எப்பவுமே மாடுகளை விற்றுவிட்டால் அதுக்குப்பிறகு  பத்து இருபது நாட்களில் எங்கு  சுற்றியாவது புதுமாடுகளை வாங்கி வந்து விடுவார் அப்பா. புது மாடுகள் வாங்கப்போய்விட்டால் எப்போ வருவார்னு காத்திருப்போம். இப்ப மாதிரி அப்போது கைப்பைசி இல்லை. அதனால் எங்கே இருக்கிறார் என துல்லியமாக அறியமுடியாது. மாடுவாங்க போகும்போது சொல்லிவிட்டுப் போவார். இந்த ஊருக்குப் போறேன், அந்த ஊருக்குப் போறேனென்று, அதை வைத்து அம்மா கணக்குப்போட்டுச் சொல்லுவாள் இத்தன நாள்ல வந்துருவார்னு . அதுவும் குத்துமதிப்பாகத்தான் சொல்லுவாள். 

அப்பா மாடு வாங்கப்போனாரென்றால் அம்மா சொல்லியே விடுவாள்.  சுழிவிழுந்தமாடு, உடலில் கருப்புநிறம் கொண்ட மாடுகளை வாங்காதிங்க. அது நம் குலதெய்வத்துக்கு ஆகாதென்று . அப்பாவும் சரி என்று தலையசைத்துக் கொள்ளுவார். அப்பா பெரும்பாலும்  விருதுநகர் பக்கத்திலுள்ள சித்தூர், மீசலூர், அருப்புக்கோட்டை  போன்ற ஊர்களுக்குதான் மாடு வாங்கப்போவார். 

 பெரும்பாலும்   மாடுகள் வாங்கி அதை நடந்தேதான் ஓட்டி வருவார். எப்போதாவது தப்பித்தவறிதான் ஏதாவது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு  வருவார். 

அப்பா மாடு வாங்கப் போனால் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்வார். முக்கியமா வடிவேல் சித்தப்பாதான் அப்பாவுக்கு தோதானவர். மாடுகளை வாங்கி கால்நடையாக ஓட்டி வருவதால் அந்தந்த ஊரில் படுத்துத் தூங்கி மீண்டும் மாடுகளை பத்தி வருவதற்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் வேண்டுமல்லவா..?

நாலஞ்சுநாட்கள் மாடுகளை ஓட்டிவருவதால் சில இடங்களில் தண்ணீர் சேராமல் அப்பாவுக்கு தடுமம் பிடித்துவிடும். அதுக்காகவே அம்மா, கருவாடு, வெங்காயம், தக்காளியெல்லாம் போட்டு உப்புச்சாறு கொழம்பு வைப்பாள். அதை சோற்றில் ஊத்தி அப்பா சாப்பிடுவார். தடுமம் உடனே விட்டுவிடும். அது அவ்வளவு ருசியாக இருக்கும். அறுபடையில் ஆறுமுகன் அவதரித்ததுபோல..சமையலின் அறுசுவையில் அம்மா அவதரிப்பாள். அவளின் கைப்பக்குவம்  எந்த உணவையும் சுவையாக்கிவிடும். 

 புதுமாடு வீட்டுக்கு வந்ததும் எங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். 

அம்மா ஒரு சின்ன சில்வர் தட்டில் குங்குமம் வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு சூடம் பொருத்தி மாடுகளுக்கு சுற்றி ஆளாத்தி எடுப்பாள். யாரு கண்ணும் பட்றக்கூடாதன்னு. 

முக்கியமா நான் மாடுகளை ரொம்ப இரசிப்பேன். எப்போதுமே புதுமாடுகள் வீட்டுக்கு வந்ததும் அதன் கொம்பு ,நிறத்தை உத்து கவனிப்பேன். புதுமாடுகள் வந்ததும் முதல் வேலையாக மச்சுவீட்டுச் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிற மாடுகளின் கழுத்தில் மாட்டுகின்ற ஓசைமணியை எடுத்துவந்து அப்பாவிடம் கொடுப்பேன். அந்த ஓசைமணி அலங்காரமான ரப்பர் வாரில் கோர்த்து தொங்கவிடப்பட்டிருக்கும். அதை வாங்கி அப்பா  மாடுகளின் கழுத்தில் மாட்டியதும், மாடுகள் தலையசைப்பி’கினிங்,கினிங்’என்று ஓசையெழுப்பும். அப்போது என் மனம் துள்ளிக்குதிக்கும்.

என்கூட  அஞ்சாம் வகுப்பு படிக்கும் பையன்களிடம் “எங்க வீட்டுக்கு புதுமாடு வந்திருக்கு. அதுக்கு கொம்பு சூப்பரா  இருக்கு”என்று ஓயாமல் அள்ளிவிடுவென். 

நான் எங்கேயிருந்தாலும் எங்க மாடுகளின் கழுத்தில் மாட்டியிருக்கிற மணிச்சத்தம் கேட்டுவிட்டால் “இது எங்க மாட்டுமணிச்சத்தம் என்பேன்”.அப்படிச் சொல்வது எனக்கு ஒருவித பெருமையாக இருக்கும். 

அப்பா வண்டிமாடு பூட்டி தெருவில வந்தாருனா பார்க்க அவ்வளுவு அழகா இருக்கும். அப்படியே தேர்ல சாமி அவதாரம் எடுத்து வர்றது மாதிரியிருக்கும்.எவ்வளவு மாட்டுவண்டி தெருவில் வந்தாலும்-அப்பா மாட்டுவண்டி மணிச்சத்தம் மட்டும் எனக்கு வீட்டுக்குள்ளேயிருந்தாலும் துல்லியமாக கேட்கும். மாட்டின் கழுத்தில் மாட்டியிருக்கிற மணிச்சத்தம் கேட்டவுடனே நான் வீட்டுக்குள்ளிருந்து “அப்பா, அப்பா”என தெருவுக்கு ஓடிவருவேன். ஆரம்பத்தில் இதை வீட்டில் உள்ள எல்லோரும் இரசித்தார்கள். போகப்போக இதை வெறுத்தார்கள். ஆமா, அப்பாவின் மாட்டுவண்டி மணிச்சத்தம் கேட்டு அவர் எங்கே போனாலும் பள்ளிக்கூடம் போகாமல் அவரோடு போவேனென்றால் வெறுக்கமாட்டார்களா..! 

ஒருவாட்டி அப்பாவோடு போவேன் என்று முரண்டுபிடித்தேன். அப்போது பெரியக்கா வீட்டுக்குள் போட்டு என்னை பூட்டிவிட்டாள். அப்போது கதவை முட்டி முட்டி அழுதேன். அக்காவை முண்ட, தண்ட ..கண்டார ஓலினு வஞ்சு போட்டேன். அன்று பெரியக்கா அடித்த அடி கொஞ்சநஞ்சமல்ல. 

எப்போதும் வழியில் எங்க வண்டி மணிச்சத்தம் கேட்டாலே ஓடிப்போயி நிற்பேன் அப்பா வருவதை எதிர்பார்த்து. சிலநேரம் மாட்டு வண்டியில் உட்காரவைத்து மாடுகளின் கயிறை என் கையில் கொடுத்து தொழுவு வரைக்கும் மாடுகளை பத்தச் சொல்வார். இப்படி ஒருநாளு மாடுகளை பத்தச் சொல்லும்போது  வண்டிச்சக்கரம் சுத்த, சுத்த  ‘ கிரிச் கிரிச் ‘என்ற சத்தம் எழுப்பியது .

அடுத்த நாளே  நாட்டுச்சாக்கை (சணல் சாக்கை) தீயில் நன்றாக சாம்பாலாக எரித்து அதை ஒரு டப்பாவில் போட்டு அதில் விளக்கெண்ணெய்யை ஊற்றி ஒரு கிண்டுகிண்டினார். அது கர்ரேரென்று ஆகிவிட்டது. அப்பாவை பொருத்தவரை அதுதான் கிரிஷ். அதை எடுத்து அப்படியே வண்டியில் சக்கரம் கோர்க்கும் அச்சுக்கம்பியில் நன்றாக தேய்ப்பார். சக்கரம் துளைவழியும் அதை தேய்ப்பார். பிறகு சக்கரத்தை மாட்டியதும் ‘கிரிச் கிரிச்’சத்தம் மறைந்துவிடும்.   இப்படி வண்டிமாடே கதியென கிடந்தவர் சாராயம் குடிக்கப் பழகியதும் ஆளே மாறிப்போனார். எனக்கு தெரிந்து அப்பா இதுமாதிரி இருந்ததேயில்லை. திடீரெனு அம்மா கோபத்தில் பேச்சை ஆரம்பிக்கும்”மாடு வித்து எத்தன நாளாச்சு ..மாடு வாங்குற எண்ணமில்லையா.. “என்று .

”இந்த இன்னைக்குப்போறேன்” என்று கையில்  மாடு வித்த காசை எடுத்துக்கொண்டு கிளம்பிப்போவார் புதுமாடுவாங்க. போனவர் மாட்டுத்தரகர் சிங்கராஜ் உடன் சேர்ந்து சூலக்கரையில் சாராயம் குடித்து கும்மாளம் போட்டுவிட்டு இரவில் வருவார் சரியான போதையில். 

“மாடு வாங்கணும்னு போயிட்டு. இப்படி மாடு வாங்குற காசில குடிச்சிட்டு வந்தா. நாளைக்கி காட்டை எத வச்ச உழுகிறது. ஏந்தான் நீ இப்படிப்போனயோ,ஒழுங்கா என்கிட்ட காச கொடுத்திடு “என்று சொல்லி அம்மா கண்கலங்கும் . 

“ஓங்கிட்ட காச கொடுத்திட்டு,மாடு வாங்க நான் வெறுங்கைய வீசிட்டு போகவா”என்பார் அப்பா. 

“ஆமா நீ மாடு வாங்குற லட்சணத்த பாத்துக்கிட்டுதான இருக்கேன்”என்பாள்  கோபத்தில் அம்மா. 

 “எதுத்து, எதுத்து பேசுன சாட்டைக்கம்ப எடுத்து முதுகுத்தோல உறிச்சிடுவேன்”என்பார் அப்பா

 “இனி அது ஒன்னுதான் கொறச்சலு. அதையும் செஞ்சிடு..அட முருகா ஏந்தா இந்த மனுஷன் இப்படிப்போனாரோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கும். அம்மா மனசு பருத்திமார்போல எளிதில் ஒடிஞ்சுவிடக்கூடியது. அதனால் அப்பா சுருக்னு வார்த்த சொன்ன உடனே அம்மாவின் கண்களில் கண்ணீர் கசிந்துவிடும். அம்மா அழுக ஆரம்பித்தவுடனே  

“ஏம்முண்ட எளவுவிழுந்த வீடு மாதிரி அழுற..” என்பார் அப்பா. அப்போது அவர் கடவாயில் எச்சி வொள்ளேரென்று மொறக்கட்டி நிக்கும். 

அம்மா பெழக்க அழ ஆரம்பிப்பாள். அதைப்பார்த்து நானும், அக்காமார்களும் அழுவோம். அப்போது அப்பாமேல் என்னையறியாமல் கோபம் வந்து மொறச்சு பார்ப்பேன். 

அதுக்குள் பக்கத்து வீட்டிலிருந்து யாராவது அப்பா அம்மா சண்டையை விலக்கிவிடுவார்கள். நாங்கள் அப்படியே சாப்பிடாமலே தூங்கிவிடுவோம். இரவில் காய்ச்சிய சோறு காலையில் ஊரத்தண்ணியில் ஊத்திவிடுவாள் அம்மா. 

இப்படியே பலநாள் நடந்ததால் இரவெல்லாம் அம்மாவுக்கு  அழுவதே கோலமானது.அழுது அழது கண்களுக்கு கீழே, உறுமிமேளத்தில் முழங்குகின்ற பகுதிபோல் கறுப்படைந்துவிட்டது .

அம்மாவின் சதைப்பற்றில்லாத உடம்பில் எலும்பானது, வலுக்கையான டூவீலர் டயர்களில் உள்ளிருக்கும் கம்பிகளைப்போல துறுத்திருக்கும். அம்மாவின் உடம்பிலே அதிக எடைகொண்டது தலைமுடியாத்தானிருக்கும், அவ்வளவு முடி. சிகைக்காய்,ஷாம்பு  விளம்பரத்தில் வருகின்ற தலைமுடிபோல அவ்வளவு அடர்த்தியானது. 

தாயம் விளையாடும் சோழி போல பற்கள். வளரிபோல புருவங்கள். மஞ்சளுக்கு பதிலாக சோகத்தை பூசிய முகம்-இதுதான் அம்மாவின் தோற்றம். 

அந்த வருஷம் அப்பா மாடுவாங்கததால்  காடுகரைகளை சித்தப்பா மாடுகளால்தான் உழுது பருத்தி விதைத்தாள் அம்மா. அப்பா எப்பையாவதுதான் காடுகளுக்கு வந்தார். அதுவும் பேருக்குதான் வந்தார். 

முதலெல்லாம் காடு விதைக்கிற காலம் வந்துவிட்டால் வீட்டில் கொண்டாட்டமாயிருக்கும். ஆடி மாதத்துக்கு முன்னாலே அப்பா காட்டில் முளைத்திருக்கிற மஞ்சனத்தி மற்ற செடிகளை வேரோடு பெயர்த்திடுவார். பிறகு ஓடை கம்மாயிலிருந்து  கரிசல் மண்ணை அள்ளிவந்து காடுகளில் வரிசையாக குமிகுமியாக கொட்டிவைத்து அதில் மாட்டுச்சாண உரத்தை கலந்து காடெங்கும் விதைத்து அதற்குப்பிறகு உழுவார் . 

உழுததும் கரிசல்காடானது பொறித்த ஆட்டு இரத்தம்போல கர்ரேருனு கட்டிகட்டியாய் கிடக்கும்.அதுக்குப்பிறகு பெரியமழை ஏதாவது பெய்ததும் அப்பா அடுத்தநாள் காடுகளை போய் பார்க்கப்போவார்.  காடு போயிட்டு வந்த அப்பாவின் காலில் கரிசல்மண் கொலகலவொன கேப்பக்களிபோல ஒட்டியிருக்கும். மழை பெய்த அளவைப்பொறுத்து இத்தனை நாளில் விதைக்கலாம் என்பார். பெரும்பாலும் கரிசக்காட்டில் பருத்திதான் விதைப்போம். விதைக்கிற அன்றைக்கு மாட்டுச்சாணத்தில் ஒரு கைப்பிடியளவு பிள்ளையார் பிடித்து அதற்கு  காணியக்கையாக காசை வைத்துவிட்டு, பிறகு மீதமிருக்கும் மாட்டுச்சாணத்தை தண்ணியில் போட்டு நன்றாக கரைத்து  தரையில் ஊத்தி அதில் பருத்தி விதையை கலந்து தேய்த்து, கொஞ்சநேரம் வெயிலில் காயவைத்து பிறகு காடுகளில் விதைப்போம். காடுகளின் பொழிக்கு மட்டும் ஏதாவது நாத்து அல்லது, ஆமணக்கு விதைப்போம்.

ஏற்கனவே உழுதிருந்தாலும்  விதைக்கிற அன்றைக்கு மறுபடியும் காடுகளை உழவேண்டும். அப்பா  ஏர்கலப்பையில் மாடுகளைப் பூட்டி  மறுபடியும் உழும்போது அப்படியே கரிசல் மண்வாசனை கமகமக்கும். மண்ணை கலப்பை கீறிக்கொண்டு போகும்போது மண்ணுக்குள்ளிருந்து மண்மேல வந்து மண்புழுக்கள் தண்ணியில் விழுந்த நிழலாய் நெளியும். அப்போது சில பறவைகள் வந்து அதை கொத்திப் போகும். 

 எப்பவுமே கரிசல்காட்டை உழுகும்போது அப்பா காட்டின் கன்னிமூலையிலிருந்துதான் தொடங்குவார். காட்டின் கன்னிமூலையை ஒட்டி போகும் ஓடைக்கரையில்  ஒத்த பனைமரம் இருந்தது. அந்த மரந்தான் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சாமி. அந்த ஒத்த பனைமரத்தில் முனீஸ்வரன் இருப்பதாக நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது காட்டில் தானியத்தையோ, பருத்தியையோ திருடவந்து மாட்டிக்கொண்டால்,அந்த பனைமரத்தின் முன்னாடி மண்டிபோட்டுதான் மன்னிப்பு கேட்கச்சொல்லுவார்கள் யாரும் . எப்போதும் காட்டில் எது விளைந்தாலும் அந்த பனைமரத்திற்குதான் முதல் காணிக்கையாக வைப்பார்கள். அது மாதிரி விதைக்கும் காலத்தில் அந்த பனைமரத்தில் சூடம் பத்திக்குச்சி பொருத்தி வைத்துவிட்டுதான் வேலையைத் தொடங்குவார்கள். 

 தைப்பொங்கல் காலத்தில் சிறுகண்பீளைச்செடி, வேப்பிலை, கம்மங்கருது சேர்த்து  வீட்டின் முகப்பில் காப்பு கட்டி முடிச்சதும் -முதல் வேலையாக கரிசக்காட்டுக்கு வந்து இந்த பனைமரத்தில் அதே மாதிரி காப்பு கட்டுவார் அப்பா. அம்மா தைப்பொங்கலுக்கு வீட்டில் பொங்கல் வச்சதும் மறுவேலையாக இந்த பனைமரத்துக்கு வந்து கரும்பு வைத்து பொங்கல் வைப்பாள்.பொங்கல் பொங்கிவரும்போது அம்மா குலவைபோடும்போது அவ்வளவு அழகாகயிருக்கும். அப்போது அவளின் நாக்கு   பயணம்போகும் படகுத்துடுப்புபோல அங்கிட்டும், இங்கிட்டும் போய்வரும். அப்போது அந்த பனை மரத்துக்கு கீழே இருக்கிற கரிசல் மண்ணை அப்படியே அள்ளி பக்தியில் திருநீராக நெத்தியில் பூசிக்கொள்வாள். 

” தூரத்திலிருந்து பனைமரத்தை பார்த்தால் ஒரு யானையின் தடித்த காலினை நட்டி வைத்ததுபோல  இருக்குல்ல”என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள் காட்டுக்கு வேலைக்கு வரும் ஆட்களிடம். 

எப்போதாவது பண்டிகை நாட்களில் வீட்டில் கறி(இறைச்சி)காய்ச்சிருக்கும்போது அப்பா வேலையாக கரிசல் காட்டுப்பக்கம் இருந்தாரென்றால் -அவருக்கு தூக்குவாளியில் கறி, சோறுவச்சு என்னிடம் கொடுத்துவிடுவாள் அம்மா. காட்டுப்பக்கம் போகும்போது பேய், பிசாசு -கறி கவுச்சிக்கு வந்திரக்கூடாதின்னு -கறிசோறுக்கு மேலே ஆணி மற்றும் கரிக்கட்டைகளை போட்டு அனுப்பிவிடுவாள். 

அப்பா தூக்குவாளி மூடியை திறந்ததுமே “பனைமரத்தை பார்த்துக்கொண்டே நம்ம பக்கத்தில சாமியிருக்கும்போது -இது எதுக்குடா என்று ஆணியையும் கறிக்கட்டையும் தூக்கிப்போடுவார் .

தூக்குவாளியிலிருந்து அள்ளிய முதல் கைப்பிடிச்சோறினை பனைமரத்துக்கு கீழே இருக்கிற கரிசல் மண்ணில் பக்தியுடன் வைத்து வணங்கிவிட்டுதான் சாப்பிட ஆரம்பிப்பார். எனக்கு பூசணிக்கொடியிலிருந்து இலையை பறித்து அதில் சோறுகறியினை வைத்து சாப்பிடச் சொல்லுவார். கரிசக் காட்டில் இலைதழை வாசனைகளுடன் பூசணி இலையில் கறியை வைத்து தின்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்..!

அந்த பனைமரம் சாமியானது, நிறைகுளம் சித்தப்பாவால்தான். நிறைகுளம் சித்தப்பாவுக்கு பிறப்பிலே வலிப்புநோய் வந்துவிட்டது. அந்த வலிப்புநோயால் பெரும் அவதிப்பட்டார். வலிப்புநோய் வந்ததும் வாயெல்லாம் நுரை பொங்கும். அப்போது அவருக்கு இரும்பு பொருட்களை கொடுப்பார்கள். கொஞ்சநேரத்தில் வலிப்புநோய் சரியாகிவிடும். பிறகு எப்போதாவது வலிப்பு மீண்டும் வரும். 

இப்படியாக இருந்தவர், ஒருநாள்  பனைமரத்தில் கிளி கட்டியிருக்கும் கூட்டில் -அதன் குஞ்சை எடுப்பதற்கு ஏறியுள்ளார். உனக்கு வலிப்பு வரும் வேண்டாமென்று தடுத்துள்ளார்கள். எவர் சொல்லையும் காதில் வாங்காமல் பனைமரத்தில் ஏறியுள்ளார். முக்கால்வாசி மரம் ஏறியவுடனே வலிப்பு வந்து அங்கிருந்து பொத்துனு  உழுத கரிசல் மண்ணில் வந்து விழுந்துள்ளார். எல்லோரும் அதிர்ச்சியில் ஓடிவந்து பார்த்துள்ளார்கள். உடம்பில் ஒரப்புண்ணுடன் படுத்துக்கிடந்தவருக்கு மூச்சு இருந்திற்கு, பேச்சு இல்லை. எல்லோரும் தட்டியதும் கண்களை மெல்ல திறந்து மூடியுள்ளார். மேலிருந்து விழுந்த அதிர்ச்சியில் எப்படியோ வலிப்பு சிலநொடியில் நின்னு போனது. அங்கிருந்து விழுந்து பிழைச்சதே பெரிய விஷயம் என்பது மட்டுமில்லாமல் -அதற்குப்பிறகு ஒரேயடியாக வலிப்பு நோயும் நின்னுபோனது.வருடங்கள் பல ஓடியும் அதுக்குப் பிறகு வலிப்புநோயே வரவில்லை. எந்த மருத்துவமும் சரிபண்ண முடியாத நோயை அந்த மரம் ஏறி சரிபண்ணிக்கொண்ட நிறைகுளம் சித்தப்பா  அந்த மரத்தை கொஞ்ச நாளில் வணங்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு எல்லோரும் வணங்க ஆரம்பித்தார்கள் .”மரத்திலிருந்து விழுந்தா உயிர் போகும்.இங்க நோய் போயிருச்சே”என்று எல்லோரும் ஆச்சரியமாக பேச ஆரம்பித்தார்கள். அந்த பேச்சில் அந்த பனைமரம் தெய்வமானது. 

அன்றிலிருந்து அப்பாவும், அம்மாவும் அந்த பனைமரத்தை வணங்க ஆரம்பித்தார்கள். எப்போதும்  ஏர்கலப்பையில் மாடுகளை பூட்டி   உழுதாலும் அந்த பனைமரம் இருக்கும் கன்னிமூலையிலிருந்துதான் அப்பா ஆரம்பிப்பார்.அப்படி உழுவது ராசியன ஒரு பழக்கமாகிப்பேனது . 

அப்பா சும்மா நாளிலே மாடுகளை விழுந்து விழுந்து கவனிப்பார், உழுத நாட்களில் சொல்லவா வேண்டும்..!மாடுகள் தொழுவத்துக்கு வந்ததும் அப்படியே சிறிதுநேரம் தடவிக்கொடுத்துக்கொண்டே மாடுகளில் உடம்பிகளில் ஒட்டியிருக்கிற உன்னிகளை புடுங்குவார். தவிடு, புண்ணாக்கு கலந்து தண்ணி வைத்து, காடியில் கூளத்தை அள்ளிப்போட்டு மாடுகளை கட்டுத்தரையில் கட்டி விடுவார். கூளத்தை கடித்து கடித்து மாடுகளின் வயிறு நிறையும் வரை தொழுவிலே இருப்பார். மாடுகளின் வயிறு நிறைந்தாதான் இவருக்கு நிம்மதியாக தூக்கம் வரும். 

தனக்கு உடம்பு சரியில்லையென்றாலும் மாடுகளை வண்டியில் பூட்டி வேலைக்குப் போயிடுவார். ஆனால் மாடுகளுக்கு உடம்பு சரியில்லையென்றால் ஒருபோதும் வேலைக்குப் போகமாட்டார். மாடுகளை அவ்வளவு விழுந்து விழுந்து கவனிப்பார். தன் கால்களுக்கு செருப்பு இருக்கோ இல்லையோ.. மாடுகளின் காலில் லாடம் இருக்கும். மாடுகளின் காலில் முள், கல் குத்துவதை ஒருபோதும் விரும்பமாட்டார். 

 மாட்டுப்பொங்கல் வந்துவிட்டதென்றால்  மாடுகளை பெரியக் கம்மாயில் குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வர்ணம் அடித்து கரும்பு வைத்து பொங்கல் வைத்து -அந்த பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி.. யப்பா அப்படி கவனித்துக்கொள்வார்.அன்று அப்பா மாடுகளுடன்  சேர்ந்து  புகைப்படம் எடுத்துக்கொள்வார். அப்படி எடுத்த புகைப்படம் வீட்டுச் சுவற்றில் அரைடஜன் இருக்கும். 

அடுத்த ஜென்மம் மாடாய் பிறந்தால் அது கந்தையா வீட்டில்தான் பிறக்கவேண்டும் என்று கேலிபண்ணுவார்கள் மற்றவர்கள். அந்தளவுக்கு மாடுகளை பார்த்துக்கொள்வார். 

இப்படி மாடுகளையும், காடுகளையும் கவனித்தவர்தான் குடிப்பழக்கத்துக்கு ஆளானதும் ஆளே மாறிப்போனார். சூலக்கரையிலிருந்து மாட்டுத்தரகராய் வந்த சிங்கராஜ்தான் அப்பாவுக்கு சாராயத்தை பழக்கிவிட்டது. 

 எப்போதுமே வேலைக்கு போயிட்டு வந்ததும் அலுப்பாயிருக்குனு வீட்டு வெளியே உள்ள திண்ணையில் படித்திடுவார் அப்பா.  புளிச்சதண்ணியில் பச்சமிளகா, வெங்காயம், கொத்தமல்லி இலையை பொடுசாக  நறுக்கிப்போட்டு அதை அப்படியே கலக்கி வந்து கொடுப்பாள் அம்மா.அதன் ருசிக்கு மோர், தயிரெல்லாம் தோத்துப்போகும். அதை ஒரு மண்டு மண்டிட்டு  கண்ணசந்திடுவார்.

சிலநாளில் கூளம் கீளம் ஏத்திப்போயி படப்பு போட்டுட்டு இரவு ஏழெட்டு மணிக்கு வருவார் அப்பா. வந்ததுமே புளிச்சதண்ணிதான் கேட்பார்.  சிலநாள்  வீட்டில்  புளிச்சதண்ணி இருக்காது . அப்பாவுக்காக வீடுவீடாய் அலையும் புளிச்சதண்ணி கேட்டு அம்மா. இரவு ஆறுமணிக்கு மேலே யார்வீட்டிலும் பெரும்பாலும் புளிச்சதண்ணி தரமாட்டார்கள். அம்மா ரொம்ப கெஞ்சிக்கேட்பதால் பரிமளம் அத்தை புளிச்சதண்ணி கொடுக்கும். ஆறுமணிக்குமேலே புளிச்சதண்ணி கொடுப்பதால் அம்மாவிடமிருந்து கைப்பிடி அளவு உப்பு கேட்கும் பரிமளம் அத்தை. வீட்டிலிருந்து கைப்பிடியளவு உப்பு எடுத்திட்டுப்போயி பரிமளம் அத்தையிடம் கொடுத்துவிட்டு, அப்பாவுக்காக புளிச்சதண்ணி வாங்கி வரும் அம்மா.  

இப்படி புளிச்சதண்ணியைதவிர மற்ற எதையும் குடிக்காதவர். சாராயத்தை பழகியதும் அதே கதியென கிடந்தார். ஆரம்பத்தில் மாட்டுத்தரகர் சிங்கராஜ் வந்தா மட்டும் குடிக்கப்போனவர். பிறகு அவராய் குடிக்கப் போனார். 

யாராவது வந்து உழுவதற்கு வந்து கூப்பிடுவார்கள். சரி வாரேன் என்று சொல்லிவிட்டு மாட்டுத்தரகர் சிங்கராஜ் வந்ததும் அவரோடு கிளம்பி போய்விடுவார். வேலையும் போயி வருமானமும் போயி கெட்டபேரும் வந்து இப்படியாக அப்பாவின் வாழ்க்கை ஓடியது. 

காலையில் சிங்கராஜ் உடன் அப்பா போனதும் அம்மாவும், சின்னக்காவும்தான் கட்டுத்தரையில் கட்டிக்கிடக்கின்ற காளைமாடுகளை கவனித்துக்கொள்வார்கள். 

காளைமாடுகள் பசுமாடுகள் போல் அல்லாததால் புதுசா பக்கத்தில் யார்போனாலும் வெறிச்சியில் புஷ்புஷ்னு கொம்புகளால் முட்டவரும். அம்மா ஒல்லியாக இருந்தாலும் ரொம்ப தைரியமானவள்.

ஆக்ரோஷமாக முட்ட வருகிற மாடுகளை அப்படியே ‘அய்அய்னு’முதுகைத்தடவிக்கொடுத்து பழகி  அதை அவிழ்த்து தண்ணிக்கிவிடுவது ,பிறகு அதற்கு கூளம்போடுவது ,வேற இடத்தில் மாடுகளை கட்டிவிட்டு அது போட்ட சாணி மூத்திரங்களை அள்ளுவது இப்படியாக வேலை பார்ப்பாள். சின்னக்கா பேருதவியாக இருந்தாள்.  சிலநாள் தீப்பெட்டி ஆபீஸ்க்கு தீக்குச்சி அடுக்கப்  போகாமல் மாடுகளுக்காக சின்னக்கா விடுப்பு எடுத்துவிடுவாள். 

“நல்லா இருந்த மனுஷன் இப்படிப் போனாரே..கடைக்காட்டுல காபித்தண்ணிகூட குடிக்க கூச்சப்படுறவரு இப்படிப் போனாரு…அஞ்சுபைசாகூட செலவழிக்க பயப்படுறவரு இப்ப ஆயிரம் ஆயிரமாய் சாரயத்துக்கு செலவழிக்கிறாரே .. வாயில்லா ஜீவன்களை கவனிக்காம தவிக்கவிட்டு மயிருப்போச்சுனு போயிருறாரே.. சம்சாரி காட்டை தேடிப்போகாம சாராயக்கடையை தேடிப்போனா குடும்பம் விருட்டுனா விருத்திக்கு வந்ததுரும்…

திடீர்னு மாடு வெறட்சில என்ன கொம்பால முட்டி ஏதாவது எனக்கு ஆகிப்போச்சுனா எம்புள்ளைகெல்லாம் அனாதையா தெருவுலேல நிக்கும். தேவ்டியா மகன் தூமியக்குடிக்கி மகன் எப்ப சூலக்கரையிலிருந்து சிங்கராஜ் வந்தானோ அப்பவே எங்குடும்பம் மண்ணாப்போச்சே “என்று அம்மா பொலம்பா பொலம்புவாள். 

அப்பா காலையில போனவரு  பெரும்பாலும் நடுச்சாமத்திலதான் சரியான போதையில  தள்ளாடியே வருவார். வந்ததுமே  அம்மா ஏதாவது சொல்ல அப்பா ஏதாவது சொல்ல இப்படியே வாக்குவாதம் வந்து பெரிய சண்டையாகிவிடும்.

அப்பா-அம்மா சண்டைபோடும்போது அக்காமார்கள் அழுக ஆரம்பிப்பார்கள். அதைப்பார்த்து நான் அழுவேன். இப்படியாக எங்கள் இரவுகள் தொடரும். எங்களுக்கு தூக்கம் வர அந்தாஇந்தானு மூனு மணி ஆகிரும். 

இரவில் நடந்த சண்டையினால் அம்மா காலையில் புலம்பிக்கொண்டே வேலை பார்ப்பாள். எதுவுமே நடக்காதுமாதிரி அப்பா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருப்பார். 

அம்மா புலம்புவதைப்பார்த்து மீண்டும் அப்பா ஏதாவது சொல்ல, அம்மா ஏதாவது சொல்ல என சண்டை மீண்டும் தொடரும். 

அக்காமார்கள் மீண்டும் கண்ணைக் கசக்க ஆரம்பிப்பார்கள். அதைப்பார்த்து நான் அழுவேன். இப்படியாக விடியும் பெரும்பாலும் எங்கள் காலை. 

 “சாராயக்கடையெ கெதினு கெடக்குற ஒனக்கு எதுக்கு குடும்பம் குட்டி… மூசாம நீ சூலக்கரை சிங்கராஜ்கூடயே போயிரு. எம்புள்ளைகல நான் வளர்த்துக்கிறேன். ஓம்பொச்சுல ஈரமிருந்த இப்படி மாடுகளை போட்டுட்டு நீ வாட்டுக்கு மயிரு போச்சுனு போவயா..?நானும் எம்புள்ளையும் மாடுகளை அவித்து தண்ணிவிட்டு,கூளம் போட்டுக்கிட்ருக்கோம்.மாடு,கீடு எம்புள்ளையையோ, என்னையோ திடீரெனு கொம்பால முட்டிகிட்டி போடுச்சுனா.. என்ன பண்ணமுடியும்…?

ஒன்னு மாடுகள வச்சு வேல பார்க்கணும்னா மாடுகளை வச்சிரு. இல்ல இப்படித்தேன் தெரியப்போறேன்னா  மாடுகள வித்திரு.”என்றாள் ஆவேசமாக. 

“ஓஞ்சோலி மயிரப்பாரு.. எல்லாம் எனக்குத்தெரியும்”என்றார் வேகமாக. 

” ஓங்கோபம் மயிருக்கு ஒன்னும் கொறச்சிலில்ல”என்றாள் அம்மா. 

அம்மா அப்படிச்சொன்னதும் கோபம் உச்சிக்கு வந்து பல்லை நெருநெருவேன கடித்தார். அந்த சமயத்தில் சத்தம்கேட்டு பக்கத்துவீட்டிலிருந்து சித்தப்பா வந்தும் 

“ஏண்ணே சத்தம் போட்டுக்கிட்டுருக்க”என்றார். 

அம்மா முந்திக்கொண்டு “பாரு சுப்புச்சாமி. தண்ணியடிச்சிட்டு ஏன் இப்படித்தெரியறேன்னு கேட்டதுக்கு என்கூட அப்படியே முறிச்சுக்கிட்டு சண்டைக்கு வர்றாரு.. “என்றாள். 

“ஏண்ணே.. இப்படித்தெரியுற”என்றார் சித்தப்பா. 

அதற்கு  அப்பா எதுவும் சொல்லாமல் விருட்டுனு எழுந்து போயிட்டார். 

அம்மா அதைப்பார்த்து தலைதலையில் அடித்துக்கொண்டாள். 

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மாட்டுத்தரகர் சிங்கராஜ் தன்னுடன் ரெண்டுபேரை அழைத்துவந்தார் மாடுவாங்குவதற்கு- என்ன நினைத்தாரோ அப்பா திடீரென்று எங்க மாடுகளையே  அவர்களுக்கு நஷ்ட விலைக்கே கொடுத்துவிட்டார். அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

மாடுகளின்  கழுத்தில் அழகு -அடையாளத்திற்காக கட்டியிருக்கும் ஓசைமணி, மாடுகளை தொழுவில் இழுத்து பிடித்து கட்டுவதற்கு பயன்படும் நூல்கயிறுகள் போன்றவற்றை அப்பா வீட்டுக்கு கையிலேந்தி கொண்டுவரும்போதுதான் எங்களுக்கே தெரியும் மாடுகளை விற்ற விஷயம்.

அம்மா சும்மாதானா சொன்னா மாடுகள வித்திருனு.. இவர் உண்மையிலே வித்துட்டாரே.. அதுவும் நஷ்ட விலைக்கு என்று எல்லோருக்கும் ஆச்சரியம். 

அதற்குப்பிறகு அப்பா மாடுகள் வாங்காமலே இருந்தார்.பேருக்கு மாடு வாங்கப்போறேன்னே சொல்லிட்டு அந்தக் காசை குடிக்காக இஷ்டத்துக்கு செலவழித்தார். மாடுகளின் நிழலிலே வாழ்ந்தவர் எப்படி இப்படி மாறினாரென்று ஆச்சரியப்பட வைத்தது.

அம்மா தனியாகப் போயி கரிசக்காட்டில் உள்ள ஒத்த பனைமரத்தின் அருகே நின்று கையெடுத்து கும்பிட்டு வணங்கி  எம்புருஷன் முன்னமாதிரி திருந்தி வரணும் ,மாடு வாங்கணும் என்று அழுதுகொண்டே  வேண்டுவாள்.

மாடுகள் இல்லாததால் தொழுவில்போய் நின்று கட்டுத்தரையாய் பார்ப்பதற்கு வெறிச்சோடி கிடந்தது. எப்போதாவது தெருவில் வேற யாராவது மாடுகளின் மணிச்சத்தம் கேட்டால் எனக்கு அழுகையாய் வந்துவிடும். 

அப்போது ஓடி வந்து மச்சுவீட்டு சுவற்றில் அடித்த ஆணியில் தூசி  பிடித்து தொங்குகின்ற மாடுகளின் கழுத்துமணியை கொஞ்சமாக அசைத்துவிடுவேன். அதுவரை ஊமையாய் கிடந்த மணி ‘கினிங் கினிங்’என்று சத்தமிடும். அப்போது எனக்கு சந்தோஷமாக இருக்கும். 

அந்த மணி கோர்த்திருக்கும் இரப்பர் வாரை உடனே எடுத்து என் கழுத்தில் மாலைபோல் போட்டுக்கொண்டு மாடுபோல் அங்கிட்டும், இங்கிட்டும் தலையசைப்பேன். அப்போது மணி “கினிங், கினிங்”என்று ஒலிக்கும். அந்த சத்தத்தைக்கேட்டு அம்மா அக்காமார்கள் ஓடிவந்து என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்கலங்கி நிற்பார்கள். 

அவர்களைப் பார்த்ததும் நான் வேகமாக தலையசைப்பேன் மாடுகளைப்போல-அப்போது கழுத்துமணி முன்னைவிட வேகமாக இடைவெளியின்றி ஒலிக்க ஆரம்பிக்கும். அந்த ஒலியில் அப்பா மாடுவண்டி பூட்டி தெருவில் வருகிற ஞாபகம் மங்கலாய் வந்துபோகும். 

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *