திண்டுவின் பயணங்கள் – 10

வில்லரும் சிலம்பரும் மேற்கொண்டு என்ன செய்வது என்று ஆலோசனை செய்தார்கள். வேலரை திண்டுவின் அப்பாவை சந்தித்து நிகழ்ந்தவற்றை தெரிவிக்க அனுப்பினார்கள். வாளரும் சிலம்பரும் அந்த காட்டில் கொள்ளையர்களை குறித்து துப்பறிவதற்காக சென்றனர். வில்லர் மட்டும் அவர்களுக்கு உதவிய அந்த காட்டுவாசி இளைஞனுடன் அவனுடைய ஊருக்கு சென்றார். அடர்ந்த காட்டை ஒட்டி அவனுடைய ஊர் அமைந்திருந்தது. அவனும் அவனுடைய உறவினர் சிலரும் நிலவைப் போன்ற ஒரு பொருள் வானில் இருந்து பூமிக்கு மிக அருகே நெருங்கி வருவதைக் கண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் மூலமாக ஏதாவது தகவல் கிடைக்கக் கூடும் என்று வில்லர் கருதினார்.

காட்டுவாசி இளைஞனும் அவனது உறவினரும் வில்லரிடம் மிகவும் அன்பு காட்டினார்கள். அவனுடைய ஊர் மிகவும் அழகாக இருந்தது. அந்த ஊருக்கு சற்று தொலைவில் ஒரு அருவி இருந்தது. அது ஆறாக அவனது ஊரின் அருகே ஓடியது.

அந்த இளைஞனின் பெயர் கைம்மா. கைம்மா மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்தான். அவன் வேகமாக ஓடக் கூடிய திறன் பெற்றிருந்தான். புத்திசாலியாகவும் இருந்தான். வில்லர் அவனுடன் சென்று உணவிற்காக சில விலங்குகளை வேட்டையாடினார். இரவில் அவனது குடிலில் தங்கினார்.

அவனது குடிலைக்கு அருகே பதினைந்து குடில்களில் அவனது உறவினர் இருந்தனர். அவனது தாய், தந்தையர் அவனுடைய குடிலுக்கு அருகிலிருந்த ஒரு குடிலில் இருந்தனர். அதன் அருகே இருந்த மற்றொரு குடிலில் அவனது தாத்தாவும் பாட்டியும் இருந்தனர்.

மாலை நேரங்களில் அந்த குடில்களின் நடுவே இருந்த மைதானத்தில் நெருப்பு மூட்டி அவனும் அவனுடைய உறவினரும் நடனமாடினர். அவனுடைய உறவினரான ஒரு சிறுவன் இனிமையாக பாடினான். அவனுடைய மாமா ஒருவர் பெரிய முரசு போன்று தோற்றமளித்த இசைக் கருவியை வாசித்தார்.
நடனமாடி களைப்படைந்த பின் அவர்கள் உணவு அருந்தினர். வில்லர் அவனது அன்பான உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் திண்டுவையும் முத்துவையும் பற்றி அவர் எப்போதும் யோசனை செய்து கொண்டிருந்தார். கைம்மா அவரைப் புரிந்து கொண்டான். அவர் அவனிடம் ஆலோசனை செய்த போது அவன் ஒரு யோசனை சொன்னான். அவன் தன்னுடைய தாத்தாவிடம் அது பற்றி கேட்கலாம் என்று சொன்னான்.

அவனுடைய தாத்தா இந்த பிரச்சனையில் எந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று வில்லருக்கு புரியவில்லை. அவர் வியப்படைந்தார்.

”நீ சொல்வது புரியவில்லை கைம்மா. உன் தாத்தாவிடம் இதையெல்லாம் கூறுவது எப்படி நமக்கு உதவியாக இருக்கும்? அவர் என்ன செய்ய முடியும்? என்று வில்லர் கேட்டார்.

”இல்லை வில்லரே. முன்பு நானும் என் உறவினர்கள் சிலரும் பார்த்த அந்த விண் பொருளைப் பற்றி என் தாத்தாவிடம் கூறினோம். அவர் அது விண்ணில் பயணம் செய்யக் கூடிய ஒரு விண் ஊர்தி என்று சொன்னார்” என்றான் கைம்மா.

”விண் ஊர்தியா? விண்ணில் எப்படி பயணம் செய்ய முடியும்?” ஏதோ இதிகாச புராணக் கதைகளில் வருவது போல அல்லவா இருக்கிறது? என்றார் வில்லர்.

”ஆமாம். ஆனால் அது உண்மையாகவே விண்ணில் பயணிக்க பயன்படும் ஊர்திதான்” என்றார் கைம்மா.

”சரி..அது உன் தாத்தாவிற்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் வில்லர்.

”என் தாத்தா எங்கள் குடியின் மூத்த பூசகர். எங்கள் வன தெய்வம் அவர் மூலமாக எங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குவது உண்டு. எங்கள் கேள்விகளுக்கும் அவர் மூலமாக வன தெய்வம் பதில் கூறும்” என்றான் கைம்மா.

வில்லர் சிரித்தார். ”கைம்மா உன் நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால் இவ்வாறு நம்பிக்கைகளை நாம் அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது.” என்றார் அவர்.

”நீங்கள் ஒரு முறை எங்கள் தாத்தாவுடன் பேசித்தான் பாருங்களேன் வில்லரே. உங்களுக்கு நம்பிக்கை இல்லை எனினும்…..” என்று மேலும் ஏதோ சொல்ல வந்த கைம்மா சொல்லாமல் நிறுத்திக் கொண்டான்.

வில்லர் சற்று யோசித்துவிட்டு அவனுடைய தாத்தாவின் கருத்துகளைக் கேட்க ஒப்புக் கொண்டார்.

——–

முழு நிலா உச்சி வானில் இருந்த நள்ளிரவு நேரம். அந்த ஊரின் எல்லையில் காட்டின் அருகே ஒரு பெரிய அரச மரம் இருந்தது. அந்த மரத்தின் அருகே கைம்மாவும் அவனது உறவினர் சிலரும் வில்லரும் நின்றிருந்தனர். அந்த மரத்தை கைம்மா கூறிய அவர்களது காட்டுத் தெய்வத்தின் கோவிலாக வழிபட்டனர். அவனுடைய தாத்தா இலைகளால் ஆன உடை அணிந்திருந்தார். அவர் கையில் ஒரு உடுக்கை வைத்திருந்தார். இரண்டு பேர் கையில் தீப்பந்தங்களை வைத்திருந்தனர். கைம்மாவின் தாத்தா காட்டு தெய்வத்திற்கு பூசை செய்யத் தொடங்கினார். அவர் மெல்லிய குரலில் வழிபாட்டுப் பாடல்களை உடுக்கை இசைத்துக் கொண்டே பாடினார். அவரது குரல் மெதுவாக உயர்ந்து கொண்டே சென்றது. மெதுவாக உடலை பக்கவாட்டில் அசைத்து ஆடிக் கொண்டே பாடினார். அவர் பாடிய பாடலின் பொருளை புரிந்து கொள்ள வில்லர் முயன்றார். ஆனால் அவற்றின் பொருள் அவருக்கு புரியவில்லை.

தாத்தா ஆடிக்கொண்டு மரத்தைச் சுற்றி வந்தார். பின் வானில் முழு நிலவு நோக்கி பாடினார்.

காட்டின் தெய்வம்

நாட்டின் தெய்வம்

மரத்தின் தெய்வம்

முகிலின் தெய்வம்

துகளின் தெய்வம்

துளியின் தெய்வம்

வளியின் தெய்வம்

வானின் தெய்வம்

மேலும் தெய்வம்

கோளின் தெய்வம்

மீனின் தெய்வம்

யாவும் தெய்வம்

தெய்வம்

தெய்வம்

தெய்வம்

கருணை இருளின்

மருளும் உயிரின்

திரளும் ஒளியின்

அருளும் நிலவின் தெய்வம்

தெய்வம்

தெய்வம்

பிறைநிலா சூடுதி

ஆடுதி

பாடுதி

தேடுதி

நின் வழி

அப்படி ஏதேதோ அவர் பாடி ஆடினார். பின்னர் அவர் அந்த அரச மரத்தடியில் இருந்த கல்லில் மௌனமாக அமர்ந்தார். பின்னர் அவர் கைம்மாவையும் வில்லரையும் அழைத்தார்.

”வில்லரே விண்ணில் வேறொரு கோளுக்கு அச்சிறுவர்கள் இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு சென்றவர்கள் எளியவர்கள் அல்ல. நீங்கள் அவர்களை மீட்பதும் எளிதல்ல” என்று அவர் சொன்னார்.

”வெறோரு கோளுக்கு கொண்டு சென்றார்களா? யார் அவர்கள்? எதற்காக இதைச் செய்தார்கள்?” என்று வில்லர் கேட்டார்.

”இச்சிறுவர்களை கொண்டு சென்று அவர்களுக்கு ஆகப்போவதென்ன தாத்தா? என்று கைம்மா கேட்டான்.

”அவை பற்றி நான் கூறமுடியாது. நீங்கள் அவர்களை மீட்பது இயல்வதல்ல” என்றார் தாத்தா.

வில்லர் கலக்கமடைந்தார். அவரால் தாத்தா சொல்வதை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை, நம்பாமல் புறக்கணிக்கவும் முடியவில்லை.

”எனில் என்னதான் செய்வது? தந்தையைத் தேடிக் கொண்டு கிளம்பிய சிறுவன் முத்து. இப்போது அவனும் அவன் நண்பன் திண்டுவும் தொலைந்து விட்டார்கள்” என்றார் வில்லர்.

கைம்மாவின் தாத்தா வில்லரை கண்டு இரக்கப்பட்டார்.

”சற்று பொறுங்கள். ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்றார் தாத்தா. பின்னர் கண்களை மூடி காட்டு தெய்வத்திடம் வேண்டினார்.

பின்னர் கண்கள் திறந்து வில்லரிடம் சொன்னார். ”ஒரே ஒரு வழிதான் இருக்கிறது வில்லரே” என்றார்.

”என்ன அது தாத்தா? வில்லரும் கைம்மாவும் ஒரே குரலில் ஆவலுடன் கேட்டார்கள்.

”வில்லரே. நீங்கள் திண்டுவின் தந்தையிடம் செல்லுங்கள். அவருடன் பணியில் இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நான் தகவல் அனுப்பும் வரை காத்திருங்கள். கைம்மா…..நம் காட்டு தெய்வம் சொல்கிறது. நீ திண்டு, முத்துவின் ஊரான எல்லைநல்லைக்குச் செல்ல வேண்டும். அந்த ஊரின் அருகே ஒரு மலை இருக்கிறது. அந்த மலையில் ஒரு குகை இருக்கிறது. அந்த குகையில் ஓவியமாக ஒரு தெய்வம் இருக்கிறது என்று நம்முடைய காட்டு தெய்வம் சொல்கிறது. நீ சென்று அந்த தெய்வத்திடம் நடந்ததைச் சொல்லி வேண்டும். அந்த தெய்வம் நிச்சயம் உதவும்” என்றார்.

”சரி தாத்தா. நாளையே நான் எல்லைநல்லைக்கு புறப்படுகிறேன்” என்றான் கைம்மா.

”அந்த குகைத் தெய்வம் திண்டுவை நன்கறிந்தது. அது நிச்சயம் அருளும்” என்றார்.

கைம்மா மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் வில்லர் எதுவும் சொல்லவில்லை. அவரால் இவற்றையெல்லாம் அப்படியே நம்ப முடியவில்லை. சிறுவர்களைத் தேடுவதை நிறுத்தி விட்டு தான் திண்டுவின் அப்பாவிடம் சென்று பணியில் சேர்ந்து கொள்வதிலும் அவருக்கு விருப்பமில்லை. எனினும் அவர் தன் அவநம்பிக்கையை காட்டிக் கொள்ளாமல் தாத்தாவிடமும் கைம்மாவிடமும் விடை பெற்றார்.

”நான் இப்போதே புறப்படுகிறேன்” என்றார்.

”காலையில் செல்லுங்கள்” என்றார் தாத்தா.

”இல்லை. நான் இப்போதே புறப்பட்டால் நாளை மதியத்திற்குள் திண்டுவின் அப்பாவை சந்தித்து விடுவேன். நான் புறப்படுகிறேன். விடை கொடுங்கள் தாத்தா” என்றார் வில்லர்.

”நல்லது. நலம் சூழ்க” என்று வாழ்த்தினார் தாத்தா.

வில்லர் தாத்தாவை வணங்கினார். பின்னர் கைம்மாவை தழுவி ”உன் உதவியை என்றும் மறக்க மாட்டேன் நண்பா” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

”வருகிறேன்.” அவர் அந்த நள்ளிரவிலேயே அந்த ஊரை விட்டு தன் குதிரையில் புறப்பட்டுச் சென்றார்.

அவர் சென்ற பிறகு கைம்மாவிடம் அவன் தாத்தா சொன்னார் ”நான் சொன்னதை அவர் நம்பவில்லை”

”அப்படியா தாத்தா? ஆனால் தாங்கள் கூறியவற்றை ஏற்றுக்கொண்டு தானே சென்றார்?” என்றான் கைம்மா.

”இல்லை. அவர் நாம் மனம் கோணக் கூடாது என்பதற்காக சரி என்று சொல்லிச் சென்றார். உண்மையில் அவர் திண்டுவின் அப்பாவை காணச் செல்லவில்லை. அவர் அந்த சிறுவர்களை கண்டுபிடிக்க ஏதாவது வழி கிடைக்குமா என்று காடுகளில் தேடிச் செல்வார்” என்றார்.

”அப்படியானால் நாம் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டான்

”நீ நானை எல்லைநல்லைக்கு புறப்பட்டுச் செல். வில்லரை பின்னர் தொடர்பு கொள்ளலாம்” என்றார் தாத்தா.

”சரி தாத்தா”

அன்று இரவு தன் குடிலில் படுத்திருந்தபோது கைம்மாவிற்கு தூக்கமே வரவில்லை. அவன் திண்டுவையும் முத்துவையும் எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று நினைத்தான். அந்த குகை தெய்வம் அருள் புரிய வேண்டும் என்று எண்ணினான்.

அவன் எழுந்து குடிலுக்கு வெளியே வந்தான். உச்சியில் இருந்த முழுநிலா மேற்கு வானில் இறங்கி இருந்தது. அது மென் மஞ்சள் நிறத்தில் இருந்தது. வானில் மின்னிக் கொண்டிருந்த விண்மீன்கள் மழைத்துளிகளைப் போல என்று கைம்மா நினைத்துக் கொண்டான்.

”பூமியை நோக்கி கீழே விழுந்து கொண்டே இருக்கும் மழைத்துளிகள் ! ஒருபோதும் தரையில் வந்து விழப்போவதில்லை அவை” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

”நானும் ஒரு நாள் அங்கே…மேலே…விண்வெளியில் செல்வேனா?”

அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

(மேலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *