சாலையில் நின்று பார்த்தாலே தோட்டத்தில் இருந்த பழைய ஓட்டுவீடு தெரிந்தது. ஒரு பாதி பகுதி ஓடுகள் இல்லாமல் பூச்சுகள் விழுந்து கருங்கற்கள் மட்டும் கலையாமல் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதில் கதவு இல்லாமல் நிலவு மட்டும் இருந்தது. உள்ளே பெரிய புற்கள், செடிகள் முளைத்து இருந்தன. இன்னொரு பகுதி நன்றாக சுத்தமாக இருந்தது. முன் திண்ணையில் இரண்டு மூட்டைகள் ஒன்றின் மீது ஒன்று என வைக்க பட்டிருந்தது . அலைக்கையில் இரண்டு துண்டுகள் , ஒரு வேட்டி துவைத்து காய போட பட்டிருந்தது. வீட்டினுள் ரேடியோ சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே இருப்பவரை அழைக்க குரல் கொடுத்தேன் .
பெரிய சதுர வடிவ சோடாப்புட்டி கண்ணாடி போட்டு கொண்டு, கோமனம் மட்டும் அணிந்த ஒரு வயதான மனிதர் வெளியே வந்தார். முதல் ஆச்சர்யம் கொடுத்தது அவர் உடல்தான் , துளி தொப்பை இல்லை , வெள்ளை நிறம் , கூனல் இல்லை , நிமிர்ந்த உடல் , வயது 80 க்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. வெளியே அவர் வந்த வேகத்தில் அவரது சுறுசுறுப்பு தெரிந்தது .
 வெளியே வந்தவர் ” யாரு ” என்றார் . ” சேகர் அனுப்பனாருங்க , ஷெட் போட ” என்றேன் . அவர் ” இடம் எங்கனு சொன்னாரா ” என்றார். ” இல்லைங்க ” என்றேன் . ” இருங்க ” என்று சொல்லி உள்ளே சென்றார் . இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார்.  இப்போது பட்டா போட்ட டிரவுசர் அணிந்து இருந்தார். வாசல் படிகளில் இருந்து இறங்கி நடந்து வீட்டிற்கு பின் பகுதியில் இருந்த நிலத்தைச் சுட்டிக் காட்டி “இங்கதான் ” என்றார் . “சரிங்க” என்றேன். ” சரி ,பாத்துக்குங்க தம்பி ” என்று சொல்லி வீட்டிற்குள் போய் விட்டார்.
அவர் ரேடியோ கேட்கும் ஆர்வத்தில் இருப்பதை அவர் செல்லும் அவசரத்தில் உணர முடிந்தது. நான் என் வேலையை தொடங்கினேன். நிலத்தை அளந்து மார்க் செய்ய வேண்டியது முதல் வேலை. கூட இந்தி பணியாள் அபிஷேக்கை கூட்டி வந்திருந்தேன். அவனிடம் அளக்கும் டேப், மார்க்கிட ராட் சுத்தியல், நூல் எல்லாம் எடுத்து வர கூறினேன். பிறகு வேலையில் மூழ்கினேன். அய்யா திரும்ப வந்து என்னிடம் பேசும் வரை !
வீடு, வீட்டைச் சுற்றி இருக்கும் 7 ஏக்கர் தோட்டம் எல்லாம் அய்யாவுடையது. அதை குத்தகைக்கு எடுத்து இருந்த சேகர் உள்ளே மாட்டு பண்ணையும் அமைக்கும் திட்டத்தில் எனக்கு ஷெட் அமைக்கும் வேலையை கொடுத்து இருந்தார்.  வீட்டில் அய்யா மட்டுமே இருக்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம் கொடுத்தது .
ஆரம்பத்தில் ஊரில் பாதி சொத்து அவருடையதாக இருந்திருக்கிறது. கிழவர் எல்லா தொழில்களிலும் இறங்கிப் பார்த்து இருக்கிறார்.  எல்லாவற்றிலும் பூரண தோல்வி . மீதி என இந்த 7 ஏக்கர் மிஞ்சி இருந்திருக்கிறது. இரண்டு வாகனங்கள் வைத்து இருக்கிறார், ஒன்று சைக்கிள் , இன்னொன்று எடைக்கு போடும் தருவாயில் இருக்கும் tvs 50 !
ஒரு வாரம் செட் அமைக்கும் வேலை இருந்தது. எனக்கு மேற்பார்வை வேலைதான், பையன்கள் அனைத்து வேலைகளையும் பார்த்து விடுவார்கள். நான் அய்யா வீட்டு திண்ணையில் எப்போதும் அமர்ந்து அவரிடம் பேசலானேன். ஒருமுறை அவரை அழைக்கும் பொருட்டு உள்ளே எட்டிப் பார்த்தேன், கயிற்று கட்டிலில் படுத்தபடி ஏதோ நூல் வாசித்து கொண்டிருந்தார் . ஆச்சிரியம் அடைந்து அவர் வெளிய வந்த போது ” புக் எல்லாம் படிப்பீங்களா? ” என்றேன் . ” வேலைக்கு போகலைனா தினமும் மூணு புக்கு படிச்சுடுவேன்” என்றார்.
எனக்கு அவர் வேலைக்கு போகிறார் என்பது அதிர்ச்சி கொடுத்தது. “வேலைக்கு போறீங்களா?” என்றேன்.  “மூணு நாள் வேலை இல்ல, இருந்தா காலையிலேயே கிளம்பிடுவேன் ” என்றார் . ” புக் எல்லாம் எங்க வாங்கறீங்க ” . ” லைபரில , ஒரே சமயம் மூணு புக் எடுக்கலாம் ” என்றார் . “நானும் புக் படிப்பேங்க” என்றேன் . ஆனால் அவருக்கு நான் லைபரியில் மெம்பராக இல்லாமல் இருப்பதும், நூல்கள் காசு கொடுத்து வாங்கி வாசிப்பதும் ஆச்சர்யம் கொடுத்தது , ” லைபரில சேர்ந்துக்க ” என்றார் .
வழக்கமான வயதானவர்களை விட இவர் வித்தியாசமாக இருந்தார். ஒரு நாய்க்குட்டியிடம் இருக்கும் சுறுசுறுப்பு இவரிடம் இருந்தது. ஏதாவது ஒன்று செய்து கொண்டிருந்தார், எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் வைத்திருந்தார், மண்வெட்டிகள் கூட வரிசையாக மாட்டி வைக்க பட்டிருந்தது. அவரே சமைத்து உண்ணுபவராக இருந்தார். ஒரு வயதானவர் தனியாக உற்சாகமாக சுறுசுறுப்பாக இருந்தது உள்ளபடியே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது .
அங்கு வந்த மூன்றாவது நாளில்தான் சற்றுத் தள்ளி இருந்த ஒரு கான்கிரீட் வீட்டை கவனித்தேன். ஆரம்பத்தில் அது அடுத்த தோட்டத்தில் இருப்பதாக எண்ணி கொண்டிருந்தேன். ஆனால் அதுவும் இந்த தோட்ட நிலத்தில்தான் இருந்தது . அங்கு ஒரு முதிய சற்று கூன் விழுந்த பெண்மணி இருப்பதை பார்த்து இருக்கிறேன்.  வெளியில் இருந்து சிலர் வருவதும் அவர்களுடன் முன்வாசலில் இவர் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்து இருக்கிறேன் . ஒரு நாள் காலையில் அய்யாவுடன் நான் பேசி கொண்டிருப்பதை அந்த கிழவி அவள் வீட்டு வாசலில் அமர்ந்த படி எங்களை கவனித்து கொண்டிருப்பதை பார்த்தேன். முதலில் எதேட்சையாக பார்ப்பது போலதான் இருந்து.  பிறகு தொடர்ந்து இங்கேயே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவர் யார் என அறியும் ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு வேலை கொடுத்த சேகருக்கு போனில் அழைத்து கேட்டேன், சேகர் சிரித்துக்கொண்டே ” பெரியவரோட சம்சாரம்தான்” என்றார் !
எனக்கு அதை அறிந்த பிறகு கிழவியிடம் உரையாடும் ஆர்வம் ஏற்பட்டது. கணவன் மனைவி பேசி கொள்ளாமல் ஒரே தோட்டத்தில் தனித்தனி வீடுகளில் தனித்தனியாக சமைத்து தனியாக வாழ்கிறார்கள் என்பது நம்ப முடியாத ஆச்சர்யம் அளித்தது . நான் ஆரம்பத்தில் கிழவரின் மனைவி இறந்து இருப்பார் என்று எண்ணி இருந்தேன் !
இருவரையும் தொடர்ந்து கவனித்த போது ஒன்று புரிந்தது. கிழவர் கிழவியை சட்டைசெய்யவே இல்லை. அப்படி ஒரு ஜீவன் அங்கு இருப்பதையே காணாதவராக தன் தனி உலகில் மகிழ்ச்சியாக அல்லது துக்கமற்று வாழ்ந்து கொண்டிருந்தார். மாறாக கிழவியோ நேர்மாறாக முழுக் கவனத்தையும் கிழவர் மீதே வைத்து இருந்தார். கிழவியின் கண் எப்போதும் கிழவனின், கிழவன் இருக்கும் வீடு மீதே இருந்து கொண்டிருந்தது. அதற்காகவே அவள் வெளி திண்ணையில் அமர்ந்து சாலையில் செல்வோர் அனைவரையும் அழைத்து அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார். வெளியே இருக்கும் போது கிழவனின் வீட்டை நன்றாக பார்க்க முடியும், ஒரு முறை இரவு 8 மணிக்கு கிளம்பும் போது கிழவி இருக்கும் வீட்டின் ஜன்னலை எதேட்சையாக பார்த்த போது கிழவி முகம் கிழவனின் வீடு நோக்கி இருப்பதை கவனித்தேன் !
கிழவியுடன் பேசும் வாய்ப்பு அமைந்தது , வேலைக்கு பத்தாமல் கரன்ட் இன்னும் எடுக்க அவள் இருக்கும் வீட்டில் போய் லைன் எடுக்க வேண்டி இருந்தது. அப்போது பேச்சு கொடுத்தேன . சில நிமிட பேச்சிலேயே இது சிடுசிடு கிழவி என்று புரிந்து கொண்டேன் ! கொஞ்சம் கடினம்தான் இருந்தாலும் முயற்சிக்கலாம் என்று தோன்றியது . தொடர்ந்து அங்கு சென்று அந்த திண்ணையில் அமரத் தொடங்கினேன் . கிழவி சில முறை பேச்சுக்களுக்கு பிறகு சகஜமாக பேச தொடங்கினாள். ஒரு பேச்சின் இடையே சட்டென்று “அந்த பெரியவரு உங்க வீட்டுக்காரரரா? ” என்றேன் . அதை கேட்டவுடன் சற்று கோபமாகி ” உனக்கெதுக்கு அது எல்லாம் ” என்றார் . ” இல்லை ,சும்மா கேட்டேன் ” என்று சொல்லி உடனே அங்கிருந்து நகர்ந்து விட்டேன் .
பிறகு அடுத்த நாள் அங்கு போய் அமர்ந்தேன் . கிழவி வெளிlயே வந்தாள் , ” சாப்ட்டயா ” என்றாள், “சாப்ட்டேன்” என்றேன். பிறகு நானாக பேச்சு தொடங்கி ” நாளைக்கு என் வேலை முடிஞ்சுடும் ” என்றேன் . ” அப்பறம் வர மாட்டியா “,  “வேலை முடிஞ்ச பிறகு எதுக்கு வரேன் ” என்று சொல்லிய படி சிரித்தேன். அவள் வெளியே வந்து என்னில் இருந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். ” அவன் மட்டும் உருப்படியா இருந்தான்னா எப்படி இருந்திருக்கலாம், எல்லாத்தையும் அழிச்சான் ” என்றாள். அவள் யாரை சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டு மேலும் அவள் சொல்வதை கேட்க ஆர்வமாக அவளை பார்த்தேன்.
” சனியன், சொல்றதை ஒன்னு கூட காதுல வாங்க மாட்டான், அவன் செஞ்ச ஒரு தொழில் கூட விளங்கல, எப்படி விளங்கும் , அவனுக்கு ஏதாவது தெரிஞ்சா தான ” என்றாள்.  ” சண்டாளா ,எப்ப நா சொன்னத கேட்காம கடன்ல விழுந்தானோ அப்பவே அவனோட பேசறதையே விட்டுட்டேன், கடனை அடைக்க நிலத்தை விக்க வேண்டிய நிலமை வந்த பிறகு அவனை விட்டு வந்துட்டேன் . இந்த வீடு மகன் கட்டிக் கொடுத்தது ” என்றாள்.
எனக்கு அவள் மகன் என்று சொன்னதும் என்னடா இது புது கதாபாத்திரம் என்று தோன்றியது . நான் ” உங்களுக்கு மகன் இருக்கானா?” என்றேன் .  அவள் “அவன் அப்பன மாதிரி இல்ல , புத்தியுள்ளவன், இப்ப வெளிநாட்டுல வேலை செய்யறான்,  எனக்கு மாசம் மாசம் பணம் அனுப்பிடுவான்” என்றாள். நான் சட்டென்று “அய்யாக்கு அனுப்பவாப்புலயா ” என்றேன் . அதை கேட்டவுடன் என்னை முறைத்தவள் பிறகு அந்த பக்கம் திரும்பி “கொடுப்பான் ” என்றாள்.
பிறகு அவளே தொடர்ந்து  ” நல்லவேள சொத்து எல்லாம் பையன் பேர்ல மாத்திட்டோம் , இல்லைனா இதையும் அழிச்சு இருப்பான், சனியன் ஒரு இடத்தில நிக்கறானா பாரு , ஏதாவது விளங்காத ஒன்னை செஞ்சுட்டே இருப்பான் ” என்றாள். நான் சட்டென்று ” அவரை உங்களுக்கு பிடிக்குமா” என்றேன். அந்த கேள்வியை அவள் எதிர்பார்க்காததும், கேள்வியால் சற்று அவள் உறைந்து போனதும் முகத்தில் தெரிந்தது . தூரத்தில் இருந்த சாலையை பார்த்தபடி “பிடிச்சு என்ன செய்ய? ” என்றாள், அவள் கண்களில் நீர் திரள்வதை உணர முடிந்தது .
 நான் இன்னொரு படி எடுத்து வைத்தேன் ,  திரும்ப ஒண்ணா சேர்ந்து இருக்கலாம்ல ” என்றேன் . கிழவி என்னை நோக்கி பார்த்து கண்கள் விரித்து ” கூட இருந்தேன்னா கோபத்துல கொன்னுடுவனோ தோனுச்சு, அப்புறம்தான் வெளியவே வந்தேன் ” என்றாள், பிறகு சற்று நேரம் அமைதியாக இருந்தவள் ” அவனுக்கு யாருமே பொருட்டு இல்லை ,பொண்டாட்டி ,புள்ளை , நிலம் எதுவும். கிறுக்கன், நாளைக்கு என்ன செய்வான்னு அவனுக்கே தெரியாது, தெரியாத தொழில்க செஞ்சு சொத்தெல்லாம் அழிச்சான் ” என்றாள். தொடர்ந்து ” தொழில் ஆரம்பிக்கும் போது கனவுல மிதப்பான் , அவன் கண்ணெல்லாம் அப்ப மின்னும் , குசுகுசுனு அந்த கனவெல்லாம் எங்கிட்ட சொல்லுவான் , அந்த நேரம் எல்லாம் கால சுத்தற புள்ளை மாதிரி என்னை சுத்தியே இருந்துட்டு இருப்பான் , தொழில் விழுந்துச்சுனா என்கிட்ட வந்து பேசவே பயப்படுவான் , அவன் கண்ணுலயே அத பார்த்துட முடியும் , ஒருமுற அவன் விட்ட காசை பார்த்து கோபத்துல அரஞ்சுட்டேன்” என்றாள். கேட்டபோது கிழவி கோபத்தில் கிழவனை கொல்வதற்கான எல்லா சாத்தியமும் உள்ளதை மனதில் புன்னகையுடன் உணர்ந்தேன்.
” நீங்க அவரை விட்டு வந்ததது நல்லதுதான் ” என்று கூறினேன். என் முகத்தில் என்னை மீறி புன்னகை வெளிவந்தது. கிழவியும் நான் சொல்வதைக் கேட்டு என் முகத்தை பார்த்து புன்னகைத்தாள் .  அவளாக தலை குனிந்த படி ” அவன் நிம்மதியா சந்தோசமா இருந்தா போதும், அத இப்படி தூரமா இருந்து பார்த்திட்டு அப்படியே நிம்மதியா போய்ச்சேர்ந்துடுவேன் ” என்றாள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *