இராதா கிருஷ்ணன் கவிதைகள்

 

1.
அவள் வரைகிறாள்
அவள் விரும்பும்
ஜடை அலங்காரங்களை,
அவள் விரும்பும்
வண்ணவண்ண உடைகளை
அவள் விரும்பும்
இறக்கை கொண்ட தோழியர்களை,
அவள் விரும்பும்
 விதவிதமான கண்களை .
ஒருநாள் என்னை வரைந்து காண்பித்தாள்
நான் இத்தனை வடிவானவன் என அன்றுதான் கண்டுணர்ந்தேன் !
2.
நான் அவளை ” நீ ஓவிய கலைஞன்” என்றேன் ,
“இதுதான் உன்
தொழில்” என்றேன் .
பிறகு அவள் ஒரு நட்சத்திரங்கள் நிறைந்த கருநிற வானை வரைந்து
என்னிடமே விற்றாள்!
அவளின் ஓவியத்தை விலைக்கு வாங்கும் முதல் நுகர்வோர் ஆனேன் .
 சில நாட்கள் கழித்து அவள் தமக்கையின் பிறந்த நாளுக்கு அவள் அம்மா மூலம் புது உடை வாங்கி தந்திருக்கிறாள்.
பிறந்தநாள் விழா புகைப்படங்கள் பார்த்தேன் , அவள் பழைய உடையில்
தமக்கையின் அருகில்
மின்னிக் கொண்டிருந்தாள்!
3.
அவளின் அம்மாவுக்கு
இரு அண்ணன்கள் ,
எனவே அவளுக்கு விளையாட ,
வேண்டியதை வாங்கித்தர ,
வெளியே கூட்டி செல்ல
இரு மாமன்கள் .
குட்டியை தோளில் போட்டுக்கொண்டு செல்ல ,
அவள் ஆணையை
சிரமேற்கொள்ள எப்போதும்
காத்திருக்கும் மாமன்கள் .
அவள் இரு மாமன்களிலும் வித்தியாசம் பார்த்தது இல்லை. ஒருவன் சிரமத்திலிருப்பவன், ஒருவன் தான் சம்பாதிக்கும் தன்னிடம் உபரியாக இருக்கும் பணத்தை அவளுக்காக கொட்டுபவன் . அவள் அவர்களில் வித்தியாசம் பார்த்தது இல்லை !
4.
அவள் உண்டியல் வைத்து
சேமிப்பதாக அவள் அம்மா சொன்னாள் . அவள் அம்மா என்னிடம் சிரித்து கொண்டே ” லூசு, காசு சேர்த்து வீடு வாங்க போகுதாமா , இந்த வீடு பிடிக்கலையாம் ,தனி ரூம் வேணுமாம்” என்றாள். பிறகு அவளிடம் சென்றேன் , “மாமா காசு கொடுங்க” என்றாள், “எதற்கு
” என்றேன் , “சொல்ல மாட்டேன்” என்றாள் !
5 .
ஒருமுறை அவள் வரைவதை பார்த்து கொண்டிருந்தேன் .
ஒரு பெண்ணை வரைகிறாள் . நீண்ட நேரம் தலைமுடி மட்டும் வரைந்து கொண்டிருந்தாள்.
அருகில் போய் பார்த்தேன் ,
தலைமுடியை ஒவ்வொரு கோடாக வரைந்து கொண்டிருந்தாள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *