எவ்வளவு எழுதினாலும் எழுத்தாளனின் அகம் முழுக்க வெளிப்படுவதில்லை. புறச்சூழல் சார்ந்த எச்சரிக்கைகள் ஒரு எழுத்தாளனை கட்டுப்படுத்துகின்றன. எழுத்தாளர்களின் vision அவர்கள் கணந்தோறும் வாழந்து பெற்ற அனுபவங்களின் சாரமாக திரண்டெழும். அது அவர்களின் எழுத்தில் நிலத்தடி நீரினைப் போலவும் நேர்ப்பேச்சில் நிலத்தின் மீது விழும் நிழல் போலவும் அமையும்.
“பேரழகிகளை வயசான பின்ன நாம சந்திக்கவே கூடாது.”
கவி விக்கி அண்ணாச்சி சொல்லி விட்டு உடல் குலுங்கச் சிரித்தார்.
அவருடைய இந்த விஷன் ஒரு கவி மனத்தினுடையது. நம் உள்ளம் பித்தேறி உன்மத்த நிலையில் அசாத்திய வியப்பில் இருந்த தருணத்தை வாழ்நாள் முழுக்க பாதுகாக்க வேண்டும். அந்த பெண்முகமும் உடலும் ஆயுட்காலச் சொத்து. இயற்கையின் இன் தீண்டல். அதை இழப்பது எல்லா வகையிலும் ஒரு பேரிழப்பு.
அசோகமித்திரனைப் பற்றிய இந்த நுாலிலும் துளித் துளியான அழகிய தருணங்கள் நிறைய வருகின்றன.
அழகிய சிங்கர் முதன் முதலில் அசோகமித்திரனை தியாகராய நகர் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் நேரில் சந்திக்கிறார். அ.மி. அங்கே பணம் எடுக்க வந்திருக்கிறார். அ.சிங்கர் “நீங்கள்தானே அசோகமித்திரன்?“ என்று வாசக பூரிப்பில் கேட்டிருக்கிறார். அ.மி. கோபமாக“ நான் யாராக இருந்தால் என்ன, உங்களுக்கு?” என்று திருப்பிக் கேட்கிறார். அ.சிங்கர் அன்று அவரிடம் பேச்சைத் தொடரவில்லை. இந்தக்கணத்தில் வெளிப்படும் அசோகமித்திரன் அவர் நுால்களில் எங்கும் தென்படக் கூடியவர் அல்ல.
இரண்டாவது முறையாக அழகிய சிங்கர் அ.மி.யை அவருடைய வீட்டிற்குத் தேடிச் சென்று பார்க்கிறார். கணையாழியில் குறுநாவல் போட்டிக்கு அ.சிங்கரும் ஒரு படைப்பை அனுப்பி இருக்கிறார். அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அதன்பொருட்டு அ.மி.யை காணச் செல்கிறார். அன்று அ.மி.க்கு காய்ச்சல். வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரைச் சந்திக்க வாய்க்கிறது. அ.சிங்கரின் குறுநாவலை வரிக்கு வரி அப்படியே மனப்பாடமாக அ.மித்திரன் சொல்கிறார். அதில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டாம் என்றும் அ.சிங்கரை வழியனுப்பி வைக்கிறார். ஒரு இளம் எழுத்தாளனின் எழுத்துக்களை அ.மி.எதிர்கொண்ட விதம் இதில் ஆச்சரியம் அளிக்கும் படி வெளிப்படுகிறது.
அசோகமித்திரனின் பிரமாதமான கதைகளில் ஒன்று மஞ்சள் கயிறு. அதை தியாகராஜன் என்ற பெயரில் அசோகமித்திரன், சி.சு.செல்லப்பாவின் எழத்து பத்திரிகையில் எழுதி உள்ளார். அசோகமித்திரன் என்ற பெயரில் எழுதியிருந்தால் சி.சு.செல்லப்பா அதை எழுத்துவில் பிரசுரம் செய்திருப்பாரா என்பது சந்தேகந்தான் என்கிறார் அழகிய சிங்கர்.
அன்றைய எழுத்தாளர்களிடையே இருந்த வீண் பிடிவாதங்களை இன்று நினைத்துப் பார்க்கும்போது அபத்தங்களாகவே தோன்றுகிறது. சி.சு.செல்லப்பாவிற்கு அசோகமித்திரனைப் பிடிக்காமல் போகிறது. பி.எஸ்.ராமையாவை புதுமைப்பித்தனை விட சிறந்த எழுத்தாளர் என்று சி.சு.செல்லப்பா மதிப்பிடுகிறார். அதை நிருபிக்க ஒரு புத்தகமே எழுதுகிறார். ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற தலைப்பில். பி.எஸ்.ராமையாவைப் பொருட்படுத்தி மிக விரிவாக எழுதியவர் சி.சு.செல்லப்பா மட்டுந்தான் என்று தோன்றுகிறது.
அசோகமித்திரன் ஒரு முறை அழசிய சிங்கரிடம் சொல்கிறார். “உங்களுக்கு ஏதாவது தண்டனை வேண்டுமா? சொல்லுங்கள். அந்த எழுத்தாளர் எழுதிய நாவலுடன் உங்களை அறையில் பூட்டி விடுகிறேன். அதைப் படிப்பதுபோல தண்டனை வேறு எதுவும் கிடையாது” என்று. யார் அந்த பிரபல எழுத்தாளர். எது அந்த பெரிய நாவல். நான் நினைக்கிறேன். அது சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகமாக இருக்கலாம் என்று.
இருபத்தைந்து வயதில் எழுத ஆரம்பித்து எண்பத்தைந்து வயது வரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார் அ.மி. இடைவிடாத அறுபது ஆண்டுகள். தமிழ் இலக்கியத்திற்காக தன் வாழ்நாள் முழுக்க செயல்கள் ஆற்றியவர். நாம் அவருக்கு என்ன செய்திருக்கிறோம். ஒரு சாகித்திய அகாடமி விருது வழங்கியதைத் தவிர. அவர் பெயரில் வேறு எந்த ஒரு அரசாங்க அமைப்போ, விருதோ, தெருக்கள் கட்டடங்கள் பெயரோ உள்ளதா என்ன? நினைக்கும்போது ஆபாசமாக இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு இணையானது ஒரு படைப்பாளியாக அசோகமித்திரன் செய்திருப்பது.
தாமோதர ரெட்டித் தெருவை அசோகமித்திரன் தெரு என்றே பெயர் மாற்றலாம். சென்னையில் சில இடங்களில் அசோகமித்திரனின் சிலைகளை நிறுவலாம். இனி புதிதாக ஏதேனும் எங்கேயேனும் நுால்நிலையங்கள் கட்டினால் அசோகமித்திரனின் பெயரை அதற்குச் சூட்டலாம். இதுதான் உண்மையில் தமிழின் மீது பற்றும் காதலும் உள்ளவர்கள் ஆற்ற வேண்டியவை. திராவிடத்தின் எரிச்சல் ஊட்டும் எதிர்மறை அம்சங்களில் இதுவும் ஒன்று. பிராமிணா துாக்கி கடாசு என்பதாகத்தான் மேதைகள் இங்கே எதிர்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பிராமணர்களும் “நான் பிராமிண்களை” ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் கதைகள் குறித்து அசோகமித்திரனுக்கும். க.நா.சுக்கும், சி.சு.செல்லப்பாவிற்கும் இருந்த எண்ணங்களைப் பார்க்கும்போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.
வெங்கடேஸ்வரா போளி ஸ்டோரில் ஒரே ஒரு மிளகாய்ப் பஜ்ஜியை வாங்கிவரச் சொல்லி விரும்பி சாப்பிடக்கூடியவர் அசோகமித்திரன் என்கிறார் அழகிய சிங்கர். இந்த பஜ்ஜி சமாச்சாரத்தை சாரு நிவேதிதாவும் பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை பஜ்ஜியை ருசித்து சாப்பிட்ட போது அசோக மித்திரன் சொல்கிறார். இந்த பஜ்ஜிக்கடைக்காரனுக்கு நோபல் கொடுக்கலாம் என்று. அது நோபல் பரிசு மீதான ஒரு விமர்சனம் என்கிறார் அழகிய சிங்கர்.
நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள தமிழ் ஆச்சரியம் அசோகமித்திரன். மெலிந்த உடல், அதிராத பேச்சு, கூர்மையான நகைச்சுவை உணர்வு. கைப்பின் கனிந்த வடிவமாக வெளிப்படும் சொற்கள் என்ற சித்திரம் இந்த நுாலில் மேலும் துலக்கமாக எழுந்து வருகிறது.
அசோகமித்திரனின் பூர்வீக நிலம் மயிலாடு துறை. தஞ்சாவூர்காரர்கள் நெல்லைக்காரர்கள் புதுமைப்பித்தனைக் கொண்டாடுவதைப்போல அ.மி..யை தாங்கியிருக்க வேண்டும். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சாமி கும்பிட அ.மி. சென்ற கதையைச் சொல்கிறார். இன்னும் சில நாட்கள் என்கிற அ.மி.குறுநாவல் நினைவுக்கு வந்தது. வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம் அக்குறுநாவலில் மையக்கருவாக இருக்கிறது.
வெங்கட் சாமிநாதன் அழகிய சிங்கரை தாக்கும் பாணி ஆச்சரியம் அளிப்பது. நேரில் பார்க்கும் போதும், தொலைபேசியில் பேசும் போதும் வெ.சா. உடனே கொதிநிலை அதிகரிக்க “உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்? என்றுதான் கேட்கிறார். அழகிய சிங்கர் அதை மறுக்கும்போதெல்லாம் “ஏன்யா பொய் சொல்றே அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும் உன் குருநாதர்தானே” என்று அடித்துச் சொல்கிறார். அ.மி. மீதும் ஞானக்கூத்தன் மீதும் வெங்கட் சாமிநாதனுக்கு இருந்த எரிச்சல் இதில் வெளிப்படுகிறது.“ உன் குருநாதர் கிட்டபேசு. என்கிட்ட ஏன் பேசுகிறாய்” என்று சீறி விழும் அளவிற்குப் போய்விடுகிறது.
இந்த நுாலில் சம்பத்தைவிடச் சிறந்த எழுத்தாளர் ஐராவதம் என்கிறார் அழகிய சிங்கர். ஐராவதம் எழுதிய படைப்புகள் ஒன்றையும் நான் இதுவரை வாசித்திருக்கவில்லை. அசோகமித்திரன் வெளிப்படையாகவே ஐராவதத்தைப் புகழ்ந்து பேசுகிறார். “ இவரால் நான் ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். என் குருநாதர் இவர்” என்று அசோகமித்திரன் சொல்லியதாக அழகிய சிங்கர் பதிவு செய்துள்ளார். ஐராவதம் நுால்கள் எதுவும் தற்போது பதிப்பில் உள்ளதா என்ற விபரம் தெரியவில்லை.
இறக்கும் வரை அ.மித்திரனுக்கு எழுதுவதன் மீது இருந்த ஈர்ப்பு ஆச்சரியம் அளிப்பது. தள்ளாத வயதிலும் இலக்கிய கூட்டங்களில் பங்கு கொள்கிறார். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விசேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஒருமுறை வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது வழங்கிய விழாவில் பேசிவிட்டு படியிறங்கி காரில் ஏறி அமர்ந்த அ.மி. இடைவிடாமல் பெருமூச்சுக்கள் விட்டு தவித்துப் போகிறார். இளைப்பு அவரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கிவிடுகிறது.
அசோகமித்திரனின் இறந்த தருணமும் அவரின் கதை நிகழ்வுகளைப் போல மிகச்சாதரணமாக நிகழ்ந்து விடுகிறது. ஒரு காலையில் ஏழுமணிக்கு சாப்பிட அமர்கிறார். உணவினை ஸ்பூனில் எடுத்து சாப்பிடுகிறார். ஸ்பூன் தரையில் “ணிங்“ என்று விழும் சத்தம் கேட்கிறது. அவ்வளவுதான். அசோகமித்திரன் பூமியில் இருந்து கிளம்பிச் சென்று விடுகிறார். கண நேரத்தில் மரணம். வலியோ ரணமோ ஏற்படுத்தாத விடைபெறல்.
மிகச்சிறந்த நினைவோடை நுால் என்று சொல்ல மாட்டேன். ஆனால் வாசிக்க வேண்டிய ஒன்று.
தமிழில் எழுத்தாளர் – ரசிகர் மனோநிலையில் எழுதப்பட்ட நினைவோடைகளில் முதன்மையானவை. சுந்தர ராமசாமியின் நினைவோடைகள்.
தனித்துவமானது ஜெயமோகனின் நினைவின் நதியில்.