வைரக்கல் மூக்குத்தி

பகுதி ஒன்று

ஒரு விடுமுறை நாளில் வீட்டில் தனித்து இருந்தேன். அனைவரும் ஊருக்கு சென்று விட்டார்கள். போர் வீரர்கள் போல் கடமையை செய்ய, நான் எப்போதும் எதிலும் சிக்காமல்  தப்பித்துக் கொள்வேன்

அதிகாலையில் எழும்  நீர் நிறைந்த காற்றின்  குளுமை வந்து தொட்டு சென்றது. அமைதியால்  கவனிக்க முடிந்தது.  புத்துணர்ச்சியான அனுபவம்

சட்டென்று ஒப்பனை செய்யாத, லட்சணமான பெண்ணைக் கண்டது போல் அமைதியின் வெளியில்  துல்லியமாக   கேட்கும் ஒளிகள் மகிழ்ச்சி தரும். கிளிகளின், குயில்களின் புதுவரவாக சில பறவைகளின் குரல்கள் ஈர்த்துக்  கொண்டே இருக்கும்.

காலையில் எப்போதும் போல் நடைபெறும் நிகழ்வுகள் வரிசையாக நின்று கொண்டு அதன் போக்குக்கு நிகழ்ந்து கொண்டு இருந்தது. எண்ணம் ஒவ்வொன்றாக நடைபெறப் போவதை படத்தை பார்ப்பது போல் ஓட்டி பார்த்து கொண்டே இருந்தது

கொஞ்சம் விரைவாக வீட்டிலிருந்து  விடை பெற்றுக் கொண்டு அன்றாடத்தில் இருந்து தப்பித்துக் கொண்டும் பிடித்தவற்றை தேடி  ஓடிக் கொண்டு இருந்தேன்.

ஓட்டம் ஒரு இடத்தில் நின்றது. வழக்கம் போல் கூட்டம்.

ஒவ்வொரு மேசை நாற்காலியும் பேச ஒப்புதல் கொடுத்தது போல்  சாப்பிட்டு கொண்டே பேசி கொண்டே இருந்தார்கள். என் எண்ணம் இவர்கள் அனைவரும் எதை பற்றி பேசுவார்கள் என்று நினைத்தது.

உணவு வரும் வரை நான் என் மனதில் நினைத்துப் பார்த்தேன்

புதிதாக எழுதப்பட்ட  நாவல் குறித்து விவாதித்துக் கொண்டு இருக்கலாம். எது சரி எது தவறு என்றும் ஆசிரியர் எங்கே விழுந்தார் எங்கே எழுந்தார் நாவலின் மைய கருத்து எது என்று இன்று இரவுக்குள் கண்டு பிடித்து உடனே பகிரப்பட்டு விடும். மீண்டும் விவாதம் தொடங்கலாம்.

ன்னை சிந்திக்க விடாமல் பலர் பார்த்து கொள்வார்கள். இப்போது அதில் சர்வரும் சேர்ந்து கொண்டார்.

சாப்பிட்டு முடித்து பில்லுமும் டிப்ஸ்மும் கொடுத்து முடித்து விட்டேன். டிப்ஸ் கொடுக்காமல் விட்டு விட்டால் அதற்கும் மனம் கொஞ்சம் விவாதத்தை தொடங்கி விடும்

நல்ல வேளை அதற்கு இடம் இல்லை.

அடுத்த வேலை டால்ஸ்டாய் புக் ஸ்டோர் செல்வது. வண்டி தானே தன் வரைபடத்தை தேர்ந்து எடுத்து கொண்டு தீர்மானித்து விட்டு ஓடத் தொடங்கியது.

முன் பதிவு செய்து விட்டு கடைசி நொடிகளில் தவற விட்ட இரயில் போல் காம்பவுன்டுக்குள் நுழைவதற்கு முன் அழைப்பு வந்தது.

என் தலைவியை மனதில் திட்டி கொண்டே எடுத்தேன். இன்று வழக்கம் போல் எதுவும் நடைப் பெறாது என்று மனது சொன்னது.

அதுவும் சரி தான்.

என் தலைவி இல்லை என் தந்தை. வழக்கமாக எதற்கும் அழைக்க மாட்டார். என்னால் சில காரியம் நடக்கும் என்பதற்காக மட்டுமே என்னை அழைப்பார்.

எனக்கு சிலவற்றில் நம்பிக்கை இல்லை. அவருடைய நம்பிக்கை கலைக்காமல் இருக்க முயற்சி மட்டுமே செய்வேன்.

“என்ன  சொல்லுங்க”

“ஒரு சாவு அதுவும் பெரிய சாவு”

மனம் ராக்கெட் போல் பறக்கத் துவங்கியது. எதைச் சொல்லி வர போகும் ஆபத்திலிருந்து தப்பித்து கொள்வது. ஆபத்து கிடையாதுபயணம் மட்டுமேயானாலும் மனம் எதற்கும் பழக வில்லை. எனவே தப்பித்து நடக்க வாழ்க்கை பழகிக் கொண்டது.

யார் என்று கேட்காமல், அவராகவே எல்லாவற்றையும் கூறினார்.

ஏதோ கூறினார். எனக்கு ஒன்று மட்டும் தான் காதில் கேட்டது. ஒருவர் இறந்து விட்டார்.

“நான் போக வேண்டும். பேருந்தில் போய்விட்டு வருகிறேன்” என்றார்.

எனக்கு மூச்சு சற்று இயல்பாக வந்தது. என்னுடைய ஒரு நாள் விடுமுறை தப்பித்தது.

நான் உடனே நல்லவனாக மாறிகாரில் சென்று வாங்க” என்று யோசனை சொன்னேன்.

யோசனைகள் எல்லாம் உதைத்து தள்ள படைக்கப் பட்டவை.

எப்போதும்  இறப்பு பற்றிய செய்தி வந்தால் இறந்து போன அம்மாவின் ஞாபகம் வந்து விடும்.

விடுமுறை நாளில் அம்மா  ஏதாவது ஒரு பலகாரம் செய்ய ஆர்வமாக  இருப்பாள். அது ஒரு பெரிய பட்டியல். எது செய்தாலும் ஒவ்வொரு நாளும் சுவை கூடிக் கொண்டே போகும்.  கூட்டமும் வந்து விடும் உடனே தீர்ந்தும் விடும். அவள் நினைப்பு அந்த நாள் முழுவதும் நிறைந்து கிடக்கும். எப்போது நினைப்பு மறையும் என்று தெரியாது.

அறிவின் துணையுடன் தப்பித்தது விடுமுறை. அனுபவிக்கத் தொடங்கினேன்.

மனம் அமைதி பெற வில்லை.

அப்பாவுக்கு வயதாகி விட்டது. பயணம் செல்வது கடினம்.

இப்போது எண்ணிப் பார்த்தேன். அவர் அழைத்ததே நான் செல்ல வேண்டும் என்பதற்கு  அதை நானே கூற வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

சிலவற்றை தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் ஆகும்.

அவ்வப் போது நல்லவனாக நமக்கு தெரியாமல் நாம் மாறும் வேலை வரும். மாறிக் கொள்வது நல்லது. இல்லை என்றால் நிரந்தரமாக எதிர்கொள்ள வேறு சிக்கல்கள் வந்து விடும்.

அப்பாவிற்கு அழைத்தேன். என்னை எதிர்பார்க்க வில்லை.

எதுவும் கேட்க வில்லை.

“எனக்கு ஒரு முக்கியான வேலை இருக்கிறது. எனவே நானே செல்கிறேன். நீங்கள் செல்ல வேண்டாம்” என்றேன்

ரூமி சொல்வது போல் நாம் எதை தேடிக் கொண்டு இருக்கிறமோ அதுவும் நம்மைத்  தான் தேடிக் கொண்டு இருக்கும்.

இது என்னளவில் மிக முக்கியமானது.

நாம் தள்ளிப் போட்டுக் கொண்டு  தவிர்த்து செல்வது ஒரு நாள் நம் எதிரில் நிற்கும்.

எதிர் கொண்டே ஆக வேண்டிய தருணம் வரும்.

துக்கத்தில் கலந்து கொள்ள பயணத்திற்கு தயாராகி விட்டேன்

*

பகுதி இரண்டு

பேருந்து ஓடத் தொடங்கியது.

மனம் வேறு கணக்கை எண்ணத் தொடங்கியது. இந்த இறப்பு நமக்கு விசாரிப்பு தான். துக்கம் ஒரு புறம் என்றாலும்,  தத்துவம் வந்து பேசத் தொடங்கியது. விசாரித்து விட்டு என்ன செய்வது யாரைப் பார்க்க செல்லலாம். நண்பனை அழைத்தேன். எடுக்க வில்லை.

சரி இன்று  அனைத்தையும் தனியே நின்று நிகழ்த்தி பார்த்து விடலாம்.

சமீபத்தில் தான் ஒரு படைப்பை  வாசித்தேன். வரலாறு சம்பந்தப் பட்டது அல்லது உணர்வு சார்ந்தது. சரியாகக் கூறத் தெரியவில்லை. ஒரு நகரம் தன்  தெய்வத்தை கூட விட்டு வைக்கவில்லை, இடம் பெயர்த்தது. அதை படித்து முடித்தவுடன் உடனே அந்நகரம் செல்ல வேண்டும் முக்கியமாக கோயிலை பார்க்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

அது மெல்ல அன்றாடத்தில் கரைந்து விட்டது.ஆனால் தெய்வம் நிரந்தரமாக மனதில் குடி கொண்டது.

இதுவும் எல்லாவற்றையும் போல் அல்லாமல் ஒரு நிகழ்வு தன்னைத் தானே நிகழ்த்தி கொள்வது போல் உள்ளது. பெரியதாக ஒன்றும் உணர்வுகளை  விளக்க முடியாது.

இப்போது அந்த படைப்பின் நிகழ்வுகள் பேருந்துடன் சேர்ந்து ஓடுகிறது துணையாகஅதில் வரும் ஒவ்வொரு காட்சியும் நிழல் போல் என்னுடன் அலைகிறது.

கொள்ளைக்காரர்களிடம் இருந்து உயிரை சிலர் கொடுத்து காத்ததுகனவில் வந்து ஒரு பெரும் கனவை கொடுத்து செல்வது, ஒரு பெருங்கனவு நிகழ்வது.

படங்களில் முடிப்பது போல் இருந்தாலும் ஊரே எதிர்பார்க்கும் கல்யாணம் நடைபெறுவது. நம் வீட்டின் கல்யாணம் என்று அனைவரும் முனுமுனுப்பது போன்ற ஒரு பெருவிழா நடைபெறுவது.

எனக்கு யாரையும் தெரியாது. உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு அழைத்தேன். அவர் கூறிய விலாசம் எல்லாம் சரி. ஆனால் அவர் கூறிய இடம் இரண்டு இடத்தில் உள்ளது. நான் வந்தது வரவேண்டிய இடம் இல்லை வேறு இடம் சென்று விட்டேன்

நேரம் செல்ல செல்ல பதட்டம் கூடியது. அடுத்த வேலை நடக்குமா இல்லையா இடத்தை கண்டுபிடித்து வந்து விட்டேன்.

எனக்கு யாரையும் தெரியவில்லை ஒரு சிலரை தவிர. பழங்களில் பெயரில் சந்து ஆச்சரியம். அந்த சந்தின் நடுவில் இடது புறத்தில் மாடி வீடு. படிகளில் இரண்டு பேர் என்னைப் போல் இருந்தால் ஏறி செல்லலாம்.

மாலைகள் போட்டேன்.

சில நிமிடங்கள் வேகமாக ஓடியது. அந்த ஓட்டத்தை பிடித்து கொண்டு நகர்ந்தேன்.

நாம் எப்போதும் நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறோம்.

இயல்பாக இருந்த நாள் கொஞ்சம் கலைந்து விட்டது. படிகளில் மெல்ல இறங்கினேன். எங்கோ கனவில் தப்பித்து ஓடுவது போல் இருந்தது.

சிறிது நேரம் அங்கே இருந்தேன். கிழவி ஒன்று  தலைகீழாக தொங்கி கொண்டு இருந்த மைக்கை பிடித்து கொண்டு ஒப்பாரி பாடல் பாடியது.

ஒரு பாடலை பாதி கேட்டேன்.

நமக்கு துணை எதையாவது பிடித்துக் கொள்வது. இந்த பாடலை கூட பிடித்து கொள்ளலாம்.

அங்கிருந்து ஏதோ காரணங்களை கூறி விடைபெற்றேன்.

பழைய ஊரை கடந்து வந்த நான் புதிய ஊரை கடக்கும் போது போர் என்று வந்தால் உயிர்களை உயிர் பெற்ற துப்பாக்கி தேடி தேடி கொல்லும். அதே போல சாலைக்காகபாலத்திற்காக, மக்கள் தொகை பெருக்கத்திற்காக மரங்களை தேடி தேடி வெட்டி விட்டு அந்த இடத்தில் கான்க்ரீட் தூண்கள் நடப்பட்டு இருந்தது.

வெண்மையில் அந்த இடமே மின்னியது சுண்ணாம்பு  வெளிச்சத்தில்.

இதை தான் நகரம் என்கிறார்கள் அப்பாவிகள்.

தாகத்திற்கு ஒரு சோடா குடித்தேன். அடுத்து என்ன செய்வது, இந்த பயணம் கூட அவள் விரும்பி அழைத்தது போல் உள்ளது.

**

மூன்றாவது பகுதி

ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் வழி கேட்டேன். நீங்கள் கோயிலை நோக்கி தான் நிற்கிரீர்கள் நேராக செல்லுங்கள் என்றார்.

ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து அதில் ஓடினேன்.

ஒவ்வொருவரும் என்னை போல் எதையோ தேடிச் செல்கின்றனர்.

கோயிலை அடைந்தேன்.

எங்கே கோயில் என்று சாலையை வலது புறமாக கடந்தேன். அண்ணாந்து பார்த்தேன் கோயிலின் கோபுரம் உயர்ந்த எண்ணங்களின் மேன்மையின் சாட்சியாக நின்று கொண்டு நாலாபுறமும் பார்த்துக் கொண்டு இருந்தது.

வெளியே ஒரு மண்டபம்.

சிலைகள் ஒவ்வொரு தூண்களிலும் உயிர் உள்ளது போல் நின்று கொண்டு மண்களை பூசிக்கொண்டு இருந்தது.

ஏதோ ஒரு சில நாளில் விழாவிற்கு தயார் ஆவது போல் இருந்தது.

கோயிலின் முகப்பில் ஒரே கூட்டம். அறிவும் மனமும் விவாதித்தது.

நான்கு மணி நேரம் ஆகும். ஊருக்கு புறப்படுவோம் என்றது.

ஒரு போதும்  மனம் ஏமாற்றம் அடையாது.

எண்ணங்களை ஒரு குடுவையில் போட்டு குலுக்கி விட்டு கொட்டி விட முடியாது.

காலையில் ஒரு படி மேலே சென்ற மனம் மாலையில் இன்னும் ஒரு படி ஏறி சென்றது.

எந்த நேரம் எடுத்தாலும் அன்னையை காண வேண்டும்.

நீண்ட வரிசையில் நின்று முதல் வாயிலை அடைந்தேன். கூட்டம் இல்லை ஒரே மகிழ்ச்சி

கனவுக்குள் புகுந்த காட்சி போல் உள்ளது

பல பல வருடங்களுக்கு பிறகு வந்த உணர்வு.

ஏன் இந்த நிகழ்வுவிடுமுறையில் நினைத்த ஒன்று நடக்க முடியாமல் வேரு ஒன்று நடக்கிறது.

எல்லாம் அதுவே நிகழ்த்தி கொள்ளும் சூரியன் உதிப்பது போல்.

 எங்கும் மக்கள் கூட்டம். விதவிதமான நாயக்கர் கால சிற்பங்கள்நடுவில் பெரிய குளம், படிகளை தொட துடிக்கும் நீர், கோபுரத்தின் அழகை எதிரொலித்தது.

மீண்டும் சிறப்பு டிக்கெட் பெற்று கொண்டு வரிசையில் நின்றேன் முழு நம்பிக்கையுடன்.

வரிசை சென்று கொண்டு இருந்தது திடீரென்று நின்றது.

ஏதோ பூஜை நடைபெறுகிறது என்று நினைத்தேன். என் முன்னே ஒரு குடும்பம், கல்யாண வயதில் ஒரு பெண், கல்யாணம் ஆகி சென்று விடுவாள் என்று அறியாத வயதில்  சிறுவன் மற்றும் தந்தை தாய். நான் அவர்களின் விளையாட்டை பார்த்து  கொண்டே வந்தேன். அவள் தன் தம்பியுடன் அடித்து பிடித்து கொண்டு விளையாடினாள்எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரிய வில்லை அனைவரும் அன்னையை எண்ணி கொண்டு நின்றோம்.

அவளே நம்மை காண வெளியே அருகில் வலம் வந்தால் அந்த நொடிகள் பாடலும் மந்திரங்களும் ஒளித்தது. நம்மை அறியாமல் அருகில் சென்றது மனம்.

அவள் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. சோர்வாக இருந்தார்கள். நான் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தேன்.

இப்போது வரிசை நகர தொடங்கியது. மிக வேகமாக நகர்ந்தது தன் உடலை வளைத்து நெழிந்து சென்றது. ஓர்  இடத்தில் காலூன்றி நின்றேன்.

அன்னையை கண்டேன்.

அவள் பொன் பட்டில் சூரியனும் சந்திரனும் வந்து நின்று போல் மின்னிக்கொண்டு இருந்தாள். அவள் வைர மூக்குத்தி ஜொலித்தது.

அந்த நொடியில் எதுவும் கேட்க தோன்றவில்லை அன்னை கண்ட நொடிகள் போதும்.

இது ஒரு சிறந்த விடுமுறை நாள் என்றது மனம்.

பல வருண்டங்களுக்கு பிறகு கிடைத்த நொடிகளும் ஜொலித்தது.

அங்கிருந்து செல்ல மனம் இல்லாமல் ஒவ்வொரு சிற்பமாக பார்த்து கொண்டே வந்தேன். அனைத்தும் கலைகளின் உச்சம் தொட்டவை.

ஒரு இடத்தில் என்னை நிறுத்தியது. திருக்கல்யாண கோலம் கொண்ட சிற்பம்.

பார்த்து கொண்டே இருந்தேன்.

இந்த கணங்கள் அனைத்தையும் எண்ணி கொண்டே ஊர் திரும்பினேன்.

நீ எதை தேடிக் கொண்டிருக்கிறாயோ அது உன்னை தேடி கொண்டிருக்கிறது

********************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *