எழுபதுகளின் முற்பகுதியில் கல்லூரி நூலகத்தில் தற்செயலாக வாசிக்க நேர்ந்த தீபம், கணையாழி, இதழ்கள் என்னைக் கவர்ந்தன. எனது தொடக்கக்கால இலக்கிய ரசனையை உருவாக்கியதில் அவ்விரு இதழ்களுக்கும் பங்குண்டு. ‘தீபம்‘ இதழில் பிரசுரமான நாஞ்சில் நாடனின் ‘விரதம்‘ கதையை வாசித்தது இப்பவும் எனக்கு நினைவில் உள்ளது. அன்று நாஞ்சில் நாடன் என்ற பெயர் சுவாரசியத்தைத் தந்தது. நெற்றியில் திருநீறு பூசியிருந்தால் மதிய உணவு சாப்பிட்டாகி விட்டது என்று அர்த்தம் தரும் அக்கதை வேடிக்கையாக இருந்தது. இப்படியொரு பழக்கம் தமிழகத்தில் நிலவுகிறதா என்ற சந்தேகமும் எனக்குள்தோன்றியது. அப்புறம் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல். தொடர்ந்து நாஞ்சில் நாடனின் எழுத்துகளை வாசித்தாலும், அவரை நேரில் பார்க்க இயலாத நிலை. அவர் பம்பாயில் வாசம் எனக் கேள்விப்பட்டேன். 1985இல் திருவனந்தபுரம், சாலைக் கடைத் தெருவில் எழுத்தாளர் ஆ.மாதவனைப் பார்க்கப் போயிருந்தபோது, அவரது கடையில் நாஞ்சில்நாடனைத் தற்செயலாகப் பார்த்தேன். அறிமுகமானபோது மிகக்குறைவான பேச்சு. ஆள் இறுக்கமானவர் என நினைத்துக்கொண்டேன். என்றாலும் ‘மிதவை’ நாவல் தொடங்கி அவருடைய புனைகதைகளையும் கட்டுரைகளையும் விருப்பத்துடன் வாசிப்பது தொடர்ந்தது.
நாஞ்சில்நாடன் அறிமுகமான எழுபதுகள், தமிழைப் பொருத்தவரையில் சிறுகதை உலகின் உச்சம் என்று சொல்ல முடியும். என்ன மாதிரியான இலக்கிய ஆளுமைகள்? திடீரென விதம்விதமான முறையில் வெளியான சிறுகதை தொகுப்புகள். வண்ணமயமாக ஜொலித்தன. வண்ணநிலவன், பிரபஞ்சன், கோ.ராஜாபுரம், வண்ணதாசன் அஸ்வகோஷ், ஜெயந்தன், பா. செயப்பிரகாசம், பூமணி, சா.கந்தசாமி, நாஞ்சில்நாடன், ஆதவன், அம்பை எனப் பட்டியல் இன்னும் நீளும். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்ட படைப்பாளர்களின் ஆக்கங்கள் வாசிப்பினில் புதிய அனுவபங்களைத் தந்தன. ‘பறவைகள் பலவிதம்’ என்பது போல ஒவ்வொரு சிறுகதை ஆசிரியரின் முதல் தொகுப்பு நூலும், தமிழ்ச் சூழலில் பரபரப்பையும் பேச்சுகளையும் உருவாக்கின. இத்தகைய பின்புலத்தில்தான் நாஞ்சில்நாடனின் புனைகதைகளைப் பொருத்திக் காண வேண்டும். அப்பொழுதுதான் அவருடைய இலக்கிய ஆளுமை புலப்படும்.
‘நாஞ்சில் நாடு’ என்ற பிரதேசத்தை உலகுக்கு அறிமுகம் செய்த நாஞ்சில்நாடனின் எழுத்துகளை மேலோட்டமாக வாசிக்கும்போது, அவர் ஒரு குறுகிய பிரதேசத்திற்குகள் உழல்கிறவர் எனத் தோன்ற வாய்ப்புண்டு. இரண்டரை தாலுகா பரப்பளவான நிலப்பரப்பினை நாஞ்சில் நாடு எனப் பெயரிட்டு அதற்கெனத் தனித்த அடையாளத்தைத் தர முயலும் நாஞ்சில் நாட்டுக்காரர்களைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. எனக்கு ஏன் ‘பாண்டி நாட்டுக்காரன்’ எனப் புத்தியில் உறைக்கவில்லை, என்று. ம்.. போகட்டும் நாஞ்சில் நாடு என்ற பெயரில் என்ன இருக்கிறது? எல்லாம் ஒருவகையான அடையாளம்தான். அதனால் யாருக்காவது பெருமையும் மகிழ்வும் ஏற்பட்டால் நல்லதுதானே?
கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இடைவிடாமல் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதிக் கொண்டிருக்கும் நாஞ்சில்நாடனின் படைப்புகளின் எண்ணிக்கை நூறுக்கு மேலிருக்கும். காலம் அவரது எழுத்தின்மீது தென்னை மரத்தின் வடுக்கள் என ஆழமாகப் பதிந்துள்ளது. நாஞ்சில்நாடனை அறிந்துகொள்ள அவருடைய எழுத்துகள் முழுவதையும் வாசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசாவா சொன்ன “ஒருவனின் படைப்பைக் காட்டிலும், அவனை அதிகமாகச் சொல்லக்கூடியது எதுவுமில்லை” என்பது துல்லியமான உண்மை. என்றாலும் நவீன உலகின் நெருக்கடியான சூழலில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய தொகுப்பினை வாசிப்பது சராசரி வாசகரால் இயலாத செயல். காட்சி ஊடகங்களின் பரவலும் ஊடுருவலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, வாசிப்புப் பழக்கம் இன்று மெல்லக் குறைந்து வருகிறது. இத்தகு சூழலில் நாஞ்சில்நாடன் போன்ற இலக்கியச் சாதனையாளரை இளந்தலை முறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
விளிம்பு நிலையினரின் வாழ்க்கையைப் பதிவு செய்வதன் மூலம் மையத்தில் உறைந்திருக்கும் அதிகாரத்தின் சமனிலையை இழக்கச் செய்வது நவீன எழுத்தின் முதன்மையான அம்சம் என்று பின் நவீனத்துவம் முன்னிலைப்படுத்துகிறது. பால், சாதி, மொழி என அடக்கியொடுகப்பட்டவர்களின் குரல்களைப் பதிவாக்குவது இன்றைய தேவை என்பதை மறுப்பதற்கில்லை. இன்னொருவகையில் சொன்னால் பொறாமை, வன்மம், குரோதம், வன்முறை, இழிவுபடுத்துதல் போன்ற அற்ப விஷயங்களை முதன்மைப்படுத்தி எழுதுவது முக்கியம் என்ற கருத்து பரவலாகியுள்ளது. மனித இருப்பின் கேவலத்தையும் பொறுக்கித்தனத்தையும் புனைவாக்குவது வலுவடைந்துள்ளது. இத்தகைய போக்குகளை நாஞ்சில்நாடனின் புனைகதைகள் எங்ஙனம் எதிர்கொள்கின்றன என்பது முக்கியமான கேள்வி.
நாஞ்சில்நாடனின் எந்தவொரு கதையிலும் மனிதகுலத்துக்கு விரோதமான அம்சங்களைச் சிறிய அளவிலும் காணவியலாது. எத்தகைய நெருக்கடியிலும் சிக்கலிலும் மாட்டிக்கொள்ள நேர்ந்தாலும் கசப்பும் துயரமும் எல்லாப் பக்கங்களிலிருந்து பொங்கி வழிந்தாலும் அவருடைய படைப்புகள் மனிதகுல மேன்மை குறித்து மட்டுமே அக்கறை கொள்கின்றன. அதிகாரம், வன்முறை கட்டமைக்கும் எல்லாவிதமான இக்கட்டுகளையும் தகர்த்து, மனித வாழ்வின் உயர்வு குறித்து அக்கறை கொள்ளுதல் என்பது நாஞ்சில்நாடனிடம் இயல்பாகவே பொதிந்துள்ளது. இன்னும் சொன்னால், ஒருவகையில் அறச் சீற்றமும் சிறுமை கண்டு பொங்கும் மனநிலையும் புனைகதைகள் வழியே வெளிப்படுவதை அவதானிக்க முடியும்
நாஞ்சில் நாடன் புனைகதைகள் எனில், நாஞ்சில் நாட்டு வெகள்ளாளர் வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் இயல்புடையன; கிராமத்து மக்களின் பிரச்சினைகளைப் பதிவாகியுள்ளன என்ற கருத்து நிலவுகிறது. அதில் ஓரளவு உண்மை உண்டு. புலம் பெயர்ந்தநிலையில் மும்பையில் வாழ நேர்ந்திடும் தமிழர் பற்றிய பதிவுகளும் சில கதைகளில் பதிவாகியுள்ளன. கிராமத்து மக்கள் பற்றிய கதைகள் என நாஞ்சில்நாடனின் கதைகளை ஒதுக்கிட இயலாது. பெரிய நிலவெளியில் தனித்த அடையாளங்களும் வாழும் மக்களின் நல்லதும் கெட்டதும் அளவற்றவை. உணவு தொடங்கிச் சமூக மதிப்பீடுகள் தனித்துவமானநிலையில், அவை புதிய சொல்லாடல்களை உருவாக்குவதற்கான அடித்தளமாக விளங்குகின்றன.’வட்டார வழக்கு’ என்று குறுக்கிட முடியாத நிலையில் பேச்சு மொழி உயிரோட்டமானதாக உருமாறுகிறது. பரஸ்பரம் தொடர்பினை உருவாக்கும் பேச்சுகள்’ வாழ்வின் ஆதாரமாகும். இத்தகைய பேச்சு மொழியினை எழுத்து மொழியாக உருமாற்றும்போது குறிப்பிட்ட சமூகத்தின் பண்பாட்டுப் பேச்சுகள் இலக்கியப் படைப்புகளாகின்றன. நாட்டார் தொன்மங்கள், புராணக் கதைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், விடுகதைகள், புதிர்கள் போன்றன அழகியல் வெளிப்பாட்டுடன் படைப்பாகும்போது அவை வாழ்க்கை குறித்துக் கேள்விகளை எழுப்புகின்றன. படைப்பாளி தான் பிறந்து வளர்ந்த நிலத்தின் எழுத்துமீது அக்கறை கொகள்ளும்போது, அவை சமூக வரலாற்றின் எழுத்தாகவும் பண்பாட்டுப் பதிவுகளாகவும் விளங்குகின்றன. மிகக்குறைந்த தேவைகளுடன் வாழும் கிராமத்தினர் எளிய கிராமம் பற்றி எளிய மொழியில் விவரிக்கும் நாஞ்சில்நாடனின் கதைப்பிரதிகளுக்குள் என்ன வகையான சாத்தியப்பாடுகள் உகள்ளன என்பது முக்கியமான கேள்வி. நாஞ்சில்நாடனின் புனைகதைகளுக்குகள் பொதிந்துள்ள நுட்பங்கள், நிலமும் வெளியும் சார்ந்தவை எனப் பொதுவாக அடையாளப்படுத்தலாம்.
கதை வெளிப்பாட்டு முறையைப் பொருத்தளவில் நாஞ்சில்நாடனுக்குப் பெரிதும் அக்கறை இல்லை. வடிவரீதியில் புதிய முறையில் கதை சொல்வதிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. புதிய இசங்களும் கோட்பாடுகளும் பூமியில் படரும் பருந்தின் நிழல் போல நவீனத் தமிழிலக்கியப் பரப்பினைப் பற்றிப் படர்ந்தபோதும் அவர் தனக்கென வகுத்துக்கொண்ட வழியில் மன உறுதியுடன் நடக்கிறார். எல்லோருடைய கண்களிலும் சாதாரணமாகத் தென்படும் காட்சிகள், அவரைப் பொருத்தவரையில் கதைகளாக வடிவெடுக்கின்றன. முடிவற்ற கதைகளின் உலகில் சஞ்சரிக்கும் நாஞ்சில்நாடனுக்குச் சொல்வதற்கு இன்னும் நிரம்பக் கதைகள் உள்ளன. வெறுமனே சம்பவங்களின் சேர்க்கை அல்லது நிகழ்வுகளின் தாக்கம் பற்றிய பதிவுகளைச் செய்வது அவருக்கு நோக்கமல்ல. கதைகளின் வழியே அவர் கண்டறிய முயலும் அல்லது உணர்த்த விரும்பும் விஷயங்கள்தான் முக்கியம். எவற்றைத் தேர்ந்தெடுத்துப் படைப்பாக்குவது என்று கறாரான திட்டத்துடன் எழுதிக் கொண்டிருக்கும் நாஞ்சில்நாடன் இயல்பிலே ஒரு கதைசொல்லி. இதனால்தான் ‘நாஞ்சில் நாடு’ என்று குறுகிய நிலப்பரப்புக் குறித்துச் சொல்வதற்கு இன்னும் நிரம்பக் கதைகள் அவரிடம் உள்ளன.
படைப்பாளன் என்றாலே நினைவுகளின் வழியே இயங்குகிறவன் என்று சொல்ல முடியும். இளமைப் பருவத்தில் தான் வாழ்ந்த சூழல் தன்னைப் பாதித்த சம்பவங்கள் மனிதர்கள், விலங்குகள், அமானுட சக்திகள் எனத் தனிப்பட்ட நிலையில் பதிவாகியுகள்ளவை ஒருபோதும் வற்றுவதில்லை என்பது ஆச்சரியம்தான். தனது பொருளியல் தேவைக்காக மும்பையில் பணியாற்றியதுடன் வட இந்தியாவில் குறுக்கு நெடுக்கிலும் அலைந்து திரிய நேர்ந்தாலும் நாஞ்சில்நாடனின் நினைவுகள் வழியே எப்பொழுதும் அடை காக்கப்படுவது நாஞ்சில் நிலம்தான். யதார்த்தமான நிலையில் மரபு வழிப்பட்ட கதைசொல்லியான நாஞ்சில் நாடனின் புனைவுகள் சங்கிலி பூதத்தினையும் சுடலை மாடத்தினையும் சுற்றிச் சுழல்வது தற்செயலானது. அல்ல. கும்ப முனியை முன்னிறுத்திப் பகடியாகப் புனைந்துரைக்கும் கதைகளின் வழியே சித்திரிக்க முயலுவது. நடப்பு வாழ்க்கையின் மீதான ஆழமான கேள்விகள்.
கதை சொல்லல் முறையிலும் சொற்களைத் திருகி இறுக்கமான நடைமுறையிலும் நாஞ்சில்நாடனுக்கு நம்பிக்கை இல்லை. கதையைச் சொல்ல முனையும்போது கதையுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்களையும் ஆர்வத்துடன் விவரிக்கிறார். சிறுகதை என்பது பந்தயக் குதிரை போல தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே சீராக ஓட வேண்டும். ஒரு சொல் சேர்க்கவோ அல்லது நீக்கவோ கூடாது என்ற இலக்கணத்தினைப் புறந்தள்ளிவிட்டுக் காப்பியப் போக்கில் கதைப்பது, பல கதைகளில் இயல்பாக நடந்தேறியுள்ளது. பண்டைத் தமிழ இலக்கியத்தின் மீதான ஈடுபாடு காரணமாகப் பல மரபிலக்கியத் தொடர்களைப் போகிற போக்கில் நவீனக் கதை சொல்லலுக்குப் பயன்படுத்தியுகள்ளார். அவை ஒருநிலையில் புனைகதைகளுக்குப் புதிய பரிமாணங்களைத் தருகின்றன. மேலும் கதைப்போக்குடன் வாசிப்பின் வழியே உருகி இணைந்துவிடாமல் வாசகரைத் தடுக்கும் பணியையும் நுட்பமாகச் செய்கின்றன. புனைகதையின் மையப் புகள்ளியிலிருந்து பிரியும் விவரணைகள், கதைப்போக்கினை வெவ்வேறு தளங்களுக்கு விரிப்பது, அவருடைய கதைகளின் தனித்துவமாகும்.
நாஞ்சில்நாடன் சித்திரிக்கும் கிராமம், காட்சிக்கு எளியதாகவும் வெளிப்படையாகவும் உகள்ளது. அதேவேளையில் கதையில் விடுபட்ட பகுதிகள் மூலம் மூடுண்ட அமைப்பாகவும் இருக்கிறது. கதைசொல்லியின் வழியே வாசகர் எட்டிப் பார்க்கும் வெளியும் காலமும் பரந்திருக்கின்றன. எளிதாகப் புலப்படக்கூடியது என்று நினைக்கும்போது ரகசியமான பல்வேறு நிகழ்வுகள், சூட்சுமமாக நடைபெறுகின்றன. கிராமத்தின் வெளி என்பது புலன்களால் ஊகித்தறியப்படாமல் ரகசியங்களால் நிரம்பியிருக்கிறது. 1975இல் நாஞ்சில் நாடன் எழுதிய ‘விரதம்’ கதை, சின்னத்தம்பியாள்ளையின் விரத கால அனுபவம் அவ்வளவே. பிள்ளை, குளித்துவிட்டு நெற்றியிலும் உடலிலும் நீரால் குழைக்கப்பட்ட திருநீறுடன் மகள்கள் வீட்டிற்குச் சாப்பிடக் கிளம்புகிறார். அவருடைய இரு மகள்களும் ‘திருநீறு’ காரணமாக ஏற்கனவே அவர் சாப்பிட்டு விட்டார் எனக் கருதுகின்றனர். சொந்த மகள் தானே வாய் விட்டு உண்மையைச் சொன்னால் என்ன? என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. அங்கு மனித இருப்பு என்பது பல்வேறு மதிப்பீடுகள் சார்ந்த நிலையில், பிள்ளையின் மனமும் ரகசியமாகி விடுகிறது.
‘பிணத்துக்கு முன் திருவாசகம் படித்தவர்’ கதையில் ஓதுவார், கிராமத்து வெளிகளில் அலைவுறும் உடல் அன்றி வேறு என்ன? சைவ சமயத்தின் ஆதாரமான தேவாரத்தைப் பரம்பரை பரம்பரையாக ஓதுகின்ற மரபில் வந்தவரின் பொருளியல் நிலை வளமற்று உள்ளது. இறக்கும் தருவாயில் இருக்கிறவர் முன்னால் ‘திருவாசகம்‘ வாசித்தால் அதைக் கேட்டவாறு அவர் சொர்க்கம் போவார் என்பது ஐதீகம். ஆனால் இறந்துபோன பணக்காரக் கிழவர் பிணத்தின் முன்னர் ‘திருவாசகம்‘ படிக்க முதலில் மறுக்கும் ஓதுவார், இறுதியில் வேறு வழியில்லாமல் உடன்படுகிறார். எல்லாவிதமான புனிதங்களும் மதிப்பீடுகளும் சிதைவடையும் காலகட்டத்தில் ஓதுவார் மட்டும் விதிவிலக்கா என்ன? வறுமையில் வாடும் ஓதுவாருக்குப் பிணத்தின் முன்னால் திருவாசகம் படிக்க நேர்ந்தது குமைச்சலாகவும் குற்ற மனப்பான்மையாகவும் உள்ளது. என்ன? இறுதியில் அவருக்குக் கிடைத்த ஆயிரம் ரூபாய் எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது. சைவமரபில் தேவாரம் ஓதுதல் என்று புனிதமாகக் கட்டமைக்கப்பட்ட செயல் நடப்பில் அர்த்தமிழப்பது ஓதுவாரின் மனவோட்டம் வழியாக வெளிப்பட்டுள்ளது. சிக்கலற்ற எளிய வாழ்க்கை எனத் தோன்றும் கிராமத்துப் பரப்பினூடே புழுங்கித் தவிக்கும் மனித உயிர்களின் வதை எங்கும் நீக்கமறப் பரவியுகள்ளது என்பதற்கான அடையாளம்தான் ஓதுவார்.
கிராமத்துத் தெருக்களின் வழியே நடக்கையில் அங்கே பல்வேறுவிதமான மனிதர்களைக் காணலாம். ஒற்றைத் தன்மைக்கு மாறாக வாழ்க்கை அங்கே கனன்று கொண்டிருக்கிறது. ‘நாட்டு மருந்து’ கதையில் இளம்வயதிலே முழுக் குடிகாரனாக மாறியவனின் சிதிலமான வாழ்க்கை பற்றிய விவரிப்பில் எதுவும் இனிமேல் செய்வதற்கில்லை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும். கிராமத்தினருக்கு ஏதோவொரு நிலையில் தொந்தரவு தந்துகொண்டு, எப்பொழுதும் போதையில் மிதந்து தனது உடலையும் மனதையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறவனைத் தொடர்ந்து கவனிக்கும் மருந்துக் கடை ஆசானுக்கு மட்டும் ஏன் மனதில் ‘பிசிறு’ தட்ட வேண்டும். அழுக்கடைந்து கண்றாவியாகத் தோன்றும் குடிகாரன், ஆசான் சொல்வது போல நடப்பதும், அவருடைய கடையிலே இருக்கிறேன் என்பதும் விளங்க முடியாத புதிர்கள். ஏன் ஒருவன் குடிகாரனாக மாறினான் என்பதற்கும், ஏன் அவன் அதிலிருந்து வெளியேறினான் என்பதற்கும் பருண்மையாகச் சொல்லக் காரணங்கள் எதுவுமில்லை. குடிகாரனின் மனதுக்குள் புதைந்திருக்கும் விழைவை யாரால் கண்டறிய முடியும். ஆசான் தற்செயல் சம்பவம். ஒவ்வொரு மனிதனும் இயல்பிலே அருமையானவன். எவ்வளவு சீரழிந்த நிலையிலும் பரிவான அரவணைப்பின் மூலம் அவனைக் கடைத்தேற்ற முடியும் என்ற பார்வை, நாஞ்சில்நாடனுக்கு உண்டு. சூறாவளிக் காற்றினூடாக விளக்கின் ஒளி, சுடர் விட்டு ஒளிரும் என்ற நம்பிக்கைதான் மனித இருப்பினை அர்த்தப்படுத்துகிறது.
‘அவன் உக்கிரமான சுடலை மாடன்’ கதையின் முற்பகுதியில் துடியான தெய்வமான மாடன் பற்றியும் அவன் வீற்றிருந்த சுடுகாட்டையொட்டிய தோப்புப் பற்றியும் நாஞ்சில் நாடன் தரும் விவரணைகள் கிராமத்தினரின் பார்வையில் விரிகின்றன. சுடலை மாடன் கொண்டாடியான பரதேசியா பிகள்ளை மீளும் வெள்ளிக்கிழமைகள், ஊரெங்கும் திகிலைப் பரப்பும் வல்லமைமிக்கன. சுடுகாடு கீழ்க்கரைக்கு மாற்றப்பட்டது ஒருபுறம். பரதேசியா பிள்ளை நொடித்துப்போய் அவருடைய பூர்வீகத் தோப்பும் அதில் வீற்றிருந்த சுடலை மாடன் கோவிலும் கைமாறின. இன்னொருபுறம், தோப்பை வாங்கியவர் மாடனைச் சுற்றிய மண்ணை அகற்றித் தென்னங்கன்றுகள் வைக்க, ஒரு நாள் பெய்த மழையில் மண் கரைந்துபோய் சுடலை கீழே சரிந்தது. அதியற்புதப் புனைவுகளின் வழியே புனையப்பட்ட சுடலையின் இருப்பிடம் என்பது உண்மையில் ஒவ்வொருவரின் மனதில்தான். சுடலை தனது கொண்டாடியான பரதேசியா பிகள்ளையின் பொருளியல் வாழ்க்கையைச் சீராக்காதபோது, அவனுடைய சிதிலமும் தொடங்கிவிட்டது. இருபத்தேழு நாட்டார் தெய்வங்களுக்கு அமைக்கப்பட்ட பீடங்களில் உறைவதாகக் கருதப்படும் தேவதைகள் தென் மாவட்டங்களில் பரவலாக உள்ளன. அவற்றில் ஒன்றான சுடலைமாடன் பற்றிய தொல்கதையை முன்வைத்து நாஞ்சில்நாடன் புனைந்திருக்கும் புனைகதைகள், நவீன உலகில் மனிதர்களுக்கும் சிறு தெய்வங்களுக்குமான உறவினைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. தலைமுறைகள்தோறும் வாய்மொழி கதைகள் மூலம் பீடங்களில் உறைந்திருக்கும் பூதங்களின் இன்றையநிலை பற்றிய விவரிப்பு, நாஞ்சில்நாடனின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் வேதனையின் வெளிப்பாடு என்று கருத வேண்டியுள்ளது. மரபு வழிப்பட்ட நம்பிக்கைகள், சூழலின் வெக்கையில் சிதைவடையும்போது, காலங்காலமாக ஆறுதல் வழங்கிய சிறு தெய்வங்களின் இடம் காலியாவது ஒருவகையில் துயரம்தான்.
1981இல் நாஞ்சில் நாடன் எழுதிய சுடலை கதை, இதுவரை கிராமத்து வெளியில் நம்பிக்கையாக உறைந்திருந்த மாடனின் இடம் சிதிலமாவதை வருத்தத்துடன் பதிவாக்கியிருந்தது. அண்மையில் நாஞ்சில் நாடன் எழுதியுள்ள அன்றும் கொல்லாது, கறங்கு ஏவல் போன்ற கதைகள் புதிய கோணத்தில் மாடனை அணுகியுள்ளன. கிராமத்தினரால் அதியற்புத ஆற்றல் எனப் பயத்துடன் வழிபட்ட நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒருபுறம் எனில், அக்கிரமம் செய்வதை இயல்பாகச் செய்கிற அரசியல்வாதிகள், பணக்காரர்களின் கொடூரச் செயல்களை ஒடுக்கிட விழைகிற மாடன்கள் இன்னொருபுறம் எனச் சுவாரசியமாக நாஞ்சில்நாடன் சொல்லியுள்ள கதைகள் தனித்துவமானவை. நாட்டார் மரபில் இனவரைவியல் தன்மையுடன் மாடன் என்ற தெய்வத்தை முன்வைத்து நாஞ்சில் நாடன் சொல்லியுள்ள கதைகள், சமகாலப் பிரச்சினைகள் குறித்த விமர்சனமாகவும் உள்ளன.
இயற்கை வளம் சூழந்த நாஞ்சில் நாட்டில் பல்வேறு உணவு வகைகளுடன் நிலத்தை மூலமாகக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் நெருக்கடி ஏற்பட்டுகள்ளது. நவீன வாழ்க்கை கோரும் வசதி வாய்ப்புகள் வேண்டி மும்பை போன்ற வட இந்திய நகரங்களுக்குப் புலம் பெயர்ந்திடும் நாஞ்சில் நாட்டு மக்கள் குறித்த நாஞ்சில் நாடனின் புனைவுகள் இன்னொரு வகைப்பட்டவை. திருமணம் ஆன நடுத்தர வயதினர் பொருளியல் நிலை காரணமாக ஓர் அறையில் சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் பற்றி, ‘அறைவாசிகள்’ புனைகதை நுட்பமாகப் பதிவாகியுள்ளது. ஆண்டிற்கொருமுறை மட்டும் ஊருக்குப் போய்வர அனுமதிக்கும் பொருளியல் நிலை, மும்பையில் தனியாக வீடு எடுத்துக் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழமுடியாத பண நெருக்கடி, பாலியல் வேட்கையுடன் தவிக்கும் உடல்கள் என இக்கட்டான சூழலில் வாழும் ஆடவரின் உலகம் துயரம்மிக்கது. நான்கைந்து பேர் சேர்ந்து வாழும் அறைக்கு, ஒருவரின் இளம் மனைவியும் மாமனாரும் ஊரிலிருந்து வந்தால் என்ன நிகழும் என்பதை நாஞ்சில்நாடன் கையறுநிலையில் விவரித்துள்ளார். பூமியில் சக உயிரினங்கள் ‘இது’ போலத் திண்டாட வாய்ப்பில்லை. கணவன் மனைவிக்கு இடையில் இயற்கையாக நடைபெற வேண்டிய உடலுறவுகூட பொருளியல் காரணமாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் சூழல். ஒருவகையில் சாபம்தான். நமக்கு ‘லபித்தது’ அவ்வளவுதான் என்ற புரிதலுடன் வாழ நேர்ந்திடும் வாழ்க்கை பற்றிச் சொல்ல என்ன உள்ளது?
மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்பதாவது தளத்தில் தனியாக வசிக்கிற எண்பத்தொன்று வயதான நாத்ரே திடீரென மரணமடைவதுடன் தொடங்குகிற சிறுகதையான ஆத்மா ஒருபோதும் வாசிப்பில் முடியவில்லை. இன்று இந்தியாவில் நகரங்களிலோ கிராமங்களிலோ தனித்து வாழ்கிற சூழலில் இருக்கிற பெரியவர்களைக் குடும்பம் ஏன் கைவிட்டது என்ற கேள்வி தோன்றுகிறது. பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிப்பதைத் தொந்தரவு எனக் கருதுகிற மனநிலையின் விளைவுகளை நாஞ்சில் நாடன் வலியுடன் பதிவாக்கியுள்ளார். இரு மகள்கள், ஒரு மகன் இருந்தாலும் ஒற்றையாக வாழுமாறு நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கை குறித்து நாத்ரேய்க்குப் பிராது எதுவுமில்லை. மனைவி இறந்த பிறகு தனித்து வாழ்கிற நாத்ரேயின் மனதின் இடுக்குகளில் உறைந்திருக்கிற ரகசியங்களைச் சொல்வதற்குக்கூட யாருமில்லை. நாத்ரே பற்றி நாஞ்சில்நாடன் கட்டமைக்கிற பிம்பத்தின் வழியாக ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என்ற கேகள்விகள் முடிவற்று நீள்கின்றன. நாத்ரேய்க்கு நிகழ்ந்த துயரம் இனிமேல் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்ற ஆத்மா கதையின் முடிவு, கதைசொல்லி முன்னறிவிக்க விரும்புகிற செய்யா? யோசிக்க வேண்டியுகள்ளது.
’பெருந்தவம்’ கதையானது கிராமத்தில் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்குக் கிராமத்தினர் படுகிற பாடுகளைத் துயரமான மொழியில் விவரித்துள்ளது. மலையில் ஏறி மரச்சீனிக் கிழங்கு வாங்கி வந்து விற்கிற சிவனாண்டியின் கஷ்டத்தை விவரிப்பது மட்டும் நாஞ்சில்நாடனின் நோக்கமல்ல. கள்ளுக்கடை வாசலில் சாக்னாக் கடை போட்டிருக்கிற சுப்பையா அண்ணாச்சி, பத்தாவது படிக்கிற சிவனாண்டியின் மகனான குமராண்டியைக் கிழங்கு வியாபாரத்தில் சேர்த்துக்கொள்ள ஆலோசனை சொல்கிறார். கடைசி வரிகள் கதைசொல்லலை வேறு ஒன்றாக மாற்றுகின்றன. அடுத்த நாள் காலை சிவனாண்டியும் அவரின் மகன் குமாரண்டியும் மரச்சீனி வாங்கப் போனார்களா? குமராண்டி போகவில்லை. போயிருந்தால் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கிற வாய்ப்பு இருந்திருக்காது. கதைசொல்லியின் வாக்குமூலமாகப் பதிவாகியுகள்ள வரிகள், திடீரென நாஞ்சில்நாடனின் சொந்தக் கதை என்று நம்புகிறநிலையை வாசிப்பில் ஏற்படுத்தியுகள்ளன. அப்படியில்லாமல் இருக்கச் சாத்தியமுண்டு. யதார்த்த வாழ்க்கையில் வறுமையின் காரணமாக இளம்வயதிலே கடின உழைப்பில் ஈடுபடுவதிலிருந்து தப்பித்த இளைஞர்கள் பலரின் வாழ்க்கை அனுபவங்களின் வகை மாதிரி எனவும் கருத இடமுண்டு.
‘நள்ளென்று ஒலிக்கும் யாமம்’ கதை கிராமம் பற்றிய இன்னொரு சித்திரம்.நள்ளிரவுவேளையில் ஊருக்கு வெளியில இருக்கும் தோப்பில் தேங்காய் திருடிக்கொண்டிருக்கும் திருடர்கள் பற்றி ஊராரிடம் தகவல் தெரிவிக்கப் போனவனுக்கும் திருடர்களுக்குமான உறவாகக் கதை விரிகிறது. ஒருவகையான பகடி, கதைக்குகள் பொதிந்துள்ளது. குற்றத்தைத் தடுக்க விழைந்தவன், இறுதியில், திருடர்களிடமிருந்து இரு இளநீர்கள் வாங்கிக் குடிக்கிறான். ‘களவு’ பற்றிய மரபு வழிப்பட்ட தமிழ் மனோபாவத்தில் இக்கதையை வாசித்தால் வேறுவகையான அர்த்தம் புலப்படும். கள்ளிரவு, திருடர்கள் என்ற மர்மப் புனைவுகளுக்கு அப்பால் ஒளிந்திருக்கும் வாழ்வின் யதார்த்தத்தைப் பரபரப்பும் நகைச்சுவையும் கலந்த தொனியில் நாஞ்சில்நாடன் கதையாக்கியுள்ளார்.
நாஞ்சில்நாட்டினில் வாழும் கும்பமுனி என்ற வயதான எழுத்தாளரும் அவருடைய சமையற்காரரான கண்டிச்சாமி பிள்ளையும் எனச் சுழலும் கதைகள், எழுத்தின் வழியே சமூக இருப்பினைப் பரிசீலனை செய்ய முயலுகின்றன. தீவிரமான எழுத்து குறித்து அக்கறையுள்ள கும்பமுனியின் நோயுற்ற உடல்நிலையும், குசும்பான மனநிலையும் கதையின் பரப்பை வெவ்வேறு தளங்களுக்கு விரிக்கின்றன. எல்லாவற்றையும் பகடி செய்ய விழையும் நாஞ்சில்நாடனின் மனநிலை கும்பமுனியை முன்னிறுத்திப் புனைவான விரிகிறது எனக் கதைகளை வாசித்துப் பார்க்கலாம். “கடையூழிக் காலத்தில் எல்லாம் காலாவதியாகப் போகும் பார்த்துக்கிடும் சிவபெருமானே திருவாசகம் மாத்திரம் வச்சிருப்பானாம். கடேசி காலத்தில் ஒத்தையிலே இருக்கக்கிலே படிக்க கையடக்கமான கழக வெளியீடா வச்சிருப்பானோ, குறுந்தகடா வச்சிருப்பானோ? ஏன் சவம் மனப்பாடமா நிக்காதோ? திருவாசகம் படிச்சா நேரம் போகுமா வேய்? நேரம் நிக்கயில்லா செய்யும்” கும்பமுனியின் மூலம் நாஞ்சில்நாடன் செய்யும் பகடி, எல்லாவற்றையும் கவிழ்த்திப்போட முயலுகிறது. நவீனத் தமிழிலக்கியச் சூழலை நாஞ்சில் நாட்டுப் பின்புலத்தில் விசாரிக்க முயலுவது வேடிக்கைதான். ஒருவகையில் சமூக விமர்சகரான கும்பமுனியின் பூர்வீக வாழ்க்கை நிறைவேறாத காதலுடன் துயரம் தோய்ந்தது என்ற தகவல், கதைப்போக்கினை வேறு தளத்திற்கு மாற்றுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் விமர்சனமும் எள்ளலும் கலந்த கும்பமுனியின் கதைகள், நவீனத் தமிழிலக்கியம் குறித்த நாஞ்சில்நாடனின் சுய விமர்சனம் என்று கருத இடமுண்டு.
‘நாம் உண்போம்‘ என மராட்டியில் சொல்லி, கதைசொல்லியின் எச்சில் உணவில் கைவைத்த மராட்டியரான முதியவர் நாத்ரேயின் துயரம், அவல நாடகத்தின் உச்சம். ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என்ற கேள்விகளின் வழியே ‘யாம் உண்போம்‘ கதையை வாசிக்க வேண்டியுள்ளது.
உருது பேசும் முஸ்லிமான கான் சாகேபுடன் கதை சொல்லிக்கு ஏற்பட்ட அனுபவங்களின் கதையான ‘கான்சாகேப்’ செவ்வியல் தன்மையுடையது. இனம், மதம் மீறி மனித உள்ளங்களின் நெருக்கமும் மூச்சுக்காற்றும் அந்நியோன்யமானவை. ஆழமான நட்புக்கு இலக்கணமாக விளங்கும் கான்சாகேப் அவருக்குப் பாலியல்ரீதியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ரகசியமாக வாங்கிச் சாப்பிட்ட தங்க பஸ்பம், அவரது சிறுநீரகங்களைப் பழுதடையச் செய்கிறது. கான் சாகேபின் மரணம் ஏற்படுத்தும் துயரம், கதைசொல்லியிடம் இருந்து வாசகரிடமும் தொற்றிக்கொள்கிறது. இப்படியாக மனித வாழ்க்கை கட்டற்றுப் பெரிய ஆறாகப் பொங்குகிறது என்று நாஞ்சில்நாடன் சித்திரிப்பது வாசகரை யோசனையில் ஆழ்த்துகிறது.
அமானுஷ்ய சக்திகளின் ஆதிக்கம் கிராமத்து வெளியெங்கும் ஆழமாக ஊடுருவியுள்ளது. பூதங்களும், மாடன்களும் காலங்காலமாக மனித இருப்புடன் ஒன்றாகக் கலந்து விட்டனர். யோசிக்கும்வேளையில் அமானுஷ்யம் என்பதே மனிதனைச் சார்ந்தே வளர்ந்து வருகிறது. கிராமப் பரப்பில் ஏதோ ஓர் இடத்தில் பன்னெடுங்காலமாக உறைந்திருக்கும் அதியற்புத ஆற்றல்கள் இல்லையெனில் கிராமிய வாழ்க்கை சுவராசியப்படாது. ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் அட்டணைக்கால் போட்டுக் கம்பீரமாக அமர்ந்துள்ள மாடன்கள் பற்றிய பீதியினில் கிராமமே கொந்தளிப்பது, சிலவேளைகளில் நடைபெறுவது உண்டு. கால ஓட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த வீடு, அனுபவித்த நிலம் எல்லாம் கையைவிட்டுப் போகும்போது மாடன்களின் இருப்பிடம் மட்டும் நிலையாக இருக்க முடியுமா? அந்திவேளையில் திகிலைக் கிளப்பும் மாடன்களின் இருப்பிடம் ஆட்டங்காணும் வேளையில் கழிவிரக்கம் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.
1975ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாஞ்சில்நாடன் எழுதியுள்ள சிறுகதைகள், அவருடைய இலக்கிய வளர்ச்சியினை அடையாளப்படுத்துகின்றன. பின் நவீனத்துவக் காலகட்டத்தில் இலக்கியத்திற்கு அறிமுகமாகியுள்ள இளம் வாசகருக்கும் நாஞ்சில் நாடனின் புனைகதைகளில் இருந்து அறிந்துகொள்ள நிரம்ப விஷயங்கள் உள்ளன.
( உயிர் எழுத்து,2012)
மீள் பிரசுரம்.