விடியற்காலை  ஐந்தரை மணிக்கு மொபைலில்  வைத்த அலாரம் அடித்தது எழுந்து அலாரத்தை அணைத்து  வைப்ரேட்ரில் வைத்து விட்டு பல்விளக்கி, வாய் கொப்பளித்து கழிவறை சென்று வந்த போது  மொபைல் வைப்ரேட்டரில் அதிர்ந்தது.

அவர் தான் அழைத்திருந்தார். நான் தற்போது பயணிக்கும் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர்.

“வணக்கம் சொல்லுங்க சார் வந்துட்டிங்களா?”

“ஸ்ரீரங்கம் வந்துடுச்சி நீங்க கிளம்பி வாங்க உங்க கூட யாரும் வாராங்களா?”

“இல்லை சார் நான் மட்டும் தான் வருவேன், உங்களுக்கும் கூட வர்றவங்களுக்கும் பக்கத்துலயே ரூம் போட்டிருக்கேன்.  இப்ப கிளம்பிட்டேன். பத்து நிமிசத்துல வந்துருவேன்.”

நான் மட்டும் வருவேன் என்றதில் அவர் குரல் மாறுபட்டு ஒலித்ததில் முகமாறுவதை என் மனக்கண்னால் பார்க்க முடிந்தது.

ஒன்னரை ஆண்டுகள் அவருடன் பயணித்ததில் ஏற்பட்ட அனுபவமும் கசப்பும் கணத்தில் வந்து போனது.

ஒன்னரை ஆண்டுக்கு முன்பு வேறொரு சங்கத்தில் அவர் மாநில நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார். அங்கு அவர் சிறப்பாக செயல்பட்டதில் மூன்று மாவட்டங்களில் அவருக்கு தனிப்பட்ட முறையிலும் நட்பாக மாவட்ட நிர்வாகிகள் பெரும்பாலும் இருந்தனர் அவர்களில் நானும் ஒருவன்.

முகநூலில், வாட்சப் தளங்களில் தன் தனிப்பட்ட செயல்திறனாலும் பேசும் போது சங்க உறுப்பினர்களின் கவனத்தை கவரும் விதமாகவும், மொபைலில் அவரை யார் வேண்டுமானாலும்  எப்போது தொடர்பு கொண்டாலும் எடுத்து பேசியதாலும், அப்போது பேசுபவரின் மனம் கவரும் வண்ணம் பேசுவதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி தினமும் அவருக்கு ஆதரவான பழக்கமான அவர் பெயரை அதிகம் உச்சரிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவரின் பேச்சை கேட்டு கைத்தட்டலும் பாராட்டும் நேரிலும்,முகநூலிலும் வாட்சாப்பிலும், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதாலும்

மாநிலத் தலைக்கு அவர்மீது ஒவ்வாமையும் வெறுப்பும் பொறாமையும் உச்சத்தை அடைந்தது. அவரின் பலத்தை குலைக்க குறைக்க முடிவெடுத்து முகநூலிலும் வாட்சாப்பிலும் அவரின் முக்கியத்துவத்தை குறைத்தது.

இதனால் வெகுண்ட அவர் முதலில் தனியே போராடி பார்த்தார். தன் கருத்தை முன்வைத்த போதும் அவரை கட்டம் கட்டியது. மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் அவருக்கு ஆதவாக குரல் பெருகியது. மாநில தலமைக்கு தகவல்கள் பல வழிகளில் அனுப்பப்பட்டது.

தலமை மேலும் மேலும் பழிசுமத்தி அவரை சங்கத்தை விட்டு நீக்கும் அளவுக்கு போனது. மற்ற மாவட்ட நிர்வாகிகளிடம் மாநிலத்தலமை அவரிடம்  எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டாம் என  எச்சரித்ததோடு  தொடர்பு கொள்வோரையும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்தது.

அதன் பிறகுதான் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அவர் தனக்கான பாதையை தேர்ந்தெடுத்தார். வேறு புதிய சங்கம் துவங்கலாமா என என்னைப் போல ஆதரவு தரும் நண்பர்களை ஒன்றிணைத்து கூட்டங்களை நடத்தி தன் நிலைப்பாட்டை அறிவித்து தலமை சங்கத்திலிருந்து வெளியேறினார்.

மூன்று மாவட்டங்களில் மட்டும் தற்போது செயல்படும் நண்பர்களை வைத்து புதிய சங்கத்தை பதிவு செய்து பல குறுக்கு வழிகளில் பணம் செலவழித்து மூன்று மாதத்தில் பதிவெண்ணயும் வாங்கி எங்களை பயன்படுத்தி, மாவட்ட நிர்வாகிகளாக நியமித்து புதிய உறுப்பினர்களையும் இணைத்து…

சங்கத்தை வளர்த்து வந்தோம்.. புதிய உறுப்பினர் என்பது பழைய சங்கத்தின் உறுப்பினர்களையும் சேர்த்தே, மூன்று மாவட்டங்களில் பழைய சங்கத்திற்கு ஆளே இல்லாமலானது.

ஆறு மாதத்திற்குள்ளாக வெகு விரைவில் அவரே எதிர்பார்காதவண்ணம் சங்கம் வளர்ந்து ஆதரவும் பெருகியது. அவரும் இயல்பாக நடந்து, கலந்து, பாகுபாடின்றி இருந்தார்.

ஆண்டு விழாவின் போது தான் தெரிந்து கொண்டேன் அவரின் மாறுபாட்டை, மேடையில் அவர் மட்டுமே பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசும் துண்டும் போர்த்தினார். அவரால் நியமிக்கப்பட்ட எனது நண்பர்களான மாநில நிர்வாகிகளை  மேடையில் அறிமுகப்படுத்த கூட இல்லை. ஒரு படி மேலே போய் தன் மனைவியை வாழ்த்துரை வழங்க வைத்து, எங்களைப்போன்றவர்களின் மனதை நோகடித்ததோடு மோசமான  மதியவுணவும் அதையும் மிக தாமதமாக தனது நீண்ட உரையின் முடிவில் வழங்கியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

மேடையில், காலண்டர் அச்சடித்ததில், ஆண்டு மலரின் அட்டைப்படத்தில், சமூக வலைதளங்களில், பிளக்ஸ்களில் தன் புகைப்படங்களும் பெயரும் மட்டுமே இருக்கும்படியும் செய்து அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களின் கடுமையான எரிச்சலுக்கு ஆளானார்.

இவ்வளவுக்கும் கடைநிலை நிர்வாகிகள்  வரை பணம் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டு அப்பணத்திலும் விளம்பரதாரர்களாக எல்லா மாவட்டத்திலும் கடைகாரர்களிடம் வசூல் செய்த பணத்திலும்  தான் ஆண்டு விழா நடத்தப்பட்டது. முதலாம் ஆண்டு விழா என்பதனால் இச் சர்ச்சைகள் பெரிதாக விவாதிக்கபடவில்லை  . பிரச்சனை அதில் கூட அதிகமாக வில்லை. போன மாதம் அரியலூரில் நடைபெற்ற மாவட்ட ஆண்டு விழாவின்போது தலைவருக்கு மலர்கிரீடமும், செங்கோலும் தந்து சிறப்பித்ததை யாராலும் ஜீரணிக்க இயலவில்லை. தான் மகத்தான மனிதன் என சொல்லிக் கொண்டவரின் மனநிலை மாற்றத்தை இந்நிகழ்ச்சி பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது. அதை கண்டிக்காதது அதை உறுதிப்படுத்தியது.

தற்போதும் திருச்சி ஆண்டு விழாவில் தனக்கு மலர்கிரீடமும் செங்கோல் அல்லது வீரவாள் போன்ற ஏதாவது செய்ய சொல்லி வற்புறுத்தியதால் மாவட்ட நிர்வாகிகள் வருத்தமும் கோபமும் அடைந்து, நிச்சயமாக செய்ய முடியாது என ஏகமனதாக தீர்மானித்து  சொன்னதால் என்னையும் மற்ற நிர்வாகிகளையும் கடுமையான முறையில் வசைபாடினார்.பிளக்ஸில தன் படமும், மேடையில்  தன்னைத்தவிர யாரும் அமரக்கூடாது என்பதை வலியுறுத்தினார். இதனால் கடுப்பான மாவட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்க வர மாட்டோம் என சொல்லிவிட்டு யாரும் வரவில்லை. இப்போது நான் மட்டுமே அவரையும் மற்ற மாநில  நிர்வாகிகளையும், அழைக்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

திருச்சி இரயில் நிலைய வாசலில் அவரை வரவேற்றேன். அப்போதே சற்று கோபத்துடன் இருப்பதாக முகம் காட்டியது. சங்கீதாசில் காப்பி வாங்கி சாப்பிட்டோம். அரிஸ்டோவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். அறைக்கு அழைத்து சென்று சாவியை ஒப்படைத்து புறப்பட்டு “தயாராக இருங்கள் 8 மணிக்கு கொடியேற்றுதலும், பெயர் பலகை திறப்பும் இருகிறது” என்று   சொல்லி விட்டு நானும் தயாராகி வருவதற்காக புறப்பட்டு வீட்டையடைந்தேன்.

பெயர் பலகையும் கொடியேற்றக் கம்பம் நட்ட இடத்திற்கு  ஏழரை மணிக்கே சென்று முதற்கட்ட வேலைகளை துவக்கி தயாராக இருந்தோம். எட்டு மணிக்கு முன்பாகவே வர வேண்டியவர் ஒன்பதரைக்கு தான் வந்தார். கொடி ஏற்றி பெயர்ப்பலகை திறந்து வைத்து விட்டு அங்கேயே சரியாக முகம் குடுத்து பேசவில்லை. ஒரு வழியாக காலை முதல் நிகழ்ச்சி முடிந்து இரண்டாம் நிகழ்ச்சியாக திருமண மணடத்தில் நிழ்வுகள் துவங்கின.

புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் வாழ்த்துரை இறுதியாக மாநில தலைவரின் எழுச்சியுரை என நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதையும் அவரும் அவரது ஆதரவாக செயல்படும் மாநில செயலாளராக இருப்பவரும் சேர்ந்தே முடிவு செய்தனர். திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து கொள்ளப்படவில்லை. அதுவே மாவட்ட நிர்வாகிகளை மேலும் கொந்தளிக்க செய்தன.

நிகழ்ச்சிகளின் தொகுப்புரை வழங்கிய மாவட்ட நிர்வாகியின் செயல்களில் குறுக்கிட்டு அவ்வப்போது மாற்றங்களை செய்து மேலும் சீண்டப்பட்டனர். பல விதங்களில் மாவட்ட நிர்வாகிகள் மனம் நோகடிக்கப் பட்டு கொம்பு சீவினர் .

விழா மேடையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் யாரும் அமர்த்தப்படவில்லை. வாழ்த்துரை வழங்க வருபவர்களிடம் தன்னை அதிகம் புகழ வேண்டும் எனவும் வலியுறுத்தி பேச வைக்கப்பட்டனர். எழுச்சியுரையில் எப்பொழுதும் பேசும் பாணியில் மாற்றம் இல்லாமல் நீண்ட நேரமும், மாவட்ட நிர்வாகிகளை சுட்டி அதிகம் வசை பாடப்பட்டனர் குறிப்பாக என்னை குறிவைத்து தாக்கினார். 

என் செயல்பாடுகளில் தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிகப்பட்டதாக பொய்பிரச்சாரம் செய்து, தகுந்த விளக்கம் அளிக்கப் படாவிட்டால் மேடையிலேயே எனது பதவியை பறிக்கும் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்து விட்டார்.

கூட்டத்தில் பயங்கர சலசலப்பு. நானே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அதிக அளவில் உறுப்பினர்களும், நிர்வாகிகளும் எனக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டு அவரின் மீது சரமாரி வசைளும் உதிர்க்கப்படது அவருக்கு அதிர்ச்சியளித்தது.

ஆத்திரமடைந்த தலைவர் மேடையிலேயே மாவட்ட தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதாகவும், மதியம் உணவிற்கு பிறகு தனியே சந்திக்க வேண்டுமென அறிவித்து விட்டு மாநில நிர்வாகிகளோடு வெளியேறினார்.

உடனடியாக அங்கு கூட்டம் கூட்டப்பட்டு கலந்துரையாடப்பட்டது. மாவட்ட அளவில் எனக்கு அதிக ஆதரவளிப்பதாக ஒரு மனதாக அனைவரும் உறுதியளித்தனர். எனக்கு என்ன சொல்வது செய்வது என புரியவில்லை. ஆதரவை ஏற்றுக்கொண்டு தலைவனாவதா? மாநில தலைவரை சந்தித்து உரையாடி தனக்கிருக்கும் ஆதரவை பயன்படுத்தி அதே நிலையில் செயல்படுவதா?

மதிய உணவிற்கு பிறகு மாநில தலைவர் தங்கியிருக்கும் ஹோட்டலின் அறைக்கு வெளியே காத்திருந்தேன்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *