விழிகள்

நான் விழிகளை பார்க்கும் போது ஆடுவதில்லை. விழித்து கொண்டு தான் பார்க்கின்றன. என் பார்வை விலகும் போது ஆடிக் கொள்கின்றன. இப்படி தான் எனக்கு தோன்றுகிறது. எப்போதும் கண்களை பார்த்து தான் பேச வேண்டும் என்று எண்ணுவேன். சில சமயங்களில் முயற்சி செய்வேன். சில நிமிடங்களில் முடியாமல் கவனம் சிதறி போய்விடும். பார்த்தும் பார்க்காமல் எப்போதும் இருக்கும் இயல்புடன் பேச தொடங்கி விடுவேன். அழகான கண்களை பார்க்கும் போது பேச மறந்து பார்க்க தொடங்கி விடுவேன். என்ன என்று கேட்பவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று உடனே பதில் கொடுத்து விடுவேன். நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் எல்லாவற்றையும் ஆனாலும் சிலவற்றை பார்க்க முடியவில்லை. விழிகளை மறந்து போய் பார்க்கும் காட்சிகளிலே நம் கவனம் போய் கொண்டு இருக்கிறது. எப்போதாவது விழிகளை தூசு திரைகளை வென்று தொடும் போது விழிகள் நினைவு வந்து விடுகின்றன. நம் இயல்புகள் மாறி விடுகிறது சூழல் மாறும் போது மாறுவது போன்று. எப்போதாவது தூசு விழுந்தால் கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும்.

ஒரு முறை ஏதோ தூசு விழுந்து விட்டது. கண்களை திறந்து நீரில் நீந்த விட்டேன், சரியானது போன்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் விழிகள் சிவந்து துளிகள்  ஓடின. கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. மாலை நேரத்தை எப்படியோ கடந்து இரவை தொட்டு விட்டேன். தூங்கி விழித்து விடிந்தவுடன் எழுந்தால் எல்லாம் சரியாவது போன்று இதுவும் சரியாகி விலகி விடும் என்ற நம்பிக்கையில் உறங்கி போனேன். 

எங்கோ ஒரு வீட்டில் ஆனந்தமாக பாடிக் கொண்டு இருந்தது ரேடியோ பெட்டி. எல்லோரும் தூங்குவதால் பாடுகிறதா இல்லை எல்லோரும் அதிகாலையில் எழ வேண்டும் என்று பாடுகிறதா தெரியவில்லை. ஆனால் நம்மை விட ஒரு படி மேல் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சின்னஞ்சிறிய செவ்வக பெட்டி மயக்கத்துடன்.

இன்னிசையை கேட்டவாறே தூக்கத்தை தொடர்ந்தேன் . இதற்கு முன் ஏதேதோ  கனவுகள் வந்தது. தொடரலாம் என்றால் எதுவும் நினைவில் இல்லை. புதிய கனவுகளை தொடங்கி விருப்பமானவர்களை ரகசியமாக அழைக்கலாம் என்றால் கண்கள் விழித்து கொண்டு தடுத்து விட்டன. எதுவும் மாறவில்லை கண்கள் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டது. மருத்துவரை காணாமல் கடந்து விடலாம் என்ற கற்பனை கலைந்து போய் விட்டது.

நாம் எதை அதிகமாக விரும்புகிறோமோ அதற்கு எதிராக எதை நாம் விலகி வைப்போமோ அதனிடம் சென்று சேர வேண்டியது வரும். அது போன்று எல்லாவற்றையும் மறந்து சாப்பாட்டையும் சேர்த்து. மருத்துவரை சென்று பார்த்தேன்.

அது ஒரு சிறிய கிளினிக். பிரதான சாலையின் ஓரத்தில் நடை பாதையுடன் சேர்ந்து இருந்தது. சிறிய கட்டிடம் வெண்மையுடன் வரவேற்றது பெயர் பலகையுடன். நிலத்தை தொட முடியாமல் தொட்டிகளில் சிறைப்பட்டு கிடந்தது சிறிய செடிகள். எல்லாம் பச்சையின் பல வண்ணங்களில் இருந்தது. எல்லாம் அழகாக இருந்தது. ஆனால் அதனை ரசிக்க முடியாமல் எரிச்சலில் தவித்தேன். வெளியில் எந்த நிழலும் இல்லை. முகப்பில் மர நாற்காலிகள் கிடந்தது. பழமையானது. புது வார்னிஸ்ஸில் மரத்தின் ரேகைகளில் ஓடுவது போன்று பளபளப்பாக இருந்தது. கூட்டம் அதிகம் இல்லை. ஒன்று இரண்டு பேர்கள் காத்திருந்தனர். 

ஒரு பெண் வந்தாள். மாநிறத்தில் சரியான உயரத்தில் அழகாக இருந்தாள். ஆனால் சிரிக்கவில்லை. எதார்த்தமாக இருந்தாள். எப்போதும் போல, என்ன வேண்டும், டாக்டரை பார்க்க வேண்டுமா என்றாள். அவளை பார்த்ததில் சிறு கூச்சத்தில் குரல் எழவில்லை. ஆமாம் என்பது போன்று தலையை ஆட்டினேன்.

அவள் புரிந்து கொண்டு சிறு புன்னகையை உதிர்த்தாள். அவள் மேலும் அழகாக தெரிந்தாள். சமீபத்தில் தான் கல்லூரி முடித்திருப்பாள் போல. நான் எரிச்சலில் கண்களை தொட்டு கசிக்கினேன். அவள் சிறு பதற்றத்துடன். கண்ண கசக்காதீங்க என்றாள். நான் கூச்சத்தில் திரு திரு வென்று விழித்தேன். துளிகள் ஒன்றன் பின் ஒன்றாக நழுவி ஓடியது. சிறு கரை நேராக கோடாக இருந்தது.

அவள் என் கண்களில் லாவகமாக கண் மருந்தை துளி துளியாக இட்டாள். அப்போது அவள் கண்களை மிக அருகில் பார்த்தேன். ஒரு நொடி பொழுது தான். மீன் தொட்டியில் மீன்கள் அலையாமல் எதையோ பார்த்துக் கொண்டு நகராமல் இருப்பது போன்ற கண் மணிகள். எப்போது நகரும் என்ற ஆவல். பின்பு தலை சாய்த்து கண்களை மூடி அமர்ந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து அவளே அழைத்தாள்.

என்னுடைய விபரத்தை கேட்டவாறே கணினியில் தட்டினாள். சிறு ஒலி ஒலித்தது. மருந்து சீட்டு கொடுத்தாள். மருத்துவரை பார்க்கும் முன்பே பணத்தை வாங்கி கொண்டாள். 

அந்த நேரம் பார்த்து வேறு ஒரு ஒலி கேட்டது. ஏதோ கிழியும் ஓசை போன்று. ஏற்கனவே மருத்துவரை பார்த்து முடித்தவர்கள் வெளியே வந்தார்கள். அதில் ஒருவர் கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கண்ணை துணியால் மறைத்திருந்தார். இடது கண். கதவுகள் திறந்த எந்த தடயமும் இல்லாமல் தானாகவே சாத்திக் கொண்டது.

அவள் உடனே நீங்க டாக்டர பார்க்கலாம் என்று மந்திரம் போன்று சொல்லினாள். நான் அவள் கொடுத்த மருந்து சீட்டின் துணையுடன் உள்ளே சென்றேன்.

மருத்துவர் வெண்ணிற கண்ணாடி அணிந்து இருந்தார். பார்த்தவுடன் சிரித்தார். அவரும் என் வயதை ஒத்தவர் போன்று இருந்தார். விபரம் கேட்டார்.  நான் நேற்று முதல் கண்கள் உறுத்துகின்றன. கண்ணில் ஏதோ தூசு விழுந்தது. அதிலிருந்து தான் உறுத்துகிறது. இன்று அதிக மாக எரிச்சலாக இருக்கிறது என்றேன். அவர் உடனே என்னுடைய வலது கண்ணை அருகில் வைத்து நியூட்டன் ரிங்ஸை கண்டு பிடித்து கணக்கிடுவது போன்று என்று கண்களை வலது பக்கமும் இடது பக்கமும் பார்க்க சொல்லி ஆழமாக பரிசோதித்தார். அவர் முகத்தை பார்த்தவுடன் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று எனக்கு தோன்றியது. கண்களை   தேச்சிங்களா என்று பதிலை எதிர் பார்க்காமல் கேள்வி எழுப்பினார் மருத்துவர். பின்பு மருந்து சீட்டின் ஓர் மூலையில் கண்களை வட்டமாக வரைந்து பிரச்சனையை விளக்கினார். காற்றில் பறக்கும் தூசியில் மர பட்டறையில் உள்ள தூசுகள் போன்று சிறு தூசு கண்ணில் பட்டவுடன் நாம் உடனே தேய்ப்பதால் கண்களில் சிறு காயம் ஏற்படும். அதாவது கண்ணில் அல்சர் உண்டாகும். இது சிறு பிரச்சனை தான் ஒரு வார காலம் கண்களுக்கு மருந்து இட்டால் குணம் ஆகும். கண்ணை ஒரு வார காலம் வெளிச்சம் படாத படி வைத்து கொள்ளவும் என்று சொல்லியவாறே மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு அடுத்த வாரம் வந்து பார்க்கும் படி கூறினார். 

நான் வெளியே வந்தவுடன் பிரச்சனை என்னவென்று தெரிந்ததில், தீர்ந்தது போன்று இருந்தது. அவளிடம் மருந்து சீட்டை கொடுத்தேன். அவளையே பார்த்து கொண்டு இருந்தேன். அவள் கண்கள் மருந்துகளை அங்கும் இங்கு மாக தேடிக் கொண்டே இருந்தது. அலையும் கண்கள் அழகாக இருந்தது. கண்களை மறந்து போய் அவளை பார்க்க தொடங்கி விட்டேன்.

எனக்கு நம்பிக்கை இருந்தது. அவளை மீண்டும் பார்க்க முடியாது என்று. அவள் மருந்துகளை கொடுத்து விபரம் கூறினாள். அவள் உதடுகள் தாமரை மலரை நினைவு படுத்தியது. திரைச்சீலை விலகி அசைந்ததில் காற்று வந்து தொட்டு சென்றது. வாசலில் நிழல் அலைந்து கொண்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *