பயப்படும் படி ஒன்றுமில்லை

இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வெளியே இருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தூண்களை ஒட்டி நடைபயிற்சி செய்யுமளவுக்கு உள்ள இடத்தில் குறுநடையாக மெதுவாக கால்மணிநேரம் நடந்து விட்டு படுப்பது வழக்கம்

அன்றும் அப்படித்தான் நடக்க ஆரம்பித்தேன் இரண்டு நிமிடம் கூட நடக்கவில்லை. கண்களில் தூக்கமா மயக்கமா எனத் தெரியவில்லை. ஒரு மாதிரியாக இருந்தது. கால்களும் கொஞ்சம் தடுமாற்றமாக  இருந்தது. சரி என்று இன்னும் கொஞ்ச நேரம் நடந்து பார்ப்போம் என நடந்து பார்த்தேன். இடது புறம் கக்கப் பகுதிகளில் படபடப்பாக இருந்தது. மேலும் நடப்பது கடினமாக இருந்தது. வியர்க்கவில்லை.

சரி என்று நடப்பதை நிறுத்திவிட்டு வீட்டினுள் வந்து பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தேன்.  படபடப்பு போகவில்லை. ஒரு மாதிரியாக இருந்தது. வயிற்றுப் பகுதியில் தொப்புள் இருக்கும் இடத்தில்  வயிறு பிரட்டுவதும், யாரோ கையை விட்டு பிசைவது போலவும் இருந்தது. எனக்கு சில வருடங்களாக வயிற்று கோளாறுகள் உண்டு. காலையில் எழுந்து ஒரு முறை கழிவறை சென்றாலும் மீண்டும் போவது போல வயிறு  படுத்தும் அல்லது சாப்பிட்டவுடனோ சாப்பிடும்போதோ மீண்டும் மலம் கழிக்கப் போக வேண்டும் .பேன் காற்று உறைக்காமல் லேசாக வியர்த்தது, கைவைத்து பார்த்த்தில் ஈரம் காட்டியது. 

எனக்கு மேலும் படபடப்பானது. மார்புப் பகுதியில் இருதயத்துடிப்பு அதிகமாக இருந்தது. டி.வி பார்ப்போம் என ஆன் செய்து நெட்பிளிக்ஸில் ஒரு திரில்லர் படத்தை செலக்ட் செய்து பார்க்க ஆரம்பித்தேன் . இதுவரையில் இப்படி எனக்கு நிகழ்கிறது என பக்கத்திலிருந்த அம்மாவிடமும் ஹாலை ஒட்டிய சமயலறையில் இருந்த மனைவியிடமும் காட்டிக் கொள்ளவில்லை.

படம பார்த்துக் கொண்டிருப்பது போல காட்டிக் கொண்டேன். படபடப்பும் இருதய துடிப்பும் முன்பு இருந்தது போலவே அதிகமா துடித்துக் கொண்டிருந்தது.

இருதய வலியும் இல்லை. இடது கை, கழுத்து பகுதியிலும் வலியோ அழுத்தமோ இல்லை.

ஹார்ட் அட்டாக் வருவதுபோல எனக்குள் எண்ணங்கள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. அறிகுறிகள் அது போல இல்லை. புத்தகங்களில், கூகுளில், நண்பர்கள் சொல்கையில், வாட்சாப் தளங்களில் பகிரப்படும் இருதய சம்பந்தமான தகவல்களை மனமானது மனத்திரையில் காட்டி பயமுறுத்தியது.

ஒரு வாரமாக இந்த வயிற்று கோளாறு பாடாய்படுத்துகிறது. மருத்துவரிடம் போய் செக்கப் செய்ததில். எல்லாம் சரியாக இருக்கிறது, சார்க்கர , உப்பு, கொழுப்பு , இ.சி.ஜி எல்லாம் பார்த்தாகி விட்டது ஒன்றும் பயப்படும்படியும், மரணம் நிகழும் சாத்தியமும் தற்போது இல்லை என்றே காட்டியது. வேதனை தீர்ந்தபாடில்லை. தூங்க முடியவில்லை பல இரவுகளில் பசியும் அதிகம் காட்டும் ஏதாவது சாப்பிட்டால் மட்டுமே மீண்டும் தூக்கம் வரும். சாப்பிடவில்லை என்றால் வயிற்று உபாதைகளோடு தூங்காமல் விடிவிடிய விழித்திருக்கும் கொடுமையும் பல தடவை நிகழ்ந்துள்ளது.

திரையில் திரில்லர் சம்பவங்களும் சண்டை காட்சிகளும் வந்து போனாலும் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.

படபடப்பும் குறையவில்லை. மருத்துவரிடமோ மருத்துவமனைக்கோ போய்விடலாமா என்றும் மனம் அலைக்கழித்தபடி இருந்தது. மனம் ஒரு வைராக்கிய நிலைக்கு போய் வந்தது வரட்டும் எனவும் உறுதியாக இருந்தது.

மனைவியிடம்  கொஞ்சம் வெண்ணீர் போட்டு தரும்படி கேட்டு கொண்டேன். என் முக வேதனையை கண்டுபிடித்து விட்டாள். உடனே வெண்ணீர் வைத்து விட்டு என்னிடம் வந்து

“என்னாங்க பண்ணுது வயிறு சரியில்லையா” என்றாள்.

“ஆமா ஒரே படபடப்பா இருக்கு. பிபீயும் அதிகமா இருக்கும் போல”

பயப்படாதீங்க வயிறு கோளாறு தான் வெண்ணீர் குடிங்க சரியாயிடும்” என்றபடி சமயலறைக்குள் போய் விட்டாள்.

எனக்கு இங்கு உயிர் போய் வருவது போல இருதயதுடிப்பு குறையாமல் இருந்தது. இறந்து போன அப்பா, அப்பாயி, அம்மாவை பெற்ற தாத்தா ஞாபகங்கள் மனதில் கிளர்ந்தெழுந்து பயமுறுத்தியது. உட்கார, டி.வி பார்க்க, படுக்க முடியவில்லை. மணியும் பதினொன்றாகிவிட்டது. எப்போதும் எனது மனைவியும் மகள்களும் சாப்பிட்டுவிட்டு தூங்க பதினொன்றாகும் . அம்மாவும் நானும் பத்துமணிக்குள் படுத்து தூங்கி விடுவோம். அம்மா முன்பே படுத்துவிட்டார்கள். ஹால் லைட்டை அனைத்து விட்டு இருட்டில் தான் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.எனது பய உணர்வு  வானளவு உயர்ந்தது.

ஒரு வழியாக வெண்ணீர் வந்தது ஒவ்வொறு வாயாக சிறிது சிறிதாக அருந்தினேன். ஒரு டம்ளர் முழுவதும் குடிக்க ஐந்து நிமிடங்கள் ஆனது. சிறிது நேரத்தில் இரண்டு முறை பெரிதாக ஏப்பம் வந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் இருதய துடிப்பு குறைந்து நார்மலானது. படபடப்பும் இல்லை. லேசாக தூக்கம் வருவது போல இருந்தது . பக்கத்திலிருந்த மனைவிக்கு ஒன்றும் பயப்படும்படி இல்லை என சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்து விட்டேன். மனைவியும் டிவியை அனைத்து விட்டு வந்து என்னருகில் படுத்தபடி உங்களுக்கு ஒன்னும் ஆவாதுங்க வாயுவுக் கோளாறுதான் சரியாயிடும் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூங்கி விட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *