகமாச் சதைச் சந்தைகளின் காந்த ஈர்ப்புப் புண்ணியத்தில் அந்நியச் செலாவணி அட்டகாசமாய்க் குவியும்  பெருவணிகத் தளம் இது.

       தாய் இளம் பெண்களெல்லாம் ஏன் என் கண்களுக்கு இச்சையைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்கள்? நல்ல வேளையாக இறைவன் மனிதனுக்குள் தர்க்க புத்தி என்ற ஒன்றையும் இணைத்திருக்கிறான். அவர்கள் அந்த வகையறா அல்ல என்று பிறடியில் தட்டிச்சொல்ல!

      ஆதி இச்சையை நாம் வலியுறுத்தி வரவழைத்துக்கொள்கிறோமா என்ன?. அது தானாய்த் தோன்றுவது. தீயில் தோய்ந்தாலும் சாம்பலைத் தூசுதட்டித்  மறு பிறப்பெடுத்துத் துடிக்கும் மரபணுத் துகல் அல்லாவா மானுடம்!

      ராமுக்குப் மிகப் பழக்கப்பட்ட இடம் அது என்று அவர் தடையில்லாமல் கால்கள் பாவிப் பாவி சென்றுகொண்டிருந்த போதே ஊர்ஜிதமானது! நான் எஜமானனின் பின்னொட்டி ஓடும் நாய்க்குட்டிபோல பின்னால் தொடர்ந்தேன். 

“எங்கய்யா போற?”

“சும்மா வாய்யா. அங்க போனா ஒனக்குத் தானத் தெரியும்,” என்று புதிர்த்தன்மையைக் கிளப்பி ஒரு கள்ளப் புன்னகையை உதிர்த்தார். அப்போது அவரின் முகம் தேஜஸின் பிரகாசத்தைக் கொண்டிருந்தது.

நடையில் எப்போதுமற்ற தாவல். 

அவ்விடம் ஊடுவழிகள் நிறைந்து நெரிசலாக இருந்தது. இருவர் கைகோர்த்து நடக்கும் அளவுக்கே அகலம் கொண்ட குறுகலான சந்துகள். ஒரு சந்து வழியாக நுழைந்து இன்னொரு சந்து வழியாக திரும்பி, மீண்டும் மறு வீதிக்குள் நுழையும் சிக்சேக் (zigzag) வீதி அமைப்பு. இப்படி எத்தனை ஊடு பாதைகள் என்று கணக்கிடும் யத்தனத்தை அங்கே விற்கும் பலான பொருட்களின் மீதான கவன ஈர்ப்பால் கண்டிப்பாய்க் கலைந்து போகும். இந்த நாட்டுக்கு வந்தது வீதியின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவா என்ன?

பாலியல் வீர்ய மாத்திரைகள் பல வடிவங்களில், பல வண்ணங்களில் இருந்தன. தடவிக்கொள்ள தைலப் புட்டிகள், அவை ஆண்குறி வடிவம் கொண்டிருந்தது இன்னொரு விசேஷம். அவற்றின் சிருஷ்டி கர்த்தாவின் புனைவுத் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது, தெம்பேற்றிக்கொள்ள ஊசி வகை சிரிஞ்சுகள். பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் வீடியோக்கள், வீடியோ மேலட்டையில் அப்பட்டமான புணரும் பிம்பங்கள், ஆணுறைகள், மரத்தாலான ஆணுறுப்பு வடிவங்கள், ரப்பர் யோனி பொம்மை வகையறாக்கள் , எல்லாவற்றையும்விட துணையைல்லாமல் சுயமாயச் சுகம் அனுபவிக்க கண்டுபிடிக்கப்பட்ட கைக்கு வாட்டமான பேட்டரியில் இயங்கும் சிறு சிறு வைப்ரேட்டர்கள். அதனைவிடவும் கிளர்ச்சியூட்டக்கூடியது அந்தக் கடைகளில் விற்பனை முகவர்கள்  அத்தனை பேரும் இளம் பெண்கள்! கூச்ச நாச்சம்  அறவே இல்லாமல் வாடிக்கையாளர்களைத் தங்கள் கடைக்கு ஈர்க்கும் அவர்கள் வியூகங்கள் என்னை வெட்கமூட்டின. என்னைப்போன்ற சாமான்ய இதயங்களுக்கு இவை இரட்டிப்பு அழுத்தங்கள் தரக்கூடியவை. இதுபோன்ற இடங்களுக்கு  முதல் முறை அங்கே விஜயம் செய்யும் ஆண்களுக்குத்தான் அவர்கள் வாழ்நாளில் அனுபவித்தறியாத கூச்ச சுபாவத்தைத் இரட்டிப்பாக்கும்! ஆனால் இந்தப் பெண்களுக்குச் கூச்சம் என்றால் கிலோவுக்கு என்ன விலை என்று கேட்கும் நாணமேறா முகங்கள்! அவர்கள் உடுத்தியிருக்கும் உடை கூட வணிக நோக்கம் கொண்டததுதான். அடித்தொடையைக் காட்டும் சின்ன கால்சராய். விம்மும் மேலாடை அணிந்த டூ பீஸ் வகையறாக்கள். பதாகைகளில் புன்னகைக்கும் விளம்பரப் பெண்கள் தோற்றுவிடுவார்கள்.  தொண்ணூறு விகிதம் திறந்த மேனி சகிதம். அல்லது பார்ப்போரை பார்க்கக்கூடாத இடத்தை பார்க்கவைக்கும் வில்லங்கத் தோற்றம். கண்கள் என்னவோ பசித்த ஆடுபோல மூடிய இடங்களையே தேடி மேய்ந்துவிடுகின்றன.

வாடிக்கையாளர்களை அடுத்த கடைக்குப் போகவிடாமல் அவர்கள் விற்கும் பொருட்களின் ‘வீரதீர பிரதாபங்களை’ சைகையால் சொல்லிக் காட்டுவதும் அவர்களுக்கும் இயல்பாகிப்போயிருக்கிறது! அவர்கள் மொழி நமக்கு எட்டாக் கனி! எதற்கு மொழி புரிய வேண்டும்?. மொழிக்கு அங்கே ஒரு துணுக்கிடம்கூடத் தேவையில்லை. மொழியால் பயனேதுமில்லை என்று உறுதிப்பாடு ஆந்த ஆதி மனிதத்  தொடர்புச் சாதனமான சைகையே போதும். இந்த வணிகத்துக்கு மொழியைவிட சைகையே வலிமைமிக்கது. வேறு கடைக்கு நகருமுன்னர் கைகளைப்பற்றி ஸபரிச ஈர்ப்பை உண்டாக்குவார்கள். பொருட்களை விற்கும் உபாயம் மட்டுமே இது என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை! நான் ஹாட்யாய் நகர்த் தெருவில் பார்த்த பெண்களைப்பற்றி அபிப்பிராயம் தப்பாய் இருக்கலாம். அது மக்கள் புழங்கும் பொது இடம். விரிந்த தெரு. வயிறாதாரம் நோக்கி விரையும் கால்கள்! ஆனால் இந்தச் சந்தடி சூழலில் விற்பனை முகவர்கள் அவர்கள் மெய்ப்பாடுகளால் ‘அந்த எண்ணத்துக்கு’ அதீத கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறார்கள். எவ்வளவு பெரிய அளவில் வியாபாரம் நடந்தால், இதற்கென்றே இவ்வளவு பெரிய கடைத்தெரு விஸ்த்தரித்திருக்கும்!

அடுத்த கடைக்காரி வாடிக்கையாளர் அவள் கடைக்கு வரும்வரை ஆவலோடு காத்திருப்பாள். அவளும் ஸ்பரிச வணிக உத்தியை நம்மீது பாவிப்பாள்.

ராம் ஒவ்வொரு கடையாக நின்று விலையையும் தரத்தையும் விசாரித்துக்கொண்டிருந்தார். அவர் தீவிரமாகத் தேடும் பாலுணர்வைத் தூண்டும் மாத்திர வகையை இன்னும் கண்டடைய முடியவில்லை. 

அவ்வப்போது என்னைப் பார்த்து கோலாலாம்பபூரிலுள்ள என் நண்பனுக்காக வாங்குறேன், “கிட்டத்தில தான இருக்க வாங்கித் தபாலில் அனுப்பிருய்யா” என்று தொல்ல பண்றான்,” என்றார்.

“என்கூட சின்ன வயசில படிச்சவன்”.என்றார் கூடுதலாக.

“இது உள்ளபடியே வேல செய்யுமா?” என்று கேட்டேன். அவர் அப்போது ஒரு  மாத்திரை வில்லையை திருப்பித்திருப்பிப் உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“வேல செய்யாமையா… அடிக்கடி வாங்கி அனுப்புறேன்? அவனுக்கு எப்போதும் வாங்கித் தரும் பிரேண்டை தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்றார். அவர் பாக்கெட்டில் அந்த பிரேண்ட் அட்டையை வைத்திருந்தார். ஒவ்வொரு வில்லை எடுக்கும்போது இரண்டையும் அருகருகே வைத்து ஒப்பீடல்கள் நடந்துகொண்டிருந்தன. 

“அவர் இந்த வீர்ய வஸ்துவைப் பற்றி என்ன கமெண்ட் சொன்னார்?” ஆர்வம் பொங்கக் கேட்டேன். 

ராம் என்னைப் பார்க்காமலேயே தம்ஸ் அப் செய்தார்.

அச்சந்துகளில்   பெரும்பாலும் அந்நிய நாட்டினர்களே மொய்த்தனர்!. அவர்களில் கருப்பர்களே அதிகம். இங்கே வரும் அந்நியர்கள் இங்குள்ள பெண்களை லிவிங் டுகெதருக்கு இணைத்துக்கொள்ள தங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டு செல்வார்கள். தாய்லாந்துப் பெண்களும் அதற்கு உடன்பட்டுவிடுவார்கள். தாய்லாந்து ஒரு மூன்றாம் உலக நாடு. வெள்ளையர் நாடுகளின் பணம் கொழிக்கும் என்பதே இதற்குக் காரணம் எனக் கொள்ளலாம்.

ஹட்யாயில் ஒரு நாள் இரவைக் கழித்தோம். ராம் வேறெங்கும் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கச் செல்லவில்லை.பெரிதாய் வேறெந்த ஜோலியும் இல்லை. ராம் வந்த நோக்கும் அப்பொருள்களை வாஙக மட்டுமே என்பது பயணம் முடிவுறும்போது தெளிவானது.

விடுதி அறைக் கதவைத் தட்டிக் கூட அழைப்பு வரும். விடுதி அறை லேண்ட் லைன் தொலைபேசியில் அநாமதேய அழைப்பு வந்துகொண்டே இருக்கும்.  ரிசெப்சனில்கூட தரகர்கள், விலை சொல்லி வெளிப்படையாய்க்கூடக் கேட்டார்கள். அப்போதும் அவர் அசையவில்லை! 

“வேண்டாம் யா, தெரியாத பெண்ணிடம் மாட்டிக்கொண்டால் நோய்த்தொற்று வரும். பட்டதே போதும்!” ராமின் குரலில் அந்தக் கடைசி இரண்டு வார்த்தைகள் அவர் தப்பிப்பிழைத்த ஒரு வரலாற்றில் புதைந்துபோன அனுபவத்தைக் கிளர்த்த, அகழ்வாராய்ச்சிக்கான ஆர்வத்தை மூட்டியது எனக்கு! நான் அவரை வியப்பு மேலிட நோக்கினேன். என் விழிகளின் தோன்றிய வியப்பு அவரையும் ஆர்வமூட்டியிருக்க வேண்டும். அந்த விபரீத அனுபவம் அவரிடமிருந்து கசியத் தொடங்கியது. 

விடுதி அறையில், தலைக்கு அடியில் கைகளைக் கோர்த்து, விட்டத்தைப் பார்த்தபடி “பதினெட்டு பத்தொம்போது வயசுல….. வயசுக்கோளாறு எல்லாருக்கும் இருக்கத்தானே செய்யும். ஒரு கெட்ட நண்பன் சகவாசம்,” என்று சற்றே நிறுத்தி, “சகவாசம்னு அவன் மேல பழியப்போடுது பத்தியா  மனசு.. எனக்கு அப்போ புத்தி எங்க போச்சின்னு நானே என்ன இப்போ கேட்டுக்கிறேன்!” என்றவுடன், தலையனையை முதுகுக்குப் பின்னால் கொடுத்த சாய்ந்திருந்த என்னை கொஞ்சம் நிமிர வைத்தது.  “சிவப்பு வெளக்குப் பகுதிக்குக் கூட்டிட்டுப் போனான் படுபாவி, அவனுக்குன்னு ஒன்னத் தேர்ந்தெடுத்திட்டு, எனக்கு ஒன்ன தள்ளிட்டு போய்ட்டான். எனக்கான பணம் அவந்தான் கட்னான். “டேய் காசு கட்டிட்டேன் பாலாக்கிடாத!!” என்று வேறு எச்சரித்தான்.அதுக்குப் பதிலா, பாலாகிடாதேன்னு சொல்லியிருக்கலாம். நண்பனாச்சே அப்டிச் சொல்லுவானா?   அது முடிஞ்சி ஒரு வாரத்துலன்னு நெனக்கிறேன், அங்க வலியும் அரிப்பு உண்டாயி மூத்ரம் மஞ்சளா போனிச்சி. அங்கெல்லாம் சொத சொதன்னு ஆயி, ஜலம் வர ஆரம்பிச்சிடுச்சி. அப்றம் மறூநா  வீங்கிடுச்சி, மூத்ரம் போம்போது சொல்லமுடியாத வலி, நான் பதறிப்போயி, டாக்டருக்கிட்ட போனேன்.” 

      “ ஏண்டா மூஞ்சில மீசகூட சரியா  மொலைக்கல, அதுக்குள்ள எங்கடா போய்ட்டு இத ஏத்திட்டு வந்து நிக்கிற?” என்றார் டாக்டர். “எத டாக்டர்?” என்று கேட்கும்போதே எனக்குப் பதற ஆரம்பித்துவீட்டது.”

      “சௌகிட் ரோட்டு பக்கம் எங்கியும் போனீயா மாப்ல?’ என்றார் கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்து. 

     “எப்படி இவ்ளோ சரியாச் சொல்றார்னு மலச்சிப்போயி, மானமே கப்பலேறுதேன்னு, வெக்கத்தோடு தலையாட்டினேன்.

      “இது பயங்கரமான வெனரல் டிசீஸ். ஸ்கின் தொற்று. கொனோரியான்னு பேரு.” என்றார். இங்க வராம்மா அப்டியே வுட்டுடேன்னு வச்சிக்கோ, மவனே ஒன் ஜாமான்  இத்து வுலுந்திருக்கும்.”  என்றார் ஒரு நான்கு அங்குல ஊசியை ஏற்றியபடி. ஊசி வலியைவிட,  அடிக்குடல் நடுங்குவதை அப்போது உணர்ந்தேன். கூடவே தடவ மருந்தும் உட்கொள்ள மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினார். டாக்டர் என்ன பயங்காட்டாம இருந்திருந்தா, நான் இன்னிக்கி ஒன் முன்னால பாடுத்துகிட்டு பேசிக்கிட்டிருக்க மாட்டேன்,” என்றார். அந்த நோய் அவரைக் கடுமையாக எச்சரித்து விடுவித்தது இன்றைய தேதிவரை உஷார்படுத்திக்கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அது குறிவைத்துத் தாக்கிய இடம் அப்படி!.

ராம் தன் சுய சரிதையின் உயிர்நாடியைத் தொட்டுச் சொன்னபோது, உல்லாசத்தை வாரி வாரி வழங்கும் ஹாட்யாயின் பலான பலான பகுதியை ஏன் வெறுக்கிறார் என்று அழுத்தமாகவே புரிபடத் தொடங்கியது எனக்கு. 

வர் தனியாள் என்று சொன்னேன் அல்லவா? அதனால் மாலையை மயக்கப் பொழுதாக மாற்றிக்கொள்ள மாதம் ஒரு முறையாவது அவர் வீட்டுக்குச் செல்வதுண்டு.  இம்முறை நான் தாய்லாந்தில் வாங்கிய வோட்காவை எடுத்துக்கொண்டு அவர் இல்லம் போனேன்.

முதல் பெக் முடிந்திருக்கவில்லை, ஒரு நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட மாது ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் அந்தத் தாமானில் குடியிருக்கும் பெண்ணாகவே இருக்கவேண்டும். வீட்டு உடையில் மிகச்சாவகாசமாக நுழைந்தது போல இருந்தது. மேடு பள்ளங்களை கலையாமல் இருந்தது. கைலிக்கு மேல்  டி சர்ட் பிடிப்பு  திரட்சி.

என்னைப் பார்த்ததும் “ஓ நீங்க புனிதன் சாரா? ராம் ஒங்களப் பத்தி எங்கிட்ட நிறைய சொல்லி இருக்கார்,” என்றார்.

நான் ஒரு புன்னகையை மட்டும் துளிர்த்தேன். ரகசியமாக மது புழங்கும் இடத்தில் எனக்கு அறிமுகமே அற்ற எதிர்பாலினர் ஒருவரின் திடீர் பிரசன்னம் சற்றே அந்நியமானதொரு அசூசையை உண்டாக்கி வார்த்தைகளை வரளச்செய்துவிட்டிருந்தது.

“சரி சரி  எஞ்சோய் பண்ணுங்க,” என்று சொல்லி உடனே புறப்பட்டுவிட்டார்.

ராம் எனக்கு அவரை அறிமுகம் செய்யத் தோணவில்லை போலும்! அதற்குள்தான் அவர் புறப்பட்டுப் போய்விட்டாரே!

அந்த இரண்டு மணி நேர அமுதாபிஷேகப் பொழுதில் அந்தப் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை ராம்.

நானும் கேட்கவில்லை. 

             

தாமான்= வீடமைப்புப் பகுதி

                     ……………………………………………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *