சின்ன சின்ன ஆசை

குழந்தைகள் தூக்கம் கலைந்து எழுந்தவுடன் சிறிது  நேரத்தில் உற்சாகமாக இருக்க தொடங்கி விடுவார்கள். காலையில் கத்தும்  தேன் சிட்டுக்கள் பூக்களை சுற்றி சுற்றி வருவது போன்று.  

கடைசி பக்கத்திலிருந்து செய்தித்தாளை பார்த்துக் கொண்டு இருந்தேன். ஹரிணி தூங்கி எழுந்ததை கொலுசு மணிகளின் சத்தங்கள் சொல்லி விட்டது. அவள் அறையில் தொங்கி அலைந்து கொண்டு இருந்த திரைச்சீலையில் தன்னை சுற்றிக் கொண்டு சத்தம் போடாமல் நின்றாள். அவள் சிறு கால்கள் நின்றிருப்பதை காட்டி கொடுத்தது. நான் உடனே எழுந்துபட்டு எங்க காணோம்” என்று தேடுவது போல் விளையாடினேன். “பட்டு இங்க தான் இருக்கா” என்று கத்தினேன்அவள் சிரிப்பில் தூக்கங்கள் பறந்து போனது.

ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாள். “அப்பா என்ன நீ தான் வந்து பள்ளியில இன்னைக்கி விடனும்”. “எனக்கு தாமதம் ஆகும் பட்டு. நீ எப்போதும் போவது  போல வண்டியில போ.“ “நான் பள்ளிக்கு போக மாட்டேன்”. “சரி ஒன்று செய்யலாம். நான் உன்னைய பள்ளி விடும் போது வந்து அழைத்து கொள்கிறேன்”. “அப்பா பொய் சொல்லாத“. “உனக்கு தாமதமாகும்  சும்மா உருட்டாத “. 

“இன்னிக்கு பாதி நாள் தான் பாப்பா வேலை நானே வரேன்.”

சரி வரும் போது பாட்டில் மிட்டாய் வாங்கிட்டு வா.”

நாம் எழும் போதே  தொலைக்காட்சி பெட்டியும் சேர்ந்து எழுந்து கொண்டு விடுகிறது. அதில் ஆட்டம் போட வைக்கும் பாட்டு ஓடியது இவளும் அதனுடன் சேர்ந்து ஆடத் தொடங்கினாள்

பள்ளி சீருடை  பெல்ட் அடையாள அட்டை எல்லாவற்றையும் என்னிடம் தூக்கி போட்டாள். போட்டு விடு. எனக்கு வேலை இருக்கு அம்மாட்ட போட்டுக்கோ. அவ திட்டு வா. நீயே போட்டு விடு என்று முகத்துல தூக்கி போட்டா. இது தினமும் நடைபெறுவதுதான். என்னிடம் வேலை வாங்கும் ஒரே ஆள் இவள் தான்.

“அப்பா இன்னக்கி எனக்கு பாட்டு நிகழ்ச்சி இருக்கு தெரியுமா. நீ தான் கொண்டு விடனும் திரும்ப அழைச்சிட்டு வரனும். விட்டுட்டு ஓட கூடாது. அங்கே தான் இருக்கணும். எனக்கு நிறைய மிட்டாய் முறுக்கு எல்லாம் வாங்கி தரணும். வேலை இருக்குனு ஓட கூடாது பாத்துக் கோ.”

அவள் பக்கத்து தெருவில் ஐயர் வீட்டில் மாமிட்ட பாட்டு கத்துக்குறா. இவளுடன் சில பிள்ளைகளும் சேர்ந்து பாட்டு வகுப்புக்கு போய் கொண்டிருக்கிறார்கள். தினமும் அழைத்து வரும் போது ஒவ்வொரு நாளும் ஒரு பாட்டு பாடுவாள். அவள் பாடும் போது கூடவே பாடனும். கிளிகள் சேர்ந்து பாடுவது போன்று. எப்போதும் சத்தமாக தான் பாடுவாள். நல்லா பாட ஆரம்பிச்சிட்டா தினமும் பாடுவதால்.

நான் வழக்கம் போல் வேலைக்கு சென்றேன். போகும் வழியில் ஊர் முழுவதும் புங்க மரம் தான் அதன் நிழலில் தான் பயணம். டீ ஸ்டாப்பில் தேநீர் குடித்து விட்டு தான் வேலை பயணமே தொடங்கும். மாலையும் அவ்வாறே தான். ஊரை தாண்டினால் பனையும் தென்னையும் தேக்கும் தான் அதிகம். இப்போது தேக்கு சோள பொரி போல் பூக்க தொடங்கி விட்டது.

காலை முதல் மாலை வரை வேலை பார்க்கும் என் போன்றவர்கள் எல்லா வற்றையும் மறந்து விடுவார்கள். பாட்டு நிகழ்ச்சியில் குரலுடன் கலந்து ஒன்றி போவது போன்று. நானும் அப்படித் தான் எல்லாம் மறந்து போகும் வரம் வாங்கியது போல். நல்லவேளை வேலை முடிந்தவுடன் கிளம்பும் போது ஒவ்வொன்றும் வரிசை கட்டிக் கொண்டு நினைவுக்கு வரும். எறும்புகள் இனிப்பை தேடி செல்வது போன்று.

விரைவாக வந்து விட்டேன். வேலை கசப்புகள் ஏமாற்றங்கள் ஏற்றத்தாழ்வுகள் எல்லாவற்றையும் ஒரு கோப்பை தேநீரில் ஆவியாக பறந்து செல்ல இனிப்பும் துவர்ப்பும்  கலந்து சிவந்து சுவையான தேநீர், பருக தொடங்கி விட்டால் சிறந்த ஆறுதல்.

வரும் வழியில் நம்ம டீ ஸ்டாப்பில் டேவிட் நின்று கொண்டிருந்தான். விடுமுறைக்கு வருவதாக சொல்லிருந்தான். அவனை பார்த்தவுடன் பழைய நினைவுகளுடன் மூழ்கினேன். நலம் விசாரிப்பு அதை தொடந்து அவன் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக சொன்னான். அந்த இடம் எங்கிருக்கிறது என்றான். உங்கள் வீட்டின் அருகில் தான் இருக்கிறது.

புத்தக வெளியிட்டு விழா. வேலை இல்லை என்றால் நீயும் வரலாம் என்றான். ஒன்றும் வேலை கிடையாது மாலை முழுவதும் ஊர் சுற்றுவது தான் வேலை. நானும் வருகிறேன்நான் என் திட்டங்களை மாற்றத் தொடங்கினேன். நீ முன்னாடி போ. நான் சரியாக வந்து  உன்னுடன் சேர்ந்து கொள்கிறேன். சரி பார்க்கலாம்.

நான் வீட்டிற்கு செல்லும் போது. மாலையில் சாலையில் புதிதுபுதிதாக பல கடைகள். மாலையில் மட்டுமே விற்கப்படும் வாழை பழக்கடைகள்விநாயகர் கோயிலில் பூஜைகள் தொடங்கி விடும் மெல்ல கூட்டம் வந்து கொண்டும் கலைந்து கொண்டும் இருக்கும். பூக்கார பெண்ணின் மகள் ஆலமரத்தின் நிழலில் எப்போதும் பூக்கட்டி கொண்டே இருப்பாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒரு அமைதியில் இருப்பாள். லெட்சணமான முகம். முருகனும் இவளும் எதிரெதிரில் அமர்ந்து இருப்பார்கள். நான் போகும் போதும் வரும் போதும் இவளை முதலில் பார்த்து சிரிப்பேன் மீண்டும் சிரிப்பாள். முருகனை பார்த்து மனதில் முருகா முருகா என்பேன். அவளாக சிரிக்க மாட்டாள். இப்போது பழகி விட்டாள் அதனால் பார்த்தவுடன் சிரிப்பாள்பூக்கள் எனக்கு வாங்க பிடிக்காது. சரோஜினி கேட்க மாட்டாள் அவளே வாங்கி கொள்வாள். இந்த சிறுமிக்காக அவள் சிரிப்புக்காக சில நாட்கள் வாங்குவேன். அவளிடம்  எதுவும் கேட்க மாட்டேன், பணம் கொடுப்பேன் பூ கொடுப்பாள் கொஞ்சம் புன்னகையுடன். சில சமயம் ஹரிணி வந்தால் அதிகமாக சிரிப்பாள் காசு வாங்காமல் ஒரு ரோஜா கொடுப்பாள். சில சமயம் நிறுத்தாமல் சென்றால் ஹரிணி அவளை கத்தி கூப்பிட்டு கை காட்டுவாள்

ஓட்ட பந்தயத்தில் வெடி சத்தத்திற்காக காத்து கொண்டு ஓட துவங்கும் வீரர்கள் போல் நின்றனர். அப்பா கிளம்பு ஆடம்பரம் பண்ணாதே. எப்போதும் நம்மை ஒரு அதிர்வில் வைத்திருப்பார்கள் எல்லாம் மண்டைக்குள் ஓடியது. சீக்கிரம் கிளம்பி விட்டேன்.

இசை நிகழ்ச்சி கோயிலில் தான் காளி கோயில். அது நகரத்தின் . எல்லையில் ஒரு மூளையில் இருக்கிறது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி வேறு ஒரு மூலையில். அந்த இடத்திற்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. சரோஜினியிடம் கேட்டு கொண்டு போகலாம் என்றால். அவள் அதிகமாக பேசுவாள் வேண்டாம். நாமாக முயற்சி செய்யலாம். போகும் வழியில் நன்னாரி சர்பத் கடை உள்ளது. நான் கல்லூரி படித்த காலத்திலிருந்து போவது வழக்கம். சந்தானம் பல நாட்கள் பழக்கம். அவர் சர்பத் போடும் ஸ்டைலே தனிதான்

ஒரு வாத்திய கலைஞன் இசை இசைப்பது போன்று. கண்ணாடி கிளாஸை சரியாக வரிசையாக அடுக்கி சீவி வைத்த ஐசை கிளாஸில் நேர்த்தியாக போடுவார். கண்ணாடி  கிளாஸ் குளித்த பெண்முகம் மின்னுவது போல் மின்னும் ஒரு வகையான பனிவெண்மையில்

நார்த்தங்காயை பிழிந்து. அதன் மணம் நேராக முகம் தொட்டு சுகம் தரும். நன்னாரியை ஊற்றியவுடன் வெண்மையில்  சிவப்பு நுழைந்து இரண்டும் கலந்து ஆடுவது போல் இருக்கும். எப்போதும் நான் பார்க்க தவறுவதில்லை. சந்தானம் என்ன கிளாஸ பாத்துக்கிட்டே இருக்க என்பார்.

கரண்டியில் கடல் பாசியை வீசி தண்ணீர் விட்டு ஒரு கலக்கு கலக்கி தருவார். அமிழ்தம். பார்க்காமல் கடந்து செல்ல முடியாது. நேரம் குறைவு. வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று கடந்து சென்றேன். மணம் வீசுவதை கடந்து செல்ல முடியாமல்

வழக்கம் போல் வழியை மறந்து போனேன். சந்துகளில் புகுந்து மாரி மாரி தன்னுணர்வு கொடுக்கும் வழியில் சென்றேன். வழிய விட்டு எங்க போறிங்க. யாரையாவது கேட்டால் என்ன என்றாள்  சரோஜினி. அம்மா அப்பாவுக்கு தெரியும் நீ பேசாத என்றாள். எப்படியோ கோயிலை தொட்டு விட்டேன். இப்போது கோயிலுக்கு அதிகம் செல்வதில்லை. ஏன் என்று தெரியவில்லை.

அவர்கள் இருவரையும் இறக்கி விட்டேன். அப்பா ஆரம்பிக்கும் போது வந்துவிடு. இங்க தான் இருக்கேன் எங்கேயும் போகலஎங்க நைசா ஓடுறீங்க என்றாள். ஒரு நிகழ்ச்சி வந்துடறேன். பாப்பா தேடுவா கேட்பா. வந்துடுங்க என்றாள். சரி என்று தலையை ஆட்ட வில்லை.

சந்தானத்தை பார்க்க சென்றேன். அவர் பேச மாட்டார். எல்லாம் சைகை தான். எனக்கு தெரிந்து அவர் பல வருடங்களாக அதே இடத்தில் தான் நின்று கொண்டு இருக்கிறார். காலம் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அமர்ந்து நான் பார்த்ததில்லை. போனவுடன் கொஞ்சமாக ஐஸ் போட்டு கேட்காமல் பைனாப்பிள் பால் சர்பத்  கொடுத்தார் அதே சிரிப்புடன். குடித்து விட்டு கிளம்பினேன். இரு என்றார். நிகழ்ச்சி இருக்கு என்றேன். சரி அடிக்கடி வா. கைகளை ஆட்டி கொண்டே நிகழ்ச்சி நோக்கி சென்றேன்.

நான் நுழையும் போது ஏற்கனவே  நிகழ்ச்சி தொடங்கி விட்டது. டேவிட் கை காட்டினான். நீண்ட வரவேற்புரை சத்தமாக ஒலிபெருக்கியை தாண்டி வந்து மோதியது. நல்ல வேலை இறுக்கி கட்டியிருந்தார்கள். என்னடா இது ஒரே சத்தம். எழுத்தாளர் கலித்தேவன் வருவதாக இருந்தது வர கொஞ்சம் தாமதம் ஆகும் போல.

சட்டென்று டேவிட்டுக்கு வீட்டிலிருந்து போன் வந்தது. திடீரென்று அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. மயக்கம் என்ன செய்வது என்றான். பக்கத்துல இருக்கர சாய் மருத்துவமனைக்கு அழைத்து வர சொல். நாம நேரா போவோம். இல்ல நா பார்த்துக்கறேன். நீ பாரு என்றான்

இல்ல இல்ல என்று நாங்கள் இருவரும் சென்றோம். அதற்குள் வந்து விட்டார்கள். சோர்வாக இருந்தார். அவருக்கு சுகர். என் மனம் சொன்னது லோ சுகர். சரியாக சாப்பிட மாட்டார் போல அதான்.

சுகர் டெஸ்ட் எடுத்ததில் மிகவும் குறைவாக உள்ளது என்றனர். நரம்பில் சலைன் பாட்டில் போட்டார்கள். அவங்க கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தார்கள். சிறிது நேரத்தில் பேச தொடங்கினார். டேவிட் பயந்து விட்டான். வீட்டிற்கு போகலாம் என்றார் மருத்துவர். எல்லோருக்கும் மகிழ்ச்சி ஆனால் முகத்தில் தெரியவில்லை.

சரோஜினி அழைத்தாள் கோபத்துடன் எங்க இருக்குறீங்க. மருத்துவமனைல என்று நான் விசயத்தை கூறியவுடன் பார்த்து கொள்ளுங்கள் பாப்பா தான் கேட்டுட்டே இருந்தாள். வரும் போது மிட்டாய் வாங்கிட்டு வாங்க கேட்பா. நாங்க ஆட்டோ புடிச்சு போயிக்கிறோம் சரி என்று வேகமாக வைத்தேன். கொஞ்சம் அமைதி நிலவியது.

நானும் டேவிட்டும் டீ ஸ்டாப் சென்றோம். அவன் அம்மாவை பற்றி புலம்ப ஆரம்பித்து விட்டான். அவன் சொல்வதை அமைதியாக கேட்டேன். நமக்கு நாம் சொல்வதை கேட்க ஒருவர் இருந்தால் எல்லாம் சரியாகி விடும் மழையில் வெள்ளம் வந்து உடனே வடிந்தது போன்று.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பா என்னப்பா எங்க போன . அங்கேயே இருக்கேன்னு  பொய் சொல்லிட்டு எங்க தான் ஓடுன. டேவிட் மாமா வீட்டு பாட்டிக்கு உடம்பு சரியில்ல. அதான் பப்பா கிளம்பிட்டேன். பாட்டி பாவம் பா. நல்ல பாட்டி பா. கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த புரோகிராம் இருக்கு அதுக்காகவாது ஒழுங்கா வா. இப்போது தான் எனக்கே போகனும் போல இருந்தது.

சரோஜினி இப்பவே பட்டு பாவாடை தைக்கணும். பிரியா டெய்லர் லேட் பண்ணுவாங்க. நாளைக்கே கொடுத்துடுங்க. நான் எப்போதும் எந்த திட்டமும் போடுவதில்லை. அதன் அதன் போக்கிலேயே சென்று கொண்டிருந்தேன். சில சமயங்களில் நம்மை நெருக்கும். வழக்கத்திற்கு மாறாக அடுத்த நாளே தைக்க கொடுத்து இரண்டொரு நாளில் வாங்கி விட்டேன். பிரச்சனை தீர்ந்தது இல்லாவிட்டால் தினமும் சரோஜினி அது ஒரு வேலை போல் என்னை பார்க்கும் போதெல்லம் கடன் வசூலிப்பவன் போல் கேட்டு கொண்டே இருப்பாள்

அப்பா இன்னக்கி தான் புரோகிராம். போன வாட்டி மாதிரி ஏமாத்தாத . பர்மிஸன் போட்டுட்டு  வாங்க என்றாள் சரோஜினி. சரி சரி என்று வேலைக்கு புறப்பட்டு விட்டேன். போனவுடன் முதல் வேலையாக பர்மிஸன் சொல்லிட்டேன். எல்லாம் வழக்கம் போல் சென்றது.

கிளம்பும் போது ஒரு வேலை எப்போதும் இல்லாமல் முக்கியமான வேலை முடித்து விட்டு கிளம்பினேன். வேறு வழி இல்லை. நம் திட்டம் நம் கையில் இல்லை காலத்தின் கைகளில் தான். அறிவை கொண்டு தான் நாம் எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்ன செய்வது.

சரோஜினியை அழைத்தேன். வந்திட்டிங்களா காபியா டீயா என்றாள். இப்பதான் வேலை முடிந்தது. இனிமே தான் கிளம்பனும். பாப்பா கேட்க தொடங்கிட்டா அப்பா எங்க என்று. சரி நீ பாத்துக்கோ நான் வந்துடறேன். நீ ஆட்டோல பாப்பாவ கூட்டிட்டு போ நான் நேரா வந்துடறேன்.

சிறிது நேரம் கழித்து சரோஜினி அழைத்தாள். நாங்க வந்துட்டோம். இங்கே தாமதம் ஆகும் போல ஶ்ரீராம் நகர் உள்ளே கொஞ்சம் தூரத்தில் கிருஷ்ணன் கோயில் இருக்கு புதுசா கட்டியிருக்காங்க அங்க தான் புரோகிராம். சுத்தி கிட்டே இருக்காதீங்க பக்கத்துல கேட்டுட்டு வாங்க. பந்தல் வாழையிலை கட்டியிருக்கும். அப்பறம் நீங்க வீட்டுக்கு போயி குளிச்சிட்டு லேட் பண்ணாம வாங்க. சரி வச்சிடறேன்.

நான் வீட்டுக்கு வந்தேன். எனக்காக காத்திட்டு இருந்த மாதிரி எதிர் வீட்டு பாட்டி ரவி எங்க வெளில போவியா என்றார். பாப்பா பாட போயிருக்கு பாக்க போகனும். என்னானு சொல்லுங்க பாட்டி. தாத்தா வடை கேட்டார். வரும் போது வாங்கிட்டு வா பசிக்குதுனாரு. சரி வாங்கிட்டு வரேன் பாட்டி.

குளித்து விட்டு சென்றேன். புதிதாக பிரமாண்டமான வீடுகள் நின்றன. இந்த தெரு உள்ளே வந்ததில்லை. சாலையோரமாக பெரிய மண்டபம் போல் இருந்தது. பழைய வீட்டை புதிப்பித்து பிராத்தனை கூடம் ஏற்படுத்தியிருந்தனர். சரியான நேரத்திற்கு உள்ளே சென்றேன்

பளிங்கு சிலையில் தோரணம் கொண்ட மேடையில் கிருஷ்ணன் ராதையின் சிறு இடையை  ஒரு கையில் வளைத்து அணைத்து பிடித்துக் கொண்டிருந்தான். ராதை வெக்கத்துடன் தலை சாய்த்திருந்தாள்வெள்ளை பூக்கள் புன்னகை வீசுவது போல் கிருஷ்ணன் சிறு புன்னகையுடன் ஒரு காலை ஊன்றி மறுகாலை  மடக்கி பின்னால் கொண்டு சென்று விரல்களை ஊன்றி நின்றான்.

கண்ணனையே பார்த்து கொண்டே இருந்தேன்

கூட்டம் அதிகமாக இல்லை. கல்யாண வீடு போல் இருந்தது. பட்டு ஒளியும் ஆன்மிக மணமும் தர்மன் மாளிகையை ஒளியால் நிரப்பியது போல் நிறைந்து இருந்தது. எல்லோரும் ஒரு பொழிவில் இருந்தனர். ஹரிணி பச்சை பட்டில் மற்ற குழந்தைகளுடன் கூட்டமாக அமர்ந்திருந்தாள். நான் ஒரமாக உட்கார்ந்தேன். பாடும் ஆர்வத்தில் இருந்தாள்.

சட்டென்று என்னை பார்த்து நம்ப முடியாமல் ஆச்சர்யத்தில் சிரித்தாள். நான் கையை காட்டினேன். சரோஜினி சும்மா இரு என்பது போல் மெளன மொழி  பேசினாள். அவளை இப்போது தான் முழுசா பார்க்கிறேன். எங்கேயும் ஓடிடாத என்பது போல் பார்த்தாள். அவளை பார்த்து பல நாள் ஆனது போல் இருந்தது. ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தனர். கண்ணணின் பிஞ்ச பாத சுவடுகள்  வெண்மையில் புங்கன் பூக்கள் உதிர்ந்தது போல் இருந்தது.

புரோகிராம் ஆரம்பிக்க நேரம் ஆகும் போல அதற்குள் வடை வாங்கி தந்து விட்டு வந்து விடலாம் என்று வெளியே வந்தேன்.

டீ ஸ்டாப்ல வடை வாங்கி கொண்டு பாட்டிட்ட கொடுத்தேன். தாத்தா ஏன் அவன அழையவுடுர என்றார். வரும் வழிதான் தாத்தா. காஃபி குடி ரவி என்றார். இல்ல தாத்தா வேல இருக்கு. எப்போதும் வீட்ல இருக்கரதே இல்ல. ஊர் சுற்றி என்று சரோஜினி சொல்வாள் என்றார் பாட்டி.

மீண்டும் மண்டபம் சென்று சேர்ந்து நுழையும் போது

குழந்தையாக 

மீண்டும் 

கண்ணன் 

பிறக்கமாட்டானா

புல்லாங்குழல் ஊதி 

என்னை மயக்க மாட்டானா

என்று தனியாக பாடி முடித்தாள் நான் அமரும் போது எல்லோரும் கை தட்டினார்கள். நானும் சேர்ந்து கை தட்டினேன்சூழல் ஒரு பெரிய திருடன் ஆசைகளை திருடி கொண்டே இருக்கிறது உழைப்பை திருடும் வேடிக்கை மனிதர்கள் போன்று.

நல்ல வேலை யாரும் என்னை கவனிக்க வில்லை. சரோஜினி ஆசையாக என்னை பார்த்தாள். மழை வரப்போது இன்னக்கி எங்கயும் ஓடல என்றாள். அப்பா நீ கை தட்டுனத நான் பார்த்தேன். ரெம்ப தாங்ஸ். இன்னக்கி மாதிரி எங்கும் ஓடாமா இரு.

Good

டேவிட் அழைத்தான்

சரி நீங்க ஆட்டோல வீட்டுக்கு போங்க

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *