“மயிர் மின்னிதழ் வழங்கும் – டி.எஸ்.சொக்கலிங்கம் விருது 2025”

 

இளம் படைப்பாளிகளை அறிமுகம் செய்வதும் அவர்களைத் தொடர்ந்து படைப்பாக்கச் செயல்பாடுகளில் குன்றாத ஊக்கத்தோடு ஈடுபாடு கொள்ளச் செய்வதும் மயிர் மின்னிதழின் நோக்கங்களில் ஒன்று.
அந்த வகையில் கவனம் பெறாத, ஆனால் கவனித்தே ஆகவேண்டிய படைப்பாளுமைகளை அறிமுகம் செய்யும் விதமாக இந்தாண்டு முதல் மயிர் மின்னிதழ் சார்பாக விருது ஒன்றினை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
படைப்பு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்கிற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.
அதிகம் வெளிச்சத்திற்கு வராத இலக்கியச் செயல்பாட்டாளர்களை அறிமுகம் செய்யவும், எளிய வகையில் அவர்களைக் கௌரவப்படுத்தவும் விரும்புகிறோம்.
”டி.எஸ்.சொக்கலிங்கம் விருது 2025” –என்ற விருதினை கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் திரு.க.சுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
க.சுப்பிரமணியன் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர். கவிஞராக தன் எழுத்துப்பயணத்தை ஆரம்பித்து, வைரமுத்து பாணியிலான கவிதைகளை எழுதிக் குவித்தவர்.
சினிமாக்கனவே இவரின் இலக்கிய உத்வேகத்தின் ஊற்றுமுகமாக இருந்தது. ஒரு மஞ்சள் பையில் மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு பஸ் ஏறியவர்.
சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அவை இதுவரை தொகுக்கப்படவில்லை. கன்னத்தில் அறைந்தாலும் என்கிற தலைப்பில் ஆனந்தவிகடனில் வெளிவந்த சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை அமைப்பு அந்த மாதத்திற்கான சிறந்த சிறுகதை எனத் தேர்வு செய்து பாராட்டுச் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி உள்ளது. தொண்ணுாறுகளின் கடைசியாக இருக்கலாம். இதுவே இவருக்குக் கிடைத்த முதல் பரிசு. அதே சிறுகதையை பின்னர் பாலுமகேந்திரா “கதை நேரம்” என்கிற தலைப்பில் தொலைக்காட்சித் தொடரில் குறும்படமாக எடுத்தார்.
சினிமாக்கனவு கலைந்து போனதில் ஓஷோவின் சொற்களுக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. நிலையற்ற வாழ்க்கையினை மேற்கொண்டவர். திருமணத்திற்கு முன்பு வரை எந்த ஒரு வேலையிலும் ஆண்டுக்கணக்கில் சிக்கி தேங்கி இருக்காத பறத்தல் மனநிலையில் வாழ்ந்து வந்தார். சென்னைக்குச் சென்ற பின்னர் தீவிர இலக்கிய அறிமுகமும் தீவிர இலக்கியவாதிகளின் நேரடி பரிச்சயங்களும் இவருக்கு வாய்த்தது.
இரண்டாயிரத்தை ஒட்டி சென்னைக்குச் சென்றவர். இன்று முழுக்கவே சென்னைவாசியாகி விட்டார். பிரபல மாத இதழ்கள், நாளிதழ்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது நக்கீரன் குழுமத்தில் உதவி ஆசிரியர்.
பிழைப்பின் பொருட்டு மொழிபெயர்க்க கற்றுக்கொண்டார். அதுவே இவரை தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளில் ஈடுபடச் செய்தது. இன்று இவரின் தமிழ்த் தொண்டு என்பது மொழிபெயர்ப்புத் துறையில் தான்.
இதுவரை இவர் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ள நுாற்கள்
1. பதினோரு நிமிடங்கள் – பால்லோ கோலா- எதிர் வெளியீடு 2012
2. நோர்வீஜியன் வுட் –ஹாருகி முரகாமி – எதிர் வெளியீடு -2014
3. தேவதைகளும் சாத்தான்களும் – டான் பிரவுன்- இரா.செந்தில் உடன் இணைந்து –எதிர்வெளியீடு-2022
4. மோடியின் இந்தியா – கிறிஸ்தோப் ஜாப்ரிலா- எதிர்வெளியீடு 2024
5. ஒற்றை ஓநாய் – ஜாக் லண்டனின் வாழ்க்கைக் கதை – மே பிளாக்கர் ப்ரீமேன்-அகல் வெளியீடு
6.அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் – இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள் -எதிர் வெளியீடு-
தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பேரிடர்களின் பருவம் – கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
இவரின் மொழி பெயர்ப்பு குறித்து தமிழ் கூறும் நல்லுலகத்தில் சாரு நிவேதிதா மட்டுமே சில வார்த்தைகளை எழுதியிருக்கிறார். வேறு எங்கும் இவரின் பங்களிப்பு சார்ந்து ஒரு வார்த்தையை நாம் இதுவரை எழுதியிருக்கவில்லை.
முதல் மயிர் மின்னதழில் இவரின் பேட்டி வெளியாகி உள்ளது.
தன்னை எங்கும் முன்னிலைப் படுத்திக்கொள்ளத் தெரியாதவர். கோபி கிருஷ்ணன் வாரிசு என்று சொல்லத் தகுந்தவர்.
ஆரம்பத்தில் சூர்யன் என்ற புனைப்பெயரில் கவிதைகள், கதைகள் எழுதினார். இப்போது தன்னுடைய சொந்தப் பெயருக்கே திரும்பி விட்டார்.
க.சுப்பிரமணியன் என்ற பெயரில் ஏற்கனவே இரண்டு ஆளுமைகள் இங்கே இருந்திருக்கிறார்கள்.
க.சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள்.
விருது குற்றாலம் சீசன் ஆரம்பித்து களைகட்டிய பின்னர் ஒருநாளில் வழங்கப்படும். அநேகமாக அது சூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் ஓருநாளாக இருக்கக் கூடும். விருது குறித்த பிற விவரங்களை விரிவாக பின்னர் அறிவிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *