பேசாப்பொருள் 

 

சின்னக் கேட்டைத் திறந்து காம்பவுண்ட் சுவரைக் கடந்து தண்டபாணி சைக்கிளை வீட்டுக்கு முன்னால் இருந்த இடத்தில் நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டான்.   சைக்கிளின் முன் டயர் மல்லிகைச் செடியின் இலைகளைத் தொட்டுக் கொண்டிருந்தது. நாளைக்கு வாசலுக்கு இன்னொருபுறத்தில் நிறுத்த வேண்டும். அக்கா வைத்த செடி. அதில் டயர் படக்கூடாது. பூஜைக்கு உதவும். வராண்டாவில் ஏறினான். அண்ணனின் செருப்பு அங்கே இல்லை. ‘இன்னும் வரவில்லை. கமிஷனரைக் குழையடிப்பதில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டான்’ என்று நினைத்துக் கொண்டே  வாசலில் இருந்த திரைச்சீலையை விலக்கிவிட்டு  உள்ளே நுழைந்தான்.  பெரியக்கா செண்பகம் சோஃபாவில் அமர்ந்து குமுதம் படித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அறையில் நுழைந்ததும் அங்கே கட்டிலில் குப்புறப்படுத்திருந்த சின்னக்கா மீனா, எழுந்து  அறையை விட்டு வெளியே போனாள். 

அவளிடம் கேட்டான் ‘அண்ணன் இன்னும் வரலையா?’  ‘இல்லை. அவன் நிதமும் ஏழு மணிக்கு மேலதான் வருவான். நீதான் இன்னைக்குச் சீக்கிரம் வந்துட்டே’. மெயின் ஹாலில் இருந்த சோஃபாவில் போய் சாய்ந்து உட்கார்ந்தாள். 

அவன் உள்ளே வருவதை அறிந்த அண்ணி அடுக்களையில் பாலை அடுப்பில் வைத்தாள்.  அடுக்களையில் தரையில் எவர் சில்வர் டம்ளர் தரையில் படும் ஓசை அவனுக்குக் கேட்டது. வீட்டில் மெலிய ஓசைகள் மிகத் தெளிவாகக் கேட்கும்.  யாரும் அதிகம் பேசுவதில்லை. மௌனம் காற்றைப் போல் எங்கும் நிறைந்திருந்தது. அவ்வப்போது அவர்களில் ஒருவர் பேசும் ஒற்றை வார்த்தை அல்லது ஒற்றை வாக்கியம் அமைதியைக் கலைக்கும். அந்த அமைதி அவர்களின் வாழ்க்கையின் ரகசியங்களை ஒரு போர்வை போல் போர்த்தியிருந்தது. ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் பேச வேண்டியவை ஏராளம் இருந்தன. அவற்றை ஒருபோதும் அவர்களால் பேச முடியாது என்ற மனத்தடையினால் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிகொண்டிருந்தன.  அவனுக்கும்.

பொதுவாக ஆறு மணிக்கெல்லாம் தண்டபாணி வீட்டுக்கு வருவதில்லை.  இன்று அலுவலகத்தில் வேலை இல்லை. நாள் முழுவதும் மேஜை மீது இருந்த பைல்களையும் காகிதங்களையும் கீழிருப்பதை மேலும் மேலிருப்பதைக் கீழும் வைத்து போரடித்ததால் சொல்லிவிட்டு ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்பிவிட்டான் . வேலை இல்லாதது போல் அலுவலகத்தில் காட்டக் கூடாது என்பது அரசு அலுவலகங்களில் விதி. இன்னொரு வேலையக் கொடுத்துவிடுவார்கள். திருச்செந்தூரிலிருந்து வர ஒருமணி நேரம் ஆனது. பஸ்ஸ்டாண்டில் இருந்து இங்கே வர பத்து நிமிஷம். ‘ரொம்பச் சீக்கிரம் கிளம்பிவிட்டோமோ?’ என்று நினைத்தான்.  சூப்ப்ரெண்டெண்ட் புழுங்கிக் கொண்டிருப்பார்.

காஃபியை அண்ணியிடம் வாங்கிக் கொண்டு வராண்டாவுக்குப் போய், சேரில் அமர்ந்து அதைக் குடிக்கத் தொடங்கினான்.  முற்றத்தில் நின்ற பழைய சைக்கிளைப் பார்த்தான். அப்பாவின் சைக்கிள் அவர் அதைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்கு வரும் கோலம் மனதில் படமாக ஓடியது. இன்னும் கொஞ்ச நாள் இருந்து மீனாக்காவுக்கும் அவனுக்கும் திருமணம் முடித்துவிட்டுப் போயிருக்கலாம். அப்பாவின் சைக்கிளை இன்னும் உபயோகிப்பதில் ஒரு பெருமிதம் இருந்தது. அப்பா இறந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன.  ‘பைக் வாங்கிக்கோப்பா’ என்று பலர் சொன்னார்கள். ஆனால் அவனுக்குச் சைக்கிள்தான் பிடித்திருந்தது.  ஒரு பழைய தோழன் அது. அதை இழக்க அவனுக்கு மனமில்லை. வயதாக வயதாக நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்றுவிட்டார்கள்.  அவன் வேலை அப்படி. அவர்களுக்கும் வேலைகள் இருக்கும். இருபது வருட சர்வீஸை திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், மதுரை என்ற வட்டத்துக்குள் கழித்துவிட்டான்.  அவனுடைய அண்ணனும் இதே ஊர்களுக்குள் இடமாறுதல்களில் சுற்றி வந்தான். அப்பா இதே டிபார்ட்மெண்டில் இருந்து ரிடையர் ஆனவர். மூவரின் வசதிக்கு அலுவலர்கள் உதவி செய்தார்கள். 

அவன் அண்ணன் ஐந்து வருடங்கள் முன்பு வேறு வழியில்லாமல் புது சைக்கிள் வாங்கினான். உள்ளூரில் இருப்பதால், அலுவலகத்திலிருந்து சைக்கிளில்தான் வந்துகொண்டிருந்தான்.  அவனுக்கும் பைக் ஓட்ட விருப்பம் இல்லை. ஒல்லியான தேகம். 

எழுந்து, முகம்கழுவி, வேட்டியைச் சரி செய்து இறுக்கிக் கட்டிக் கொண்டு வெறுங்காலுடன் வீட்டை விட்டுக் கிளம்பி நடக்கத் தொடங்கினான்.  பிள்ளையார் கோயிலுக்குப் போகிறான் என்று அவனையறிந்தவர்களுக்குத் தெரியும். சின்ன வயதில் இருந்து இந்தப் பழக்கம். முக்கால் மணி நேரத்துக்கு மேல் பிள்ளையார் கோவிலில் மனதில் பல பதிகங்களை, பாடல்களைச் சொல்லி, மனதாரக் கும்பிட்டு விட்டு வருவான்.  பிள்ளையார் பல நேரங்களில் அவனுடைய சின்னச் சின்னக் கவலைகளைத் தீர்த்திருக்கிறார்.  வாரம் இரண்டு நாள்கள் நூற்றியெட்டு சுற்று சுற்றி வந்துகொண்டிருந்தான். வீட்டிலிருந்த திருமணப் பிரச்சனைகளைத் தீர்க்க அவர் உதவவில்லை என்று அவனுக்குத் தெரியும். 

புதியதாக ‘அம்மா’ வழிபாட்டுச் சங்கத்தில் சேர்ந்திருந்தான்.  அங்காவது ஏதாவது நல்லது நடக்கும். பெண்கள் அதிகம் இருக்கும் வழிபாட்டுக் குழு அது. சிவப்பு நிற உடையணிந்த பக்தர்கள் கூட்டத்தில் குடும்பத்தில் முதலில் அவன்தான் சேர்ந்தான். கொஞ்ச நாளில் அவனுடைய குடும்பமே சேர்ந்துவிட்டது.  ஆனால் பழைய பிள்ளையாரை அவன் மறக்க முடியவில்லை. இத்தனை வருட உறவை எப்படி முறிக்க முடியும்? பிள்ளையார் கோவில் போகிற வழியில் சைக்கிள் கடையைப் பார்த்தான். முத்து அங்கே இல்லை. எங்காவது போயிருப்பான்.  முப்பது வருடங்களுக்கு மேலாக அவனுக்குத் தெரியும்.  ஒன்றாக பள்ளிக் கூடத்துக்கும்,  இரண்டாம் ஷோ சினிமாவுக்கும் போனவர்கள். அங்கே உட்கார்ந்து வேலையில்லாத பையன்கள் சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். பாபுவையும் மாரியப்பனையும் அவனுக்குத் தெரிந்தது.  அவனுக்கும் ஒரு காலத்தில்…. அதுவெல்லாம் அந்தக் காலம்.  

இரண்டாம் தெருவில் திரும்பும் போது, பைக்கில் ராமராஜ் போவதைப் பார்த்தான்.   உப்பு வியாபாரம். பார்த்தால் பேசுவான்.   மீண்டும் வீட்டு ஞாபகம் வந்தது. பெரியக்கா செண்பகம் அம்மா மாதிரிப் பழைய டைப்.  மீனாக்கா யாரையாவது காதலித்திருந்தால் ஒரு வேளை நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் வீட்டில் அந்தக் காலத்தில் காதல் என்பதே கெட்ட வார்த்தை. அவனுக்குத் தெரிந்த நண்பர்களில் நல்ல பையன்கள் சிலர் அவனுடைய ஜாதிக்காரர்கள் இல்லை. கேட்டால் சரியென்று சொல்லியிருப்பார்கள். குலப் பெருமையை எப்படி இழப்பது? அவனும் வேறு ஜாதியில் கல்யாணம் முடித்திருக்கலாம். நல்ல வேலையிருந்தால் இந்தக் காலத்தில் போதும். இப்போது தோன்றுவது அப்போது தோன்றவில்லை. வாழ்க்கைக் கை நழுவிப் போய்விட்டது. முக்கியம் என்று அந்த நேரத்தில் தோன்றிய விஷயங்கள் இப்போது ஒன்றுமில்லாதது போல் தோன்றுகின்றன.  அவளுக்கும் யாரையாவது திருமணம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றியிருக்கும். அது அடிப்படை உணர்வு, தேவை.   நாகரீகமாகக் கூட அதை வெளியில் சொல்ல முடியாது.  மூன்றாவது வீட்டில் லட்சுமணன் இவனுடைய நண்பன். நல்ல பையன். பேங்கில் அதிகாரியாக இருந்தான். அடிக்கடி சைக்கிள் கடையில் சந்தித்துக் கொள்வார்கள்.  அவனிடம் கேட்டிருக்கலாம். அவனும் ஜாதி வரதட்சிணை என்று பேசுகிறவன் அல்ல. ஆனால் தண்டபாணியால் கேட்க முடிந்ததில்லை. மீனாக்காவுக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.  லட்சுமணனும் அடக்கமான நல்ல பையன். நல்ல பையன்கள் இந்த விஷயங்களைப் பேசுவதில்லை என்பது அந்தக் காலத்து வழக்கம். கூச்சம், தயக்கம், கேட்டு மறுத்துவிடுவார்களோ என்று தோல்வி பயம்.  

‘அவனும் கூட மிக நல்ல பையன்.  ஆனால் எதுவும் வீட்டில் லௌகிக வாழ்க்கைக்குச் சரியாக அமையவில்லை.  முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை குடும்பத்தோடு ராமேஸ்வரம் சென்று தொலைந்து வந்தாயிற்று. வேறு என்னதான் செய்ய முடியும்? அக்காவைப் பொண்ணுகேட்டு வந்தவர்கள் எல்லாம், கொள்ளைக்காரர்களைப் போல வசதிகள், வரதட்சணை, ரொக்கம் கேட்டார்கள்.  அப்பா, பையன்கள் இருவரும், லஞ்சம் விளையாடும் ’சென்ட்ரல் எக்ஸைஸ் துறையில் வேலை பார்க்கிறார்கள்’ என்பதால் கேட்டார்கள்.  லஞ்சம் வாங்காமல் சம்பாதித்த யாரும் அவற்றை நிறைவேற்ற முடியாது. அவர்களும் கஷ்டப்பட்டாவது கட்டிக் கொடுத்திருப்பார்கள்.  மாப்பிள்ளைகளின் பேராசையைக் கண்டு பயந்துவிட்டார்கள். 

கோயிலில் இருந்து திரும்பி வரும்போது ஏழே முக்கால் ஆகிவிட்டது.  செருப்பு இருந்தது. அண்ணன் சேது வந்துவிட்டான். ‘என்ன ஓரேயடியா, ஆஃபீஸ்லயே இருந்துட்டியா? ஆறு மணிக்காவது கிளம்பி வர வேண்டியதுதான?’

‘இன்னைக்கு ஒரு சால்ட் கம்பெனி கேஸ் லேட்டாயிருச்சு’ 

‘அந்த ’செந்தூர் சால்ட்’தானே.அவன் எப்பவும் ஏதாவது பண்ணீட்டுவந்து நிப்பான். நம்ம உயிரெடுக்க.’ பிறகு இருவரும் அமைதியாவிட்டனர்.  எல்லோரும் ஹாலில் இருந்த சோபாக்களில் அமர்ந்தனர். மீனாக்கா, டி.வி.யை ஆன் செய்தாள். 

தண்டபாணி டி.வி.யைப் பார்ப்பதுபோல் இருந்தான்.  ஆனால் அவன் மனதில் ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தது.  செண்பகம் அக்காவைப் பார்த்தான். கழுத்தில் ஒரே ஒரு செயின் போட்டிருந்தாள். நான்கு பவுன் இருக்கும். அப்பாவும் அம்மாவும் இருக்கும் போதே அறுபது பவுன் நகை, இருபதாயிரம் ரொக்கம் கொடுத்துத் திருமணமும் முடித்துவிட்டார்கள்.  மூன்று வருடங்களுக்கு மேல் அந்த வீட்டில் அவளால் இருக்க முடியவில்லை. அம்மாவிடம் அவள் சொல்லியிருந்த காரணம், அப்பா மூலம் அவனுக்கும் தெரியவந்தது. இன்னும் கூட ஜீரணம் ஆகக் கடினமாக இருந்தது. ‘இப்படியும் இருக்குமா? அக்கா இட்டுக் கட்டிச் சொல்கிறாளா?’    இரண்டு முறை கணவனிடத்தில் அண்ணன் கொண்டுபோய் விட்டுவந்தான்.  ஆனால் கொஞ்ச நாட்களில் திரும்பி வந்துவிட்டாள். 

செண்பகம் புகுந்த இடம், பார்க்க, பவ்வியமான, பக்திமயமான குடும்பம். மாப்பிள்ளை கண்ணனின் நெற்றியில் எப்போதும் திருநீறும், சந்தனமும் குங்குமமும், ஒளிவிடும்.  அக்காவும் தம்பியும்தான். மாமியார், மாமனார் தொந்தரவு கிடையாது. செண்பகத்தை அவருக்குக் கொடுக்க அது ஒரு முக்கியக் காரணம். மாமியார் கொடுமை கிடையாது. மாப்பிள்ளை பக்திமான். ஏமாந்துவிட்டார்கள். மாப்பிள்ளையின் அக்கா விதவை.  செண்பகா தூங்கிய பின் அங்கே வேறெதோ அடிக்கடி நடந்திருக்கிறது.  நிறைய நாள் கழிந்த பின், செண்பகாவுக்குப் புரிந்தது. நினைக்கக் கூசியது அவனுக்கு.. 

’மாப்பிள்ளை, அவள் இரவில் தூங்கியபின் அக்காவின் அறைக்கு போய்விடுகிறார்.’ இன்றும் அந்த வார்த்தைகள் காதில் தீ வைத்தது போல் சுடுகின்றன.  நம்பும் படியாக இல்லை. ஆனால் செண்பகம் அக்கா சொன்னால் நம்பித்தானே ஆகவேண்டும்.  அந்த இடத்தில் அவள் இருந்தாள்.  அவளுடைய நாத்தனாருக்கு ஒரு பையன், சிவா. எட்டுவயது. கணவர், அவனுக்கு இரவில் தூக்க மாத்திரை கொடுத்துத் தூங்க வைத்துவிடுவாராம். பாவம்.  பையன் இப்போது என்ன ஆனானோ?  இப்போது கூட இதுவெல்லாம் பொய்யாக இருந்துவிடக் கூடாதா என்று தண்டபாணிக்குத் தோன்றியது. அக்கா நன்றாகச் சமைப்பாள்.  எல்லாவிதத்திலும் நல்ல மனைவியாக இருந்திருப்பாள். அவளுக்கும் யோகமில்லை. அந்த ஆளுக்கும் யோகமில்லை.

 ’அவங்க விதவை அக்காவுக்கு இன்னொரு திருமணம் பண்ணி வச்சிருக்கலாம்.  ஆனால் சொல்றது ஈஸி. எவனும் ஒத்துக்க மாட்டான்.’நல்ல குடும்பத்தினர்’ அதைச் செய்யமாட்டார்கள்.  திருநெல்வேலி சைவமாச்சே’.  தேவைக்கு அதிகமாக யோசிக்கிறோமோ என்று அவனுக்குத் தோன்றியது. ’சமூகத்தின் பிரச்சனைகளை விடு, என்னுடைய பிரச்சனைகளையே என்னால் தீர்க்க முடியவில்லை.  என்ன செய்ய?’  அக்கா அவரிடம் சண்டை போட்டிருக்கிறாள். ‘இதெல்லாம் நல்லா இல்லை. அவளை வேற வீட்ல வச்சிரலாம். இந்தப் பிரச்சனை வராது. உங்களுக்கும் தொந்தரவு இருக்காது’ ஆனால் அவர் ‘அக்காவை எப்படித் துரத்திவிட முடியும்? அவளுக்கு வருமானம் ஒரு பைசா இல்லை. பையன் வேற. மாமனார் வீட்ல அவளை ‘ராசியில்லாதவன்னு’ டார்ச்சர் பண்ணித் துரத்தி விட்டுட்டாங்க. அவ எங்க போவா? அன்னைக்கே தூக்கில தொங்கப் போனவளக் காப்பாத்திக் கூட்டி வந்து வச்சிருக்கேன். நீ சொல்றது முடியாது’. 

 ’அது முடியாதுன்னா, நம்ம வீட்டுப் பக்கத்திலயே வீடு பாத்து வச்சிருங்க’ 

‘அப்ப எனக்குத் தான டபுள் செலவு’. 

செண்பகம் எது கேட்டாலும் அவள் கணவனிடம் ரெடிமேட் பதில் இருந்தது. ஆனால், அவளுக்கு எந்த இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வேலைக்காரிதான்.   அவளுக்கும் கோபம் தலைக்கேறிவிட்டது.  கிளம்பி வந்துவிட்டாள்.  அப்பாவும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நால்வரும் அதிர்ச்சியில் பேசக் கூட முடியாமல் ஆகிவிட்டது.  பேசக் கூடிய விஷயமா இது? இப்போது அவளுக்கும் நாற்பத்தைந்துக்கு மேல் ஆகிவிட்டது.  வாழ்க்கை ஏன் எளிதானதாக இல்லை? அவனுக்குள் எப்போதும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. ஆனால், செண்பகம் அக்கா மட்டும்தான் இந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பது போல், எப்போதும் ஒரு புன்னகையில் இருப்பாள்.  நரகத்திலிருந்து தப்பித்து வந்தவள். அந்த இடத்துக்கு மீதி மூவரும் போனதில்லை. கோர்ட் கச்சேரி என்று போகலாம்.  ஊரெல்லாம் நாறிவிடும். அந்த நாற்றம் வேண்டாம். அண்ணன் தம்பி இருவரும்  அக்காவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டார்கள்.  

டி.வி.யில் செய்திகள் வருவதற்கான இசை கேட்டது. மணி ஒன்பது. அண்ணன் கையில் ரிமோட் போயிருக்கும். செண்பகமும், அண்ணியும் எழுந்தார்கள். அடுக்களைக்குள் நுழைந்துவிட்டார்கள்.  மீனாக்கா, சேது, தண்டபாணி மூவரும் சோஃபாவில் இருந்தனர்.  

மீனாக்காவைப் பார்த்தான். உற்சாகமானவள். ஆனால் முகத்தில் மட்டும் ஒரு சோகம் படர்ந்தது போலிருக்கும். அதையும் இவனே கற்பனை செய்து கொள்கிறானா? கிரிக்கெட்டை மிகவும் விரும்பிப் பார்ப்பாள்.  இவர்கள் மூவருக்கும் கிரிக்கெட் பிடிக்கும். மிகவும் அழகானவள்.   பெரியக்காவின் அனுபவம் அவளைத் தடுமாற வைத்துவிட்டது.  பெண்பார்க்க வந்தவர்கள் எத்தனை பவுன்? தீபாவளி, பொங்கல், திருநாள், மணநாள் என்று வருடந்தோறும் என்னென்ன செய்வீர்கள்? அம்மா அப்பாவுடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டுதான் இருக்கவேண்டும், தனியாகப் போக முடியாது’ என்றெல்லாம் வரிசையாக கண்டிஷன்களைப் போட்டனர்.   திருநெல்வேலிப் பிள்ளைமார் வீடுகளில் பெண்கள் வீட்டார் கண்டிஷன் போட முடியாது.  பழைய காலத்தின் இருட்டுநிழல் படிந்த உலகம் அது. மூச்சடைக்கும் சுண்ணாம்புக் காளவாய். மீனாக்கா ஏற்கனவே பயந்து சுபாவம். பனிக்கட்டியாக உறைந்துவிட்டாள். அப்படியே பல வரன்கள் தட்டிப் போய்விட்டன. அப்புறம் திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டாள்.  அப்பா திடீரென்று போய்விட்டார்.  இரண்டு வருடங்களுக்குள் அம்மாவும் போய்விட்டாள். அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன செய்வதென்று தோன்றவில்லை.  வருகிற மாப்பிள்ளைகள் கொள்ளையடிக்க வருகிறவர்கள் போலப் பேசினார்கள். மீனாக்காவும் அப்படியே இருந்துவிட்டாள்.  

அண்ணனும், அக்காக்களும், வீட்டிலும் வெளியிலும் கும்பிடாத கடவுள்கள் கிடையாது.  ’’இருந்தாலும், இந்த ’இருந்தாலும்’ பெரிய ’இருந்தாலும்’தான்.  கல்யாண ராசி யாருக்கும் இல்லை.  அண்ணனுக்குத் திருமணமாகி கொஞ்ச நாள் ஆகிறது. அண்ணி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுகிற டைப்.  பெரும்பாலும் சுமூகமாக நடந்து கொண்டிருந்தாள். அண்ணியுடன் மற்ற மூவரும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டனர். அவ்வப்போது சின்னச் சின்னச் சண்டைகள் வந்தாலும் ஒன்றும் முற்றிப் பெரியதாகவில்லை. சரி அவனுக்காவது யோகம் இருக்கிறதே! 

மூன்று பெண்களும் வராண்டாவில் தரையில் உட்கார்ந்திருந்தனர்.  அண்ணனும் தம்பியும் சேர்களில் இருந்தனர்.   அவரவர் இடம் எது என்று அவர்களுக்குத் தெரியும்.  குறிப்பாக பெண்களுக்கு. வேறு இஷ்டப்பட்ட இடத்துக்குப் போக முடியாது. சென்ற தலைமுறையின் எச்சம்.  மீனா எழுந்து அடுக்களையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் கப்பில் தண்ணீர் எடுத்து வந்து, காம்பவுண்ட் சுவரோரம் வைத்திருந்த மல்லிகைச் செடிக்குத் தண்ணீர் விட்டாள். இன்னும் கொஞ்ச நாளில் பூக்கத் தொடங்கிவிடும். வந்து வராண்டாவில் தான் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள். 

 ரொம்ப நாள் கழித்து சேது மீண்டும் அதே பிரச்சனையைக் கிளப்பினான் ‘நீயும் ஒரு கல்யாணம் முடிச்சுட்டேன்னா நல்லது.  உன்னைப் பார்க்கிறதுக்கும், துணைக்கும் ஒரு ஆள் கிடைச்சிரும்…’. ஏற்கனவே தண்டபாணி ’நான் கல்யாணம் முடிக்க மாட்டேன்’ என்று பலமுறை சொல்லியிருந்தான். ‘உன் நல்லதுக்குத் தாம்ப்பா சொல்றேன். உனக்’கும் குடும்பம் குழந்தைன்னு வேணும்ல.’

தண்டபாணிக்கு அது கசப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். இரண்டு அக்காக்களும் என்ன செய்வார்கள்? அண்ணனுக்கும் தம்பிக்கும் நல்ல வேலை இருக்கிறது. நல்ல சாப்பாடு, மற்ற வசதிகள் போதுமானவையாக இருக்கின்றன. அவனுக்கும் முப்பத்தி ஏழு வயதாகிவிட்டது. இனிமேல் என்ன திருமணம்? அவன் பேசினான் ‘பாரு, நான் ரொம்பப் பேச விரும்பல.  உனக்குக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிச்சிருந்தது. பண்ணிக்கிட்ட. எனக்குப் பிடிக்கல. இனிமே ஒரு துணை கூட இருந்து, குழந்தை பெற்று, அதெல்லாம் என்னால் முடியாது’ அவன் பேச்சில் சலிப்பு இருந்ததை மூவரும் கவனித்தார்கள்.  அதற்கு எல்லாருமே காரணம்தான். சமூகம் அப்படி இருக்கிறது.  யாருக்கும் யார்மேலும் அனுதாபம் இல்லை. பழைய பஞ்சாங்கம், ஜாதகம் என்று திரிகிறார்கள். 

பெரியக்கா பேசினாள் ‘என் நிலைமை இப்படி ஆயிட்டுதுன்னு, நீ யோசிக்காத. உனக்கு ஒருவேளை நல்ல யோகம் இருந்ததுன்னாலும் இருக்கலாம்’  

’நீயும், மீனாவும் வீட்ல இருக்கீங்கள்ல நானும் உங்க கூட இருந்துக்கிறேன். அதுல உங்களுக்கென்ன பிரச்சனை?’ என்றான் தண்டபாணி.

‘எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. சரி உனக்காவது பொண்டாட்டி பிள்ள குட்டி ஏதாவதுன்னு யோகம் இருந்தா, நம்ம எல்லாருக்கும் சந்தோஷம்தானே’

மீனாவும் அக்காவுடன் சேர்ந்து கொண்டாள் ‘நீயாவது சந்தோஷமா இருக்கிறத நாங்க பாத்தா எங்களுக்கும் சந்தோஷம்தான். என்னைப் பற்றிக் கவலைப் படாத.. இந்த வீட்ல அல்லது உங்கூட வந்து இருந்துக்குவேன். கடைசிவரை நீங்க ரெண்டு பேரும் எங்களைக் காப்பாத்துவீங்கன்னு நம்பிக்கை இருக்கு’ தண்டபாணியின் கண்கள் கலங்கிவிட்டன. அண்ணனைப் பார்த்தான். அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தான். மீனா ஒருதடவை கேவிவிட்டாள். 

கொஞ்சம் அமைதி நிலவியது. பிறகு தண்டபாணி தொடர்ந்தான் ’நம்ம நாலு, ஐந்து பேரும் நல்லாத்தாம்மா இருப்போம். இன்னொரு ஆளக் கூட்டி வைச்சுச்கிட்டு, அவளையும் ஏன் கஷ்டப்படுத்தணும்? கல்யாண வயது வேற தாண்டிப் போயிருச்சு. நான் மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க’. முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு வாசல் கதவுக்கு அப்பால் தெருவைப் பார்த்தான்.  ’இந்த வயதில் திருமணம் முடித்து என்னத்தைக் காணப்போகிறேன். அண்ணன் சம்பளம், என் சம்பளம் ரெண்டும் போதும் மீதமிருக்கும் மூன்று பேர் நன்றாக வாழ்கிறோம். கடைசிவரை’. சேது அமைதியாக இருந்தான்.  

இரண்டு வருடங்களுக்கு முன் மீனா தண்டபாணியிடம் சொன்னாள் ‘உன் ஃபிரெண்ட், ராம்ராஜ் அவண்ட்ட கேட்டுப் பாரு எனக்கு அவரப் பிடிச்சிருக்கு’ அண்ணனுக்குத் தெரியாமக் கேளு’. 

 ‘அவன் பெரிய பணக்காரன். கொஞ்சம் குடிகாரன், சிகரெட் பிடிப்பான். வேற ஜாதி…’ சொல்லிக் கொண்டிருக்கும் போதே தண்டபாணி யோசித்தான் ‘அவனிடம் எப்படிக் கேட்பது? கெட்ட பழக்கங்கள் வேற.’  அப்பா இருந்தாலாவது கொஞ்சம் தைரியமாகக் கேட்கலாம். பதில் சொல்லாமல் மௌனமானான்.  அதற்கு மேல் மீனாவால் பேச முடியவில்லை. இதுவே அதிகம் என்று அவளுக்குத் தோன்றியது. அதற்கப்புறம் அந்தப் பேச்சை அவள் எடுக்கவே இல்லை.  தண்டபாணிக்கு அது வருத்தமாக இருந்தது. இன்றும் இருக்கிறது.  

அண்ணனுக்குக் குடும்பம் வந்துவிட்டதால், அவன் கை விட்டாலும் தண்டபாணி கைவிட மாட்டான். கைவிடக் கூடாது என்று மீனா நினைத்தாள்.  மாற்றம் எதுவும் விரைவில் நடந்துவிடாது என்பது தண்டபாணிக்கும் மீனாவுக்கும் தெரிந்திருந்தது. 

 மீனா மல்லிகைச் செடியைப் பார்த்தாள். அதற்குச் ஜோடியாக வாசலுக்கு மறுபுறம் இன்னொரு பூச்செடியை வைக்க வேண்டும். என்ன பூச்செடி வைக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினாள்.  

      ****************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *