பார்வை

எனக்கு ஜடை பின்னும் போது அம்மா முடியை வலி எடுக்கும் விதமாக இழுப்பாள்.  சமயங்களில் ஓங்கி தலையில் அடிப்பாள்.  ”பொம்பள புள்ளைய வழக்கற லெட்சணம் தெரியல” என்று ஒருமுறை பாட்டியின் குரல் கேட்டபோது ஜடை பின்னிக் கொண்டிருந்த அம்மா எப்போதையும் விட அதிகமாக ஓங்கி அடித்தாள்.  அதன் பிறகு நான் வெளியே போகும் போதும் வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் போதும் வேகமாக வந்து அடிக்கடி தலையில் அடிக்க ஆரம்பித்தாள்.  ஒருமுறை பொறுக்க முடியாமல் அவள் கையைத் தடுத்து சொன்னேன் ”மரியாதை கெட்ரும் பாத்துக்கோ”

பின் அவளைப் புரிந்துகொண்டேன்.  அவ்வப்போது உடையைச் சரிசெய்து கொண்டேன்.  அதுவரை இயல்பாக எல்லாப் பக்கமும் பாரத்துக் கொண்டிருந்த நான் என் பார்வையின் எல்லைகளை வகுத்துக் கொண்டேன்.  வெளியே எல்லா ஆண்களும் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது கவனம் வந்தபோது கடுமையான கோபம் வந்தது.  ஒருமுறை சட்டென்று எழுந்த கோபத்தில் அம்மன் கோவிலில் கற்பூரத்தை கையால் அடித்துச் சொன்னேன் ”ஆத்தா இப்படி பாக்குற இவனுக கண்ணெலாம் அவிஞ்சி போகணும்”

பிறகு பழகிக் கொண்டேன்.  என்னைப் பார்க்கும் பார்வைகளைப் பார்க்காமல் தவிர்ப்பது மட்டும் ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது.  அதுவும் பின்னர் பழகி விட்டது.

ஆண்டுகள் பல சென்று விட்டன.  இப்போது சுற்றிலும் பார்க்கும் சுதந்திரம் சற்று கூடுதலாகவே கிடைத்தது.  ஆண்களின் பார்வை அப்போது போல இப்போது இல்லை.  என்றாலும் ஆத்திரம் வரத்தான் செய்தது.  முதலில் ஒரு பார்வை அதன் பின் பார்வையை விலக்கிக் கொள்ளும் அவர்களின் கண்களில் தோன்றி மறையும் அலட்சியம்.  ”கயவர்களே பெண் தன் உடல் தோற்றத்தை வைத்துத்தான் தன் மதிப்பை அளவிட்டுக் கொள்ளும்படி அவளைப் பழக்கி இருக்கும் ஆண் கயவர்களே”

இப்போது இன்னும் பல ஆண்டுகள் சென்று விட்டன.  என் கதையை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்து விடுகிறேன்.

என்னை ஒரு ஆணைப்போல நினைத்து என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

”பாட்டி சொல்.  இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்.  அப்படி பார்க்கும் எல்லா ஆண்களின் கண்களும் அவிந்து போக வேண்டும் என்று சொன்னாயே? அது உண்மையா? அப்படி பார்க்கும் எல்லோரையும் தான் சொன்னாயா?”

”இல்லை.  என்னுடன் படித்த நிர்மல் என்னை அப்படிப் பார்ப்பதை நான் விரும்பினேன்.  பின்னர் கல்லூரியில் கூட அவன் நான் படிக்கும் கல்லூரிக்கே வந்து சேர்ந்து கொண்டான்.  பலநாட்கள் நெருங்கி வந்து பேச பயந்துகொண்டு பார்த்துக் கொண்டே என்னை சுற்றிக் கொண்டிருந்தான்.  பூமியைச் சுற்றும் நிலவைப் போல.”

இரண்டாவது கேள்வி.  ”நீ உடல் தோற்றத்தை வைத்து எந்த ஆணையும் மதிப்பிட்டதே இல்லையா?”

”சொல்கிறேன்.  கல்லூரி முடித்த பின் ஒன்றிரண்டு ஆண்டுகள் நிர்மலைக் காணவில்லை.  அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.  நான் மேற்கொண்டு எதுவும் படிக்காமல் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் சும்மா இருந்தேன்.  ஒரு நாள் என் கல்லூரித் தோழி ஒருத்தி என் வீட்டிற்கு வந்து சொன்னாள் ”நிர்மல் உன்னைப் பார்த்து பேச விரும்புகிறான்” என்று.  அப்போது நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் தெரியுமா? அவனுக்கு இப்போதாவது தன் காதலைச் சொல்லும் தைரியம் வந்ததே என்று மகிழ்ந்தேன்.

மூன்று தெரு தள்ளி இருக்கும் பிள்ளையார் கோவிலில் அவன் காத்திருப்பதாக அவள் சொல்ல ஆவலுடன் ஓட்டமும் நிற்பதுமாக சென்றேன்.  சற்று தொலைவில் அவனைப் பார்த்தபோதே அதிர்ச்சியாக இருந்தது ”இவனா? இவனா நிர்மல்?” அவன் தோற்றம் முற்றாக மாறி இருந்தது.  அவன் என் மீது கொண்டிருக்கும் காதலைச் சொன்னான்.  தான் பட்ட துன்பங்களைச் சொன்னான்.  நான் தான் அவன் தெய்வம் என்றான்.  அவனைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது.

நான் வீட்டிற்குத் திரும்பிய பின் சற்று நேரம் தனிமையில் அமைதியாக இருந்தேன்.  பின்னர் என்னைப் பெண் பார்க்க விரும்பும் மாப்பிள்ளையின் போட்டோவைக் காட்டும்படி சொன்னேன்.  திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த நான் அப்படி கேட்டது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மகிழ்ச்சி அளித்தது.  மாப்பிள்ளை அப்படி ஒன்றும் மோசமில்லை.  பிள்ளையார் கோவிலில் பாரத்த நிர்மலைவிட எவ்வளவோ நன்றாக இருந்தார்.

பின்னர் திருமணம் நடந்தது.  குழந்தைகள் பிறந்தன.  பேரன் பேத்திகள்.  இப்போது என் கணவர் உயிருடன் இல்லை இன்ன பிற இன்ன பிற.

சரி பாட்டி இன்னும் ஓரே ஒரு கேள்வி.  ”இக்காலத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று கருதுகிறீர்களா?”

”இதென்ன முட்டாள்தனமான கேள்வி.  எக்காலத்திலும் பெண்ணுக்கு அநீதிதான் இழைக்கப்படுகிறது இக்காலத்திலும் அப்படித்தான்………ஆனால் இப்போது ஆண்களுக்கும் கொஞ்சம் அநீதி இழைக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *