சொற்களில் எஞ்சுபவன்

1.

ஓடைத்தெரு ஜப்பார் கடைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது சுவரொட்டி. ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி.  சாக்கடை நொதித்து ஓடும் சுவரின் மத்தியில் அப்புவின் புகைப்படம். புன்னகை ததும்பும் முகம். உதடுகள், கன்னத்திரட்சி, நெற்றிச்சரிவு, பார்வையின் தீட்சண்யம், புருவங்களின் வளைவு என ஒட்டு மொத்த முகமும் பூரித்திருந்தது. அப்பு இதைப்போன்ற சம்பிரதாயங்களை விரும்பக் கூடியவன் அல்லன்.  சுவரொட்டியில் உன் பிரிவால் வாடும் குடும்பத்தார் என்று கண்டிருந்தது. அதற்குள் ஐந்தாண்டுகள் கடந்துவிட்டதா?

அப்பு பெரும் அழகன். மீசையற்ற அவனுடைய சிவந்த முகம்  லட்சிய அழகனாக பெருமிதம் கொள்ளச் செய்யும். அவன் உடலின் வனப்பும், அவன் அருகே வந்து நின்றாலே வீசும் நறுமணமும் எங்களிடம் இல்லாதவை. மைசூர் சந்தனமும் ஜவ்வாதும் அவன் வீட்டில் மலிந்து கிடக்கும்.

அவன் தாத்தா நகரத்தின் பிரபல சித்த வைத்தியர். சாயப்பட்டறையின் பாழடைந்து போன பங்களா அவரின் பெருமைகளில் இன்றும் எஞ்சி நிற்பது. சுற்றியிருந்த ஜமீன்களின் ஆஸ்தான வைத்தியர். தங்கம்பட்டி ஜமீனின் வீழ்ச்சிக்கு அவர் வைத்த வசிய மருந்துதான் காரணம் என்ற பேச்சு தெருவிற்குள். பெண்களை வசியப்படுத்தும் மசியை அவர் கண்டுபிடித்தார். அவரிடம் வந்து சேர்ந்த பெரும் சொத்துக்களுக்கு பெண்வசிய மருந்தே முக்கியக் காரணம் என்பார்கள். எது எப்படியோ அப்பு பெரிய வீட்டுப்பிள்ளை. செல்வந்தர்களிடம் இயல்பாகவே படிந்திருக்கும் பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் மிக இளம் வயதிலேயே அப்புவிடம் காணக்கிடைத்த நற்பேறுகள்.

கேரள பாணியில் அமைந்த நாலு கட்டு வீடு. கேரள நம்பூதிரிகளோடு அப்புவின் தாத்தாவிற்கு அறிமுகம் உண்டு. மட்டப்பா பாய்ச்சிய அறைகள்.  வடக்குப் பார்த்த வாசல். தெருவில் இருந்து உள்ளே செல்ல நான்கு படிகளில் மேலேற வேண்டும். வாசலின் இருபுறமும் பெரிய கல் திண்ணைகள். வாசல் நிலையைத் தாண்டியதும் தார்சா. அங்கே பார்வையாளர்கள் காத்திருக்கும் வசதிகள் கொண்ட மூங்கில் இருக்கைகள், மின்விசிறிகள். எப்போதும் ஈர மணல் நிறைந்த சட்டியில் நீர் நிரம்பிய மண்பானை. மண்தட்டால் மூடியிருக்கும். பல்வேறு உடல் உபாதைகளால் துன்புற்று வைத்தியம் நாடி வந்திருப்பவர்களை நிரந்தரமாக அங்கே காணலாம். உள்முகமாக திறந்த முற்றம். அகன்றது. ஒரு திருமண பந்தியே நடத்தும் அளவிலானது. கீழ்புறம் சமையற்கட்டு. அதிகமும் பித்தளைப் பாத்திரங்கள். மரத்துாள் அடுப்புகள் ஐந்தாறு வரிசையாக. எந்நேரமும் அடுக்களையில் ஆட்கள் இருப்பார்கள். உணவுப் பதார்த்தங்கள் சமைக்கும் நறுமணம் சதா மண்டியிருக்கும். ஒருகாலத்தில் அவ்வீட்டில் தினந்தோறும் நுாறு பேர்களுக்கு குறையாமல் அன்னதானம் நடக்குமாம். புகைபோக்கியின் வழியே வான்நோக்கித் தாவும் வெண்புரவிகளின் பாய்ச்சல் ஒருநாளும் நின்றதில்லை. மீண்டும் கல்திண்ணைகள் பாவிய காலியிடம். தொடர்ந்து விசாலமான உள் அறை. அதற்குள் தானியக் குதிர்கள் மண்டிய சிற்றறைகள். அவைகளில் சித்த வைத்தியத்திற்கு தேவையான மூலப்பொருட்களை சிறு சிறு தாளிகளில் சேமித்து வைத்திருப்பார்கள். அறையே ஆளைக்கிறக்கும் பலவித வாசனைகளால் திக்குமுக்காடச் செய்யும். கிழக்குப் பார்த்து மாட்டப்பட்டிருக்கும் சாமிப்படங்கள். அவற்றில் தொங்கும் சந்தன மாலைகள். ஆளுயர குத்து விளக்கு. எப்போதும் நின்றெரியும் மஞ்சள் சுடர். பக்கவாட்டில் மேலேறும் படிக்கட்டுகள். தேக்கு மரத்தால் ஆனவை. மாடியறையை இணைப்பது வைரம் பாய்ந்த பலகை மூடி கொண்ட ஒரு திறப்பு. கீழே இருந்து எவ்வித் துாக்க வேண்டும். பேய்க்கனம். சிறுவர்களால் திறக்க முடியாது. திறந்ததும் ஒற்றைக் கொம்பன் மேலிருந்து வரவேற்கும். ஜமீன் வேட்டையாடிய யானை. தாத்தாவிற்கு நினைவுப்பரிசாக வந்து சேர்ந்தது. பாடம் பண்ணி சுவரில் நிறுத்தியிருந்தார். நடுங்கும் உள்ளமின்றி அதை கடந்து செல்ல முடியாது. அச்சு அசல் அப்படியே. ஒரு கணம்  உயிரோடு இருக்கிறதோ என்று தோன்றி துதிக்கையின் கனத்த நீட்சி தோளைத் தொட்டு நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு. யானையின் இருப்பு மாடியை நிறைத்திருக்கும். யானையைச் சுற்றி கட்புலனாகாத அடர்வனமும் இருப்பதான உள்ளுணர்வு. அங்கேதான் தாத்தாவின் படுக்கை அறை. அறையில் பாதியை நிறைக்கும் கட்டில். மிக உயரமானது. தாத்தாவின் கடைக்குட்டி மகன் பதினைந்து வயதில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சிறிய அறை அடுத்தது. நீண்ட நெடுங்காலமாக அவ்வறை, கதவின் குறுக்கே மரச்சட்டங்கள் வைத்து ஆணி அறைந்து மூடியிருக்கிறது. முடிவாக குளியலறைகளும் கழிவறைகளும். சற்றுத்தள்ளி காம்பவுண்ட் சுவர் வரை காலியிடம். அதில் பலவிதமான தாவரங்கள். பப்பாளி, தக்காளி, புடலை, செம்பருத்தி,அவரைக்கொடி, துாதுவளை ,முருங்கை, கொடுக்காப்புளி என. பப்பாளிப்பழங்கள் தித்திப்பேறியவை. ஈசான மூலையில் துலாக்கிணறு. கிணற்றின் கொற்றக்குடையாக தென்னை மரமொன்று.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை சேர்ந்து படித்தோம். நான்கு தெருக்கள் கடந்தால் நாடார் ஸ்கூல். மெட்ரிகுலேசன் பள்ளிகள் நகரத்தில் அப்போது அறிமுகம் ஆகியிருக்கவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததும் பலசரக்குக் கடையொன்றில் பொட்டலம் மடிக்க பணியமர்த்தப்பட்டேன். நண்பர்கள் கிளைத்துப் பரவினார்கள். சென்னை,திருப்பூர், பெங்களுர்,பம்பாய் என்று. கோட்டயம் சீமாட்டி வரை சென்றார்கள்.

அப்புவிற்கு அந்த நெருக்கடிகள் இல்லை. மேற்படிப்பிற்காக தினந்தோறும் திருநெல்வேலிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தான். ஜங்சன் மேம்பாலத்தினடியில் இருந்த பழைய புத்தகக் கடைகளில் இருந்து சல்லிசான விலைக்கு மாத நாவல்களை அள்ளிவந்து தெருவிற்கே வாசிக்கக் கொடுப்பான். இரவுகளில் தெருமுக்கில் பத்துமணிக்கு மேல் ஜமா நடக்கும். மீதமிருந்தவர்கள் கூடி பேசிச் சிரிப்போம். படித்தவற்றை, பேசிக்கேட்டவற்றை, பார்த்துக் களித்தவற்றை கதைகளாகப் பகிர்ந்து கொள்வோம். இராக் கச்சேரிகளில் கேட்க நேர்ந்த கதைகளில் அப்புவின் காதல் கதைகள் அபாரமானவை.  அவையே இன்றும் அவனைக் குறித்த நினைவுகளில் பெரும்பகுதி.

காதல் கதை 1

இரண்டாம் முறையின் போதே அப்பு கண்டு கொண்டான். போஸ்ட் மாஸ்டர் தன் கைகளை தேவைக்கு அதிகமாக தொட்டுத் தீண்டுவதை. கற்சிலைக் கருப்பும் கனத்த சரீரமும் கொண்ட கனவானைப் போலிருந்தார் போஸ்ட் மாஸ்டர். நகரத்தின் அத்தனை தெருக்களும், அவற்றில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் முகங்களும் அவருக்கு அத்துபடி. வைத்தியர் வீடு என்று மட்டும் எழுதி வரும் தபால்களைக் கூட தவறாமல் அப்புவின் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கும் தனித்த அக்கறை கொண்டவர். அதனாலேயே அப்புவின் அப்பாவிடம் நற்பெயர் எடுத்தவர். நகரத்தின் நம்பிக்கைக்குரியவர்.

அப்புவின் அப்பா மாதந்தோறும் வெளியூர்களில் இருக்கிற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பண உதவிகள் செய்யக் கூடியவர். அள்ள அள்ள குறையாத செல்வம் அவரிடமிருந்தது. உதவிகள் கோரி தபால்கள் வந்த வண்ணம் இருந்தன. மணியார்டர் படிவங்களை வாங்கவும் அவற்றை அனுப்பவும் தபால் நிலையத்திற்கு அன்றாடம் அப்பு வரவேண்டியிருந்தது. தபால் நிலையம் என்பது பத்துக்குப் பத்து உள்ள சிறிய அறை. வாடகைக்கட்டடம். மாடியில் இருந்தது. கதவு திறந்திருந்தாலும் வலது புற சன்னலின்  மேல் பகுதி அடைக்கப்பட்டு கீழ் பிளவு திறந்து அதன் வழியேதான் போக்குவரத்து. கருத்த கைகளின் வழியாகவே போஸ்ட் மாஸ்டர் பரிபாலனம் செய்து கொண்டிருந்தார். கைகளின் உரையாடல்.

மீசையற்ற பளபளவென்று மினுங்கும் கன்னச்சதைகள் கொண்ட போஸ்ட் மாஸ்டர் இயல்பாக உம்மென்று இருக்கக் கூடியவர். அரசாங்க உத்தியோகம் கொண்டு வந்து சேர்ப்பிக்கக்கூடிய அத்தனை பாவனைகளும் படிந்தவர். லேசில் யாரிடமும் சிரித்துப் பேசி விடமாட்டார்.  அவரின் இறுக்கம் நிறைந்த முகம் யாரையும் அண்ட விடாமல் விரட்டிவிடக்கூடியது. அவ்வியல்பு அவருக்கு ஒருவிதத்தில் பாதுகாப்பு அரணும் கூட. அப்பு சென்றால் மட்டும் போஸ்ட் மாஸ்டர் தன் விதிகளைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வார். அதிகாலையில் ஏற்பட்ட பூவின் மலர்ச்சி அவரிடம் தென்படும்.

அப்புவை அறைக்குள் அழைப்பார். அவரின் கை விரல்களில் வழக்கத்திற்கு மாறான பதற்றம் தொற்றிக் கொள்வதைக் கண்டு அப்பு ஆச்சரியம் அடைந்தது உண்டு. கனத்த அவரின் சரீரத்தில் சட்டென்று சிறுவன் ஒருவன் வெளிப்பட்டு விளையாட ஆரம்பிப்பான். அருகே இருந்த மரப் பெஞ்சில் அப்புவை அமரச் செய்வார். அவ்விதம் அமர நேரிட்ட போதெல்லாம் அப்புவின் உடலோடு அவர் உடலின் எந்த பாகமாவது தொட்டுக்கொண்டிருக்கும். உதடுகள் துடிக்க கன்னிமைகள் விரைந்து திறந்து மூட அவரின் இயக்கம்  வேகமெடுக்கும். அப்போது அங்கே வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் கூட பேரன்போடு அவர் நடந்து கொள்வார்.  தபால் வில்லைகளின் மீது விழும் முத்திரைக் குத்தல்களில் கனிவு தெறிக்கும்.

அம்மையப்பா தியேட்டரில் ஏழரை மணிக்காட்சி பார்க்கச் சென்ற ஓர் இரவிருள். போஸ்ட் மாஸ்டர் தன் அருகே அமர்ந்திருப்பதை இடைவேளையின் போதுதான் அப்பு அறிந்தான். இடைவேளை முடிந்ததும் பிட்டுப்படம் போடுவார்கள். ஐந்து நிமிட பரவசம் ஓடி மறைந்ததும் அதுவரை காத்திருந்த கூட்டம் களைந்து செல்ல ஆரம்பிக்கும். ஒருவரை ஒருவர் மிக அந்தரங்கமாக நோட்டமிட்டுக்கொள்வார்கள். அப்பாக்களை மகன்களும் அண்ணன்களை தம்பிகளும் தவிர்க்க விரும்பும் தடுமாற்றத்தை அங்கே கண்டு களிக்கலாம். மூட்டைப்பூச்சிகள் தந்த தொந்தரவு தாளாமல் தவித்துக் கொண்டிருந்தவனின் தொடைமேல் வலுவான கையொன்று விழுந்தது. அப்பு எரிச்சலாக உணர்ந்தான். போஸ்ட் மாஸ்டரின் முகம் திரையில் தீவிரமாக நிலைத்திருந்தாலும் அவரின் இடது கைமட்டும் அப்புவின் இடுப்பிற்கு கீழே பெருந்தவிப்போடு தேடியது. அப்புவிற்கு அந்த விளையாட்டின் ஆழ அகலங்களை அறிந்துவிடும் ஆர்வம் ஏற்பட்டது. அவ்விளையாட்டின் எல்லை எது என்பதை தெரிந்து கொள்ள அவன் விரும்பினான். அப்பு அவரின் கைகளை அனுமதித்தான்.

போஸ்ட் மாஸ்டர் கடைசிவரை கனவானாகத்தான் நடந்து கொண்டார். அப்புவிற்கு தபால் நிலையம் செல்லும் போதெல்லாம் அடிவயிற்றில் மின்னதிர்வுகள் தோன்றின. போஸ்ட் மாஸ்டரின் தீராத கனிவு அவனை நெகிழச் செய்தது. அப்புவை அவருடைய வீட்டிற்கு வந்து போக கெஞ்சினார். அவரிடம் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. ஆங்கிலத்திலும் தமிழிலும். மிகச் செறிவான நுாற்கிடங்கு. வாழ்நாளெல்லாம் சேமித்திருந்தார். மாடியில் அதற்கென்றே தனித்த ரேக்குகளும் நாற்காலிகளும்  காற்றோட்டமும் நல்ல வெளிச்சமும் அமைந்த அறை. நுாற்களின் அருகே செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இருளுக்கு மத்தியில் அப்பு  அவரை வேறு ஒருவராக எதிர் கொண்டான்.

அப்புவிற்கு இடையறாத ஆர்வத்தை அளிக்க புத்தகங்கள் மட்டும் காரணமாக இருக்கவில்லை. பிள்ளைப்பேறு வாய்க்காத போஸ்ட் மாஸ்டரின் மனைவியும்தான். போஸ்ட் மாஸ்டரை விட அவரின் மனைவி அப்புவின் மீது கொண்ட அக்கறையை நாங்கள் நன்கறிவோம். அப்புவின் வாரிசு போஸ்ட் மாஸ்டரின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடும் வாய்ப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் அவன் பிடிவாதமாக அதை இரத்து செய்துவிட்டான். கருக்கலைப்புகளினால் போஸ்ட் மாஸ்டர் மனைவியின் உடல் நலம் வெகு சீக்கிரமே சீர்குலைந்தது. போஸ்ட் மாஸ்டருக்கும் தெரிந்தே நடந்த காரியங்கள் அவை.

காதல் கதை 2

பாலகிருஷ்ணனுக்கு வேறு பெயராக ஒரு எண் இருந்தது. பகல்பொழுதுகளில் அவன் வீட்டு வேலைகளில் மூழ்கியிருப்பான். மாலையானதும் தலைக்குக் குளித்து முகம் முழுக்க பவுடர் பூசி உதட்டுக்கு சாயம் ஈசி திண்ணையில் அமர்ந்து பெண்களோடு கதைகள் பேசிக்கொண்டிருப்பான். இரவு பத்துமணிக்கு மேல் தெரு இளவட்டங்கள் செட்டியார்கடை பெஞ்சில் ஒன்று கூடுவோம்.

பாலகிருஷ்ணன் தவறாமல் வந்து அமர ஆரம்பித்தான். அப்பு வராத நாட்களில் அவனும் வருவதில்லை. அப்புவிடம் இதைச் சொன்னபோது அப்பு கடும் கோபம் கொண்டான்.

மேஸ்திரியின் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. தெருவில் மாட்டுவண்டிகளில் அள்ளிவரப்பட்ட ஆற்றுமணல் குவிக்கப்பட்டிருந்தது. நண்பர்கள் ஆற்றுமணலில் அமர்ந்திருந்தோம்.  மணலை அள்ளி ஒருவர் மற்றொருவர் மீது வீசி விளையாடிக்கொண்டிருந்தோம். கோபு மச்சான் கொழுந்தன் முறையுள்ளவர்களை பாலியல் சீண்டல்களால் அதிர வைத்தார். கொழுந்தன்களின் உடன்பிறந்தவர்களை அங்கேயே சொற்களின் ஊடாக சுகிக்க ஆரம்பித்தார்.

ஆர்ப்பரித்து சிரித்தவாறு அமர்ந்திருந்த அப்புவின் அருகில் பாலகிருஷ்ணன். மணலினை அள்ளி அள்ளி மறுபக்கம் குவித்திருந்தான். ஒரு கட்டத்தில் அவன் விரல்கள் அப்புவின் காலிடுக்கை கீழிருந்து தொட்டுத் தீண்டிவிட்டன. அப்பு பேரொலி எழும்விதமாக பாலகிருஷ்ணனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். பாலகிருஷ்ணன் கதறி அழுது தெரு முழுக்க ஓலமிட்டு ஓடித் திரிந்தான். அவனை கோபு மச்சான் ஆற்றுப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

“எப்படிவோய் அழுகையை நிப்பாட்டினீரு?” என்று கேட்ட போது கோபு மச்சான் சொன்னார்.

“என் உயிரைக் கொடுத்தாவது, உன் காதலை நிறைவேற்றுவேன்னு நான் சத்தியம் பண்ணினேன்”

அப்பு மறைந்த நாளில் இருந்து பாலகிருஷ்ணன் வண்ண ஆடைகள் அணிவதை நிறுத்திக் கொண்டான். தன்னை அலங்கரித்துக்கொள்வதும் இல்லை.

காதல் கதை -3

பிரபாவதி கண்ணனுக்கு தங்கைமுறை. ஆனாலும் எங்களுடன் சேர்ந்து அவனும் காதலித்தான். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியிருந்தது. பிரபாவதியிடம் முதலில் காதலைப் பெறுவது யார் என்பதில்.

அப்பு ஒரு வாரத்தில் வெற்றி அடைந்தான். பிரபாவதி எழுதிய காதல் கடிதத்தை அவன் எங்களிடம் நீட்டினான். அது பிரபாவதி எழுதியதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள நான் என் தங்கையிடம், பிரபாவதியின் நோட்டு ஒன்றினை வாங்கி வரச் செய்து ஒப்பிட்டுப் பார்த்தேன். சத்தியமாக அது பிரபாவதி எழுதியதேதான்.

பிரபாவதிக்கு பதினெட்டு வயது ஆகட்டும் என்று அப்பு காத்திருந்தான்.

அப்புவின் அப்பாவிற்கும் அவனுக்கும் ஏற்பட்ட கை கலப்பினால் அப்பு ஊரை விட்டு ஓடிப்போனான். பிரபாவதிக்கு திருமணம் ஆனபோது அப்புவும் வந்து கலந்து கொண்டான். பிரபாவதி அவனைத் தனியே அழைத்துப் போனாள். அவனுக்கு அவள் அன்று கொடுத்த அழுத்தமான முத்தத்தை, அதற்கு பிறகு அவன் தன் வாழ்நாளில் எங்குமே பெற்றதில்லை என்று சொன்னான். பிரபாவதி ஒரே ஒரு முத்தத்தின் மூலம் தன் தாம்பத்திய உறவில் பரிபூரணம் அடைந்துவிட்டாள் என்றும் சொன்னான்.

2.

இருபதாண்டு இடைவெளி தெருவில் ஏகப்பட்ட தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. தேரோடும் வீதிபோல  அகலம் கொண்டிருந்த தெரு, பஜார் என்றாகி சிறுத்துப் போய், போக்குவரத்து நெரிசலுக்குள் மாட்டிக் கிடந்தது. குடியிருப்பு பகுதிகள் மறைந்து  பாதித் தெருவில் வணிக நிறுவனங்கள். இரண்டு புரோட்டாக்கடைகள், ஒரு சூபர் மார்க்கெட் ஒரு ஆஸ்பத்திரி, நான்கு செல்போன்கடைகள், ஒரு போட்டித்தேர்வ மையம்  என புதிய வரவுகள். சாக்கடை மேலும் குறுகி நகர வழியின்றி தேங்கி துா்நாற்றம் கூடியிருந்தது.

வைத்தியர் தாத்தாவின் வீடு பொலிவிழந்து போயிருந்தது. கல்திண்ணைகள் துார்ந்திருந்தன. வெள்ளையடிக்காமல், போதிய பராமரிப்பு இன்றி பெரிய வீடு பாழடைந்திருந்தது. அப்புவின் அப்பா தினக் குடிகாரர் ஆகியிருந்தார். அப்புவிற்கு இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்தும் நடந்து முடிந்திருந்தது.

பிழைப்பிற்காக பெருநகரங்கள் சென்று அங்கேயே குடும்பங்களை ஏற்படுத்திக்கொண்ட நண்பர்கள் காணாமல் ஆனார்கள். நண்பர்கள் அத்தனைப் பேருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் வந்திருந்தனர். உண்மையில் எங்களுக்கிடையே பேச்சுவார்த்தையே குறைந்திருந்தது.

அப்புவைப் பற்றி ஏகப்பட்ட ஆவலாதிகள். “உன் நண்பன் தானே புத்திமதி சொல்லக் கூடாதா?” என்று அவன் தந்தையே ஒருமுறை நேரில் பார்த்த போது கண்கள் கலங்க என்னிடம் கேட்டார். நானே சாதி மீறி திருமணம் செய்து, உறவினர்களால் கைவிடப்பட்டு, அல்லற்பட்டுக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கும் எனக்கும் தீராத சண்டைகள். பிள்ளைகளுக்காக மட்டுமே சேர்ந்திருந்தோம்.

அப்புவை ஒரு முறை நேரில் பார்த்துவிடலாம் என்று தேடிப்போனேன். பொங்கலை ஒட்டிய தொடர் விடுமுறை. கரிநாள், முன்பெல்லாம் தெருவே கூடி முந்தலுக்கோ சங்கரன்கோவிலுக்கோ முந்தைய நாள் மீந்த பொங்கலையும் சுண்டக்குழம்பையும் எடுத்துக்கொண்டு உலா செல்வதுண்டு.

அப்புவின் வாசல் கேட் உள்பக்கமாக பூட்டியிருந்தது. விசாரித்த போது அவன் உள்ளேதான் இருக்கிறான், ஆனால் பார்க்க முடியாது என்ற தகவல். மின்சாரம் கணக்கெடுக்க வருகிற ஊழியர் கூட இரண்டொருமுறை மின்சாரத்தை துண்டித்துவிட்டார் என்றார்கள். அவன் குடும்பம் அவனை அங்கேயே வசிக்க விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விட்டது. எவ்வளவு தட்டியும் அவன் கதவைத் திறக்கவில்லை. குடித்துவிட்டு துாங்குவான் என்றார்கள்.

அவனைப் பற்றி கேள்விப்பட்டவை நம்ப முடியாதவையாக இருந்தன. பெருங்குடியும் பெண்பித்தும் முற்றியவனாக அவன் மாறியிருந்தான். இரவுகளில் அவன் வளர்க்கும் நாய்களோடு தெருவிற்குள் சுற்றித்திரிவான். இரவு முழுக்க விழித்திருக்கும் அவன் பகலெல்லாம் கிடந்து உறங்குவான். நாய்களுக்கான உணவும் அவனுக்கான உணவும் ஒரு அண்ணாச்சியிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தான். அவன் பங்கிற்கு உரிய சொத்தை பாகம் பிரித்து வாங்கி, அவற்றை விற்று பணமாக்கியிருந்தான். வங்கிக்கணக்கில் சேமிப்பில் இருந்தவற்றை வைத்து வாழ்ந்து வந்தான்.

ஐந்தாறு நாய்கள் அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு முன் செல்ல அப்பு தள்ளாடியபடி அவற்றின் பின் ஓடியதை ஒரு நாள் இரவில் நான் கண்டேன். தாடியும் மீசையும் மண்டி தோள்வரை முடிகள். சடைகள் விழுந்திருந்தன. கண் இமைகள் தடித்தும் முகம் வீங்கியும் விகாரமாக இருந்தான்.

அவன் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனக்கும் அந்தக் கோலத்தில் அவனிடம் பேசத் தோன்றவில்லை. அவன் அழிவு என்னிடம் எழுப்பிய கேள்விகள் ஏராளம்.

3.

அப்புவின் கடிதம்

நான் சம்பிரதாயங்களை விரும்புவதில்லை என்பது உனக்குத் தெரியும்.  நீ என் நண்பன் என்பதால் இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் சம்பிரதாயங்களை நீ எதிர்பார்க்கமாட்டாய் என்று நம்புகிறேன்.

நேற்றிரவு உன்னைப் பார்த்தேன். உன்னிடம் என்ன பேசுவது என்றுதான் பேசாமல் சென்றுவிட்டேன். என் செல்லக்குட்டிகள் என்னை வழிநடத்திச் செல்வதில் அதிக அக்கறை கொண்டிருந்தன. அவை இழுத்துச் செல்லும் வழியில் நான் சிறிதும் தயக்கம் இன்றி பின் செல்ல வேண்டும். அவை அதை விரும்புகின்றன. எனக்கும் மகிழ்ச்சியே.

இறுதியில் எஞ்சியது நாய்களின் பேரன்பும் அருகாமையும்தான். எனக்கு எந்தக்குறையும் வாழ்நாளில் இல்லை. இப்பவும் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. என் பங்கிற்கு கிடைத்த சொத்துக்களில் பெரும்பகுதியை நான் விற்றுவிட்ட போதும் மீதமிருக்கும் சொத்தின் மதிப்பு அது. உனக்குத் தெரியும் நம்முடைய தெருவில் இன்று மனை சென்ட் என்ன விலை போகிறது என்பது. நான் நினைத்தால் என் வீட்டையும் விற்றுவிட்டு பல கோடிகளை வாங்கி வங்கியில் சேமித்துக்கொண்டு நகரத்தின் விளிம்பில் குறைந்த விலைக்கு மனை வாங்கி வீடு கட்டிவிட முடியும். அதுதானே நம் தெருவாசிகள் செய்துவரும் புத்திசாலித்தனமான முடிவு.

எனக்கு அதில் விருப்பமில்லை. என் வீடு என்பது என் வீடு மட்டுமா? இங்கே என் தாத்தா இரவு முழுக்க என்னோடு இருக்கிறார். மிக இளம் வயதிலேயே  தற்கொலை செய்து கொண்ட சித்தப்பா எப்பவும் அழுதுகொண்டே என் அருகில் அமர்ந்திருக்கிறார்.  கொண்டாட்டம் நிறைந்த என் பால்ய நாட்களை நான் இங்கே அமர்ந்து சதா மீட்டிக்கொண்டே இருக்கிறேன். எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.

என் குடும்பம் என்னைக் கைவிட்டதை நான் நல்வாய்ப்பாகவே கருதுகிறேன். இரண்டு பெண்களை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். பெண்கள் வெகு சீக்கிரமாக சலித்துப் போயினர்.  என் மனைவிகள் இருவரிடமும் நான் கண்ட சலிப்பினை நீயும் உணர்ந்திருப்பாய் ஒரு கணவனாக. பெண்களின் உலகத்தில் ஒன்றி உள்ளே ஆழ்ந்துவிட என்னால் ஆகவில்லை. புறப்பொருட்களினால் முற்றிலும் ஆன உலகம். இப்புவியில் சந்ததிகள் நீடிக்க வேண்டும் என இறைவனால் வடிவமைக்கப்பட்டவர்கள்.

பெரிய இலக்குகள் எதையும் நான் என் சிறுவயது முதலே கொண்டிருக்கவில்லை.  வாழ்க்கை முழுக்க எனக்கு உல்லாசங்களே காத்திருந்தன. நான் அவற்றை சலிக்கும் வரை அனுபவித்து தீர்த்துவிட்டேன். திருமணம், பெண்கள், சமூக அந்தஸ்து, செல்வம் அளிக்க உள்ள அகங்கார நிறைவுகள் என எந்த ஒன்றையும் நான் விட்டுவைக்கவில்லை. அனைத்தின் எல்லைகளையும் கண்டறியும் ஒரு நோக்கம் மட்டுமே என் வாழ்நாளில் இன்றுவரை என்னிடம் இருப்பது. நான் நாய்களோடு மட்டுமே ஒடுங்கிப் போக அது ஒன்றே காரணம்.

மனிதர்களிடம் சலிப்படைந்து விட்டேன். யாருக்கும் எவ்விதத்திலும் பயன்படக்கூடாது என்பதே என் வாழ்நாள் முடிவு. பிறருக்கு உதவுவதில் எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. என் வசம் உள்ள சொத்து முழுக்க என்னுடைய கடைத்தேற்றத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும். அதற்காக மட்டுமே என் முன்னோர்கள் என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்திருக்கிறார்கள். அப்பாவிற்கு அது புரியவில்லை. அப்பா வாரி வாரி இரைக்க ஆரம்பித்தார். செல்வத்தின் பயன் ஈதலே என்பதை நம்பினார். நான் அதற்கு மாறாக செல்வத்தின் பயன் துய்த்தலே என்பதை கொண்டு வந்தேன். அப்பாவிற்கும் எனக்கும் நடந்த அடிதடிகள் அதன் பொருட்டே.

என் அப்பாவைப்போலத்தான் நானும். ஒருநாளும் எந்த வேலைக்கும் சென்றதில்லை. ஏன் செல்ல  வேண்டும்?அதற்கான தேவைதான் என்ன?

ஆரம்பத்தில் இருந்தே இரண்டு காரியங்கள் என்னை உற்சாகம் கொள்ள வைத்தன. அது ஆண் பெண் உடல்களும் போதை அளிக்கும் வஸ்துகளும். என் கடைசி பத்தாண்டுகள் முழுதாக நான் என்னை அவைகளுக்கு அர்ப்பணித்தேன்.

மாதக்கணக்கில் முழுப்போதையில் ஆழ்ந்திருந்தேன். தீர்ந்துவிடாத ஆழ் போதை. அதன்பொருட்டு நான்கு மாதங்களுக்கு சிறை செல்லவும் வேண்டியிருந்தது.

நிறைந்த போதையில் மட்டுமே பெண்ணுடல்களை முழுக்க நேசிக்க முடிகிறது. எத்தனை முறை உச்சங்கள் கண்டாலும் பெண்ணுடலின் மீது வெறுப்பும் அலுப்பும் ஏற்படாத நிலை போதையில் போதம் இழந்திருக்கும் போதுதான். ஒரு நுாறு யோனிகளாவது இருக்கும்.  நான் முத்தமிட்டவை. என் விரல்கள் தீண்டிச் சென்றவை. அதை ஒரு இலக்காகக் கொண்டுதான் தேடி அலைந்தேன். எட்டுமுறை சாவின் விளிம்புவரை சென்றிருக்கிறேன். ஒருத்தியின் கணவன் என் நெஞ்சில் ஏறி மிதித்தான். விதைப்பைகளை சிதைக்கும் நோக்கில் ஓங்கி உதைக்க வந்தான். தெய்வாதீனமாக நான் பிழைத்துக்கொண்டேன்.

இச்சைகளில் இருந்து நான் வெளியேற எனக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. உடல் அதற்கு ஒத்துழைக்காமல் ஆக வேண்டியிருந்தது. உடல்தான் ஓய்ந்தால் மனமும் ஓய்ந்துவிடுகிறது. உடலின் எதிரொலியாக மனம் இருக்கிறது. மனதின் ஆடிப்பிம்பமாக உடல் மாறுகிறது. பணம் இவ்வுலகில் எதையும் செய்யக்கூடியது என்பதால் என் தேவைகள் அனைத்தும் நிறைவேறின. ஆயினும் என்னிடம் இருப்பது கடுமையான வெறுமையே. வாழ்வின் பொருளின்மை இதோ இக்கணம் என்னைப் பார்த்து கண்கள் இமைக்காமல் இளித்துக்கொண்டிருக்கிறது. இதை இங்குள்ளவர்களிடம் சொன்னால் புரிந்துகொள்ள மாட்டார்கள். நுகர்வு வெறியில் அனைத்தையும் அடைந்துவிடும் பேராசையில் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். அகங்கார நிறைவும், நுகர்வின் எல்லையற்ற பேராசையும் மனிதர்களை வீழ்த்திக்கொண்டிருக்கிறது.  பெரு நுகர்வு கொண்டு சலித்துக் கிடப்பவன் என்ற முறையில் எனக்குச் சொல்ல தகுதி உண்டு.

என் வேட்கைகள் குறைந்த பிறகு, முற்றாக அபிலாசைகள் காணாமல் ஆன பிறகு என்னைச் சுற்றி காணப்பட்ட ஆவிகளும் வாதைகளும் சென்று மறைந்து விட்டன. இதை நீ நம்பித்தான் ஆகவேண்டும். என் சித்தப்பாவின் நிலைத்த கண்களை இப்போதெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. என் தாத்தா இந்த வீட்டின் எந்த அறைகளிலும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவர்களும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகே நான் நாய்களை வளர்க்க ஆரம்பித்தேன். நாய்களிடம் நான் பெற்றுவருவது துாய அன்பை. நாய்களை வாழ்க்கைத்துணையாக கண்டுகொண்ட ஆதிமனிதன் என்னைப்போன்று அனைவராலும் கைவிடப்பட்டவனாகத்தான் இருந்திருப்பான்.

மீதமிருக்கும் வாழ்நாட்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. உடல் மிகவும் சிதிலமடைந்து விட்டது. அந்தரங்க உறுப்புகளில் பாலியல் நோய்கள் பீடித்து துர்நாற்றம் எடுக்கிறது. நான் நினைத்தால் அவற்றைக் குணப்படுத்த முடியும். அதற்கான பணம் என்னிடம் இருக்கிறது. ஆனால் நோயில் இருந்து மீண்டு நான் என்ன செய்யப்போகிறேன். இந்த உலகில் நான் அனுபவிக்க மீதம் என்ன இருக்கிறது.

நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் ஏக்கம் அவ்வப்போது தோன்றும். என் உடல் அதற்கான தகுதிகளை இழந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னால் இப்போது தெரு முக்கு வரைக்கும் கூட நடந்துவர முடியவில்லை. படுக்கையில் கிடந்தபடியே நான் உண்டு உறங்கிக் கொண்டிருக்கிறேன். நான் இறந்தாலும் யாருக்கும் உடனே தெரிந்துவிட வாய்ப்பில்லை. நாய்கள் நன்றியுள்ளவை அவை என் சவத்தைக் கடித்து திங்காது.

இசை என்பது இசையும் மௌனமும் என்பதை என் வாழ்நாளின் செய்தியாக உனக்குச் சொல்கிறேன். இசை மட்டுமே உன்னத சங்கீதம் ஆவதில்லை. மௌனமே இசைக்கு உன்னதத்தை அளிக்கின்றது. நாம் இசைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இசையற்ற பொழுதுகளுக்கு வழங்குவதில்லை.

நீ மௌனத்தின் முக்கியத்துவம் அறிந்து கொள் என்பதை ஒரு கட்டளையாகவே இடுகிறேன்.

நான் நாறிச்  செத்தால் வருந்தாதே. சாவதில் என்ன பெருமை இருக்கிறது? விரும்பிய படி வாழ்ந்திருக்கிறேன். அதொன்றே குன்றாப் புகழ். உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

4

அப்பு இறந்து ஆறுமாதங்கள் கழித்தே எனக்கு தகவல் கிடைத்தது. நான் அதிகம் கவலை கொள்ளவில்லை. யாரைப்பற்றி கவலைப்பட நேரம் இருக்கிறது.

ஆனால் ஆறுமாதங்களுக்கு முன் ஒரு நாள் நள்ளிரவில் அப்பு போனில் அழைத்திருந்தான். என் வீட்டு நம்பரை யாரிடமோ வாங்கியிருப்பான் போல.

எடுத்ததும் அப்பு சொன்னான்.

“எனக்கு நாய்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? உனக்குத் தெரியுந்தானே. நீயாவது அண்டை வீட்டார்களிடமும் தெருவாசிகளிடமும் சொல்லக் கூடாதா? என் நாய்களை நகராட்சியில் இருந்து வண்டி கொண்டு வந்து அள்ளிச் சென்று விட்டார்கள். அவைகள் என்னை நோக்கி கூப்பாடு போட்டு அழுது முறையிட்டன. என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தயவு செய்து நீ என் நாய்களை என்னிடம் மீட்டுக்கொண்டு வந்து கொடு”

நான் பதில் பேசுவதற்குள் போனைத் துண்டித்து விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

  1. கலிய பெருமாள்

    என்னை போன்ற ஆரம்ப கால எழுத்தாளர்களுக்கு இக்கதை எழுதும் யுத்திகளை சொல்லி கொடுக்கிறது
    கதைகளை எப்படி விவரித்து எழுதுவதையும் சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *