பொன்னம்மா அடுக்களையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். அவருக்குக் கீழே உட்கார்ந்து அரிவாள் மணையில் வெட்டுவதுதான் வசதியாக இருந்தது. எழுந்துகொள்ளும் போது முட்டங்கால் வலித்தாலும், கால் நரம்புகள் குறக்குவளித்தாலும் சமாளித்துக் கொள்வார். நவீன வழக்கத்துக்காக காய்கறி வெட்ட, கத்தியும் மரப்பலகையும் வாங்கி, அவை அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்தன. நீளமான பெரிய கத்தி (ஆளைக் குத்துவது மாதிரி. அதை எதற்கு மகள் வாங்கிக் கொடுத்தாள் என்றே தெரியவில்லை), சின்னதாக குறுகிய கத்தி, பழம் வெட்ட ஒரு கத்தி, செர்ரேடட் கத்தி என்று பலவிதமான கத்திகள் வீட்டில் இருந்தன. எப்பவாவது அவற்றில் ஒன்றை உபயோகிப்பது உண்டு.
வெட்டிய காய்கறிகளை எடுத்து கொண்டு கஷ்டப்பட்டு எழுந்து, கொதிக்கத் தொடங்கியிருந்த புளிக்கரைசலில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, வெந்தயம், பெருங்காயத் தூள் என்று ஒவ்வொன்றாகப் போட்டாள். பிறகு வெட்டிய முருங்கைக் காயையும் முள்ளங்கியையும் போட்டாள். சாம்பார் பொடியின் வாசனை மூக்கைத் துளைத்தது. சமைப்பது அவளுக்குப் பிடிக்காத சள்ளை பிடித்த வேலை. தினமும் மூன்று வேளை என்ன சமைப்பது, எதையெல்லாம் உபயோகிப்பது, தொட்டுக்கொள்ள என்ன வைப்பது என்று முடிவெடுப்பதற்குத் தடுமாறுவாள். பாத்திரம் தேய்ப்பதும், துணி துவைப்பதும் அவளுக்குச் சலிப்பூட்டும். அதற்காகவே வாரத்தில் ஒருநாளாவது வெளியில் சாப்பிட விரும்புவாள்.
ஏதாவது காலேஜில் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவளது ஆசை. நன்றாகப் படித்தவள். படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவள். பரிட்சை எழுதி முதல் மார்க்க வாங்க வேண்டும் என்ற துடிப்பு இன்னும் விடவில்லை. எப்போதும் கல்லூரியில் படித்துக் கொண்டே இருப்பது நம் நாட்டில் சாத்தியமா? அதுவும் பெண்களுக்கு? பாடப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களைப் படிக்க அவளுக்குப் பிடிக்காது. மற்றதெல்லாம் படிப்பா? அதைவிட்டால் ஜாலியாக யாருடானவது பேசிக் கொண்டே இருப்பதும், விளையாட்டுத்தனமாக இருப்பதும் அவளுக்குப் பிடிக்கும். ஆனால், திருமணம் முடிந்ததிலிருந்து யாருடனும் நன்றாக அரட்டை அடிக்க முடியவில்லை. திருமணம் முடித்தால் நன்றாக ஊர் சுத்தலாம், புதிய புதிய புதிய உடைகள் வாங்கி அணியலாம், பல ஹோட்டல்களில் சென்று சாப்பிடலாம் என்று நினைத்திருந்தாள். சினிமாவில் வரும் பெரிய வீடொன்றில் கணவருடன் வாழலாம் என்றிருந்தவருக்கு நகரத்தின் சிறிய இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் மூச்சடைத்தது.
சுப்பையா அதிகம் பேசாதவராக இருந்தார். அவருக்குப் பாடப் புத்தகம் தவிர வேறு எல்லாப் புத்தகங்களையும் படிக்கப் பிடிக்கும். அவளுக்கு நேர் எதிர். எல்லாவற்றிலும். கொஞ்ச நேரம் பேசினால் சண்டை வந்துவிடும். ‘எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் செய்கிறவரை என்ன செய்வது?’ இதற்குப் பேசாமல் இருப்பதே நல்லது என்று இருவரும் சொல்லி அமைதியாகிவிடுவார்கள். பிறகு ‘பனிப்போர்’ தொடங்கிவிடும். அவசியமானது மட்டும் பேசிக் கொள்வார்கள்.
வாசலில் கணவர் தும்முகிற சத்தம் கேட்டது. அவர் அப்படித்தான். கொஞ்சம் ஏதாவது வாசனை வருகிற பொருளாக இருந்தாலும் சரி, தும்மல் வந்துவிடும். பழக்கம். வேறு ஒன்றும் செய்யாது. இன்னும் அவர் குளிக்கவில்லை. குளித்ததும் நேராகச் சாப்பிட வந்து விடுவார். ‘வீட்ல சும்மா உட்காந்தே திங்கற அதிர்ஷ்டம். நம்மதான் இங்க வெக்கையில கெடந்து, அதையும் இதையும் செஞ்சு புழுங்கிச் சாக வேண்டியிருக்கு. அடுத்த ஜென்மத்திலயாவது ஆம்பளயாப் பொறக்கணும்’. யாராவது சமைத்துப் போட்டால் நன்றாக இருக்கும். இது பல வருடக் கற்பனை. சுகமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நாற்பத்தந்து வருடங்களாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறாள். இதற்காகவே ரயிலில் நெடுந்தூரம் போவது அவளுக்குப் பிடிக்கும். சீட்டில் கொண்டுவந்து டீ, காபி, சாப்பாடு எல்லாம் கொடுத்துவிடுவான். இப்போது விமானத்தில் நெடுந்தூரம் பயணம் போகப் பிடிக்கிறது.
சாம்பார் நிதானமாகக் கொதிக்கத் தொடங்கியதும், தீயின் அளவைக் குறைத்துவிட்டு, மெல்ல நடந்து தன்னுடைய அறைக்குள் போய் செல்போனை எடுத்தார். வசந்தா அக்காவுக்குப் போன் செய்து பேசத் தொடங்கினார். இனி நேரம் போவது பிரச்சனை இல்லை. அவருடைய அறையிலிருந்து கணவர் என்ன செய்கிறார் தெரியாவிட்டாலும் அவரைக் கவனிக்கிற வகையில் அமர்ந்துகொண்டார்.
முன் வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த, சுப்பையா எழுந்தார். ‘டிரெம்ப் மாதிரிக் கிறுக்கன என்ன செய்வது? உலகத்தில பல நாடுகள்ல இவனமாதிரிக் கிறுக்கனுக ஆட்சி செய்றானுக’ என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தார். உலகம் எங்கே போகிறது என்று அவருக்குக் கவலை. அவர் உலகப் பிரஜை. எழுவது வயதானாலும் உடல்நலத்தில் கண்ணாக இருக்கிறவர். டிரெம்ப் கூட சுப்பையாவின் யோசனையைக் கேட்டுவிடும் சாத்தியம் இருக்கிறது. ஆனால் அவர் மனைவியிடம் பாச்சா பலிக்காது. அடுக்களையை நோக்கிப் போனார். அவர் அடுக்களைக்குப் போவதைப் பார்த்ததும், பொன்னம்மா யோசித்தார் ‘என்ன சொல்லுவார்?’. அடுப்பில் இருந்த சாம்பாரைக் கரண்டி வைத்துக் கிண்டிப் பார்க்கிற ஒலி பொன்னம்மாவுக்குக் கேட்டது.
அவர் அடுக்களைக்கு போவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அது ஒரு வழக்கம். சில நேரங்களில் அவருக்கும் கொஞ்சம் சமையல் தெரிந்திருப்பது நல்லது என்றே நினைத்தாள். சில அயிட்டங்களை நன்றாகவே செய்வார். ஆனால், அவை நன்றாக இருந்தன என்று சொன்னதில்லை. இத்தனை வருடங்களில் பொன்னம்மா சமைத்த உணவுகளைப் பாராட்டி அவரும் சொன்னதில்லை. பொன்னம்மா சமைத்த அயிட்டங்களில், ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்துவிடுவார். அதைக் கேட்டுக் கேட்டு, முதலில் எரிச்சல்பட்டவருக்கு பின்னால் பழகிவிட்டது. இப்போது கொஞ்ச நாளாக கிச்சனுக்கு வந்தால், ஒன்றும் சொல்வதில்லை. ஏதாவது செய்துவிட்டுப் போய்விடுவார். அவர் கிச்சனுக்கு வராமலும், சமைக்கத் தெரியாமலும் இருந்தால் நல்லது. இன்னொரு புறம், பாவம், அவரும் பொன்னம்மாவும் இருக்கிற வீட்டில் வேறு எங்கேதான் போக முடியும்? என்னதான் பேசமுடியும்? உலகவிஷயகளை, அரசியலை, இலக்கியத்தை முதலில் அவர் சோதனை செய்வது மனைவியிடம். அவருடைய சோதனைகள் ஒருநாளும் மனைவியிடம் வெற்றி பெற்றதில்லை. வீட்டிலேயே வெற்றி பெறாதது உலகத்தில் எங்கே வெற்றிபெறும்?
அவர் மீண்டும் வாசலுக்குப் போகும் போது பொன்னம்மா இன்னும் போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவருக்கு எரிச்சலாக இருந்தது. ‘எப்பப்பாரு அண்ணங்கிட்ட, தங்கச்சி கிட்டேன்னு பேசிக்கிட்டே இருக்கா. என்னத்ததான் பேசுறாளோ? முக்கால்வாசி வெட்டிப் பேச்சாக இருக்கும். முந்தின நாள் பேசியதையே பல நாட்கள் பேசுவாள். காலையில் என்ன சமையல்? சிக்கன் இன்னைக்கு எடுத்தயா? அம்மாவாசை என்னைக்கு?’ என்று ஏற்கனவே பதில் தெரிந்த கேள்விகளுக்குப் பதில் தேடிக் கொண்டிருப்பார்கள். ‘வேற என்னதான் பேசத் தெரியும் இவர்களுக்கு? அதைவிட்டால் சாமிகள் பூஜைகள், விரத மீறல்கள்’ அவருக்குக் கேட்டாலே எரிச்சல் வரும். ‘எதையாவது புதுசாத் தெரிந்து கொள்ள விருப்பம் என்பதே கிடையாது. குண்டுச் சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பாள். வாழ்நாளெல்லாம் இப்படியே கழித்துவிட்டாள். அவர்களுடன் மணிக்கணக்காகப் பேசத் தெரிந்த இவளுக்கும், நாற்பத்தி ஐந்து வருடங்களாகக் கூடவே இருக்கும் என்னுடன் பேச எதுவுமில்லையா? கூட இருப்பவனிடம் அமைதியாகப் பேசத் தெரியாதவள், வேறு யார்யாரிடமோ பவ்வியமாகப் பேசிக் கொண்டிருந்தாள்’.
நடுவில் ‘சாம்பார் கொதிக்குதே ஏதாவது பண்ணனுமா?’ என்று பொன்னம்மாவுக்குக் கேட்கும் வகையில் உரக்கக் கேட்டார்.
பொன்னம்மாவுக்கு அந்தக் குரல் கேட்டதும், ‘ஆமா துணதுணப்பத் தொடங்கியிருவாரு. நமக்குப் பின்னாலயே வாரது’ என்று நினைத்து, ‘ஆமா கொதிக்கட்டும்னுதான் விட்டுட்டு வந்திருக்கேன்’ என்று உரக்கச் சொன்னாள். ‘இந்த ஆள் கூட இருக்கதுக்கு…’ என்று எதையோ சொல்ல நினைத்து நிறுத்திக் கொண்டாள். ‘பேசாம உங்க வேலையப் பாருங்க’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். ‘காலையிலிருந்து தொடங்கியிரும். எங்கயும் போறது கிடையாது. வீட்டுக்குள்ளயே கிடந்து நம்மளக் குடைஞ்சிக்கிட்டே இருக்கிறது. கூட வாழ்றவளுடன் பேசத் தெரியாத இவர் உலகெத்துக்கெல்லாம் அறிவுரை வழங்குவார்’.
சுப்பையாவுக்கு எழுவத்தைந்து வயதாகிறது. ரிட்டையராகும் போது அப்பாடா ஆஃபீஸ் டென்ஷன் ஓய்ந்தது என்றிருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து, அவரும் பொன்னம்மாவும் நடத்தும் ‘ஒத்துவராத சுதியின் கச்சேரி’ தேவை என்று கூடத் தோன்றியது. பேசுவது, சண்டையிடுவது கூட உரையாடல்தான், உறவு கொள்வதுதான். ஆனாலும் ஒருவகையில் தான் ‘மனைவியின் ராஜ்ஜியத்தில் ஒரு அன்னியன்’ என்று பல நேரங்களில் புரிந்தது. நாற்பத்தைந்து வருடங்களாக, அவள் தன்னந்தனியாக நடத்திக் கொண்டிருக்கும் ராஜ்ஜியம் அது. அதில் கடந்த பதினைந்து வருடங்களாக அவர் புகுந்து விட்டார். சண்டையும் பேச்சும், எப்போதாவது அதிசயமாகச் சிரிப்பும் உண்டு.
அவருடைய நண்பர்கள் ஒவ்வொருவராகப் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தார்கள். போகாதவர்கள் வீடுகளில் நோயாளிகளாக முடங்கிக்கிடந்தார்கள். சிலர் நோயாளிகளான மனைவி மக்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ரிடையரான நாளிலிருந்து உலகம் அவரைப் பொறுத்தவரை மிகவும் சுருங்கத் தொடங்கிவிட்டது. அவருக்கும் எவ்வளவோ ஆசை உண்டு. நிறைய இடங்களுக்குப் போகவேண்டும். சினிமா டிராமா, நாட்டியம், பேச்சு என்று புதிது புதிதாக எதையாவது பார்த்து உலகை இன்னும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். வேறு ஏதாவது மொழி, அது பெர்சியன், சீன மொழி குறைந்தபட்சம் மலையாளம் கூடப் படிக்கலாம். ஆனால் எப்படி என்று தேட வேண்டியிருந்தது. சலிப்பும் வந்தது. அவரைப் பொறுத்தவரை எல்லாம் அவருடைய தட்டில் வைத்து மரியாதையாக வரவேண்டும். அதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? ஏதாவதொரு நகரத்தில் செட்டில் ஆகியிருந்தால் பல வசதிகள் இருக்கும். ஆனால் நாற்பது வருடங்களாக நகரங்களில் அனுபவித்த கஷ்டங்கள் நினைவுக்கு வந்தன. ‘இப்படிக் காத்தாட வீடு நகரங்களில் எங்கே கிடைக்கும்? அறைகள் சின்னச் சின்னப் பெட்டியாக இருக்கவும் படுக்கவும்….’ நினைக்கவே கசந்தது.
அவருடைய ரசனைக்கு ஏற்ற சினிமா, நாடகம், பேச்சு என்பதெல்லாம் உலகத்தில் மிகச் சிலவே உள்ளன என்று இளவயதிலேயே கண்டு கொண்டார். அதுதான் பிரச்சனையாகிவிட்டது. பெரும்பான்மை விஷயங்களோடு அவர் ஒத்துப் போவதில்லை. பொன்னம்மா சொல்வார் ‘அவருக்கு வேறு யாரு கருத்தும் பிடிக்காது. அவரைப் போலவே யோசிக்கும் ஆட்களைத் தேடினால், உலகத்தில் யார் கிடைப்பார்?’ கிறுக்கன் என்று சொல்லவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. மனைவி கணவனை அப்படிச் சொல்லலாமா? மனதுக்குள் நினைத்துக் கொள்ளலாம். மற்றவர்களிடமும் சொல்லலாம். அவரிடம் மட்டும் சொல்ல முடியாது. சொன்னால் என்ன? இன்னும் கொஞ்ச நேரம் சண்டை போடலாம்.
‘எல்லாத்துக்கும் எதிர்த்துப் பேச வேண்டியது. எவனாவது ஃபேமஸ் ஆய்ட்டான்னா அவனைத் திட்றது. இதுதான் உங்க குணம். எல்லோரோடையும் இணக்கமாப் பேசுங்களேன்’ என்பது அவருக்குப் பொன்னம்மா கொடுக்கும் அறிவுரை. அதற்குப் பதில் சொல்லத் தொடங்கினால் அதைக் கேட்கும் பொறுமை அவளுக்குக் கிடையாது. அவருக்குள்ளேயே பதில் சொல்லிக் கொள்வார் ‘நீங்க எல்லோரும் உங்களுக்குத் தோண்றதப் பேசுறீங்க. உங்களுக்குத் தோணலேன்னா, யாராவது தலைவர், சினிமா ஸ்டார், ஃபேமஸ் ஆன ஆளு சொல்றத உங்க கருத்தா பேசுறீங்க. நான் எனக்குத் தோண்றதச் சொல்றேன். அதைச் சொல்றதுக்கு என்ன? அதைக் கேட்கிற பொறுமை கூடக் கிடையாது. எல்லோரோடையும் சேந்து பஜன பண்றது உங்களுக்குப் பிடிச்சிருக்கு’.
இந்தப் பிரச்சனை ஒருநாளும் தீராது என்று அவருக்குத் தெரியும். மீதி வாழ்நாளை பொன்னம்மாவுடன் கழிக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகிற இருவர் உலகத்தில் எங்காவது உண்டா? என்று மனதைத் தேற்றிக் கொள்வார்.
பொன்னம்மா சாம்பாரையும் சாதத்தையும் தயார் செய்துவிட்டு கட்டிலில் போய்ச் சாய்ந்து கொண்டாள். சுப்பையா புதிதாக வாங்கிய புத்தகங்களில் எதைப் படிக்காலம் என்று தேடிக் கொண்டிருந்தார். அவருடைய சொந்தக்காரர் ஒருவர் அவரை ‘புத்தகப் புழு’ என்று சொல்லியிருக்கிறார். அதைவிட இன்னொருவர், ‘புத்தகம் படிப்பதும் போதைதான். அந்த ஆள்களால படிக்காம இருக்க முடியாது’ என்று அவர் இருக்கும் போது இன்னொருவரிடம் சொன்னார். இந்த விளக்கத்தைக் கேட்டதும் சுப்பையாவுக்கே சந்தேகம் வந்து விட்டது. ‘இதுவும் போதைதானோ?’ இப்படி ஒரு உலகத்தில் வாழ அவர் வெட்கப்பட்டார். ஆனால் இந்த உலகத்திலிருந்து அப்படி ஒன்றும் எளிதில் தப்பிவிட முடியாது.
‘எப்படியாவது எதையாவது செய்து பேமஸ் ஆகிவிட வேண்டும். நிறையப் பணம் சம்பாதித்து, எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்’ என்று பொன்னம்மா அடிக்கடி சொல்வார். அதற்காகப் பல முயற்சிகளைத் தொடங்கினார். ஆனால் எதுவும் அவர் நினைத்தபடி நடக்கவில்லை. சுப்பையாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. ‘எதையாவது எப்படிச் செய்ய முடியும்? ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும். அதையே செய்து கொண்டிருந்தால் வரவேண்டியது வரும், கிடைக்க வேண்டியது கிடைக்கும். கிடைக்காவிட்டாலும் என்ன? பிடித்ததைச் செய்தோம் என்ற மகிழ்ச்சியாவது இருக்கும்’ என்பார். மற்றவர்களுக்காக மட்டுமே வாழ முடியுமா? வருகிற பென்ஷனை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம். ஆனால் யாராலும் ‘சும்மா’ இருக்க முடியுமா? இப்படி ஏறுக்கு மாறாக யோசித்தே இருவருக்கும் திருமணமாகி நாற்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
அசந்து சோபாவில் தூங்கிவிட்டோம் என்பதே பொன்னம்மா வந்து எழுப்பியதும் தான் அவருக்குப் புரிந்தது. ‘என்ன?’ என்று பொன்னம்மாவைக் கேட்டார். பொன்னம்மாவின் முகத்தில் பதட்டம் தெரிந்தது. ‘அண்ணனுக்கு உடம்பு சரியில்லையாம். ஆஸ்பத்திரிக்குத் தூக்கீட்டுப் போறாகளாம். வாடகக் காருக்குப் போன் பண்ணுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்புவோம்’ என்றாள். அவர் போனை எடுத்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். ‘ஏதோ கார் விபத்தில் சிக்கி பொன்னம்மாவின் அண்ணனுக்கு மண்டையில் அடிபட்டு விட்டதாம்…’.
சுப்பையா கண் விழித்த போது, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியின், ஐ.சி.யு. வார்டில் இருந்தார். அருகில் பொன்னம்மா நின்று அவரைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மூக்கில் ஆக்ஸிஜன் பைப் நுழைத்திருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தார். ‘என்னாச்சு?’ என்று கேட்க முயன்றார். வாய் லேசாக அசைந்தது, சொல் வெளிவரவில்லை. கைகளைத் தூக்கி என்ன என்று கேட்க நினைத்தார். தூக்க முடியவில்லை. பொன்னம்மா, அருகில் வந்து அவரது வலது கையைப் பிடித்துக் கொண்டாள். சுப்பையாவுக்குக் கண்ணீர் வழிந்தது. பொன்னம்மா முந்தானையால் துடைத்துவிட்டாள். பிறகு தனக்கு வந்த கண்ணீரையும் முந்தானையால் துடைத்துக் கொண்டு, மீண்டும் அவருடைய வலதுகையை இறுகப் பற்றிக் கொண்டார். சுப்பையாவுக்கு ஆறுதலாக இருந்தது. ‘ஒண்ணுமில்ல, உங்களுக்கு நெஞ்சடைப்பு வந்திருச்சு. அதான் சேத்திருக்கோம். சரியாகிடும்னு டாக்டர் சொன்னாரு’ அவள் சொல்லி முடித்த போது, நெஞ்சின் கனம் இருவருக்கும் குறைவது போலிருந்தது. அவர் தலையை மேலும் கீழும் அசைத்தார்.