கொரேனோ வைரஸ் தொற்றின் போது உலகமே முடங்கிப்போனதில் தமிழகம் மட்டும் விதிவிலக்கா என்ன? நான்கு மாத காலம் மக்களை வீட்டினுள் பதுங்க விட்டது. நடமாட்டமில்லாத வெறித்த தெருகள் . கார்கள்,பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் ஓடாத சாலைகள். விமானங்கள் பறக்காத வான்வெளி, பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாக நடமாடியதில் வியப்பில்லை. பக்கத்து வீட்டிற்க்குக் கூட போக முடியாத நிலையை சிருஷ்டித்தது. மனித வரலாற்றில் இப்படிப்பட்ட நிகழ்வு இனி நிகழுமா என்ற கேள்விக்கு சற்று தயங்கியே பதில் சொல்ல தோன்றும்.
வீட்டில் முடங்கியிருந்ததால் டிவி பார்ப்பதில் சலிப்பும் , மொபைல் போனில் சமூக வலைதளங்களில் உலாவி அங்கும் கொரோனா பற்றிய பேச்சும் சாவின் எண்ணிக்கை குறித்த உசாவல்களால் மேலும் மன உளைச்சலை தருவதால் படிக்க ஆரம்பித்திருந்தான் குருசாமி காலை உணவான வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு முன்பு வாங்கி படிக்காமல் வைத்திருந்த புத்தகங்களை எடுத்து தூசி தட்டி துடைத்து கொஞ்ச நேரம் வராண்டாவில் வாகனம் நிறுத்தும் இடத்தை அடுத்த சுற்று சுவரில் வெய்யில் படும்படி வைத்து சற்றே காய்ந்தவுடன் மொத்தமாக வீட்டிற்குள் எடுத்து வந்து படுக்கையறையில் தலைமாட்டிற்கு பக்கத்தில் வைக்கப் போய் எதிர்த்த மனைவியிடம் சண்டையிட்டு வெற்றி பெற்ற சந்தோசத்தில் கட்டிலின் சாயமானத்தில் சாய்ந்து படிப்பதே சுகமாயிருந்தது . பக்கத்தில் மகளும் பழைய சேமிப்பிலிருந்த காமிக்ஸ் புத்தகங்களை நச்சரித்து வாங்கி படிக்க ஆரம்பித்திருந்தாள். படுக்கையறையின் கிழக்கு புறமாக தலைவைத்து படுப்பதால் பின்புறமாக இருந்த ஜன்னலை திறந்தால் நல்ல வெளிச்சமும் காற்றும் வரும் மாலை வரை டியூப்லைட் வெளிச்சமில்லாமல் படிக்கலாம். காலை, நடுப்பகல் , பிற்பகல் மாலை என வெளிச்சம் மாறும் வர்ண ஜாலங்களை படிக்கும்போதே உணர,பார்க்க முடியும். பக்கத்தில் மொபைலை வைத்திருந்தாலும் எடுக்க சொல்லும் இன்னொரு மனதை அதட்டி மிரட்டி அதிலிலுள்ள ஆபத்துகளை மட்டும் பட்டியலிட்டு சமாதானம் செய்து வைத்திருந்தேன். மதியம் சாப்பிடும் வரைபடித்தேன் சாப்பிட்டு விட்டு விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன் எப்பொழுது தூங்கினேன் என தெரியவில்லை மொபைல் போன் அழைத்த போது மடியில் புத்தகம் சரிந்திருக்க அப்படியே தூங்கிப் போனதை உணர்ந்து வெட்கப்பட்டு அழைத்த போனை எடுத்தேன்.
அழைத்தது என் தாய் மாமனின் பெரிய மகள் வீணா
சொல்லுடி என்னா திடீர்னு போன் பண்ற
வீணாவின் குரலில் அழுகை தெரிந்தது
அத்தான் அப்பாவுக்கு உடம்பு முடியல போல எழுப்பி பாத்தேன் எழுந்திரிக்கவே மாட்ராரு எனக்கு பயமா இருக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க
என்னா சொல்ற எப்ப படுத்தாரு உடம்புல சூடு தெரியுதா? தொட்டு பாத்தியா?
வீணா அழுதபடி தொட்டு பாத்தேன் அத்தான் எனக்கு சொல்ல தெரியல என்னோட வீட்டுகாரரு தான் சந்தேகமா இருக்குன்னாரு
சரி அழுவாத நா புறபட்டு வந்துர்றேன் அதுக்கு முன்னாடி தெரிஞ்ச டாக்டர வரச் சொல்றேன்
வீணாவின் அழைப்பை துண்டித்து விட்டு எனது நண்பரது நண்பர் மயக்கமருந்து மருத்துவர் சரவணனின் எண்ணுக்கு அழைத்தேன் எனது தந்தை இதயத்தின் ஒரு வால்வு பழுதடைந்து படுத்த படுக்கையாக இருந்த போது அவர் தான் பார்த்து சொன்னது
கடைசி ரிங்கில் போனை எடுத்து விட்டார்
சொல்லுங்க குருசாமி என்ன செய்தி
சார் வணக்கம். தொந்தரவுக்கு பொறுத்துக்குங்க என்னோட தாய்மாமன் உடம்பு முடியாம இருக்காரு கொஞ்சம் பாக்கனும் சந்தேகமா வேற சொல்றாங்க வர முடியுமா?
இரண்டு வினாடி யோசித்தவர்
ம். வீடு எங்க என்ன வந்து கூட்டிட்டு போறீங்களா? நா அங்க வந்துரவா
நீங்க கெளம்பி இருங்க நா வந்து கூப்பிட்டு போய்ட்டு வந்து வீட்டுல விட்டுர்றேன்.
அருளானந்த நகர் மூன்றாவது தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு எனது இருசக்கர வாகனத்தின் மூலம் சென்றேன் பிரதான சாலையிலும் குறுக்கு சாலைகளிலும் யாருமில்லை ஹாலிவுட் பட பாணியில் நகரம் வெறுமையாக இருந்தது. அருளானந்த நகரில் வாழ்பவர்கள் பெரும்பாலும் மேல் தட்டு பணக்காரர்கள், மருத்துவர்கள், இரண்டு மூன்று பேருந்து வைத்திருப்பவர்கள். கட்சிக்காரர்கள் அப்பகுதி முற்றிலும் அமைதியாகவும் அதுவே பயங்கரமானதாக இருந்தது. மருத்துவர் சரவணன் ஸ்டெதஸ்கோப், BP பார்க்கும் பேட்டரியால் இயங்கும் எந்திரத்துடன் தயராக இருந்தார் . இருசக்கர வாகனத்தின் இருபுறமும் காலை போட்டு அமர்ந்தார் . இருவரும் புறப்பட்டு ரயில்வே லோபிரிட்ஜ் , நல்லய்யா காம்ளக்ஸ், ஆற்று பாலம், சர்க்கிட்டவுஸ் , வழியாக பாம்பாட்டி தெருவையடைந்து குறுக்கே புகுந்து மருதையாப்பிள்ளை தெருவை நெருங்கி தெருவினுள் நுழைந்து மூன்றாவது மின்கம்பத்தருகில் இருந்த தாய்மாமன் பன்னீர்செல்வத்தின் வீட்டையடைந்தோம். வரும் வழி எல்லாம் வாகனங்கள் பயணிக்காமல் மக்கள் நடமாட்டமில்லாமல் மயான அமைதியாக இருந்தது. எனக்கு தெரிந்து ஊரடங்கு , பந்த் நாட்களில் ஓரளவாவது மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து ஓரிரு தேநீர்கடைகளாவது திறந்து வியாபரம் நடந்து பார்த்திருக்கிறேன் , இது போல மக்கள் நடமாட்டமே இல்லாத தெருநாய்கள் , பறவைகள் மட்டும் தன்னிச்சையாக உணவுக்காக அலைவதை மட்டுமே பார்த்ததே இல்லை , மருத்துக்குக் கூட வெளியே மனித நடமாட்டமே இல்லைதை பார்த்த மருத்துவரும் நானும் ஆச்சர்யத்தில் மிதந்தோம்.
வீட்டின் முன்புறம் பெரிய அளவில் அஸ்பெட்டாஸ் கூரையும் உள் கூடம் பழைய ஓட்டு கட்டிடம் அதையொட்டி பத்துக்குபத்து படுக்கையறையும் பின்புறம் சிறிய தாழ்வாரமும் இடது புறம் சமயலறையும் படுக்கையறையும் இனைந்தும், சமயலறைக்கு இருபுறமும் பாதைகள் உண்டு நீண்ட கொல்லை புறமும் இருந்தது. கூடதின் வெளியே மாமாவின் பெரியமகள் | மருமகன், மாமியும் நின்றிருந்தனர் உள் கூடத்தில் இடது புற மூலையில் தாத்தா அம்மாச்சியின் படத்தி கீழே படுத்திருந்திருந்தார் மாமா
அருகில் மண்டியிட்டு அமர்ந்த மருத்துவர் சரவணன் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக் கொண்டு மார்புப்பகுதியில் வைத்து உற்று கவனித்தார் முகத்தில் மாற்றம் தெரியவில்லை. நான் கால்களை தொட்டு பார்த்தேன் நன்றாகவே சில்லிட்டிருந்தது. எனக்குள் சிறிய நடுக்கம் வந்து போனது . மருத்துவர் சரவணன் தலையாட்டி விட்டு அஸ்பெட்டாஸ் கூரையிருந்த முன்பகுதிக்கு வருமாறு சைகை செய்தார் போனதும்
குரு உயிர் போயி ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கும் மேல ஆகவேண்டியத பாருங்க என்றார்.
சரிங்க சார். வாங்க உங்கள வீட்டுல விட்டு வந்து மேற்கொண்டு செய்யுறத செஞ்சிடுறேன்.
அதற்குள்ளாக காதில் வாங்கிய மகளும் மாமியும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தனர் மருமகன் பாஸ்கர் மட்டும் என்னை நெருங்கி வந்தான்.
அண்ணே பணம் கொஞ்சம் இருந்தா குடுங்க பெறவு வாங்கிக்கலாம் என்றான்.
பாஸ் வர்ற அவசரத்துல பர்ச வீட்டுல வச்சிட்டு வந்துட்டேன் டாக்டர வீட்டுல விட்டுட்டு அதையும் எடுத்துட்டு அம்மாவையும் கூட்டிட்டு வந்துடுறேன்.
சரிண்ணே சீக்கிரம் வந்துடுங்க கொரேனோ நேரம்
சரி சரி பாத்துக்கலாம் நீ சின்னவளுக்கும் அவ வீட்டுகாரருக்கும் , சின்ன மாமா ராஜாவுக்கும் போன் பண்ணி சொல்லிடு
ம். சொல்லிடுறேன் அவங்க வந்துற முடியுமா? பஸ் இருக்காது கார்ல வர முடியுமான்னு தெரியல
இப்ப அதபத்தி பேசாத விசயத்த செல்லிடு வந்தா பாப்போம் இல்லேன்னா நம்மளே அதையும் பாத்துக்கலாம். நா மொதல்ல டாக்டர விட்டுல விட்டுட்டு அம்மாவ கூட்டுகிட்டு வந்துர்றேன் என்று வெளியே வந்து மருத்துவர் சரவணனை அழைத்துக் கொண்டு அவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டிற்கு வந்து வீட்டில் அம்மா மனைவி, பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு அம்மாவை மட்டும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்.