1
இந்திய/ இந்து பண்பாட்டின் கீழ்மைகளில் முக்கியமான ஒன்று சாதிய ஒடுக்குமுறை. அது எந்த அளவு குரூரமாக இருந்தது என்பதை நிரூபிக்கும் ஒரு ஆவணம் என நிர்மாலயா அவர்கள் எழுதிய மகாத்மா அய்யன் காளி எனும் நூலினை குறிப்பிடலாம் . கேரளத்தில் இருந்த சாதிய ஒடுக்குமுறைகளை வரலாற்று ஆதாரங்களுடன் இந்த நூல் முன்வைக்கிறது .
சமகாலத்தில், முன்பு இந்து மதத்தில் இருந்து மதம் மாறி இப்போது கிருஸ்துவர்களாக ஆகியிருக்கும் மக்களை இந்து ஆதரவு தளத்தில் நின்று பேசும் பலர் இப்படி மாறியவர்களை பணத்திற்காக மாறியவர்கள் என்று கிண்டலடிப்பதை காண முடியும் . ரொட்டித் துண்டுக்காக மாறியவர்கள் என்பார்கள். இந்த நூலினை படிக்கும் பொழுது அப்படி சொல்வது எவ்வளவு அபத்தமானது, எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உயர் சாதி ஆட்களை பார்த்தால் பல அடிகள் தள்ளி நிற்க வேண்டும், அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு அடிமையாக அவர்களது விவசாய நிலங்களில் பணி செய்ய வேண்டும், அதுவும் திருவிதாங்கூர் பகுதிகளில் சென்ற நூற்றாண்டு வரை அடிமை முறை இருந்திருக்கிறது , அடிமைகளை வாங்கி விற்று இருக்கிறார்கள், ஓய்வில்லாமல் கடுமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள், அடிமையாக இருப்பவரின் முதல் மகனும் அவரை அடிமையாக வைத்திருக்கும் ஜன்மிக்கு சொந்தம் என்ற அளவுக்கு இருந்திருக்கிறது. கல்வி மறுக்கப் பட்டிருக்கிறது. தங்களது கீழ்நிலையில் இருந்து வெளியேற, தங்கள் குழந்தைகள் படிக்க , தங்களை பிறர் மரியாதையாக நடத்த, சமமாக பாவிக்க இவர்கள் மதம் மாறி இருக்கிறார்கள். இதில் ஆச்சரியமும் வேதனையுமான விசயம் என்பது இப்படி கீழ் நிலையில் ஒடுக்கி வைத்து அடிமைகளைப் போல நடத்திய மேல் சாதிக்காரர்கள் இவர்கள் மதம் மாறியதும் மதிக்கத் தொடங்குகின்றனர். ஆனால் மாறாமல் இருக்கும் போது கீழானவர்களாக நடத்தினர். பொது வழி , பொதுச் சந்தைகள் ,கோவில்கள் என பல இடங்களில் வரத் தடை விதித்திருகின்றனர். இந்த சூழலில் இருந்துதான் அய்யன் காளி எழுந்து வருகிறார், தடைகளை எப்படி உடைக்க முடியுமோ அப்படி உடைக்கிறார் !
அய்யன் காளியின் முதல் கட்டப்போராட்டம் பொது வழிகளை பயன்படுத்த தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கிறது. வந்தால் அடிப்பார்கள் என்பதால் அதை எதிர்கொள்ள அடிமுறை கற்று , குழுவை உருவாக்கிச் செல்கிறார், எதிர்த்து வர விடாமல் தாக்குபவர்களை திருப்பித் தாக்குகிறார் . அவர் குழுவும் தாக்குகிறது .
எனக்கு அய்யன் காளியை மிக பிடிக்க காரணம் அவரது எல்லா விதங்களிலும் முயற்சிக்கும் தன்மைதான் , ஶ்ரீ மக்கள் சபையில் தனது மக்களுக்கான கோரிக்கையை அகிம்சை வழியில் முன்வைக்கிறார், அதில் வெற்றிகளை அடைகிறார். இன்னொரு பக்கத்தில் பொது வழி போராட்டங்களில் வெற்றி பெற வன்முறையில் இறங்குவது அவசியம் என்றால் அதிலும் இறங்குகிறார் !
ஒரு சமூக செயல்பாட்டாளன் தனது கனவுகள் தனது காலத்திலேயே நிறைவேறுவதை காண்பது என்பது பெரிய கொடுப்பினை. அது அய்யன் காளிக்கு அமைகிறது. தனது மக்களுக்கு கல்வி மறுக்கப் படுவதை சுட்டிக்காட்டி அனுமதிக்கும் ஆணையை அரசிடம் ( திருவிதாங்கூர் ) பெறுகிறார். அதை செயல்படுத்த இருக்கும் கள எதிர்ப்புகளுக்கு ( மேல்சாதி ஆட்கள் ) எதிராக போராடுகிறார் , மெல்ல கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கிறது, அவர் சார்ந்த மக்கள் பெருவாரியாக படிக்க ஆரம்பிக்கிறார்கள். பள்ளிக்கே அனுமதி இல்லாத நிலையில் இருந்து 5-6 வருடங்களுக்கு உள்ளாக 10000 வரை அவர் சார்ந்த மக்கள் படிப்பிற்குள் நுழையும் நிலை அமைந்து விடுகிறது. ஆரம்பத்தில் அனுமதி சார்ந்த பிரச்னைகள் தீவிரமாக இருந்த போது தானே தன் அமைப்பு மூலம் கல்வி நிலையத்தை ஆரம்பிக்கிறார். அது இப்போதும் செயல்பட்டு வருகிறது. அய்யன் காளிக்கு தன் மக்கள் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்வி மட்டுமே ஒரே வழி என்ற புரிதல் இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு அமையும் போது அவர் வைக்கும் கோரிக்கை என்பது தன் சமூகத்தில் இருந்து 10 BA பட்டதாரிகளாவது உருவாவதற்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார். காந்தி 10 அல்ல 100 பேர் உருவாவதற்கான நிதியை அளிப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறார் .
அய்யன் காளியின் வெற்றிகளுக்கு முக்கியமான காரணம் அவர் ஶ்ரீ மூலம் மக்கள் சபையில் உறுப்பினர் ஆனதுதான். அந்த சபை என்பது திருவிதாங்கூர் அரசால் அமைக்கப்பட்ட மக்கள் சபை. மக்கள் தங்கள் தேவைகளை முன்வைக்க உருவாக்க பட்ட சபை. மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கோரிக்கையை அதில் வைப்பார்கள். அதில் எல்லா தரப்பு மக்களுக்கும் அவர்களுக்கான பிரதிநிதிகள் இருப்பார்கள். அப்படி ஒடுக்கப் பட்ட மக்களுக்காக இருந்த பிரதிநிதி பி.கே.கோவிந்தப் பிள்ளை அவர்கள். இவர் நாயர் வகுப்பை சேர்ந்தவர். நேர்மையானவர். ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்களை தொடர்ந்து அரசுக்கு முன்வைத்தவர். அவர்களின் தேவைகளை முன்வைப்பவர், அவர்தான் தன்னை விட அந்த மக்களில் இருந்து ஒருவரே வந்து முன்வைப்பது இன்னும் சரியாக இருக்கும் என்ற யோசனையை சபையில் முன்வைக்கிறார். அப்படித்தான் அய்யன் காளிக்கு சபையில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. சபையில் அய்யன் காளி தனது மக்களின் தேவைகளை முன்வைத்து அதை அடைகிறார். உதாரணமாக தங்களுக்கு நிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து கேட்டுப் பெறுகிறார். ஆனால் இப்படி அரசிடம் பெற பட்ட நிலங்களை உயர்சாதி ஆட்கள் நாளடைவில் பிடுங்கிக் கொள்கின்றனர். இவர்கள் யார் என்று பார்த்தால் சிரியானி கிருத்துவர்கள். உண்மையில் உயர் சாதி இந்துக்கள் மட்டுமல்ல , கிருஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் கூட இந்த மக்களை ஒடுக்கினர்.
அய்யன் காளி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒன்றான புலையர் சமூகத்தை சேர்ந்தவர் . அந்த சமூகம் கேரளத்தில் மிக ஒடுக்கப்பட்ட ஒன்று. என் சிறுவயதில் இந்த சாதி பெயர் வைத்து ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தைகளைக் கூடக் கேட்டிருக்கிறேன் . அடிமைகளாக ,நிலமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் இருந்து எழுந்து வந்தவர் அய்யன் காளி. அடிமை, தீண்டத்தகாதவன் எனும் நிலையில் இருந்து அந்த மக்களை எழச் செய்தவர்.
2.
நான் முதலில் அய்யன் காளி பற்றி அறிந்தது ஜெயமோகன் எழுதிய மெல்லிய நூல் எனும் சிறுகதை வழியாக. எனவே இயல்பாகவே அய்யன் காளி பற்றி யோசிக்கும் போது காந்தியும் மனதில் வந்து விடுகிறார். இருவருக்கும் உள்ள ஒரு போலான குணாதிசியங்கள் என சிலவற்றை இந்த நூல் வாசிக்கும் பொழுது கண்டு கொள்ள முடிகிறது . அதில் முக்கியமானது எதிர் தரப்பு மீது வெறுப்பு இல்லாதது. ஒரு சம்பவம் இந்த நூலில் சொல்லப்படுகிறது. இவர் ஶ்ரீ மூலம் மக்கள் சபையில் சேர விரும்பி திவானைக் காணச் செல்கிறார். இவரது சாதி காரணமாக வாயில் காவலர்கள் இவரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து விடுகின்றனர். பிறகு இந்த நிகழ்வு பற்றி அறிந்து திவான் காளியை வர வைக்கிறார், அவரை தடுத்த ஆட்களை அழைத்து அவரிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார், ஆனால் அய்யன் காளி அவர்கள் மீது தனக்கு கோபம் இல்லை என்கிறார். இந்த குணம் திவானுக்குப் பிடித்து விடுகிறது .
அய்யன் காளி தன் மக்கள் முன்னேற்றத்தை விரும்பும் உயர்சாதி ஆட்கள் எல்லோரிடமும் நட்பு கொள்கிறார். அவர்கள் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை பயன்படுத்திக் கொள்கிறார். நல்ல உள்ளம் படைத்த பல உயர்சாதி தலைவர்கள் அவருக்கு நண்பர்கள் ஆகின்றனர். எதிர் தரப்பு மீது வெறுப்பு இல்லாத அய்யன் காளியின் குணம்தான் அவருக்கு எதிர்தரப்பில் இருந்து கூட நண்பர்களைப் பெற்றுத் தருகிறது . காந்தியின் முதன்மை இயல்பும் இதுதான் .
தனது சமூக நபரை காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து குழுவாகச் சென்று அவரை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார். கோரிக்கை மறுக்கப்படுகிறது. காளி அங்கிருந்து செல்லாமல் காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து, கைது செய்யப்பட்டவரை விடுவிக்கும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்கிறார். மறுநாள் விடுவிக்கப்பட்ட பிறகே செல்கின்றனர். இந்த நூலின் ஆசிரியரான நிர்மால்யா இந்தியாவின் முதல் சத்தியாகிரக போராட்டம் இது என்கிறார்.
நிர்மால்யா இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கான அமைப்பை முதலில் உருவாகியவரும் அய்யன் காளிதான் என்கிறார். அய்யன் காளி வைத்த கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்பது. அவரது சமூகம் மொத்தமும் விவசாயத்தில் தான் இருந்தது. எனவே விவசாயிகளின் கோரிக்கைக்கான போராட்டங்களை முன்னெடுத்தது இயல்பான ஒன்று .
தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை ஶ்ரீ மூலம் மக்கள் சபையில் இருந்திருக்கிறார், தொடர்ந்து தன் மக்களுக்கு வேண்டியதை முன்வைத்து அதில் வெற்றிகள் அடைந்து இருக்கிறார். அரசிடம் கோரிக்கைகள் வைக்கும் போது முந்திய கோரிக்கை நிறைவேற்றங்களுக்கு நன்றிகள் சொல்லியே ஆரம்பிக்கிறார். சாத்வீக ரீதியாக அரசிடம் கோரிக்கைகள் வைப்பது, அதை தொடர்ந்து வலியுறுத்திப் பெறுவது எல்லாம் காந்திய இயல்புகளுக்குள் கொண்டு வரலாம். அய்யன் காளி இவ்வகை வாய்ப்புகள் எதையும் தவற விட வில்லை .
3 .
சமகாலத்தில் தமிழகத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளில் முக்கியமானது என விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சொல்லலாம். இதன் பெயர் மற்றும் அதன் முக்கிய சொல்லாடல் ( அடங்க மறு, அத்துமீறு) எல்லாம் சற்று முரட்டுத் தொனியில் இருக்கிறது . அதற்கான நியாயங்கள் அவர்களிடம் உண்டு என்றாலும் கூட இந்த முரட்டுத் தன்மையை முன்வைக்கும் இயல்பு இதில் இருக்கிறது . ஆனால் அய்யன் காளி உருவாக்கிய அமைப்பின் பெயர் சாது ஜன பரிபாலன சங்கம். இதில் சாது எனும் வார்த்தை அப்பாவிகள் அல்லது மென்மையானவர்கள் அல்லது மூர்க்கமற்றவர்கள் அல்லது சாதுவானவர்கள் என்ற அர்த்தத்தை தருகிறது. அதாவது அய்யன் காளி எதிர்தரப்பிடம் சண்டை இட வர வில்லை, தங்களுக்கான நியாயமான இடத்தை அடைவதை மட்டுமே பெற வருகிறார் !
அவரிடம் இருந்த இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம் தன்னை யாருக்கும் ஈடானவனாக முன்வைக்கும் இயல்பு. தங்கள் குழுக்கென ஒரு வில்லு வண்டியை உருவாக்குகிறார், அது உயர்சாதியினர் பயன்படுத்தும் வில்லுவண்டிக்கு ஈடான ஒன்றாக இருக்கிறது. மக்கள் சபையில் இடம் கிடைத்ததும் நல்ல உடைகள் தைத்து அணிந்து செல்கிறார் . தலைப் பாகை, கடுக்கன், நீண்ட கோட் என தனது தோரணையை கம்பீரத்துடன் வெளிப்படுத்துகிறார். மேலும் தன் மக்களையும் அவ்வாறு இருக்க வைக்கிறார். உதாரணமாக அந்த காலங்களில் புலையர் பெண்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் கற்கள் கோர்த்த ஆபரணங்கள் அணிந்தனர், இவைகள் இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதை காட்டும் குறியீடுகளாக இருந்தது. அய்யன் காளி இவற்றை அணிய வேண்டாம் என்று தடுத்தார் .
அய்யன் காளி தனது போராட்டங்களில், கூட்டங்களில் உயர்வகுப்பை சேர்ந்த தலைவர்களை பங்கெடுக்க வைத்தார், விருந்தினர்களாக வர வைத்தார். காளிக்கு தன் இன மக்களின் முன்னேற்றத்திற்கு பிற வகுப்பு மக்களின் பங்களிப்பின் ஏற்பின் அவசியமும் தேவை என்ற புரிதல் இருந்தது .
4 .
இந்த நூலை வாசிக்கும் போது சமூகம் பற்றிய நிறைய புரிதல்கள் கிடைக்கின்றன . ஒரு உதாரணம் புலையர் குழந்தைகள் படிப்பதற்கு சேர்க்க முயற்சிக்கும் போது அதற்கு எதிராக கலவரம் நடக்கிறது, ஆனால் அந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் அனைவரும் சமூகத்தில் மதிப்பற்ற ரவுடிகள், இந்த ரவுடிகள் தான் தனது சமூகத்திற்காக கலவரங்களை நடத்துகிறார்கள் !
இன்னொன்று உயர்சாதி என்று ஒட்டுமொத்தமாக சொல்கிறோம். ஆனால் புலையர்கள் படிக்கக் கூடாது என்று கலவரத்தில் ஈடுபட்டவர்களில் அவர்களுக்கு சற்று மேலே இருந்த ஒடுக்கப்பட்ட சமூகமான ஈழுவர்களும் இருந்தார்கள். உண்மையில் அவர்கள்தான் புலையர்கள் கல்வி பெற்று விடக் கூடாது என்று மூர்க்கமாக செயல்பட்டார்கள். நாராயண குரு கலவரத்தில் ஈழுவர்வர்கள் ஈடுபட்டார்கள் என்பதை அறிந்து அவர்களைக் கண்டிக்கிறார். அய்யன் காளி மக்கள் சபையில் பேசும் பொழுது தங்களுக்கு கல்வி கிடைக்க கூடாது என்று நினைப்பவர்கள் படித்தவர்கள் அல்ல படிக்காதவர்கள் என்று மறைமுகமாக ஈழுவர்களை சுட்டிக் காட்டுகிறார். மேலும் மக்கள் சபையில் பேசும் பொழுது புலையர்களை அதிகமாக கொடுமை படுத்துவது உயர்சாதிகள் அல்ல, அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஈழுவர்களே என்கிறார். இந்த நூலில் புலையர் சமூகத்தில் இருக்கும் உட்பிரிவுகள், அவர்களது பழக்க வழக்கங்கள் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளது. அதைப் படிக்கும் போது கிடைக்கும் ஆச்சிர்யம் அதிகம்! அவர்களுக்குள்ளும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் கடுமையாக இருக்கின்றன. தீண்டாமைகள் இருந்திருக்கின்றன .
5 .
பழம்பெருமை வரலாறுகள் உருவாக்குவது சமகாலத்தில் முக்கியமான ஒரு செயல்பாடு. அயோத்தி தாசரில் இருந்து இது ஆரம்பிக்கிறது . உண்மையில் இங்கு எந்த ஒரு சமூகமும் முன்பு ஒருகாலத்தில் மேலான சமூகமாக இருந்து பிறகு வீழ்ந்திருக்கிறது, வீழ்ந்திருந்த சமூகங்கள் மேலே வந்திருக்கின்றது. இந்த நூலில் அப்படியான இடம் வருகிறது. ஞானஜோஸ்வா என்ற ஒருவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக வருகிறார். அவர் பறையர். ஆனால் அதை மறைத்து அந்த பதவிக்கு வருகிறார், பிறகு அவர் சாதி அறிந்து அவரை வஞ்சகமாக ஆற்றில் தள்ளி கொன்று விடுகிறார்கள், அவர் பண்டிதர், பழைய ஆவணங்கள், நூல்கள் வாசிப்பவர்கள். அப்படி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவணங்களை வாசிக்கிறார் ,அதில் ஒன்றை கண்டு கொள்கிறார் . புலையர் சமூகத்திற்கு செருமர் ( பேச்சு வழக்கில் ச்செரமமாரு என்பார்கள் ) என்ற பெயர் உண்டு. இவர்கள்தான் இந்த நிலையத்தின் மூதாதையர்கள் என்று அறிகிறார், செருமர்- சேரமர் -சேரர் என்கிறார், சேரர் என்பது ஒரு தனி இனம், பூர்வ குடிகள் என்று முன்வைக்கிறார். பிற்காலத்தில் வெளியில் இருந்து வந்தவர்களால் ஒடுக்கப் பட்டு கீழ்நிலைக்கு வந்தார்கள் என்கிறார். அதை அவர் ஒரு புலையர் தலைவரிடம் ( பாம்பாடி ஜோசப்) ரகசியமாக சொல்லி, அதை அந்த தலைவரின் அமைப்பு வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார் !
பொதுவழக்கில் இருக்கும் சாதியின் பெயரை மாற்றிக் கொள்வது வழியாக புதிய பார்வையை அடைய முயற்சிக்கும் அணுகுமுறை அப்போதே இருந்திருக்கிறது . இதே ஞானஜோஷ்வா பறையர் சமூக தலைவர்கள் வழியாக தங்களை சாம்பவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று சொல்லி அரசிடம் கோரிக்கை வைக்க வைக்கிறார், அந்த கோரிக்கை ஏற்கப் படுகிறது. சில புலையர் தலைவர்கள் தங்கள் சாதியின் பெயரை சேரமர் என்று வைக்க வேண்டும் என்று முன்வைத்தார்கள் !
இந்த நூலின் இறுதிப் பகுதியில் கேரளம், திருவாங்கூர் பகுதிகளில் வாழ்ந்த ஒடுக்க ப்பட்டவர்களுக்கு தொண்டாற்றிய தலைவர்கள் பற்றிய விரிவான அறிமுக குறிப்புகள் கிடைக்கிறது. அவர்களைப் படிக்கும்போது மனம் அவர்களை வணங்குகிறது. அதில் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல , பிற சாதிக்காரர்களும் இருக்கிறார்கள் !
இந்த நூல் வாசித்து முடித்ததும் அய்யன் காளியின் வரலாறு திரைப்படமாக வர வேண்டும் என்ற எண்ணம் உருவானது . மக்களிடம் உதாரண புருசராக சென்றடைய வேண்டியவர் அவர் .
அய்யன் காளி மதம் மாற வில்லை, இந்து மதத்திலேயே தன் மக்கள் உயர்வினை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தார், அ தை அடைந்தார் !
இந்து மதத்தில் சாதிய கொடுமைகள் இருப்பினும் அதில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்று விரும்பிய இந்து துறவிகளும் இருந்தார்கள், அவர்கள் அய்யன் காளிக்கு உதவினார்கள், முக்கியமாக தைக்காடு அய்யாவு சாமிகள், காளியை மக்கள் சபைக்கு செல்ல அறிவுறுத்தியது அவர்தான். இன்னொருவர் சதானந்தா சாமிகள், காளிக்கு மிக உறுதுணையாக இருந்தார் .