திண்டுவின் பயணங்கள் – 18

பனி பனி பனி.  பனி மட்டுமே.  நீல ஒளியுடன் நீலப் பனி.  பனியின் ஆழத்தில் நீல நீர்.  நீர் நீர் நீர்.  நீர் மட்டுமே.  அவர்கள் சென்று கொண்டே இருந்தார்கள்.

யுரேனசின் பனிக்கட்டித் தரையை எப்போது அவர்கள் விண்கலம் தொட்டது என்று திண்டுவும் முத்துவும் அறியவில்லை.  அவர்கள் விண்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணாடியில் மென் நீல நிறம் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது.  பிறகு சற்று அடர்ந்த நீல நிறம் தெரிந்தது.  அதில் ஏற்பட்ட சலனத்தைக் கொண்டு அது நீர் என்று திண்டு ஊகித்தான்.

ஈர்ப்பு விசையற்ற விண்ணில் அவர்கள் இருந்தபோது அவர்கள் விண்கலத்திற்குள்ளாக மிதந்து கொண்டிருந்தார்கள்.  ஆனால் ஒரு கணத்தில் அவர்கள் விண்கலத்தினுள் அதன் தரையில் இருந்த இருக்கைகளில் சென்று விழுந்தார்கள்.  அப்படி மெதுவாக விண்கல இருக்கையில் சென்று விழுந்த சமயத்தில் தான் யுரேனசின் ஈர்ப்பு விசைக்குள் வந்திருக்க வேண்டும் என்று திண்டு நினைத்தான்.  ஆனால் விண்கலம் எப்போது யுரேனசின் தரையைத் தொட்டது என்று அறிய முடியவில்லை.

பக்கத்து அறையின் கதவு திறந்தது.  இயந்திர மனிதன் உள்ளே வந்தான்.  அவன் இப்போது மிதந்து வரவில்லை.  நடந்தே வந்தான்.

”இன்னும் இரண்டு யுரேனஸ் நாட்களில் நாம் நம் நகரை சென்றடைய இருக்கிறோம்” என்றான் அவன்.

”இரண்டு யுரேனஸ் நாட்களா?” என்றான் திண்டு.

”ஆம்.  பூமியின் ஒரு நாளின் முக்கால் பங்கு யுரேனசின் ஒரு நாள்.  அதாவது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணிநேரம் யுரேனசின் ஒரு நாள் என்பது 17 மணி நேரம் 14 நிமிடங்கள்” என்றான்.

”இப்போது நாம் எங்கே இருக்கிறோம்? யுரேனசில் இறங்கி நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோமா? என்று முத்து கேட்டான்.

”நாம் யுரேனசின் வெளித் தரையைக் கடந்து விட்டோம்.  இப்போது தரைக்கு வெகு கீழே சென்று கொண்டிருக்கிறோம்” என்றான் இயந்திர மனிதன்.

”யுரேனசின் தரையிலிருந்து நீண்ட தூரம் ஆழத்திற்கு உறைப்பனி மட்டுமே இருக்கிறது.  அதன் கீழாக மேலும் மிக நீண்ட ஆழத்திற்கு நீர் மட்டுமே இருக்கிறது.  அதாவது பெருங்கடல் இருக்கிறது.  நாம் பெருங்கடலைக் கடந்து கீழே செல்ல ஒன்றரை நாட்கள் ஆகும்” என்று மேலும் சொன்னான்.

”அதற்கு கீழே?” முத்து கேட்டான்.

”அதற்கு கீழே மண் இருக்கிறது.  அங்குதான் நம் நகர் இருக்கிறது.  பனியின் கீழ் நீர்.  நீரின் கீழ் மண்”

”மண்ணின் கீழே?”

”மண்ணின் கீழே வானம் இருக்கிறது” என்றான் இயந்திர மனிதன்.

திண்டு திகைக்க இயந்திர மனிதன் ”கர் கர்ரரர் ர்ர்” என்று சிரித்தான்.

”மண்ணின் கீழே வானம் இருக்கிறது என்றால் அது பூமியின் மறுபக்கம் போல யுரேனசின் மறுபக்கமா?” திண்டு கேட்டான்.

”இல்லை.  அது யுரேனசின் மையத்தில் இருக்கும் வானம்” என்றான் இயந்திர மனிதன்.

திண்டு மீண்டும் திகைத்தான்.

”நம் நகருக்குத் தானே செல்கிறோம்.  அங்கு எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள்” என்றான் இயந்திர மனிதன்.

”நம் நகர் என்று சொல்லாதீர்கள்.  எங்களுடைய ஊர் எல்லைநல்லை” என்றான் முத்து.

”ஓ…அப்படியா? இந்த நகரை நீ கண்ட பிறகு உன் எல்லைநல்லை என்ன? பூமியைக் கூட நினைக்க மாட்டாய்.  ”

முத்துவிற்கு கோபமாக வந்தது.  ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.

”யுரேனக தேசிய நெடுங்குழி 17-ல் சென்று கொண்டிருக்கிறோம்” அந்த அறையில் அறிவிப்பு ஒலித்தது.  இயந்திர மனிதன் உடனே அந்த அறையில் இருந்து சென்று விட்டான்.  அவன் சென்ற பிறகு அவன் வந்த அறையின் கதவு மூடிக் கொண்டது.

”திண்டு இங்கு என்ன தான் இருக்கிறது? உறைபனியைத் தவிர? என்றான் முத்து.  பிறகு ”எனக்கு நாக்கு என்ற ஒன்று இருக்கிறாதா என்றே சந்தேகமாக இருக்கிறது.  சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகின்றன” என்றான்.

”நாக்கு இருப்பதால் தானே பேசுகிறாய் முத்து.  நீ அதை உணரவில்லையா?” என்று திண்டு கேட்டான்.

”ருசியான உணவை உண்டால் தான் என்னால் நாக்கு இருப்பதை உணர முடியும்.  வெறுமனே பேசுவதற்காகவா நாக்கு இருக்கிறது? என்றான் முத்து.

திண்டுவிற்கு முத்துவைப் பார்க்க பாவமாக இருந்தது.

”இந்த இயந்திர முட்டாள்கள் எதையும் உண்பதே இல்லை.  வெறுமனே கதிர் வீச்சைப் பெற்றுக் கொள்கிறார்கள்.  அது தேவையான சக்தியைத் தந்து விடுகிறது.  பசிப்பதே இல்லை.  இருந்தாலும் உணவை சுவைத்து உண்பது தானே அறிவுடைய செயல்? பசி போனால் மட்டும் போதுமா? பசிக்காக உண்பவன் மூடன் ருசிக்காக உண்பவனே ஞானி என்ற பழமொழியை ஒரு சிற்றறிஞர் கூறியுள்ளார்” என்றான் முத்து.

”அப்படியா? யார் அந்த சிற்றறிஞர்?” திண்டு கேட்டான்.

”அவர் எல்லைநல்லை ஊரைச் சேர்ந்தவர்.  அவருடைய பெயர் முத்து.  அதாவது நான் தான்” என்றான் முத்து.

திண்டு சிரித்தான்.  ”சிற்றறிஞர் என்றால் என்ன பொருள் தெரியுமா முத்து? என்று திண்டு கேட்டான்.

”தெரியாமலா சொல்கிறேன்.  சிறிய வயதுடைய அறிஞர் சிற்றறிஞர்.  ஏன் தவறா? என்று கேட்டான் முத்து.

”தவறு ஒன்றுமில்லை முத்து.  சரி சிற்றிஞர் முத்து வேறு என்ன பழமொழியெல்லாம் கூறி இருக்கிறார்? என்று கேட்டான் திண்டு.

”அவர் ஏராளமான பழிமொழிகளை உருவாக்கி இருக்கிறார்.  இன்னொன்று சொல்கிறேன் கேள்

”கூப்பிடாத வாயை மன்னித்துவிடு.  சாப்பிடாத வாயை மன்னிக்காதே”

”இது நன்றாக இருக்கிறது முத்து” என்றான் திண்டு.

”உண்பதற்காகவே வாழ வேண்டும்.  தின்பதற்காகவே திகழ வேண்டும்”

”அருமை” என்றான் திண்டு.

”இப்படி எத்தனையோ இருக்கிறது” என்றான் முத்து.

பிறகு அவர்கள் கண்ணாடியின் வழியாக ஆழப் பெருங்கடலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  முத்து சற்று நேரத்தில் உறங்கி விட்டான்.

வெகுவேகமாக ஆழம் நோக்கி சென்று கொண்டிருந்த போதும் கீழே செல்லும் உணர்வு ஏன் ஏற்படவில்லை என்று திண்டுவிற்கு வியப்பாக இருந்தது.  அத்துடன் இவ்வளவு ஆழத்திலும் பெருங்கடல் எப்படி காணும் அளவிற்கு ஒளியுடன் தெரிகிறது.  முற்றிலும் இருளாக இல்லையே. ஒளி எவ்வாறு கிடைக்கிறது?

நீரின் அடியில் நிலம் இருக்க முடியும்.  ஆனால் அதற்கும் அடியில் வானம் எப்படி இருக்க முடியும்? யுரேனஸ் கோளின் மையத்தில் வானம் இருக்கிறது என்றானே இயந்திர மனிதன்.  அது எப்படி இருக்க முடியும்? அந்த வானத்தில் என்ன இருக்கும்?

இப்படி பல கேள்விகள் திண்டுவின் மனதில் தோன்றின.  அவற்றின் விடைகளை யோசித்து கற்பனை செய்து பார்க்க முயன்றான்.  அவனுக்கு குழப்பமாகவே இருந்தது.  சற்று நேரத்தில் அவனும் உறங்கி விட்டான்.

திண்டுவிற்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது.

அவனும் முத்துவும் யுரேனசின் மேற்பரப்பில் பனி வெளியில் நின்றிருந்தார்கள்.  நீல நிற ஒளிக்கற்றைகள் எங்கிருந்தோ அந்த இடத்தில் வந்து விழுந்தன.  பிறகு நீலம் நிறம் மாறி செந்நிற ஒளிக் கற்றைகள் தோன்றின.  அவை எங்கிருந்து வருகின்றன என்று திண்டு அறிந்து கொள்ள முயன்றான்.  பார்வை மெதுவாக அவனுக்குத் துலங்கியது.  இப்போது அவனால் நன்றாகப் பார்க்க முடிந்தது.  அந்த ஒளிக்கற்றைகள் அவர்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் தூரத்தில் இருந்த மலைகளில் இருந்து வந்தன.

அவர்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றி எங்கும் பனி மட்டுமே இருந்தது.  அதைத் தவிர ஒன்றுமில்லை.  வானில் விண்மீன்களைக் காண முடிந்தது.  காற்று இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.  இங்கு தான் காற்றும் உறைந்து பனியாக அமர்ந்து கொள்கிறதே என்று திண்டு நினைத்தான்.

”முடிவில்லாப் பனி” என்றான் முத்து.

”ஆமாம் முத்து” என்றான் திண்டு.

”அதோ” முத்து வானைக் காட்டினான்.

திண்டு அப்போது தான் அதை கவனித்தான்.

”நிலாவின் ஒவ்வொரு பிறையையும் வரிசையாக வைத்தது போல் இருக்கிறது” என்றான் முத்து.

”ஆம் முத்து.  இவை உண்மையிலேயே நிலவுகள் தான்.  யுரேனசிற்கு 28 நிலவுகள் இருக்கின்றன” என்றான் முத்து.

”அப்படியா? உனக்கு எப்படித் தெரியும்?” என்று முத்து கேட்டான்.

”இயந்திர மனிதன் சொன்னான்” என்றான் திண்டு

”எப்போது”

”நாம் விண்ணில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுதான்.  அப்போது நீ உறங்கிக் கொண்டிருந்தாய்” என்றான் திண்டு.

”ஓ..” என்று சொன்ன முத்து அந்த நிலவுகளை எண்ணத் தொடங்கினான்.  பிறகு ”பன்னிரெண்டு மட்டும் தான் இருக்கிறது?” என்றான்.

”அவை யுரேனசின் மறுபக்கத்தில் தெரியக் கூடும்” என்றான் திண்டு.

திண்டுவிற்கு கனவு கலைந்தது.

அவன் முத்துவைப் பார்த்தபோது அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் கண்ணாடியில் பார்த்தான்.  நீல நீர் மெதுவாக பழுப்பு நிறமாக மாறத் தொடங்கியது.  விண்கலம் பெருங்கடலின் அடியை எட்டி விட்டாதா என்று அவனுக்கு அய்யம் ஏற்பட்டது.

——

கைம்மாவிற்கு விடை கொடுத்து அனுப்பிய மறுநாள் அச்சு தன் நண்பன் மணிவாசகத்திற்கு கடிதம் எழுதினான்.

”அன்புள்ள மணிவாசகம்,

நீ நலமாக இருப்பாய் என்று எண்ணுகிறேன்.  நீ கேட்ட படி நண்பர் கைம்மாவிற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து விட்டேன்.  அவர் வெற்றி அடைய வாழ்த்தி விடை கொடுத்தேன்.  உன் நண்பரான அவர் இப்போது எனக்கும் நல்ல நண்பர் ஆகி விட்டார்.

நான் உனக்கு எழுதும் இந்த கடிதத்தை எப்போதும் போல ரகசியமாக வைத்துக் கொள்வாய் என்று நம்புகிறேன்.  கைம்மா கூறிய எல்லாமே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.  கொள்ளையர்கள் விண்ணில் பறக்கும் அளவுக்கு திறமைசாலிகள் ஆகிவிட்டார்கள் என்றால் அதை முறியடிக்க நாம் எப்படி இருக்க வேண்டும்? அரசை நடத்தும் நாம் எவ்வளவு திறமைசாலிகளாக இருக்க வேண்டும்? இப்போது நாம் அப்படியா இருக்கிறோம்? இப்படி இருந்தால் நாம் எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?

இரண்டு மாதங்கள் முன்பு நான் என் வீரர்களுடன் ஒரு கொள்ளைக் கூட்டத்தினரை மிசிறி நாட்டின் எல்லை வரை விரட்டிச் சென்று பிடித்தேன்.  இப்போதோ விண்வெளிக் கொள்ளையர்கள் குறித்து கேள்விப் படுகிறேன்.  இவர்கள் மிசிறி நாட்டைக் குறி வைத்தால் எப்படி எதிர் கொள்வது?

சரி பார்ப்போம்.  பதில் கடிதம் எழுது மணிவாசகம்.  

இன்னொரு விஷயம், கைம்மா, திண்டு, முத்து போன்ற நல்லவர்களும் திறமைசாலிகளுமான நண்பர்களை எதிர்காலத்தில் நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அப்போது தான் மிசிறி நாடு மட்டுமல்லாமல் எல்லா நாடுகளும் நன்றாக இருக்க முடியும்.  

திண்டுவும் முத்துவும் விரைவில் மீண்டு வருவார்கள், கைம்மா அதை சாதிப்பார் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு அன்புடன்

உன் நண்பன்

அச்சு என்கிற அஷ்வந்.

மிசிறி நாட்டின் இளவரசன் அச்சுவின் கடித்திற்கு மணிவாசகம் பதில் எழுதினான்.

அன்புள்ள அச்சு,

உனக்கு என் நன்றி.  நீ எப்போதும் உதவக் கூடியவன் என்பதை அறிவேன்.  கைம்மா, திண்டு உள்ளிட்ட நண்பர்கள் குறித்து நீ சொன்ன கருத்துகளுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

இன்று வரை இங்கு நான் வணிகனாகவே அறியப்படுகிறேன்.  நான் மிசிறி நாட்டின் தலைமை ஒற்றன் என்பது யாருக்கும் தெரியாது.  கைம்மாவிற்குக் கூட தெரியாது.  கைம்மா என்னை சந்தித்தபோது அவரும் தான் எல்லைநல்லை செல்வதைப் பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ என்னிடம் எதுவும் கூறவில்லை.  நான் கைம்மா பற்றிய விவரங்களை கனசேகரன் தினசேகரன் என்ற பேரில் பாவலர்கள் போல வேடமிட்ட இரண்டு ஒற்றர்களை அனுப்பி தெரிந்து கொண்டேன்.  அவர்கள் இருவரும் கைம்மாவைப் பின் தொடர்ந்து சென்று அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வந்து என்னிடம் சொன்னார்கள்.  அதனால் தான் கைம்மாவிற்கு உதவும் படி உனக்கு கடிதம் எழுதினேன்.

பிற விஷயங்களை பிறகு எழுதுகிறேன்.

இப்படிக்கு

அன்புடன்

உன் நண்பன்

மணிவாசகம்

மேலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *