மின் அரசர்

ஓடக்காரன்வலசு ஜோசியர் சொன்னது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.  இதுவரை அவர் சொன்ன விஷயங்கள் சரியாகவே இருந்திருக்கிறது.  ஏன் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை.  ”போன பிறவியில் நீ சீனாக்காரன்.  சீன மின் அரச குடும்பம்.  யூ வார் யெ சைனீஸ் கிங்… வெரி பர்பெக்ட்லி” என்று உணர்ச்சிப்பூர்வமாக சொன்னார்.  பீரோவின் கண்ணாடியில் என் முகம் பார்த்தபோது கொஞ்சம் சீன சாயல் இருப்பது போலவே தோன்றியது.  கண்களைக் குறுக்கிப் பார்த்துக் கொண்டேன்.  சீனக் கண்கள் போலவே இருந்தது.  மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு ராஜ நடை நடந்தேன்.  ‘சீன அரசன்….ஆனால் சீனர்களுக்கு இந்த மாதிரி மீசை அழகாக இருக்காது.  முளைக்காத மீசைக்கு கொஞ்சம் முளைத்த பிறகு முகத்தில் அதற்குரிய இடம் அமைத்துத் தருவது தான் அவர்களுக்கு அழகாக இருக்கும்.  மீசை இந்தியர்களுக்கு அதிலும் தென்னிந்தியர்களுக்கு அதிலும் கருப்பான நிறம் உடையவர்களுக்கே அழகாக இருக்கும்.  இளம் வயது ரஜினியும் விஜயகாந்தும் மனதில் தோன்றினார்கள்.

கொஞ்ச நாட்களாக சீனத் திரைப்படங்களை விரும்பி தேடிப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  கோயம்புத்தூர் மால் திரையரங்குக்கு சென்று டப்பிங் செய்யப்படாத தென்கொரிய படத்தைப் பார்த்து வந்தேன்.  ஜாக்கிசான் படங்களை மிக விரும்பினேன்.

காம்பவுண்ட் சுவற்றின் மீது நின்று நீண்ட கம்பை வைத்து தென்னை மரத்தில் காய்கள் பறித்த பிறகு சுவற்றிலிருந்து அப்படியே அருகே ஓடிய டிச்சியையும் தாண்டி தெருச்சாலையில் குதித்தேன்.  சுற்றி வந்து கேட்டைத் தாண்டி உள்ளே வந்தபோது கோழிக்குஞ்சுகள் மீது கவிழ்த்து வைத்திருந்த கூடையை எகிறித் தாண்டினேன்.  சிறு அரிவாளால் காய்ந்த தென்னமட்டைகளை வெட்டிப் பிளந்து கொண்டிருந்த பழனியம்மா ஒரு கணம் நிறுத்திவிட்டு முறைத்துப் பார்த்தாள்.  ஒருநாள் அந்த அரிவாளால் அவள் என் கழுத்தை அறுத்துவிடக் கூடும் என்று பயம் வந்தது.  நான் அவள் கண்களை சந்திக்காமல் கமுக்கமாக வீட்டிற்குள்ளே வந்து விட்டேன்.

இரவு சட்டென்று பொறிதட்டியது போல் தோன்றியது.  போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.  சீன மொழிக்கும் கொங்குத் தமிழுக்கும் தொடர்பு இருக்கிறது.  காலை மணியனைப் பார்க்கச் சென்றது நினைவுக்கு வந்தது.  அவன் வீட்டில் இல்லை.

”என்னம்ணி மணியனில்லியா?”

”இல்லிங்”

”எங்கபோனான்ன் தெரியும்ம்மா?”

‘தெரியலிங்”

”வெகரமெதுவுங் கேக்றதில்லியாட்ருக்து ..திட்டுவனாக்கு?

”ஆமங்”

”செரி நா வந்துகேட்டன்னு சொல்லீரு”

”செரிங்”

ஆமாங், இல்லிங், செரிங், சிங், மிங், யங்…..கொங்கு பாஷைக்கும் சீனத்திற்குமான பொருத்தம் துலங்கி வந்தது.  ஜாக்கிசான் ஆங்கிலத்தைக் கூட சீன மொழிபோல பேசுவது நினைவிற்கு வந்தது.  ”தூ யூ வான்த்து பைத் வித் மீ? இஸ்த்து தூ? வாத் யு வான்த்? ”த, தா, தி, தீ, து. தூ” இது எதோடு பொருந்துகிறது? ஆத்தா என்ற சொல் பொருந்துகிறது என்று தோன்றியபோது அரிய ஒன்றை நெருங்கிவிட்ட உவகை ஏற்பட்டது.  ஆனாலும் ”என்றா உன்ற பையனா?” முக்கியமான என்றா மற்றும் உன்ற வை சீன ஒலிகளில் அடையாளம் காணமுடியவில்லை.  சீன மின் பேரரசின் இளவரசனாக நான் கொங்குநாட்டையும் ஆட்சி செய்திருக்கக் கூடும்.  மறைக்கப்பட்ட வரலாறு…

சட்டென்று திரும்பியபோது பழனியம்மா எழுந்து அமர்ந்திருந்தாள்.  இருளிலும் அவள் கண்களில் ஆத்திரத்தை உணர முடிந்தது.  கைகளை மேல உயர்த்தி ”யப்பா முருகா என்ன கெரகமோ தெரியிலியே? ஒன்னுத்துக்கும் பிரயோசனமில்லியின்னாலும் புருசன்னு ஒன்னு இருக்குதேன்னு நெனச்சிக்கிட்ருக்கென் அதுலயும் மண்ணள்ளிப் போட்றாத முருகா” என்றாள்.  நான் போர்வையை இழுத்து போர்த்தி படுத்துக்கொண்டேன்.  வாயே திறக்கவில்லை.

இரண்டு நாட்கள் சென்னை சென்றேன்.  அலைந்து திரிந்து சீன பாரம்பரிய உடைகள் விற்கும் கடையைக் கண்டுபிடித்தேன்.

ஊர்திரும்பி அன்று மாலை சீன பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு தெருவில் நுழைந்தபோது தெருவில் ஒருசிலர் மட்டுமே இருந்தனர்.  ஒருமாதிரியாகப் பார்த்தனர்.  ”வெள்ளசாமிக்கு மண்டை பிசகிருச்சாட்ருக்குது” மணியன் மளிகைக் கடை அண்ணாச்சியிடம் சொன்னது காதில் விழுந்தது.  கோபம் வந்தாலும் அலட்சியமாக நோக்கிவிட்டு நகர்ந்தேன்.  ”போங்கடா முட்டாள்களா உங்களுக்கு இந்த ஊரை விட்டால் வேறு என்ன தெரியும்?”

வீட்டருகே வந்தபோது விளக்குமாறால் வாசல் பெருக்கிக் கொண்டிருந்த பழனியம்மா நிமிர்ந்து பார்த்தாள்.  பின் விளக்குமாறை வீசி எறிந்துவிட்டு ஆக்ரோஷமாக மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டாள்.  ”பாவி பாவி…என்னிய கொன்னிரு …என்னிய கொன்னிர்றா”  கண்களில் நீர்பெருக்கெடுத்து வழிய என்னிடம் சொன்னாள்.  ”ஊ ஊஊ அழுதுகொண்டே முழங்கையால் மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.  ”என்னிய கொன்னுபோட்டு கெருமாதி பண்ணிரூ அப்புறமேட்டு உன்ற இஷ்டம்போல திரியி”  மீண்டும் அடித்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதாள்.

அதற்குப் பிறகு நான் மீண்டும் இந்தியனாக தமிழனாக ஆகிவிட்டேன்.

அடுத்த வாரம் பழனியம்மாள் ஓதிமலை முருகனுக்கு வேண்டுதல் நிறைவேற்றச் சென்றாள்.

ReplyForward

One comment

  1. இளநகை முகத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது இச்சிறு கதையை வாசிக்கையில். கொங்கு தமிழுக்கும் சீன ஒலிக்கும் இடையே ஒப்புமையைக் கண்டடைந்தது நல்ல பகடி. எழுத்தாளர் விக்ரமுக்கு வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *