இந்தக் கேள்விக்கு அவரவர் மனோபாவத்தை வைத்து தேவைதான் என்றும், தேவையில்லை என்றும் பதில் சொல்லக் கூடும்.
முதலில் தேவையில்லை, இலக்கியப் படிப்பினால் ஒருவிதமான உபயோகமும் இல்லை. அதிக பட்சம் வேண்டுமானால் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராகப் போகலாம். அதற்கு மேல் இலக்கியப் படிப்பினால் ஒருவித பயனும் இலலை என்று சொல்பவர்கள் இருக்கலாம்.
இவர்கள் பள்ளியிலோ, கல்லுாரியிலோ படிக்கும்போது ஏதோ சில நுால்களைப் புரட்படிப் பார்த்திருப்பார்கள். அதற்குப் பிறகு எந்த நுாலையும் புரட்டிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.
ஷேக்ஸ்பியர் என்ற ஒருவரைப் பற்றி மிகவும் பிரமாதமாகப் பேசுகிறார்களே? அந்த ஷேக்ஸ்பியர் இல்லாதிருந்தால் உலகம் என்ன வீணாகவா போயிருக்கும்? உலகம் ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இருந்திருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி- இதே மாதிரித்தானே இருந்திருக்கப் போகிறது.
விஞ்ஞானம் என்றோ, தத்துவ தரிசனம் என்றோ, அரசியல் சிந்தனையாளர்கள் என்றோ வைத்துக்கொண்டால் அவர்களில்லாமல் இன்றைய உலகம் சாத்தியமில்லை என்பது ஓரளவுக்கு நிதரிசனமாகவே தெரிகிறது. ஒரு நியூட்டனின் விதிகள், ஒரு எயின்ஸ்ட்டினின் கண்டுபிடிப்புகள், ஆலர்ப்ரெட் நோபலின் வெடிமருந்து, ஆப்பன்ஹிமர் சாத்தியமாக்கிய அணுகுண்டு, லெஸர் இயக்கக் கண்டுபிடிப்பு, பல மருத்துவ சோதனைகள், கண்டுபிடிப்புகள் இல்லாவிட்டால் இன்றுள்ள உலகம் சாத்தியமாயிராது. தொழிற்புரட்சி, உற்பத்தி வளப்பெருக்கம் இதெல்லாம் நீராவியந்திரம், மோட்டார் ஓட்டம், ஆகாய விமானம் என்கிற கண்டு பிடிப்புகளினால் சாத்தியமாகி இருக்கின்றன. நாம் உடுத்தும் துணிகள் சாப்பிடும் சாப்பாடு குடிக்கும் நீர் இவை ஆரோக்கியமாகவும், அழகாகவும், தரமானதாகவும் இருப்பதற்கு விஞ்ஞானம் அவசியம். விஞ்ஞானப் படிப்பு படித்துக்கொண்டால் போதுமே, இலக்கியம் என்று இல்லாத ஒரு கற்பனை உலகத்தை, அழகு உலகத்தை எதற்காக நாம் தேட வேண்டும் என்று கேட்பவர்கள் இருக்கலாம்.
அதே போல, வேதகாலம் முதல் சிந்தனையாளர்கள் பல விஷயங்களைக் கண்டு சொல்லியிருக்கிறார்கள். உபநிஷத்துக்களில் பல சிந்தனைகளுக்கு உருக்கொடுத்திருக்கிறார்கள்.
“ஜாதி அடிப்படையில் சமுதாய அமைப்பு தவறு, கருணை என்கிற அளவில் சமுதாயம் அமைய வேண்டும். வாழ்க்கைக்கு அர்த்தம், லட்சியம், அந்த வாழ்க்கையிலேயே இருக்கிறதே தவிர வெளியேயில்லை” என்று புத்தர் சொன்னது,
“உறவு முறைகளைச் சரியாக வைத்துக்கொள், தகப்பன் தகப்பனாகவும், பிள்ளை பிளளையாகவும், அரசன் அரசனாகவும், மந்திரி மந்திரியாகவும், தளபதி தளபதியாகவும் இருக்கிற இடத்தில் தான் அரசு காரியம் சரிவர நடக்கும்” என்று கண்டு குரு குங் சொன்னது,
“இந்த ஓரமும் போகாதே- அந்தக் கோடிக்கும் போகாதே, நடுப்பாதைய நடுநிலைமையை எப்போதும் நாடு ” என்று லாங்ஸே சொன்னது,
“இன்னது தெரியாது என்று தெரிந்து வைத்துக்கொண்டிருப்பதே அறிவு என்றும், தெரியாததைத் தெரிந்து கொள்ள முடிந்த வரை பாடுபடு” என்று சாக்ரடிஸ் சொன்னது,
அன்பே வழி என்று ஏசு, எவருக்கும் தீங்கு செய்யாததை உண்மை என்று பரிணாமங் கொண்டு வள்ளுவன் சொன்னது,
இப்படிப் பின்னர் வந்த பல தத்துவாசிரியர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் மனித குலத்துக்கு உபயோகப்பட்டிருக்கின்றன. மனிதன் மனிதனாகவே எத்தனை நாள் இருப்பது, தாண்டி மேலே போவது எந்நாளோ? என்று கேட்ட நீட்ஷேயும், “உன் தோட்டத்தில் உன் மூலையை நீ கவனித்துக்கொண்டால் போதும்” என்று சொல்லி புரட்சி ஏற்படுத்திய ரூஸோ, வால்டேரும் மனித குலத்துக்கு உபயோகப்பட்டிருக்கிறார்கள். “இலக்கியவாதிகளால் என்ன பயன் விளைந்திருக்கிறது சொல்லுங்கள்” என்று கேட்கலாம்.
அரசியல்வாதிகளும் ஓரளவுக்கு உலகுக்கு உபயோகப்பட்டிருக்கிறார்கள். ஸ்பார்ட்டாவில் தொடங்கி, அதற்கு முன் அம்முரபி ராஜ்யத்திலும், எகிப்தில் ப்பாரோக்களின் ராஜ்யத்திலும், அரசியல்வாதிகள் பல ஜன்மங்களுக்குப் பல நன்மைகள் செய்திருக்கிறார்கள். நாட்டைக் கட்டிக் காத்ததுடன் மக்களுக்கு அல்லல் ஏற்படும் போது நிவாரணம் அளித்திருக்கிறார்கள். ஸோலஸ் என்ற ஞானி அரசாண்ட காலம் முதல் மார்க்ஸ் என்பவர் மனிதனுடைய பொருளாதாரத் தேவைகள் மிக மிக முக்கியமானவை என்று சொன்னது வரை அரசியல்வாதிகள் மனித குலத்தைக் கட்டிக் காப்பாற்றி முன்னேற உதவியிருக்கிறார்கள். உங்கள் இலக்கியவாதிகள் இப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
இன்று படிப்பவன் மிகவும் அருமையாகிக் கொண்டிருக்கிறான். படிக்காமலே “காமிக்ஸ்“ என்று கண்ணால் பார்க்கிற நுால்களினால், ரேடியோ, ஆடியோ உதவிகள் என்று காதால் கேட்கிற சாதனங்களினால், டெலிவிஷன் சினிமா என்று பார்த்தும், கேட்டும் தெரிந்து கொள்கிற சாதனங்களினால் பல விஷயங்களை இனறைய மனிதன் சுலபமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. காவியம், நாடகம், நாவல் என்று படிப்பதும், படிப்பதைப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருக்கிறது. ஒரு காலத்தில் புஸ்தகங்களை நம்ப வேண்டியதாக இருந்தது. இப்போது அப்படியல்ல, வேறு பல சுலப சாதனங்கள் வந்து விட்டன. இலக்கியம் என்று எதையோ தேடிக் காண்பானேன்?
அப்படியே இலக்கியம் படிக்கிற வழக்கம் நீடிக்கிறது என்று வைத்துக்கொணடாலும் அது இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்க முடியும்? இனிமேல் எழுதப்படுகிற கவிதைகள் கணக்கு ஸிம்பல் முறையில் எண்களாகக் கம்யூட்டர்கள் எழுதும். மனிதர்கள் கவிதை எழுதுகிறேன் என்று கண்ணை உருட்டிக்கொண்டு லேசா போட்டவன் போல மயக்க நிலையில் உட்கார்ந்து எழுத வேண்டிய அவசியமில்லை. ஒரு பொத்தானைத் தட்டிவிட்டால் கவிதை கொட்டும். வேறு என்ன வேண்டும் என்பவர்கள் இருக்கலாம்.
கடைசியாக, இலக்கியத்துக்கு ஏதிராகக் கடைசி ஆயுதமாக உபயோகப்படுத்தக் கூடியது ஓன்றுண்டு. இந்த ஜனநாயக யுகத்தில் யாரோ ஆயிரம் இரண்டாயிரம் பேர்வழிகள் ஆஹா ஊஹா என்று சொல்லிக்கொண்டிருக்கிற நுால்களை இலக்கியம் என்று சொல்லி எல்லோர் தலையிலும் இலக்கியவாதிகள் கட்டுகிறார்கள். எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகாது என்கிறார்கள். ஏதோ குறிப்பிட்ட சில நுால்கள் தான் இலக்கியம் என்கிறார்கள்.
விமர்சனம், காலம் இரண்டுமாகச் சேர்ந்து கொண்டு இன்று எழுதப்படுவதில் பெரும் பகுதியையும் அழித்து விடுகின்றன. ஆனால் பழசில் இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ளபட்டது ஏகமாகக் கணக்கில் அடங்காததாக இருக்கிறது, தமிழில் வள்ளுவர், இளங்கோ, சங்க காலங்கள், பக்திக்கவிகள், நீதிக் கவிகள், கம்பர், முத்தொள்ளாயிரம், சித்தர் பாடல்கள், பாரதியார் என்று பலர் இருப்பது போல் இந்திய மொழிகள் பலவற்றிலும் பலப் பல. நல்லவேளையாக கொங்கணி, டோக்கி போன்ற மொழிகளில் அதிகமில்லை. சீனத்தில் இத்தனை, ஜப்பானில் அத்தனை. ஐரோப்பாவில் வழக்கொழிந்த கிரேக்கம், லத்தீன் தொடங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ் என்று ஆயிரமாயிரம். அதில் எதைப் படிப்பது, எதை விடுவது என்று யார் சொல்லுவது’? படிக்காததை எல்லாம் வைத்து என்ன செய்வது? பூஜை செய்வதா? கட்டி “என்றாவது உபயோகப்படும்” என்று வைத்திருப்பதா?
“இன்னோரின்ன காரியங்களினால் இலக்கியப் படிப்பு தேவையா என்கிற கேள்விக்குத் தேவையில்லை என்று பதில் சொல்லவே எங்களுக்கத் தோன்றுகிறது“ என்று சொல்பவர்கள் நம்மிடையே இருக்கலாம். உயர்வு தாழ்வுகள் மறைந்து கொண்டு வரும் சூழ்நிலையில் (மறைகிறதோ, இல்லையோ- மறைவது நல்லது என்று சொல்லுகிற சூழ்நிலையில்) இலக்கியம் யாரோ சிலர் கூடிச் செய்கிற ‘elite activity’ ஆகத்தான் தோன்றுகிறது. இது அவசியமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.
ஆணித்தரமான கேள்விகளாக இவை தோன்றினாலும் கூட இவற்றிற்கெல்லாம் ஒரே வாக்கியத்தில் இலக்கியப் படிப்பு தேவைதான் என்று சொல்லுகிறவன் பதில் கூறி விட முடியும். விஞ்ஞானம், சரித்திரம், கண்டு பிடிப்புகள், அரசியல் அவை பற்றி நமக்கு தெரியவந்திருப்பதே இலக்கியம் மூலமாகத்தான். அதனால்தான் இலக்கியப் படிப்ப மிகமிகத் தேவையாக இருக்கிறது என்று சொல்லிவிடலாம்.
ஒவ்வொரு சமுதாயத்தின் முக்கியமான அம்சங்கள் எல்லாமே அரசியல், விஞ்ஞான வளர்ச்சிக் கண்டுபிடிப்புகள், சிந்தனை வளம், சரித்திரப் போக்கு, லட்சியங்கள், நோக்கங்கள் இவற்றையெல்லாம் நமக்கு அறிவுறுத்துவதே இலக்கியம்தான் என்று சொல்லலாம்.
தத்துவார்த்தமான சிந்தனைகள் என்று ஸாக்ரடிஸ், குருகுங், மனு, புத்தர், ஏசு, நீட்ஷே, மார்க்ஸ் என்கிற வரையில் வருவதை நமக்கு எடுத்து இன்று கூறுவது இலக்கியம்தான். இவற்றை இலக்கியத்துக் அப்பாற்பட்ட ஒரு விஷயமாகக் கருதினாலும் கூட இவையும் இலக்கியம் என்பதில் அடங்கிவிடும்.
ஜனநாயக யுகத்தில் எல்லோரும் சமம் என்பது உறுதியாகிற சமயத்தில் இலக்கியம் என்று ஒரு எலைட் சிறப்பான ஜாதிப்பழக்கம் இருக்கலாமா என்கிற கேள்விக்குப் பதில் சொல்வதுதான் சற்றுக்கடினம். ஏனென்றால் இலக்கியம் என்பதை எல்லோரும் படிப்பதில்லை. சிலர்தான் படிக்கிறார்கள். அதிலும் மிகச் சிலரே தங்களிடமிருக்கும் ஒரு தன்மையால் பிறரிடம் காணப்படாத ஒரு குணாதிசயத்தினால் சிருஷ்டிக்கிறார்கள். இலக்கியம், கலை என்பதெல்லாமே ஒரு குறுகிய வட்டத்திற்குள், ஒரு வகையில் மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களிடையே தான் பயிலப்படுகிற மாதிரித் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைகள் இலக்கியங்களைத்தான் நாம் சிரமப்பட்டு மூவாயிரம் ஆண்டுகளாக வளர்த்து வந்திருக்கிறோம்.
பொருளாதாரம், சட்டம், சமுதாயம், கல்வி என்கிற அளவில் ஜனநாயம் அரசு செலுத்துவது சரிதான். அதை நியதியாகவும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கலை என்பது மனத்தையும், மனித அழகுணர்ச்சியையும் ஓரளவுக்குச் சிந்தனைப் போக்குகளையும் பொறுத்ததாகும். அதில் ஜனநாயகம் என்கிற கொள்கைக்கு இடம் கொடுத்து விட்டால் கலைகளின் தரம், இலக்கியத்தின் தரம் படிப்பபடியாக குறைந்து விடும். சினிமா போன்ற சர்வஜனரஞ்சமாகப் படக் கூடிய கலைகளில் கூடக் கேட்பவனுக்கும், பார்ப்பவனுக்கும் ஒரு தேர்ச்சி, முன் படிப்பினை வேண்டியதாக இருப்பது தெரிகிறது. சினிமாவில் கலைத்தரமான சினிமா என்று வந்துவிட்டால் பலர் பார்க்காமலே இருந்து விடுகிறார்கள். பார்க்கிறவர்களில் ஒரு சிலருக்குப் புரியவும் சிரமப்படுகிறது என்பது கண்கூடு. இசையில் எம்.டி.ராமநாதனை ரசித்தவர்கள் மற்றவர்களுக்குக் கிடைக்கிற ரசிகர்களை விட எண்ணிக்கையில் குறைவுதான். ஒரு எம்.டி.ராமநாதன் இருப்பது தான் அவருக்கும் பெருமை.
இலக்கியத்தில் நாலைந்து ரகங்கள் சொல்லலாம். மக்களாலேயே உருவாக்கப்படுகிற நாட்டுப்புற இலக்கியம் என்பது ஒன்று. நாட்டுப்புறத்தாருக்காக நகர்ப்புறத்தார்கள், Sophisticated நகர்ப்புறத்தார் உருவாக்குகிற அறிவார்த்தமான செய்திகளை எடுத்துத் தருகிற பத்திரிகை இலக்கியம் ஒன்று. எல்லோருக்கும் உபயோகப்படுகிற அறிவார்த்தமான செய்திகளை எடுத்துத் தருகிற பத்திரிகை இலக்கியம் ஒன்று. இன்னார் தான் என்று சொல்ல முடியாதபடி லட்சக்கணக்கான முகமற்ற மனிதர்களை எட்டுகிற எழுத்து ஒன்று அமெரிக்காவில், ஐரோப்பாவில் அதிகமாக வளரந்து Best seller நாகரிகத்தை இலக்கியத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி சர்வஜனரஞ்சமாக எழுதுகிறவர்களில் எல்லாருமே இலக்கியத்தரமாக எழுத வேண்டும் என்பது அவசியம் இல்லை. பத்திரிகை எழுத்தாகவும், அதன் அளவில் இலக்கியத்தரமாகவும் எழுதியவராக சார்லஸ் டிக்கன்ஸைச் சொல்லலாம். அவர் காலத்தில் டிக்கன்ஸையும் விட அதிகம் பேரால் படிக்கப்பட்டு இலக்கிய தரமில்லாமல், இன்று பெயர்கூட மறந்து போனவர் இலக்கிய சரித்திரத்தில் கூட இடம் பெறாதவர் என்று Reynold என்பவரைச் சொல்லலாம். தமிழில் எஸ்.வி.வி. என்பவர் பத்திரிகை எழுத்தாகப் பலரை எட்டுவதாகவும் இலக்கியத் தரமுள்ளதாகவும் எழுதினார் என்று சொல்லலாம். சாண்டில்யனையும். இன்னும் பலரையும் இப்படிச் சொல்லலாம்.
Best Seller ரகம் எழுத்துக்கள் இன்று அதிக மக்களை எட்டி வியாபகமாக இருந்தாலும் அடுத்தத் தலைமுறைக்கு நிலைப்பதில்லை. பி.எம்.கண்ணன் என்கிற பெயர் நாற்பதுகளில் மிகவும் பிரசித்தமாக இருந்தது. இப்போது அவர் பெயர் தெரியவிலலை. அவ்வளவு பிரசித்தமாக அந்த நாட்களில் ஏற்கப்படாத ஆர்.ஷண்முகசுந்தரத்தின் எழுத்துக்கள் இலக்கியமாக இன்று அதற்குரிய இடத்தைப் பெற்று வருகின்றன. அந்த இடம் இன்னும் ஸ்திரப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது. காலம் என்கிற போக்கும், விமரிசனம் என்கிற இலக்கியத் துறையும் இலக்கிய நுால்களைத் தரம் பிரித்துக் காட்ட உபயோகப் படுகின்றன.
இதுவரை சொன்ன ரகங்கள் பலவற்றிற்கும் அப்பாற்பட்டதாக இலக்கியம் என்று ஒரு சீராக ஒரு மரபு முறிந்து விடாமல் வருகிறது. இன்று எழுதுகிற தமிழ் இலக்கியாசிரியன் திருவள்ளுவர், இளங்கோ உபயோகப்படுத்திய மொழியையே உபயோகப்படுத்துகிறான் என்பது முதல் அடிப்படை உண்மை. சிந்தனை ரீதியில் இன்று சிந்தித்து எழுதுகிறவன் எந்த மொழியில் எழுதினாலும். உலகத்தில் எழுதப்பட்டிருப்பதற்கெல்லாம் வாரிசாகத்தான் செயல்படுகிறான் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது-
உலகில் எத்தனை மொழி, உயர்வு, தாழ்வு, பொருள், முறைகள் என்று பிரிவினைகள் இருந்தாலும், இலக்கியம் என்று வரும்போது மனிதகுலம் ஒன்றுதான், மனித ஏக்கங்கள், சுகதுக்கங்கள். லட்சியங்கள் நீண்ட கால அளவில் ஒன்று தான் என்கிற நினைப்பை ஏற்படுத்தித் தருகிறது. அதனாலே இந்த மனிதர் எல்லோரும் ஒரே குலம் என்கிற நினைப்பு ஏற்பட இலக்கியப்படிப்பு தேவையாகிறது.
மனித குலம் ஒன்றேதான் என்றாலும். மனிதகுலத்தில் இருக்கிற சுவாரசியமான மாறுபாடுகள், வித்தியாசங்கள், பண்பாட்டு முழுமை எல்லாம் தனித்தனியாக உள்ளவை என்பதும், இந்த வித்தியாசங்கள் பூகோளம், சரித்திரம், தேச எல்லைகள் என்பதனால் உண்டானாலும் மொழியினால் ஏற்படுகிற மாறுதல்கள், நெருக்கம் தான் முக்கியமானது என்பதும் ஏற்றுக்கொள்ள்பட வேண்டும். மற்றவற்றை விட மொழி பிணைக்கிறது ஒரு சமுதாயத்தை. அதன் சரித்திரம்,சி ந்தனைகள், அரசியல் எல்லாமே அந்த மொழியை நம்பித்தான் செயல்படுகின்றன. அதனால் மொழியைத் திறம்பட உபயோகப்படுத்துகிற இலக்கியாசிரியர்கள் மூலம் தான் ஒரு மொழியின், சமுதாயத்தின் பண்பாடு அந்த சமுதாயத்திலுள்ள நபர்களுக்கும், பிற சமுதாயத்தவருக்கும் தெரிய வருகிறது என்று சொல்ல வேண்டும்.
இலக்கியவாதிகள் குறைவாகத்தான் இருக்க முடியும். இவர்கள் பெருங்கடமையாக எல்லோரும் உபயோகிக்கிற மொழியை ஆன்மீகத் துாய்மை உள்ளதாக, மனோதத்துவத் துாய்மை உள்ளதாக, கூர்மை காட்டுகிற துாய்மை உள்ளதாக வைத்துக்கொள்கின்றனர். ஒரு நல்ல கவியின் முதல் பொறுப்பு இன்ற மொழி எப்படி உபயோகப்பட வேண்டும் எதெதற்கு உபயோகப்பட வேண்டும் என்று செய்து காட்டுவதுதான். மொழித்துாய்மை என்று நான் சொல்லவில்லை. தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளாக ஒரு மொழிமரபை உண்டாக்கி வந்திருக்கிறது. அந்த மரபு பின் வரும் தலைமுறைத் தமிழர்களுக்கும் எட்டி நிரந்தரமாக இருக்க வேண்டும். அதைச் சாத்தியமாக்குபவனையே இலக்கியகர்த்தா என்று ஏற்க வேண்டும்.
மொழியின் இன்றைய உபயோகம் தவறான வழிகளில் போய்விடாமல் தன் எழுத்து மூலம் பார்த்துக்கொள்வது இலக்கியாசிரியனின் முதல் கடமையாகும். அதைச் செய்ய வேறு யாராலும் முடியாது. இலக்கியம் செய்பவன்தான் செய்ய முடியும். மொழி என்பது வெறும் மொழி மட்டுமல்ல. தமிழ் மொழியில் தமிழ், பூகோளம், தமிழ் சூழ்நிலை, தமிழ் பண்பாடு, தமிழ் சரித்திரம், எல்லாம் அடங்கியிருக்கிறது, தமிழ் மனம், தமிழ் மானம், தமிழ் உணர்ச்சிகள், தமிழ் போக்கு, தமிழ் எதிர்காலம் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் இலக்கியம் முக்கியமாகிறது. தமிழில் போலவே உலகில் எல்லா மொழிகளிலுமே இலக்கியம் செய்பவர்கள் தான் மொழிக்கு நீடிப்பைச் சாத்தியமாக்க முடியும். அதனாலேயே இலக்கியம் செய்வதும், மொழியில் செய்யப்பட்ட இலக்கியத்தைப் படிப்பதும் அவசியமாகிறது. தேவைப்படுகிறது.
இன்னொரு விஷயமும் சொல்லலாம். கையால் செய்ய முடியாத காரியங்களையெல்லாம் நாம் கையை உபயோகித்து உதவக் கூடிய சாதனங்கள் மூலமாகச் செய்து கொள்கிறோம். எழுத உபயோகமாக டைப்ரைட்டா், மரத்தைச் செதுக்க உளி, கணக்குப் போட கால்குலேட்டர், மிகச் சிக்கலான விஷயங்களில் முடிவு காண கம்யூட்டர் என்று. இதேபோல மனித மனத்துக்கு உணர்ச்சி பூரணமான Extenion நீட்டிப்பு தேவைப்படுகிறது. அந்தத் தேவையைக் கலைகள் பூர்த்தி செய்கின்றன. இசை, நாட்டியம், நாடகம், சித்திரம், சிற்பம் என்பதுடன் இலக்கியமும் சேர்ந்து மனித உணர்ச்சி அனுபவத்தை வளப்படுத்தப் பயன்படுகிறது. இதுவும் இலக்கியத்தின் தேவையை நமக்கு வற்புறுத்துகிற ஒரு விஷயமாகும்.
இன்னும் சிலவும் சொல்லலாம். ஆனால், அவசியமில்லை என்று எண்ணுகிறேன். பிரிட்டிஷ் கல்வி முறையைச் சுதந்திரம் பெற்ற நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பின்பற்றுகிற நாம் கல்வியைத் துறைகளாகப்பிரித்துக் கனா காண்கிறோம். சரித்திரத்துறை, தத்துவத்துறை, இலக்கியத்துறை, விஞ்ஞானத்துறை என்று பிரித்துப் பிரித்துப் பார்க்கிறோம். இதில் சௌகரியம் இருப்பதகாத் தெரிகிறது. ஆனால், எல்லாத்துறைகளுமே ஒட்டுமொத்தமான வாழ்க்கைக்குத் தேவை. இதை உணருவதற்கேனும் இலக்கியப் படிப்பு அவசியமாகிறது. ஏனென்றால் மனிதர் கவனத்தைக் கவரக் கூடிய எதுவுமே இலக்கியத்துக்குப் புறம்பானதல்ல.
நன்றி
க.நா.சுப்ரமணியம்.