பறந்து அலைகிறவனின் சிறுகுறிப்புகள்

 

1.

நீங்கிச் சென்றவற்றின் நிழலில்

சிறிய இளைப்பாறல்

ரெக்கைகள் வெக்கை தணிந்து கொண்டிருக்கின்றன

மிதந்தலைதல் தீராப் பரவசம்

காற்று காலடி நிலம்

வானம் தொட்டுவிடவேண்டிய இலக்கு

உயரம் அதிகரிக்க

அனைத்தும் மிகப்பிரமாண்டத்தில் இருந்து

மெல்ல மெல்ல மிகச்சிறியவையாகக்குன்றி

விடுதலை அளிக்கின்றன

சிக்கல்கள்  தொடர்பறுந்து ஆசுவாசம்

உச்சி என்று எதுவுமில்லை

தற்காலிகமாக தயங்கி நின்ற ஓரிடத்தை

அந்த ஒரு கணத்தில் உச்சி எனக் கொள்ளலாம்.

சிகரங்கள் கண்டறியப்படாமல்  உள்ளன

வானம் எல்லையின்மையின் நித்தியத்துவத்தில் அகலித்து கிடக்கிறது

தரையை நெருங்கும் போதுதான்

சகலமும் மீண்டும் வந்தடைகின்றன

பசிக்கிறது

ஓய்வு கொள்ள ஒரு துண்டு நிலம் தேவை

தாகம் தணிக்க நீர் இருக்கும் காரணம்

நிலமும் நிழலும் நீரும் இருப்பதிங்கே

அவற்றை அடையத்தான் பெரும்பாடு படவேண்யிருக்கிறது

எல்லைக்கோடுகளை

அதிகாரத்தின் விளிம்புகள் கச்சிதமாக பராமரிக்கின்றன

அதிகாரத்தை இடுங்கிய மனங்கள் ஆராதனை செய்கின்றன

வரமால் இருந்துவிடத்தான் ஆசை

வந்ததும் உடனே பறந்து போய்விடுவதும் அதனால்தான்

தேவைகள் அற்ற பறத்தலும்

இலக்குகள் இல்லாத கணங்களும்

உனக்கு வாய்க்க வேண்டுமா

தளையென இருப்பவற்றை தளர்த்து

உன் விருப்பம் உனக்கு ரெக்கைகளை அளிக்கும்

உந்திப்பற

பறந்து வா

2.

எத்தனை அலைந்தாலும்

பயணம் மிகச்சிறயது

எத்தனைச் சேர்த்தாலும்

செல்வம் மிகச்சிறியது

எத்தனைப் புசித்தாலும்

அறிந்து கொண்டசுவை மிகக்குறைவே

எத்தனைப் பார்த்தாலும்

இயற்கையின் பேரெழில் ஓரு துளியே

எத்தனைப் புணர்ந்தாலும்

தீண்டாத மென்மேடுகள் முடிவற்றவை

எத்தனை அறிந்தாலும்

ஞானம் முடிவிலி

அடைய முடியாமையின்

விஸ்வரூபத்தை

கொஞ்சம் அறிந்திட

அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பே

ஒரு பிறப்பு

3.

பதற்றமாக இருக்கப் பழக்கம்

அச்சம் உடனே வந்துவிடுகிறது

நடுக்கத்தை நம்மால் ஒளித்து வைக்க முடிவதில்லை

வெறுப்பு  நிழல்போல உடனிருக்கிறது

காமத்தை விட்டு ஒருகணம் விலகமுடிவதில்லை

மோகத்திற்கு பிரஞ்சத்தை அடைந்தாலும் போதாது

உழைப்பதை முடிந்த மட்டும் தள்ளிப்போடுகிறோம்

பிறரை மதிப்பிடுவதில் மிகச்சரியாக இருக்கிறோம்

தேவைகள் ஒன்றே

வடிவமைக்கின்றன

பேராசைகளால்

உத்வேகம் கொள்கிறது சலிப்பு நிறைந்த நாட்கள்

இப்படி இருக்கிறது வாழ்க்கை

எப்போதும்

இப்படித்தான் இருக்கும் இந்த வாழ்க்கை

4.

முன்பு கனவானாக வாழ ஆசைப்பட்டேன்

என்  செயல்களின் மீது வெறுப்பும் சங்கடமும்

துல்லியம் குறைந்த காரியங்கள்

துல்லியமே தேவையில்லாத வெற்றிகளை அளித்தன

உத்வேகம் மிகுந்து தொடர்ந்த செயல்கள்

சோர்வினையும் சஞ்சலத்தையும் வாரி வழங்கின

ஆறுதல் தேடிய மடியில்

உதிரத்தாகம் தீண்டியது

ஞானத் தேடலில் வந்தடைந்தது

ஊன் ருசிக்கும் காட்டேரிகளின் வாழ்விடத்தை

உயிர் வாழவும்

சாகாமல் இருக்கவும்

நீசத்தனங்கள் கைகொடுக்கின்றன

ஒரு கனவானாக வாழ விரும்பியவன்

கனவான்கள்  என யாரும் இல்லை என்று நம்ப ஆசைப்படுகிறேன்

5.

மிகச்சரியாக

உடனே அடையாளம் கண்டு கொண்டு விடுகிறார்கள்

விலைபோகாத பொருட்களை

நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள்

ஒதுங்கியே வாழ்கிறேன்

தேடி வந்து அழைத்து

பொதி சுமக்க வைத்து விடுகிறார்கள்

பொதுவெளியில் புன்னகைப்பது பண்பாடு என்றிருப்பவனை

குதம் புணர சம்மதம் என புரிந்து கொண்டு

விரைத்த குறிகளை அருகில் கொண்டு வருகிறார்கள்

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாலும்

அதிகார மையங்களிடம் அவதுாறு பரப்பி

தாள முடியாத சங்கடத்தை உண்டு பண்ணுகிறார்கள்

சக பிறவி என்பதால் சகித்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் வாழ்கிறவனின்

சிறிய நிம்மதிகளைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல்

ஓயாமல் கல்லெறிந்து கலைத்துப்போடுகிறார்கள்

மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்து

மனதிற்குள் வஞ்சினம் கொள்கிறார்கள்

சுற்றியிருப்பவர்களை நோக்கி

அறச்சீற்றம் அடைவதேயில்லை

பொங்கி எழுந்தால் அவர்கள் சிலுவையில் அறைவார்கள்

இன்றா நேற்றா வரலாறு முழுக்க இப்படித்தான்

சகித்துக்கொள்ள கற்று வருகிறேன்

அவர்கள் சித்திரவதைகளின் வகைமாதிரிகளை

புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்

உலகம் பொல்லாதது

உலகம் மகிழ்ச்சியானது என்பதில்

ஒரு வீம்பாக இருக்கிறேன்

6.

அவசரப்பட்டு முடிவு செய்துவிடாதே

நீ இளமையில் இருக்கிறாயா

மிகுந்த எச்சரிக்கையோடு இரு

நடுவயதைத் தாண்டிவிட்டாயா

மிக மிக கவனத்தோடு இரு

சாக்காலம் உன்னை நெருங்கிவிட்டதா

இப்போதும் நிதானம் கொள்

நாடி நரம்புகள் தளர்வது வாடிக்கைதான்

உடல் ஒத்துழைக்க மறுப்பது என்றுமுள நடைமுறையே

நினைவில் குழப்பங்கள் வரலாம் சஞ்சலம் கொள்ள வேண்டாம்

நம்மோடு இருப்பவை நிறம் மங்கி

தெளிவற்று

மங்கிப்போகும்

இப்போதும்

அவசரப்பட்டு விடாதே

7.

காலாதீதம் என ஒன்றுண்டு நண்பனே

நீ நீயாக வருவதற்கு முன்பு

காலாதீதம்

நான் நானாக உன்னால் அறிவதற்கு முன்பு

காலாதீதம்

இயற்கை உடனடியாக உவமை சொல்லக்கூடிய

காலாதீதம்

காலாதீதம் கவிஞர்களின் கைச்சரக்கல்ல

கவிஞர்கள் சுட்டுவதைப் போல

கவிப்பெறுமானம் உடையதும் அல்ல

காலாதீதம் என்றும் இருப்பது

காலம் என நீ பதறித்திரிவதை

காலாதீதம் ஒரு போதும் பொருட்படுத்தியதில்லை

காலமும் அகாலமும் உனக்குத்தான்

காலாதீதம் என்றும் அசைவற்றது

அழிவற்றது

எல்லையற்றது

முடிவற்றது

உன் வரையறைக்கு கொஞ்சம் தள்ளி நிற்பது

நீ நான் அவை அனைத்தும் இருப்பது

காலாதீதத்தின் உள்ளே

மீனைச் சுமக்கும் கடல்நீர்தான் நண்பா

காலாதீதம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *