“தாத்தா.. ஆயாவாண்ட இல்லாம இங்க வந்து நின்னுட்டு இருக்கியே.. ஏதாவது வேணும்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தான..?”
மெதுவாக என் பக்கம் திரும்பி கம்பை ஊன்றிக் கொண்டு என் முகத்தை பார்த்தார். வாயினுள் சொற்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன. சிமிட்டாமல் நெடுநரம் நிலை குத்திய பார்வையில் அவரது காலத்தை ஒட்டு மொத்தமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.
வயது 70க்கும் மேலானாலும் தோலில் தளர்வு இல்லை. கைகள் நரம்போடி உறுதியாக காட்சியளித்தது. உள்ளம் தளர்ந்து விட்டதன் அடையாளமாகவே அவர் கையிலிருந்த கம்பு தோன்றியது. சற்று தளர்வான வெள்ளை சட்டையும் வேட்டியும். இப்படி அவரைப் பார்ப்பதே வித்தியாசமாக இருந்தது. என் மனதில் பதிந்துள்ள தாத்தாவின் உருவம் ஒரு பச்சைத் துண்டை கோமணமாக கட்டிக் கொண்டு வயலில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்பவர். அவரது தலையில் தலைப்பாகையாக இருக்கும் வெந்நிற துணி, இடுப்பில் அணியும் வேட்டியாக, துண்டாக, போர்வையாக, விரிப்பாக மாறிக்கொள்ளக்கூடியது.
“ரொம்ப நேரம் ஒரே எடத்துல உக்காந்துக்கினு இருக்க ஒரு மாதிரி இருந்துச்சி.. இப்டி சும்மா வந்தேன்.. “
“வா தாத்தா.. அம்மா போய் சமையல் செஞ்சி எடுத்துட்டு வரணும். அங்க ஆயா தனியா இருப்பாங்க.. “
“பாத்த மொகம்மா ஒருத்தரு இப்படி போனாரு.. அவரு வருவார்ன்னு பாத்துட்டு இருக்கேன்..”
“நீ பாட்டுக்க யாரையாவது பாத்து போயிடாத.. ரொம்ப தெரிஞ்சவங்கள கூட இந்த கூட்டத்துல கண்டு பிடிச்சிட முடியாது.. இங்க ஜாக்கிரதையா இருக்கணும்”
“இவ்வளோ மக்க இந்த எடத்துலயே இருக்காங்களே…” என்றார் வியப்புடன்.
“ஆமா.. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்குல வருவாங்க.. ரோட்டுல எத்தனாயிரம் பேரு ஒவ்வொரு நாளும் போறாங்க வர்றாங்க..”
“பாத்தியில வளந்த நாத்துங்களாட்டும் மக்க..”
நான் ஒன்றும் சொல்லவில்லை. தாத்தா முகத்தில் புன்னகையுடன் பாதையில் செல்லும் மக்களைப் பார்த்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
பாட்டிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக இங்கு கீழ்ப்பாக்க கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அம்மா பாட்டியை பார்த்துக் கொள்ள வந்திருந்தார். இரவு முழுக்க மருத்துவமனையிலிருக்கும் அம்மாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் மாம்பலத்தில் வேலைக்காக தங்கியிருந்த வீடு உதவியாக இருந்தது. சிறிது நேரம் தூங்கி மதியத்திற்கு முன் இருவருக்கும் சாப்பட்டுடன் மருத்துவமனைக்கு திரும்பிட வேண்டும்.
டெஸ்ட்டுக்கு மேல் டெஸ்டாக எடுத்துக் கொண்டிருந்தனர். சிறுநீரக செயல்பாட்டு குறைவுக்கான சிகிச்சை செய்ய முடிவெடுப்பதற்கு இதய மருத்துவரின் கருத்தினை கோரியிருந்தனர். ஊரில் நாட்கள் நீளவே தாத்தா இருப்பு கொள்ளாமல் இங்குவந்து மருத்துவமனையில் பாட்டியுடனே தங்கியிருக்கிறார். அவர் வந்ததிலிருந்து இந்த கூட்டத்தில் ஒவ்வொரு முகங்களையும் உற்று பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு வேண்டாத அவஸ்தையாகிவிட்டது. அவர் ஊரைவிட்டு வெளியே செல்வதே எதாவது சுப துக்க நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான். அதுவும் கடந்த ஏழெட்டு வருடங்களாக செல்வதில்லை, அப்பா பார்த்துக் கொள்கிறார். ஊருக்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே அவரது இளைப்பாறல்.
கடந்த நான்கு நாட்களாக இந்த மக்களைப் பார்த்து தீரவில்லை அவருக்கு. பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக தோண்டியெடுத்து, ஒவ்வொருத்தராக நினைவு கூர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.
“டேய் சுப்பு, எரவானம் ராமய்யா ரெண்டாவது மருமக சைதாப்பேட்டைல இருந்து தான எடுத்தாங்க.. அவங்கள இந்த ஊர்ல பாத்திருக்கியா..?
“எந்த ராமய்யாவ சொல்றீங்க..”
“அதான் அவன் பேரன் ஒன்னா கூட கோலியடிச்சிட்டு திரிவானே.. ரெட்ட சுழி செம்மட்ட தலயன்..”
“ராமு அவங்க அம்மாவ சொல்றீங்களா.. நம்ம யாருனே அவங்களுக்கு தெரியாதே.. “
“நம்ம ஊருல பொண்ணு கொடுத்துருக்காங்களே ஒரு எட்டு போயி பாத்துட்டு வரலாமா..”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“சொக்கம்மா ரெண்டாவது பொண்ணு, ஆஸ்பித்திரில வேல செஞ்சிட்டிருந்தவள, ரவுண்ட் பங்களா தெருப்பையன் கூட்டிக்கினு போயி இங்கினதா வச்சி வாழறதா சொன்னாங்க..”
…..
“நம்ம வயித்தியர் பேரன் இங்கினதா மெட்ராஸு கலேஜுல டாக்டருக்கு படிக்கிறானாமே..”
“தாத்தா.. பேசாம இரு.. இங்க ஆயாவுக்கு வைத்தியம் பாக்க வந்திருக்கோமா.. இல்ல பைய தூக்கிக்கினு ஊரு சுத்த வந்திருக்கோமா..?“
“எவ்வளவு நேரம் இங்கினயே உக்காந்துக்கினு இருக்கிறது.. தெரிஞ்ச மொகத்த பாக்காம போனா நல்லா இருக்காதே..”
“என்ன தெரிஞ்ச மொகம்.. ஒரு வாட்டி பாத்துட்டா தெரிஞ்சவங்களா..? சரி.. எப்படி அவங்க இருக்கிற வீட்ட கண்டு பிடிப்பீங்க..”
“கேட்டா சொல்லப் போறாங்க..”
“தாத்தா சும்மாயிருங்க.. இதென்ன நத்தாநல்லூர் ஊத்துக்காடுனு நெனச்சீட்டிங்களா.. நூறு வருஷத்துக்கு முன்னாடியுள்ள கதைய வயக்காட்டுலையும் தோப்பிலையும் பேசிக்கிட்டு உக்காந்து இருக்கிறதுக்கு.. இங்க எத்தன லச்சம் பேரு இருக்காங்க.. ஒழுங்கா அட்ரஸு இருந்தாலே கண்டுபிடிக்க முடியாது.. புதுசு புதுசா ஒவ்வொரு நாளும் வீடுங்க மொளச்சிக்கிட்டு இருக்குது.. ஊருங்கலே திடீர்னு புதுசா உருவாகிவருது.. அப்படியே அட்ரஸு தெரிஞ்சி போனாலும் அவங்களுக்கு நம்மல ஞாபகம் இருக்குமா இல்லையானே தெரியாது.. மொதல்ல அவங்க இப்ப உசுரோட இருக்காங்களானே தெரியாது..”
“டேய் டேய்.. வாய்ல வர்ற வார்த்தைய பாரு.. நீங்களா என்னத்த படிச்சீங்க.. கொழா மாட்டிக்கிட்டா போதுமா, வணக்கமா பேசத் தெரியனும்..”
“செரி வைத்தியர் பேரன நீ பாத்திருக்கியா.. வைத்தியரே செத்து போயி பத்து வருஷம் இருக்கும், எம் ஜி ஆர் போன வருஷம் அவரு போனாரு.. செங்கல்பட்டுல இருந்து வாலாஜபாத்துல கிளினிக் வச்சி வந்து போயிட்டு இருந்தாரு.. இப்ப அவரோட பேரன தேடிக்கினு போகனும்னு சொல்றீயே.. அவனுக்கு நம்மல தெரியுமா..”
“டேய்.. அவருக்கு பேரன் பொறந்த மறுநாள் என் கிட்ட தான்டா கழுதப்பாலு வேணும்னு கேட்டாரு.. பம்ப்செட்டுக்கு டீசல் வாங்கப் போனவன் டப்பாவ அங்கனயே போட்டுட்டு நம்ம ஊரு வண்ணாத்தி வீட்டுக்கு போனேன். அங்க கெடைக்கலேனு சைக்கிள்ளயே தாங்கிக்கு போயி வாங்கிக்கினு அங்கிருந்து நேரா செங்கல்பட்டுக்கு போயி அவரு வீட்டுல குடுத்துட்டு வந்தேன் டா.. உனக்கு எங்க தெரிய போகுது..”
எனக்கு எரிச்சலாகிவிட்டது. “செரி போயி பாத்துட்டு விருந்து சாப்டுட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டேன்.
மறு நாள் காலையில் மருத்துவ மனைக்கு செல்லும் போது தாத்தாவை காணவில்லை என்று அம்மா பதறிக் கொண்டிருந்தார்.
ஒரு வேலை வைத்தியர் பையனை தேடிக்கொண்டு சென்று விட்டாரோ என்று தோன்றியது.
நான் அடையாளங்களை சொல்லி விசாரிக்கும் போது மருத்துவ மனைக்கு வெளியே இட்லி கடை வைத்திருக்கும் அம்மா “இங்கின தான் ஒரு பையன நிப்பாட்டி அவன கெளம்ப விடாம பேசிக்கிட்டே இருந்தாரு.. ரயில்வே ஸ்டேஷனுக்கா போயி பாருங்க.” என்றாள்.
நான் சேத்பேட் ரயில்வே ஸ்டேஷன் வழியில் ஓடினேன். கொஞ்ச தூரம் சென்றதுமே ஒரு ஆட்டோக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்து விட்டேன். ஒன்றுமே பேசாமல் அவரைக் கையைப் பிடித்து கூப்பிட்டுக் கொண்டு பாட்டியிருந்த வார்டிற்குள் வந்துவிட்டேன்.
தாத்தாவைப் பார்த்ததும் அம்மாவின் பதற்றம் தணிந்தது. பாட்டி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். “மாமா சொல்லாம எங்க போயிட்டீங்க.. இதென்ன நம்ம ஊருன்னு நெனச்சீங்களா.. திக்கு தெச புரியாமாட்டேங்குது.. காணோம்னா எங்க போயி தேடரது..”
தாத்தா மெதுவாக புன்னகைத்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
“நம்ம ஊருக்கு சித்திர திருனாவுக்கு பொறிக்கடல போடுவானே ஒரு தெக்கத்தி ஆளு, தெரியுமா.. அவன் சாடையா தெரிஞ்சிது அதான் விசாரிச்சேன்..”
“கண்டு பிடிச்சீட்டிங்களா..” என்றேன் நான் வெளிக்காட்டிக் கொள்ளாத எரிச்சலுடன்.
“இவனும் தெக்கத்திக்காரன் தான்.. ஆனா பதில் சொல்ல எங்க நேரம் இருக்கு. உச்சி வெய்யில்ல பாற மேல நடக்கிற மாதிரி துள்ளி குதிச்சி ஓடுறான் பய..”
“எல்லாரும் சாவுகாசமா ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தா பொழப்ப எப்புடி பாக்கிறது..”
“நல்ல பய தான்.. மோட்டாரு கம்பெனில வேல பாக்கிரானாம்.. கையில காச வச்சிட்டு போறான்..”
அந்த இரண்டு ரூபாய் தாளை பாத்தவுடன் எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது..
“உன்ன பிச்ச எடுக்கிறேனு நெனச்சிக்கிட்டு குடுத்துட்டு போறான்.. கீழ வீசு மொதல்ல..” என்று கத்தினேன்.
அம்மா “ஏன் இப்படி மானத்த வாங்கி வக்கறீங்க.. பேசாம வீட்டுக்கு கெளம்பி போங்க.. இன்னும் ரெண்டு நாள்ல அத்தைய கூட்டிக்கிட்டு பின்னாடியே வர்றேன்.. அங்க உங்களுக்கு பேச்சு தொணைக்கு ஆள் இருக்கும்.. கழனில கதிர் வைக்கிற நெல்லுங்கள பாத்துட்டு இருக்கலாம்“
தாத்தா எதையும் காதில் வாங்கிக் கொள்வது போல் தோன்றவில்லை. அந்த ரூபாய் தாளை கைக்குள் சுருட்டிப் பிடித்துக்கொண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தார். பாட்டி கண் விழித்து தெளிவடைந்ததும் சொல்லிக்கொண்டு கிளம்பினோம். தாத்தாவின் சட்டை பையில் பணத்தை திணித்து “பக்கத்திலயே இருங்க.. “ என்று அழுத்தி சொல்லிவிட்டு நகர்ந்தாள் அம்மா.
மதியம் தனியே ரயிலில் ஏறி மருத்துவமனைக்கு வர பழகியிருந்தாள். நான் மறுநாள் காலை எனது எம் எய்ட்டியில் வந்து சேர்ந்தேன். வரும் போதே எனது கண்கள் தாத்தாவை வழியில் தேட ஆரம்பித்திருந்தது. வழியில் எங்கும் அவரைக்காணாதது மேலும் பதற்றத்தையே ஏற்படுத்தியது.
உள்ளே சென்றதும் அம்மா “தாத்தா தனியா டீ கடைக்கு போயிருக்காருடா.. பையன் வந்திருவான் கொஞ்சம் நேரம் இருங்கன்னு சொன்னத கேக்கல.. நீ போயி அவர கூட்டிட்டு வந்திடு” என்றாள்.
‘தினமும் இதே வேலையாக போச்சு.. இந்த வயதிற்கு மேல் அவருக்கிட்ட என்னத்த சொல்றது. நல்ல வேலையாக வயதான காலத்தில் அவரை எவரும் கடத்திக் கொண்டு போய்விட மாட்டான். அப்படியே போனாலும் இவரது பேச்சின் தொந்தரவினால் கடத்திய இடத்திலேயே கொண்டு வந்து விட்டுவிட்டு போவான்’ என்று நினைத்ததும் உருவாகிய முறுவல் பாதியிலேயே நின்று விட்டது. எதற்காக மனித முகங்களை இவர் தேடிக் கொண்டிருக்கிறார். அத்தனை முகங்களையும் அறிந்து கொள்ள முடியுமா என்ன. அசுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நகரத்தில் ஒரு வாரத்திற்கு முன் பார்த்தவனைக்கூட அவனே வந்து அறிமுகம் செய்து கொண்டால் ஒழிய யாருக்கும் தெரிவதில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட வருடக்கணக்கில் அறிமுகம் இல்லாமல் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறை வீட்டினை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். இங்கு மக்கள் கீழே விழுந்த இனிப்பின் மீது ஈக்களை போல் மொய்க்கிறார்கள். வேகமாக கையை வீசி விரட்டினால் மொத்தமாக மேலெழுந்து ஆகாயத்தில் ஒரு வட்டமிட்டு மீண்டும் அத்தனை ஈக்களும் அததற்கு வசதியான இடத்தில் அமர்ந்து கொள்வது போல் மக்களும் வேறு வேறு இடத்தில் மாறிவிடுவது நடக்கிறது. ஈக்களைப் போல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா.? கடந்த இரண்டு வருடங்களில் மூன்று முறை வீடு மாறியது நினைவிற்கு வந்தது. ஒருவரை ஒருவர் தெரியாமல் இருப்பதும் தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் இருப்பதும் தேவையற்ற அச்சத்தை புதியவர்களிடம் உண்டாக்கி விடுகிறது.
தூரத்தில் தெரிந்த பக்கச் சுவர்களற்ற கேண்டீனில் கூட்டம் மொத்தமாக சேர்ந்து ஒரு பெரும் ராட்சத உருவம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. அது பல தொண்டைகளின் வழியே ஒரே நேரத்தில் தனக்குள்ளே உரையாடிக்கொண்டிருந்தது.
தாத்தாவின் கையிலிருக்கும் பட்டையற்ற வழுவழுப்பான நுணா மரத்தடியையே என் கண்கள் தேடியது. கேண்டீனைத் தாண்டி சிறிது தூரத்தில் அவர் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. நான் கூப்பிடும் தூரத்திற்குள் வருவதற்குள் தாத்தா அவரது சட்டைப் பையிலிருந்து எதையோ எடுத்து தந்ததும் அவன் வேகமாக சென்று கூட்டத்தினுள் மறைந்தான்.
நான் அவரிடம் நடந்து செல்லும் வரையிலும் தாத்தாவின் கண்கள் கூட்டத்தினுள் சென்றவனையே தொடர்ந்து கொண்டிருந்தது.
“தாத்தா டீ குடிச்சாச்சா.. நான் வர்றதுக்குள்ள என்ன அவசரம்.. படியிறங்கி இவ்வளோ தூரம் நீ வரணுமா..”
“ம்ம் குடிச்சாச்சி..”
“வாங்க போலாம்..”
“இரு பச்சக்குட்டக்காரரு பையன பாத்தேன்.. டீ குடிக்க போயிருக்கான் வரட்டும்..”
“யாரு.. நம்ம ஊருக்காரரா..”
“இல்ல சீவரம் ஆளு.. வால்ஜாபாத்துல தைய தொழிலு. தொழிலு மாறினாலும் இப்பவும் அதே பச்ச குட்ட தான்.. அவரோட மூனாவது பையன். கரன்ட்டு வேல செய்யிறானாம்..” அதற்குள் அவனை தவற விட்டிருந்தார்.
சிறிது நேரம் ஆகியும் யாரும் வராததினால் “அந்த ஊருல இருந்து இங்க வந்து வேல செய்ய்யிறாரா..? சரி அவருக்கு வேல இருக்கும்.. நாம போலாம் வாங்க..”
“இல்ல வரேனு சொன்னானே.. காசு தரணும்..”
“என்ன காசு.. “
“சில்ற இல்லன்னு சொல்லி இருவது ரூபா வாங்கிக்கினு போனான்.. டீ குடிச்கிட்டு மிச்சம் கொண்டு வர்றேன்னு..”
“சரி தான்.. யாருனே தெரியாம காச குடுத்தாச்சா..”
“தெரிஞ்ச மொகம் தான்..”
“இத்தன நாள் கழிச்சி உன்ன கண்டு பிடிச்சி டீ குடிக்க காசு கேக்க வாறாங்களா..? இங்கெல்லாம் எத்தன பேரு இந்த மாதிரி சுத்திட்டு இருக்கானுங்க. உன்கிட்ட பேச்சி குடுத்து இருக்கிறத வாங்கிக்கினு போயிட்டான்..”
தாத்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கு உண்மையிலேயே தெரியாதவனிடம் இருபது ரூபயை கொடுத்து விட்டோமா என்று நினைத்தார். அந்த ரூபாய்க்கு சென்னையிலிருந்து வீட்டிற்கு பஸ்ஸில் சென்று விட முடியும். ஏறக்குறைய இரண்டு லிட்டர் டீசல் வாங்கிவிட முடியும். அவரது முகம் கண நேரத்தில் வாடிவிட்டது போல் தோன்றியது.
“சரி வாங்க பரவாயில்ல.. போயிட்டு போகுது.. அம்மா கிட்ட சொல்லாதீங்க..” தாத்தாவின் செயலுக்கு எதிர்வினையாக ஒன்றை அவர் அடைந்துவிட்டார் என்பதினால் எனக்கு உண்மையில் சற்று நிம்மதியாக இருந்தது. இங்கிருப்பவர்களை அவர் சரியாக புரிந்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பு. இழந்த பணத்திற்காக தன்னையே நொந்து கொண்டு இனிமேல் ஒரிடமாக இருந்தால் நல்லது. ஆனால் அந்த கண நேர நிம்மதி என்னை ஏனோ அமைதியிழக்கச் செய்தது.
அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவரது முகத்தில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தது. அவனும் இவரிடம் திருடுவதற்கு என்று திட்டமிட்டு வந்தவனாக இருக்க எந்த வாய்ப்பும் இல்லை. பெரு நகரத்தின் அவசரத்தை கவசமாக போட்டுக் கொள்ள இருக்கும் வாய்ப்பினை திடீரென்று உணர்ந்து தேடி வந்து பேசியவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டுவிட்டிருப்பான்.. தான் பெரும் சாகசத்தை செய்து விட்டதாக அவன் ஏமாற்றிய பணத்தை பற்றி நண்பர்களுடன் பேசி பெருமிதம் கொள்வான் அவ்வளவுதான். இதில் இருக்கும் கிளர்ச்சிக்காக மேலும் இது போல் அவன் முயலவும் கூடும்.
தாத்தாவை திரும்பிப்பார்த்தேன். அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது போல் தோன்றியது. எப்போதும் போல் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
“என்னாச்சி தாத்தா.. அந்த ஆள் வராறா.. காசு கெடச்சிருச்சா” என்றேன் கேண்டினுக்குள் கண்களை அலைந்து கொண்டே.
சிறிது நேரம் கழித்து “அதே மொகம் தான்..” என்றார்.
“சரி வாங்க போகலாம்..”
அவர் அந்த பணத்தை மறந்து விட்டார், அதைப்பற்றி பேசவேயில்லை. வரும் வழியில் எப்போதும் போல் முகங்களை புன்னகையுடன் பார்த்து தேட தொடங்கிவிட்டார்.