திண்டுவின் பயணங்கள் – 11

கைம்மா எல்லைநல்லை ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.  அவனுடைய வாழ்க்கையில் அவன் தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு சென்றதே இல்லை.  காட்டின் அருகில் இருந்த தன் சிற்றூரையும் அதன் அருகே இருந்த பெரிய காட்டையும் மட்டுமே அவன் நன்கு அறிந்திருந்தான்.  அந்த காட்டின் விலங்குகளையும் பறவைகளையும் பற்றி அறிந்திருந்தான்.

அவன் செலவிற்கு கொஞ்சம் பணம் வைத்திருந்தான்.  அவனுடைய ஊரில் அவனுக்கு பணத்தின் தேவையே இருக்கவில்லை.  அவன் மூன்று நாட்கள் பயணம் செய்தான்.  வழியில் ஒரு ஊரில் புதிதாக சில உடைகள் வாங்கினான்.  தன் காட்டுவாசி தோற்றத்தை மாற்றி நாட்டு மக்களைப் போல உடை அணிந்து கொண்டான்.  ஒரு கத்தி மட்டும் அவனிடம் தற்காப்புக்காக இருந்தது.

வழியில் ஒரு மாலை நேரம் ஒரு பெரிய ஆற்றின் கரையில் இருந்த ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தான்.  மாலைச் சூரியன் மேற்கே இறங்கிக் கொண்டிருந்தது.  அந்த ஊரில் ஒரு மிகப் பிரம்மாண்டமான ஆலயம் இருந்தது.  மிக உயரமான கோபுரம்.  அழகான சிற்பங்கள்.  மாலையின் மஞ்சள் பொன் ஒளியில் கோபுரம் வேறு ஏதோ உலகத்தின் நுழைவாயில் போல அவனுக்குத் தோன்றியது.  அவன் தெருவில் நின்ற அந்த கோபுரத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கைம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டான்,

”என்ன நண்பரே …கோபுரத்தின் அழகில் மயங்கி நிற்கிறீர் போலும்.  வாருங்கள் ஆலயத்திற்குள் செல்வோம்”

கைம்மா அந்த இளைஞனைப் பார்த்தான்.  அவனுக்கும் கைம்மாவின் வயது தான் இருக்கும்.  முன் அறிமுகம் இல்லாமலே நண்பரே என்று சிரித்த முகத்துடன் அழைத்த அந்த இளைஞனை கைம்மாவிற்கு பிடித்துவிட்டது.

”ஆம்.  செல்வோம்” என்று கைம்மா அவனுடன் சென்றான்.

அவர்கள் இருவரும் ஆலயத்திற்குள் சென்றனர்.  ஆலயத்தின் ஒவ்வொரு தூணையும் அதிலிருந்த சிற்பங்களையும் கைம்மா வியப்புடன் பார்த்துக் கொண்டே சென்றான்.  அவன் ஒவ்வொரு தூணின் அருகே நின்ற போதும் அவனுடைய புதிய நண்பனும் அவனுடன் இருந்தான்.  அவன் ஒவ்வொரு சிற்பத்தையும் காட்டி அது காட்டும் புராண, இதிகாச சம்பவங்களை கைம்மாவிற்கு விளக்கினான்.  கைம்மாவிற்கு அவற்றில் சில புதிய விஷயங்களாக இருந்தது.  சிலவற்றை அவன் ஏற்கனவே அறிந்திருந்தான்.

அந்த நண்பன் கூறிய சில புராணக் கதைகள் அவனுடைய காட்டு தெய்வத்தின் கதை போலவே இருந்தது.  பூசகரான அவனுடைய தாத்தா அவற்றை அவனுக்கு முன்பு கூறியிருந்தார்.

அப்போது அந்த ஆலயத்தில் ஒரு இளம்பெண் தன்னுடைய இனிய குரலில் பாடினாள்.

”தேவாரப் பாடல் பாடுகிறார்.  சுந்தர் அருளியது” என்று நண்பனான அந்த இளைஞன் கைம்மாவிடம் கூறினான்.

சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில்

வைத்து உகந்து திறம்பா வண்ணம்

கைம்மாவின் உரிவைபோர்த்து உமை வெருவக்

கண்டானைக் கருப்பறியலூர்

கொய்ம்மாவின் மலர்ச்சோலை குயில்பாட

மயிலாடுங் கொகுடிக் கோயில்

எம்மானை மனத்தினால் நினைந்தபோது

அவர் நமக்கு இனியவாறே

 நீற்றாரும் மேனியராய் நினைவார் தம்

உள்ளத்தே நிறைந்து தோன்றுங்

காற்றானைத் தீயானை கதிரானை

மதியானை கருப்பறியலூர்

கூற்றானைக் கூற்றுதைத்து கோல் வளையாள்

அவளோடுங் கொகுடிக் கோயில்

ஏற்றானை மனத்தினால் நினைந்த போது

அவர் நமக்கு இனியவாறே

இருவரும் இறைவனை வழிபட்டனர்.  ஆலயத்தில் சற்று நேரம் அமர்ந்தனர் இருவரும்.  தேவாரப் பாடலின் இனிமையில் கைம்மா மெய் மறந்திருந்தான்.

இருவரும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தபோது கைம்மா புன்னகையுடன் இருந்தான்.

”என்ன நண்பரே.  தங்கள் குறுநகையின் காரணம் என்னவோ?” என்று நண்பன் கேட்டான்.

”அப்பெண் பாடிய தேவாரப் பாடலில் என்னுடைய பெயர் வந்தது” என்றான் கைம்மா.

”அப்படியா? நண்பன் ஆச்சரியம் அடைந்தான்.  பிறகு ”தங்கள் பெயர் என்ன? ..அட …இவ்வளவு நேரம் உங்கள் பெயரைக் கேட்காமல் இருந்தேனே” என்றான் அவன்,

”என் பெயர் கைம்மா” என்றான் கைம்மா.

”கைம்மா…? நல்ல பெயர்.  கைம்மா என்றால் யானை என்று பொருள்.  தாங்கள் யானையைப் போல வலிமை வாய்ந்தவர் போலும்” என்றான் நண்பன்.  பின், ”என்னுடைய பெயர் ”மணிவாசகம்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அவன்.

மணிவாசகம் அந்ந ஊரில் உலோக பாத்திரங்கள் விற்கும் கடை வைத்திருந்தான்.  கைம்மா அவனிடம் விடை பெற்றபோது அவன் கைம்மாவை தன்னுடைய வீட்டில் இரவு தங்கி விட்டு மறுநாள் பயணத்தை தொடருமாறு கேட்டுக் கொண்டான்.  முதலில் தயங்கிய கைம்மா பிறகு அவனுடைய வீட்டிற்கு சென்றான்.

மணிவாசகம் தன் வீட்டில் தனியாக வசித்து வந்தான்.  அவனுடைய தாய் தந்தையர் அவன் சிறுவனாக இருந்தபோதே இறந்து விட்டனர்.  அவன் வணிகரான தன்னுடைய தாய் மாமாவினால் அவருடைய ஊரில் வளர்க்கப்பட்டான்.  பின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி இந்த பாத்திர வணிகத் தொழிலை மேற்கொண்டு வருகிறான்.  அந்த ஊரின் பெயர் அரியவூர்.

கைம்மாவும் தன்னுடைய ஊரைப் பற்றியும் தன் காட்டைப் பற்றியும் மணிவாசகத்திற்கு விவரித்து சொன்னான்.  கைம்மாவின் காட்டைப் பற்றி அவன் சொன்னவற்றை மணிவாசகம் மிகவும் ஆவலுடன் கேட்டான்.  தன் வேட்டை அனுபவங்களை, அழகானதாகவும் அச்சமூட்டுவதாகவும் இருக்கும் காட்டின் இயற்கையை கைம்மா விவரித்துச் சொன்னான்.  விலங்குகளின் இயல்புகளை விவரித்தான்.  ஆனால் தான் எல்லைநல்லைக்கு செல்வதையும் அங்கு செல்வதற்கான காரணத்தையும் சொல்லவில்லை.

”கைம்மா…சற்று பொறுங்கள்.  நான் சென்று உங்களுக்கும் எனக்கும் இரவு உணவு கொண்டு வருகிறேன்.  நீங்கள் முன்பு அறிந்திராத உணவாக இவை இருக்கக் கூடும்.  மிகவும் சுவையாக இருக்கும்” என்றான் மணிவாசகம்.

”நீங்கள் வீட்டில் சமைப்பதில்லையா?” என்று கைம்மா கேட்டான்.

”அதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது? அத்துடன் அதற்கான தேவையுமில்லை.  இந்த ஊர் தலைவர் என மாமாவின் நண்பர்.  அவரது வீட்டில் தினமும் நல்ல சமையல் கலைஞர்களால் சுவையான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.  நான் அவர் வீட்டிற்கு சென்று உண்பேன்” என்றான் மணிவாசகம்.

”இன்று அங்கே உண்ணாமல் எடுத்து வந்து உங்களுடன் உண்பேன்” என்றான் அவன்.

”ஏன் அப்படி? நானும் உங்களுடன் வந்தால் நாமிருவரும் அங்கே உணவு அருந்தி விட்டு வந்து விடலாமே? என்று கேட்டான் கைம்மா.

”ஆம்.  அது சரி தானே.  பார் கைம்மா இது எனக்குத் தோன்றவில்லை.  இப்படித்தான் சில சமயங்களில் எனக்கு யோசனை இல்லாமல் ஆகிவிடுகிறது” என்றான் அவன்

அவர்கள் இருவரும் ஊர்த் தலைவரின் மாளிகைக்குச் சென்றார்கள்.  வயதானவரான ஊர்த் தலைவர் அவர்களை அன்புடன் வரவேற்றார்.  அவர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

கைம்மாவின் மீது அவருக்கு நன்மதிப்பு ஏற்பட்டது.  அவர் அவனிடமும் மணிவாசகத்திடமும் சொன்னார்.

”பாருங்கள்.  ஆலயத்தின் வாசலில் உங்கள் நட்பு தொடங்கி இருக்கிறது.  உங்கள் இருவரையும் பார்க்கும் போது உங்கள் நட்பு உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் அவர்.

அவர் தன்னுடைய இளவயது காலத்து நண்பன் ஒருவனை நினைவு கூர்ந்து பேசினார்.

”எனக்கு ஒரு தோழன் இருந்தான்.  எங்கள் நட்பு எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா? நாங்கள் ஒன்றாகவே கல்வி கற்றோம்.  பிறகு நாங்கள் பெரியவர்களான போது ஒன்றாக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தோம்.  பிறகு அவன் பெரிய வணிகன் ஆனான்.  நான் இந்த ஊரின் தலைவராக அரசால் நியமிக்கப்பட்டேன்.  ஆனால் அந்த நண்பன் ஒரு கடற் பயணத்தின் போது உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டான்.  அவனை இறுதியாக ஒருமுறை காணக் கூட முடியாமல் போய்விட்டது.  அவன் உடலை எங்கோ ஒரு தீவில் அடக்கம் செய்து விட்டார்களாம்” என்று அவர் கூறினார்.  கண் கலங்கினார்.

கைம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  மணிவாசகம் மெதுவாக அவனை இடித்தான்.  பின் மெதுவான குரலில் ”இந்த கதையை இவர் தினமும் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றான்.

பின் அவன்”அய்யா எங்கள் மாமாவும் உங்கள் நண்பர் தானே? என்றான்.

”ஆமாம்…ஆமாம் உன் மாமாவும் என் நல்ல நண்பர்தான்” என்றார் அவர்.

மணிவாசகத்திற்கும் கைம்மாவிற்கும் ஊர்த் தலைவரின் மனைவி உணவு பறிமாறினார்.  ஊர் தலைவரும் இணைந்து பறிமாறினார்.

”நன்றாக சாப்பிடுங்கள் குழந்தைகளே” என்று உபசரித்தார்.

காய்கறிகளுடன் ஊன் கலந்த அந்த உணவு கைம்மாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.  அவனும் மணிவாசகமும் விரும்பி உண்பதைக் கண்டு தலைவர் மன நிறைவடைந்தார்.

அவர்களை கனிவுடன் பார்த்தார்.  அவர் மனதில் நினைத்துக் கொண்டார் ”எனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் இவர்களைப் போலத் தான் இருந்திருப்பார்கள்”

அவர் மணிவாசகத்தையும் கைம்மாவையும் பார்த்து சொன்னார் ”இப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு நண்பர்களான இரண்டு சிறுவர்கள் வந்தார்கள்.  உங்களைப் போன்றே நண்பர்கள், ஆனால் வயதில் உங்களை விட இளையவர்கள்.  தங்கள் பாதுகாவலர் ஒருவருடன் வந்தார்கள்.  எல்லைநல்லை என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்”

கைம்மா ஒரு கணம் திடுக்கிட்டான்.  ”எல்லைநல்லையா ?” என்று கேட்டான் அவன்.

”ஆமாம்.  உனக்கு அவர்களைத் தெரியுமா?” என்று கேட்டார் தலைவர்.

”இல்லை” என்றான் கைம்மா.

”பாவம்.  அவ்விரண்டு சிறுவர்களில் ஒருவனின் தந்தை ஒரு வணிகராம்.  அவர் எங்கோ காட்டில் தொலைந்து போய்விட்டாராம்.  அவரைத் தேடிக் கொண்டு இவர்கள் இருவரும் தங்கள் பாதுகாவலரான பணியாள் ஒருவருடன் புறப்பட்டு விட்டார்கள்”

கைம்மா அவர் சொல்லும் இரண்டு சிறுவர்கள் திண்டுவும் முத்துவமாகத் தான் இருப்பார்கள் என்று ஊகித்துக் கொண்டான்.

”அவர்கள் செல்லும் வழியில் நம்மூரில் உணவு அளிக்குமாறும், அவர்கள் இளைப்பாறிச் செல்ல வசதி செய்து தருமாறும் கேட்டு எல்லைநல்லை ஊர்த் தலைவர் எனக்கு ஓலை அனுப்பி இருந்தார்” என்று மணிவாசகத்தை நோக்கி சொன்னார் ஊர்த் தலைவர்.

”கொஞ்ச நேரம் மட்டும் இங்கு நம் இல்லத்தில் ஓய்வு எடுத்து விட்டு அவர்கள் புறப்பட்டு விட்டனர்.  இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்களோ என்னவோ? அந்த சிறுவனின் தந்தை கிடைத்தாரா என்பதும் தெரியவில்லை” என்றார்.

கைம்மாவும் மணிவாசகமும் அவரிடம் விடை பெற்றனர்.  அவர்கள் புறப்பட்ட போது அவர்கள் அமர்ந்திருந்த அறையின் ஜன்னலின் வழியாக காற்று குளிர்ச்சியாக வீசியது.

அந்த அறையில் அலமாரியில் இருந்த ஓவியம் வரையப்பட்ட துணிச் சுருள் ஒன்று காற்றில் கீழே விழந்தது.  அது தரையில் விழுந்து விரிந்து காற்றில் படபடத்தது.  அந்த அறையில் இருந்து விளக்கொளியில் அந்த துணி ஓவியத்தை நன்கு பார்க்க முடிந்தது.

கைம்மா அந்த துணியை கையில் எடுத்து ஓவியத்தைப் பார்த்தான்.

”இதென்ன ஓவியம்?” என்று மணிவாசகம் கேட்டான்.

ஊர்த் தலைவர் ”இதுவா…இது…..அந்த இரண்டு சிறுவர்கள் பற்றி சொன்னேன் அல்லவா? அவர்களுடைய பெயர் மறந்து விட்டது.  அவர்களில் ஒருவன் வரைந்தது.  அவர்கள் இங்கு ஓய்வெடுத்த போது இதை அவன் வரைந்தான்” என்றார்

”என்ன இது விநோதமாக இருக்கிறது” என்றான் மணிவாசகம்

கைம்மா அந்த ஓவியத்தை இமை கொட்டாமல் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

நட்சத்திரங்கள் நிறைந்த வானில் பறக்கும் ஒரு வெள்ளைக் குதிரை.  பெரிய சிறகுகள் கொண்டது அது.  அதன் மீது தாடி வைத்த ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார்.  அதாவது அந்த குதிரையில் விண்வெளியில் பறந்து கொண்டிருந்தார்.

”இந்த ஓவியத்தை எனக்குத் தர முடியுமா?” என்று கைம்மா ஊர்த் தலைவரிடம் கேட்டான்.

”ஓ அதற்கென்ன? தாராளமாக எடுத்துக் கொள்.  இந்த ஓவியம் எனக்கு அந்த சிறுவன் பரிசளித்தது.  இதை நான் உனக்கு பரிசளிக்கிறேன்” என்றார் அவர்.

அவன் அவருக்கு நன்றி கூறி அந்த துணி ஓவியத்தை எடுத்துக் கொண்டான்.

பின் இருவரும் மணிவாசகத்தின் வீட்டிற்குத் திரும்பினர்.

(மேலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *