பொற்கணம்

 

உன் வருகைக்கு முன்பு இவ்வுலகம் வேறொன்றாக இருந்தது. ரயில் சலித்தும் அலுத்தும் ஊர்ந்து கொண்டிருந்தது. ஜன்னலின் ஊடாக பாய்ந்தோடிய காட்சிகளில் புதிதாக ஒன்றுமே இல்லை. செல்போனின் சக்தி குறைந்த பிறகு நேரத்தைக் கொல்லும் வழி தெரியாமல் விரைந்தோடும் காட்சிகளை வெறித்துக் கொண்டிருந்தேன். கண்களை மூடி துாங்கலாம் என்றாலும் மனம் விழித்துக்கிடந்தது.

நேற்றிரவு குடி. குடித்தால் மட்டுமே உற்சாகம் பீறிடுகிறது. குடி ஒன்றே கொண்டாட்டம் என்றாகிப்போனது. வசைகளாகப் பொழிந்து தள்ள முடிகிறது. அனைத்தையும் துாற்றி அவதுாறு செய்து புழுத்துப்போன சொற்களால் அசிங்கப்படுத்திவிடலாம். மது எனக்களிப்பது கீழ்மையில் தயக்கம் ஏதும் இன்றி உருண்டு புரண்டு எழுந்துவிடும் முழுச்சுதந்திரத்தை. என்னிடம் நல்லதாக எதுவும் இல்லை. தோற்றுப்போனவன் என்பதால் கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதும் இயலாத காரியம். நிகழ் காலத்தில் நான் உயிர் பிழைத்திருக்கவே போராட வேண்டியிருக்கிறது.

கோட்டயத்தில் ரயில் நின்றது. சுவாரசியம் இன்றியே நடைமேடைகளைப் பார்த்தேன். பெண்களை ரசிப்பதில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன் நான். அவர்களின் நிமிர்வு என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும். ஒரு யுவதி அந்த நிசியிலும் கால்மேல் கால்போட்டு செல்போனை  நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அங்கணம் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் அல்குல் குறித்த யூமா வாசுகியின் ஒரு கவிதை எனக்கு நினைவு வந்தது. ஒரு கணம் என் கண்களைச் சந்தித்த பின்னர் மீண்டும் பழைய சயனம். காதோர ரோமங்களை இடது கையால் அவள் பின் தள்ளிய லாவகம் என் வாழ்நாள் நினைவு. வண்டி கிளம்பிய போதுதான் நீ விரைந்து வந்து ஏறினாய். முதலில் என்னை ஈர்த்தவை உன் முலைகள். நீ ஆபாசமாக எடுத்துக்கொள்ள மாட்டாய் என்கிற நம்பிக்கையில்தான் நான் உண்மையைச் சொல்கிறேன். உன் கனத்த முலைகள் நாவூறச் செய்தன. அவை நீ வந்த வேகத்தில் குலுங்கின. தளும்பி நின்றன. தாய் மடியை முட்டி மோதும் பன்றிக்குட்டிகள் போலிருந்தன. மூச்சுவாங்க நின்று உன் பெட்டிகளை என் தலைக்கு மேலே நீ வைத்த போது நான் மிக அ ருகே அவற்றைக் கண்டு ஏங்கிப் போனேன். முலைகளின் வெக்கையை மிக அந்தரங்கமாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.  நீ அணிந்திருந்த டீ சர்ட்க்குள் அவை கொண்டிருந்த சுதந்திரம் என்னை உன் அடிமை என்றாக்கியது. அதன் பின்னர் தான் நான் உன்னை ஏறிட்டேன். முதல் கணமே ஆ..பேரழகி என்று தோன்றியது. நீ மூவாற்றுப்புழாவில் இறங்கிச் சென்று என்னை ஒருகணம் உற்றுநோக்கி இருளுக்குள் மறைந்து செல்லும் வரை ஆ..பேரழகி என்ற வியப்பில் உருப்பெருக்கம்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதோ இன்று இங்கே அமர்ந்து இதை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட எனக்கு அந்த பொற்கணத்தைத் தொட்டு உணர்ந்து பரவசம் கொள்ள முடிகிறது.

வாழ்க்கையில் பொற்கணங்கள் அன்றாடம் அமைந்து விடுவதில்லை. நீ என் வாழ்வின் ஒரு பொற்கணம். ஏன் அப்படி என்று நான் அதன்பின்னர் பலமுறை கேட்டுக் கொண்டேன். உன் நிறம் கருப்புதான். உன் அருகிலேயே செக்கச் சிவந்த ஒரு யட்சி அன்று நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த போது தோன்றாத பரவசம் உன்னிடம் நான் அடைந்தேன். அதன் காரண காரியங்களை நான் தொகுத்துக்கொண்டேன்.

நீ என்னுடைய பெண்களில் யாரையோ கொண்டிருந்தாய். உன் உதடுகள் காலாதீதமான சிற்பங்களுக்குரியவை. குவிந்தும் இடையில் மெலிந்தும் நீள் கோடு போன்ற விளிம்புகளும் கொண்டவை. அதன் செந்நிறம் சாயந்திரத்தின் சொற்ப ஒளியிலும் பொன்னென ஒளிர்ந்தன. உன்னுடல் கொழுத்திருந்தது. முலைகள் மட்டுமின்றி கன்னக்கதுப்புகள்,வெளித்தெரிந்த கைகளின் பாகங்கள். பின்புறத்தின் மேடுகள் என அனைத்தும் சதைத்திரண்டு பூரித்து இருந்தன. எங்கேயும் வறுமை இல்லை. அத்தனை சதைகளை நீ கொண்டிருந்தது உன் பெருங்கருணை என்றே என் உள்ளம் நம்பியது. கொண்டாடியது. உன் அணைப்பிற்காக உண்மையில் ஏங்கியது.

காதுகளை மட்டுமே அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றின் அபாரமான இருப்பு  ரீங்கரித்துக்கொண்டு இருக்கச் செய்தது. காது ரோமங்கள் காற்றில் ஆடின. சுருண்டும் நெளிந்தும் பறந்தன. நீ செல்போனைத்திறந்து காதுகளில் கேட்கும் கருவிகைளைப் பொருத்தி வேறொரு உலகத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டாய். உன் உலகத்திற்குள் என் இருப்பு இடைஞ்சலாக அமைந்து விடக்கூடாது என்பதில் நான் மெனக்கெட்டேன். நான் உன்னை ஆராதிப்பவன். உன் அழகின் மது உண்டு கிறங்கிக் கிடப்பவன். என் வாழ்வின் பொற்கணங்களில் ஒன்றை வழங்கிய தேவதை நீ. உன் இருப்பே நீ எனக்கு வழங்கிய வரம்.

உன் முன்னர் தான் என்னை நான் அசிங்கமாக உணரத் தொடங்கினேன். என்னுடலைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறேன். நாற்பத்தைந்து வயதிற்குள் நான் ஐம்பதைத்தாண்டிய உடலைக் கொண்டிருந்தேன். தொந்தியும் குடியால் ஊதிப்பெருத்த கன்னங்களும் என்னை அகோரமாக மாற்றியிருந்தன. நாற்பது வயதிற்கு மேல் என்னுலகில் இச்சைகளைத் தவிர வேறு ஒன்றுமே நிலைத்திருக்க வில்லை. பெண்ணுடலுக்கும் ருசியான உணவுகளுக்கும் சதா போதையில் ஆழ்ந்திருப்பதற்கும் மட்டுமே என் மொத்த இருப்பும் ஏங்கித் தவித்தது. கிடைத்த அனைத்தையும் தின்று கொழுத்து விட்டேன். குடியும் குடி போதையில் நான் உள்ளே திணித்த ஊன் உணவுகளும் என்னை விகாரம் ஆக்கிவிட்டன. நீ என்னைப் பார்த்தும் சீண்டப்படாமல் போக அது வே காரணம்.

என் நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்தது.  எதாவது செய்து உன் கவனத்தை ஈர்க்க முயன்றேன். தலையை ஆட்டினேன். கண் இமைகளை வேகமாக அடித்துக்கொண்டேன். கால்களை நீட்டி மடக்கினேன். மெல்லிய குரலில் ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்தேன். உன்னால் பரவசம் அடைந்து தவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்பதே என் நோக்கம்.

உன் முகத்தில் கணந்தோறும் பலநுாறு பெண்களின் முகங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. கற் சிற்பம் ஒன்று உயிர் பெற்று என் முன்னே நிற்பதாக நினைத்துக்கொண்டேன். உன் முன்னே யுகங்கள் பல கடந்து சென்றன. யுகங்களாக நீ இந்த வாழ்க்கையின் பல்வேறு கோலங்களை பார்த்துக் கொண்டிருக்கிறாய். யுகங்களாக உன் முன்னே மண்டியிட்டு மதி மயங்கிய ஆண்களின் கண்களையும் நினைவில் கொண்டிருக்கிறாய். யார் கண்டார் உன்னால் வீழ்ந்த ராஜ்ஜியங்களும் பேரரசுகளும் சென்ற யுகங்களில் மண்ணிற்குள் மறைந்திருக்கலாம். நிலைத்த உன் புன்னகை இயற்கையின் பேரெழில். இயற்கையின் முன் சொற்கள் அற்று நிற்பதைப்  போன்று உன் முன்னே நான்.

உலகம் பொல்லாதது. சூதுகளும் சூழ்ச்சிகளும் கொண்டது. பொய்மையை தன் உடலெங்கும் ஈசிக்கொண்டிருப்பது. யோக்கியத்தனங்களை மிகக் குறைவாக பாவித்துக்கொண்டிருப்பது. சுயநலத்தின் வேர்களால் கட்டுண்டது.அனைத்துக் காரியங்களுக்குப் பின்னும் லாப நட்டக்கணக்குகளைக் கொண்டிருப்பது. மெல்லுணர்வுகளுக்கும் கவித்துவக் கணங்களுக்கும் அர்த்தமற்றது. பொருளற்ற வாழ்க்கையை பொருள்களை அள்ளிப்பதுக்குவதன் ஊடாக கனப்படுத்த விழைவது. நுண்ணுணர்வு கொண்ட ஒரு உள்ளம் இவ்வுலகத்தை கண்டு கணந்தோறும் துக்கித்து இருக்கவே சாத்தியம். நானும் அவ்விதம் ஆகிப்போனேன். என்னுள்ளே எப்போதும் பிறர் மீதான சுடுசொற்கள். என் இயல்பில் இல்லாத பல ஆயுதங்களை கைக்கொள்ள நிர்ப்பந்தித்த இந்த உலகத்தின் மீது எனக்குத் தீராப் பகை. பெண்ணே..உன் முன்னே மட்டுமே நான் சற்று இளைப்பாறுகிறேன். என் துயரங்களை மறந்தேன். என் படைக்கலங்களை ஓய்வில் இருக்க விட்டேன். பீறிடும் குரோதச் சுனைகளை தற்காலிகமாக துார்ந்து போகச் செய்தேன். விச்ராந்தியாக இரு விச்ராந்தியாக இரு என உள் இளக்கம் அடைந்து ஓய்ந்து இருந்தேன்.

ஊர் திரும்பியதும் என் அன்றாடம் மீண்டும் என்னை வந்து ஒட்டிக்கொள்ளும். ஒரு அரசு அலுவலகத்தின் குமாஸ்தா நான். ஊரின் சிக்கல்களை எல்லாம் இனங்கண்டு தீர்வுகள் இருக்கும் புலங்களை நோக்கி தள்ளிக் கொண்டிருப்பவன். நல்லதும் தீதும் என ஓராயிரம் ஓலங்களில் அன்றாடம் உழன்று கொண்டிருப்பவன். உச்சபட்ட நெருக்கடிகளால் என் அகம் சீழ்பிடித்து நாறிக்கிடக்கிறது.  குமாஸ்தா உலகில் மென்னுணர்வுகளுக்கு இடமே இல்லை. அதிகாரங்கள் மேலும் கூடுதல் அதிகாரங்கள். அடைந்த அதிகாரங்களை நிலைத்து நிற்கச் செய்ய தேவைப்படும் சூதுகளும் துரோகங்களும் என மனிதக் கீழ்மைகள் நிறைந்த உலகம் அது. அதில் வாழ விதிக்கப்பட்டுள்ளது எனக்கு. அதில் இருந்து நான் வெளியே வந்துவிடலாம். ஆனால் இன்று கிடைக்கும் உத்தரவாதங்களை நான் உடனே இழக்க நேரிடும். குமாஸ்தா உலகில் சில ஆறுதல்கள் இருக்கின்றன. வெள்ளெமென அனைத்தையும் இழுத்துச் செல்லும் இன்றைய நாட்களில் நான் ஒரு புள்ளியில் நிலைத்திருக்க அந்த பணி அவசியம். அல்லாது போனால் நான் பசித்தும் தாகித்தும் புழுத்துச் சாகவும் வேண்டி இருக்கும். மிகப் பெரிய மடத்தனம் என்றாலும் எனக்கு வேறு தேர்வு இல்லை.

ரயில் நின்றது. இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும் போல. ரயிலில் கிடைத்த சப்பாத்தி முட்டைக்கறியை எழுபது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டேன். உன் முன்னே அமர்ந்து உண்பதை நான் விரும்பவில்லை. நீ இவ்வுலகின் நெருக்கடிகள் தீண்டாத ஒரு பொன்னுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாய். உன் கண்கள் மூடியிருந்தன. உன் உதடுகளை நான் உற்றுக்கவனித்தேன் அவை உள்ளே முறுவலித்து வெளியே சிந்திவிட தயாராக இருந்தன. உன் உதடுகள் உன் உதடுகள் உன் உதடுகள் என நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆட்கள் இறங்கினார்கள். ஆட்கள் ஏறினார்கள். ஆட்கள் கழிவறைக்குச் சென்று திரும்பினார்கள். சட்டென்று பார்த்தால் நீ என் அருகில் அமர்ந்திருக்கிறாய். ஐயோ..

உன் வாசனை என்னைத் தீண்டியது. ஓராயிரம் வாசனைகளில் அது ஒன்றே தனித்துவம் மிகுந்தது. ஆழ்ந்து உள்ளே இழுத்து வெளியே விடாமல் எனக்குள் புதைக்க முயன்றேன். உன் உடலில் இருந்து ஒரு மலரில் இருந்து எழுவதைப் போன்ற வாசனை. உன் தொடைகளும் தோள்களும் என்னை அவ்வப்போது வந்து தீண்டிச் சென்றன. நான் அதன் பரவசம் தாளாமல் கண்களை மூடிக்கொண்டேன். உள்ளே ஓய்ந்திருந்த என் எரிமலை பொங்கி வழிய ஆரம்பித்தது. லாவா ஊர்ந்து வழிந்து என் நிலத்தை வெக்கை மிகுந்து நீட்டிக்கச் செய்தன.

முடிவிலாத எண்ணிக்கையில் நான் உனக்கு நன்றிகள் சொன்னேன். உன் அன்பும் கருணையும் உலகத்தில் வேறு எவரிடமும் நான் இதுவரை கண்டதில்லை. உன் இருப்பை அப்படியே உள்ளே அனுபவிக்க ஆரம்பித்தேன். உன் அருகாமையை என் வாழ்நாள் முழுக்க பத்திரப்படுத்தி ஏந்திக்கொள்வேன். உன் உடலின் வெக்கையை உள்ளங்கைக்குள் பொத்தி வைக்க முயன்றேன். உன் தீண்டல் மிக மென்மையாக இருந்தது. குழந்தையின் உடலைத் தொடுவதைப் போல அத்தனை மிருதுவாக மண் துகள்களை கைகளில் பிசைவதைப் போன்று.

உன்னுடனே உன் பின்னால் வீடு திரும்பி விடலாமா என்று ஒரு கணம் தோன்றியது. அவ்வாறு உன் பின்னால் சுற்றித்திரிந்து இப்பிறவியை முடித்து்ககொள்வதே இப்பிறப்பிற்கு நான் செய்யும் குறைந்த பட்ச மரியாதையாக இருக்கும். வேறு என்ன அர்த்தம் இருந்துவிடப் போகிறது இந்த வாழ்க்கையினால்.

நீ வாழும் உலகத்திற்குள் ஒரு அந்நியனைப் போல நான் வாழ்ந்து முடிய வேண்டும் என்று ஏங்கினேன். எனக்கு வேறு ஒன்றிலும் முக்கியத்துவம் இருப்பதாகத் தோன்றவில்லை. உன் வீடிருக்கும் வீதியில் உன்னைப் பார்த்து விடச் சாத்தியமுள்ள தொலைவில் நான் விழுந்து கிடக்க வேண்டும். உன்னுடைய அலுவலகத்தின் வாசலில் உன்னைக் காணும் வாய்ப்புள்ள பார்வைக் கோணத்தில் அமர்ந்திருக்க வேண்டும். உன் வாழ்நாள் முழுக்க உன்னைப் பின் தொடரும் நிழலினைப் போல நான் உடன் இருக்க வேண்டும்.

நீ அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச் சென்றாய். வண்டி நின்றதும் உன்னிடம் ஒரு அவசரம் வந்து தொற்றிக்கொண்டது. மேலிருந்து பெட்டியை இறக்கினாய். கைப்பையை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டாய். உதடுகளை ஒரு முறை நாவால் தீண்டி ஈரப்பள பளப்பை ஏற்படுத்திக்கொண்டாய். உன் அக்குள் ஈரம் அக்கணத்தில் என்னைக் கொந்தளிக்கச் செய்தது. காற்றில் மீறிப்பறந்த முடிக்கற்றைகள் என்னைப் பொறாமை கொள்ளச் செய்தது. எழுந்து நின்று டீ சர்ட்டின் சுருக்கங்களை நீவிக்கொண்டாய்.

இங்கே நான் பூரித்துப் பொங்கி பரவசப் பித்தேறி பிதற்றிக்கொண்டிருக்கிறேன். உன் மீதான பித்தில் போதம் கிழிந்து பெருங்காற்றில் அலைபடும் சருகைப் போல உழன்று கொண்டிருக்கிறேன். என்னை சாந்தப்படுத்தும் எந்த நோக்கமும் உன்னிடம் இல்லை. என்னுலகில் நீ பேரிடர் என நிகழ்ந்து கொண்டிருக்கிறாய். என் காலடி நிலம் பிடுங்கப்பட்டுள்ளது. என் வீதிகளை காட்டாற்று வெள்ளம் சுழித்துக்கொண்டு செல்கிறது. என் வீடுகளை பூகம்பப் பிளவுகள் உடைத்துச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. நீ எதையும் அறியாமல் இறங்கினாய். ஒரு முறை இந்த வாழ்விலே ஒரு முறை கடைசி ஒரு முறை என என்னை ஏறிட்டாய்.

பின் இருக்கையில் சாய்ந்து தலையை மேலே துாக்கி பெருமூச்சொன்றை விட்டேன். ரயில் கிளம்பினாலும் உன்னுடல் தெரியும் வரை எக்கிப் பார்த்தேன். நீ உன்னுலகில் மிகச் சாவதானமாக நடந்து சென்றாய். என்னுலகில் இருந்து நிரந்தரமாக தொலைந்து கொண்டிருந்தாய். உன்னுடல் இருளுக்குள் கரைந்து சென்றது. அன்பே…பேரன்பே…உன்னை என் வாழ்நாள் முழுக்க பத்திரப்படுத்திச் சுமப்பேன். நதியின் போக்கில் உயிர் பிழைத்த சிறு தாவரம் நான். உன் வருகையும் பெருக்கமும் உணர்வூட்டமும் உன் உப விளைவுகள்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *