வாசலில் செந்நிற உயர்தர கார் நின்றிருந்தது. யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறியும் ஆவலில் வீட்டின் உள்ளே சென்றேன்.  சோஃபாவில் தங்கப்பன் அண்ணா அமர்ந்திருந்தார் . எனக்கு அண்ணன் முறை அவர் . பத்து வருடம் முன்பு அவர் திருமணத்தில் பார்த்தது ,பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் . தலையில் வழுக்கை விழுந்து, தொப்பை சரிந்து ஆளே மாறி இருந்தார் . உள்ளே நான் சென்றதும் எழுந்து வந்து கட்டிக் கொண்டார் . 

“என்னடா இப்படி தடிச்சிட்ட ” என்றார் .

நான் சிரித்துக் கொண்டு “நீங்க இந்த துபாய் வேலை எல்லாம் விட்டு இங்கு செட்டில் ஆகிடலாம் ல ” என்றேன் .

“பார்க்கலாம் , இன்னும் கொஞ்சம் பணம் தேவை இருக்கு , இந்த முறைக்கு பிறகு போக மாட்டேன் ” என்றார் .

ஒவ்வொன்றாக பேசிக் கொண்டிருந்தவர் என்னை விசாரிக்க ஆரம்பித்து விட்டார். வசதியாக அம்மாவும் வந்து அமர்ந்து கொண்டாள் .

” உனக்கு தொழில் எப்படி போகுது ” என்றார் .

” நல்லா போகுது னா, கொஞ்சம் பெரிய வேலைகள் எடுத்து செய்யறேன் ” என்றேன்.

” எவ்வளவு சேர்த்தியிருக்க ” என்றார் . நான் அம்மாவைப் பார்த்து பின் அவரை பார்த்து திரும்பி ” இன்னும் இல்லைனா , இனிதான் .. ” என்றேன்.

“என்னடா பெரிய வேலைக எடுக்கறனு சொல்ற ,ஒன்னும் சேர்க்கலையா” என்றார் . எனக்கு எரிச்சல் வந்தது, அதை விழுங்கிக்கொண்டு ” இல்லைனா, தொழில்ல அதிகம் முதலீடு தேவைப் படுது ,சம்பாதிச்சது எல்லாம் உள்ளதான் இருக்கு .. ” என்றேன் .

“பத்து வருஷமா தொழில் பண்ற , இன்னும் வெளிய எடுக்க முடியலனு சொன்னா எப்படி ” என்றார். நான் வருவதற்கு முன்பு அம்மா இதைப்பற்றி பேசியிருக்கிறாள் என்பது புரிந்தது ! அம்மாவைப் பார்த்தேன். இதற்கு சம்பந்தம் இல்லாதவள் போல முகத்தை அப்பாவியாய்க் காட்டினாள் !

நான் அண்ணனிடம் “அண்ணா, நான் லாபத்துக்காக தொழில் பண்ணல, எனக்கு பிடிச்சிருக்கு பண்றேன், பணம் சேரும்போது சேரட்டும், எனக்கு அவசரம் இல்லை ” என்றேன். அவர் கோபம் கொண்டு “அடுத்தவங்களுக்கு சேவை செய்ய நாம இங்க ஊரை விட்டு வரல, காசு சம்பாதிக்க வந்திருக்கோம், நாம பத்து ரூபா செலவு பண்ணினா, இருபது ருபா நமக்கு திரும்ப வரணும் ” என்றார் . எனக்கு அவரை புரிந்து கொள்ள முடிந்தது. இளம் வயதில் ஊரை விட்டு கிளம்பி கோவை வந்து தொழில்கற்று பிறகு துபாய் சென்று சம்பாதித்து என கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேறியவர், சம்பாதிக்கும் வெறி கொண்டவர் . ஆனால் இப்படி எனக்கு வகுப்பு எடுப்பது, அதுவும் அம்மா முன்பு என்பதுதான் பொறுக்க முடிய வில்லை !

” பணம் இல்லைனா நம்மள ஒருத்தனும் பார்க்க மாட்டான் ” என்றார் . தொடர்ந்து அவர் அறிவுரை மழை பொழிந்து கொண்டு இருந்தார் . “சரி விடுங்க.” என்று சொல்லி பேச்சை மாற்றி செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

பிறகு அம்மாவுக்கு தெரியாமல் மாடி மேலே சென்று பேசிக் கொண்டிருப்பது போல் அவர் வாங்கி கொண்டு வந்திருந்த மதுவை அருந்தினோம். நல்ல இனிமையான போதையை மது அளித்தது. டாஸ்மாக்கில் குறைவான விலையில் வாங்கி அருந்தி கொண்டிருந்த எனக்கு இந்த மது சொர்க்கத்திற்கு செல்லும் பாதை போல இருந்தது. அவ்வளவு போதையிலும் நான் அவர் மனைவி இன்னொருவருடன் ஓடிப் போனதைப் பற்றியும், அவர் வாங்கிய வீடு அவர் மனைவி பெயரில் இருந்ததை பற்றியும் கேட்க வில்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *